இப்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது சாதிமறுப்புத் திருமண, முக்கியமாக தலித்துகளுடனான காதல் திருமண எதிர்ப்பு சீஸன். இந்த வகையான திருமணங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஒவ்வொருவரும் மேல்சாதிப் பெண்களின் சொத்துக்களுக்காகவே தலித் இளைஞர்கள் அவர்களைக் காதலிக்கின்றனர்; திருமணம் முடிந்ததும் சொத்துக்களைப் பிரித்துக் கேட்கின்றனர் என்று புலம்புவது வாடிக்கையாகியுள்ளது.

சென்றமாதம் கோவையில் சாதிமறுப்புத் திருமணங்களுக்கு எதிராக கொங்கு வேளாளக் கவுண்டர்களின் ஒரு பிரிவினர் நடத்திய ஒரு மாநாடு நடந்தது. இதில் ‘கவுண்டர் பென்களைக் காதல் திருமணம் செய்து கொண்ட அருந்ததிய இளைஞர்கள், பின்பு சொத்து வாங்கிவரச் சொல்லி அவர்களைக் கொடுமைப் படுத்துகின்றனர்; எனவே பெண்களைக் காப்பதற்காக சாதிமறுப்புத் திருமணங்களைத் தடுத்து நிறுத்துவோம்’ என்று சூளுரை ஏற்றுக் கொண்டனர். கூடவே சீர்வரிசைகள் ஏராளமாகச் செய்வதால் பெண்களுக்கு குடும்பச் சொத்தில் உரிமையே கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.

ramdoss_200இப்போது நாயக்கன் கொட்டாய் சம்பவத்திற்குப் பிறகு மருத்துவர் ராமதாஸூம் ஏறக்குறைய இதே போன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் சாதிமறுப்புத் திருமணங்கள் பெரும்பாலும் தோல்வியடைகின்றன என்றும் கூறியுள்ளார். மேலோட்டமாகப் பார்க்கும் போது தங்கள் பெண்கள் தலித்துகளால் ஏமாற்றப்படுவது குறித்து அக்கறை கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை இந்த அறிக்கைகள், தீர்மானங்கள் அளிக்க முயல்கின்றன. ஆனால் பெண்களுக்கு குடும்பச் சொத்தில் உரிமை அளிக்கக் கூடாது என்ற ஒளிவுமறைவற்ற பழமைவாதமே இதில் மேலோங்கியிருக்கிறது.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று 2005ல் திருத்தப்பட்ட, இந்து வாரிசுரிமைச் சட்டம் கூறுகிறது. பெண் யாரைத் திருமணம் செய்து கொண்டாலும் அவருக்குரிய சொத்தைக் கொடுப்பதை இவர்கள் ஏன் தடுக்க வேண்டும்? குறிப்பாக தலித்துகளை திருமணம் செய்வதைத் தடுப்பதற்கு இதை ஏன் ஒரு காரணமாக முன்னிருத்த வேண்டும்?

தலித்துகளை திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு மட்டுமல்ல எந்தப் பெண்ணுக்கும் சொத்தில் அவளுக்குரிய உரிமையைக் கொடுக்க சாதி ஆதிக்கவாதிகள் விரும்புவதில்லை என்பது தான் உண்மை. தமிழக நீதி மன்றங்களில் உள்ள பல்லாயிரம் பாகப் பிரிவினை வழக்குகளில் பெரும்பான்மை பெண்களால், தகப்பன்மார்களுக்கும் சகோதரர்களுக்கும் எதிராகத் தொடரப்பட்டவை ஆகும். இந்தப் பல்லாயிரம் பெண்களில் தலித்துகளை திருமணம் செய்து கொண்டவர்கள் நூறு இருநூறு பேர் இருப்பார்களா என்பதே சந்தேகம்.

எனவே சொந்த சாதியில் மாமன் மச்சான் உறவுக்குள் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண்களுக்குக் கூட இவர்கள், பெரிய சட்டப் போராட்டமில்லாமல் அவர்களுக்குரிய சொத்துக்களைப் பிரித்துத் தருவதில்லை.

சொத்தில் தனது உரிமையை நிலைநாட்ட முனையும் ஒவ்வொரு அக்காளும் தங்கையும் பரம விரோதி ஆகிவிடுகிறார்கள். ஒவ்வொரு கணவனும், மனைவி சொத்தைப் பிரித்துக் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறான். ஒவ்வொரு மகனும் தன் தாயின் பாகத்தை மாமன் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறான். ஆனால் ஒவ்வொரு சகோதரனும், தன் சகோதரி குடும்பச் சொத்தில் பங்கு எதிர்பார்க்கக் கூடாது என்று ஆசைப்படுகிறான். சொத்துக்கு உரியவன் ஆணாகிய தானே என்று நிலைநாட்ட விரும்புகிறான்.

இது போன்ற ஒரு விஷச் சுழலில் தமிழக நிலவுடமைச் சாதிகள் சிக்கியுள்ளன.

1937க்கு முன்பு இந்துப் பெண்களுக்கு எந்தச் சொத்துரிமையும் இல்லை. நிலங்கள் பெரும்பாலும் இந்துக் கூட்டுக் குடும்பங்களுக்கே (Hindu undivided family- HUF) சொந்தமாக இருந்தன. கர்த்தா எனப்பட்ட கூட்டுக் குடும்பத் தலைவருக்கே குடும்பத்தின் அனைத்து நிர்வாக உரிமைகளும் இருந்தன. 1937 பெண்சொத்துரிமைச் சட்டம், விதவைகளுக்கு கணவனின் சொத்தில் பாகம் அளித்து. சுதந்திரத்திற்குப் பின்பு 1956-ல் இயற்றப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டம், தகப்பனாரின் சொந்த சம்பாத்தியத்தில் சேர்க்கப்பட்ட சொத்துகளில் பெண்களுக்கு பங்கு அளித்தது. அதாவது அவர் தனது சொத்தை இன்னாருக்குத் தரவேண்டும் என்று உயில் எழுதி வைக்காத பட்சத்தில். இங்கும் கூட்டுக் குடும்ப சொத்துக்களில் பெண்களுக்குப் பங்கில்லை.

குடிமக்கள் அனைவரும் சமம் என்று கூறும் அரசியல் அமைப்புச் சட்டம் 1950-லேயே நடைமுறைக்கு வந்துவிட்டிருந்தாலும் இந்து வாரிசுரிமைச் சட்டம் பிறந்த வீட்டில் திருமணமான பெண் தன் குடும்பத்துடன் வாழும் உரிமை, சகோதரர்களுக்கு முன் குடும்ப வீட்டை பிரித்துக் கேட்கும் உரிமை ஆகியவற்றைத் திட்டவட்டமாக மறுத்தது. 

இந்த நிலை பெண்ணுரிமைப் போராட்டங்களாலும் முதலாளித்துவவாதிகளிலேயே ஒரு பிரிவினர், இந்துக் கூட்டுக் குடும்பத்தை விரும்பாததாலும், (அவர்கள் சொத்தின் மீது முழுமையான உரிமையை வேண்டினர். இந்துக் கூட்டுக் குடும்பம் அதை மறுத்தது) தொடர்ந்து மாறி இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் 2005-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டு இதற்கு முன் வாய்மொழியாகவோ எழுத்து மூலமாகவோ பாகப்பிரிவினை செய்யப் படாவிட்டால் எல்லாப் பெண்களுக்கும் எல்லாச் சொத்திலும் சம உரிமை உண்டு என்று மாறியது.

தமிழகத்தில் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே கூட்டுக் குடும்பங்கள் சிதையத் தொடங்கின. முதல் கட்டமாக அண்ணன்களும் தம்பிகளும், சிலபோது அப்பன்களும், பஞ்சாயத்துகள், குத்து வெட்டுகளுக்குப் பிறகு சொத்துக்களைப் பிரித்துக் கொண்டனர். தமிழ் சினிமா சொத்து பிரிப்பது தொடர்பாக பாகப் பிரிவினை போன்ற பல கண்ணீர்க் காவியங்களைப் படைத்தது. ஒரு கட்டத்தில் சொத்தைப் பிரித்துக் கேட்பது தவிர்க்க முடியாத உரிமை என்றாகியபோது சமூகம் அதை ஏற்றுக் கொண்டது. குடும்பமும் சாதியும் முன்னின்று இந்தப் பிரிவினை நடவடிக்கையை மேற்பார்வை பார்த்து சேதத்தைக் குறைத்தன. (வக்கீல்கள் அனுபவித்து விடுவார்களாம்).

அடுத்த கட்டமாக குடும்ப உறுப்பினர்களான பெண்கள் சொத்துரிமை கோரத் தொடங்கியதும் அல்லோல கல்லோலம் ஏற்பட்டது. குடும்பமும் சமூகமும் இணைந்து வெட்கக் கேடான முறைகளைக் பயன்படுத்தி பெண்களை சொத்துரிமைக்கு வெளியே நிறுத்த முயன்றனர்.

இன்றுவரை ஆணாதிக்க சமூகத்தால் ஜீரணிக்க முடியாததாக இருப்பது பெண்கள் சொத்துக் கேட்பதுதான். பெண்கொடுத்து பெண் எடுப்பது, சீர் செய்வது போன்ற முறைகளில் இப்பிரச்சினை சமாளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சொத்துரிமை இல்லாத பெண்கள் பிறந்தகங்களில் அனுபவித்த கொடுமைகள் சமூகத்தின் கூட்டு மனசாட்சிக்குள் பதிந்துதான் உள்ளன. உதாரணத்திற்கு நல்லதங்காள் கதை. விதவையாகியோ வாழாவெட்டியாகியோ பிறந்தகம் திரும்பிய பெண்கள், குழந்தை வளர்ப்பாளர்களாகவும், சம்பளம் வாங்காத வேலைக்காரிகளாகவும் மாறிப் போயினர். சிலபோது குடும்பத்திற்கு தனது விசுவாசத்தை நிரூபிக்க கொடுமைக்கார நாத்தனார்கள் அல்லது அத்தைகளாக மாற வேண்டியிருந்தது. 

பெண்களுக்கு சொத்து மறுக்கும் திருப்பணிகளில் அம்மாக்களே முன்னிற்கும் கொடுமையும் நடந்தது; நடந்து வருகிறது. பேர் சொல்ல பிள்ளை; எவனோ அனுபவிக்க பரம்பரை நிலங்களைக் கொடுக்க முடியாது என்றெல்லாம் காரணங்கள் சொல்லப்பட்டன. வேறிடத்திற்கு வாழப் போகிறவள் என்று ஒவ்வொரு நிமிடமும் நினைவூட்டப் பட்டே பெண்கள் வளர்க்கப் படுகின்றனர். சொத்தைப் பிரித்துக் கேட்கும் பெண்ணை அடியோடு புறக்கணிப்பது வழக்கமாக உள்ளது.

இதற்கு ஒரு முதன்மையான காரணமும் உண்டு. பெண்களுக்கான சொத்துக்களைக் கேட்பதில் கணவர்களே முன்னிற்கின்றனர். தன் சகோதரிக்கு சொத்து மறுத்த ஆண், மனைவியின் சொத்தை மிரட்டிப் பெறுவதை உரிமை என்றே கருதுகிறான். சொத்துக்களிடமிருந்து அன்னியப்படுத்தப் பட்டே வளர்க்கப்பட்ட பெண்கள் பிறந்த வீட்டில் அன்பு தொடர்பான உரிமைகளையே அதிகம் விரும்புகிறார்கள். தனக்கு நிரந்தரமான சொந்தம் பிறந்த வீடுதான் என்ற எண்னமே அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது. புகுந்த வீடுகளில் அவர்களுக்கு இருந்த அன்னியத் தன்மையும், இந்தியக் குடும்பங்களின் பரஸ்பர புரிதலற்ற தன்மையும் தன் பிறந்த வீட்டைச் சொர்க்கமாக நினைக்கும் மனநிலைக்கு அவர்களைத் தயார்படுத்தியிருந்தன. பிறந்த வீட்டு வாழக்கையை நுகத்தடியற்ற, இனிமையான வாழ்க்கையாகவே அவர்கள் பார்த்திருக்கக் கூடும். எனவே ஆரம்ப காலங்களில் பெண்களே அசையாச்சொத்து குறித்து பெரிய அக்கறை காட்டவில்லை. தவிர நிலங்கள் சமூக அந்தஸ்து குடும்ப பாரம்பரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதப்பட்டன. எனவே குடும்ப வீட்டிலேயெ குடியிருக்கும் ஆண்களே குடும்பப் பாரம்பரியத்துக்கும் அதனோடு இணைக்கப்பட்ட குடும்ப நிலங்களுக்கும் உரியவர்களாகக் கருதப்பட்டனர்.

உளவியல் நிபுணர்களைவிட மிக ஆழமாக இந்தப் பிணைப்பைப் புரிந்து கொண்ட பிறந்த வீடு இந்தத் துருப்புச் சீட்டை மிகச் சாமார்த்தியமாக பயன்படுத்திக் கொண்டது. ‘சொத்தை வாங்கிய பின்பு சொந்தம் கொண்டாடி வரக் கூடாது’, ‘கூடப் பிறந்தவனை நடுத்தெருவில் நிறுத்தப் போகிறாயா’ என்பது போன்ற ஒரு இருபது டயலாக்குகள் எல்லா வீட்டிலும் கேட்கலாம். சொத்தைப் பிரித்தே வாங்கினாலும் அனுபவிக்கப் போவது தான் அல்ல என்ற உணர்வு பெண்களுக்கு இருக்கவும் கூடும்.

women_371வேலை எதுவும் வைத்துக் கொள்ளாமல் ஒரு இரண்டு மூன்று நாள் கிராமப் புறத்திலுள்ள எந்த பத்திரப் பதிவு அலுவலகத்திற்காவது போய்ப் பாருங்கள். இன்றும் இந்தக் காட்சியை நீங்கள் கட்டாயம் பார்க்க முடியும். பத்திரப் பதிவு அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். பணம் கட்டுக் கட்டாகக் கைமாறிக் கொண்டிருக்கும். அதெல்லாம் நமக்குத் தேவையில்லை. சற்று ஒதுங்கி நிற்கும் அந்தக் கூட்டத்தைப் பாருங்கள்.

உருக்கமான தோற்றத்தோடு நிற்பவர் அண்ணன் அல்லது தம்பி. இடுப்பில் கைவைத்து முறைத்துக் கொண்டிருப்பவர் அம்மா. கோடாலிக் கொண்டை அல்லது அரைகுறையாக பின்னிய தலைமுடி, வீட்டுக்கு உடுத்தும் சேலையோடு நிற்பவள் சகோதரி. அவள் அழுகிறாள், நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல கேள்விகள் கேட்கிறாள். ஆனால் கணவன் சொத்து பிரித்துக் கேட்க நினைப்பதை மோப்பம் பிடித்து வீட்டாரிடம் சொல்லிவிட்டாள். கணவனுக்குத் தெரியாமல் விடுதலைப் பத்திரத்தில் கையெழுத்துப் போட பதிவு அலுவலகம் வந்து விட்டாள். கையெழுத்துப் போட்டும் தீருவாள். அப்புறமெதற்குச் சண்டை?. பரம்பரைச் சொத்து சகோதரனுக்கு என்ற வளர்ப்புக்கும், தாய் மாமனின் உறவு குழந்தைகளுக்கு கட்டாயம் வேண்டும் என்ற ஆசைக்கும், தன் பிள்ளைகள் இந்தக் கையெழுத்தின் மூலம் நட்டமடையப் போகிறார்கள் என்ற உண்மை அளிக்கும் வேதனைக்கும் இடையிலான மனப் போராட்டத்தின் வெளிப்பாடுதான் இந்த அழுகை எல்லாம்.

ஆனால் அண்மைக் காலங்களில் இந்த நிலைமை மாறிவருகிறது. அண்ணன் தம்பிகளும் சொத்தை விற்கத்தான் போகிறார்கள். அது லட்சக் கணக்கில் பெறும் என்பது பல பெண்களுக்குத் தெரிந்திருக்கிறது. எல்லாமே பணம் கொடுத்துத் தான் வாங்க வேண்டும் என்ற நகரமயமாக்கல் சூழலில் செண்டிமெண்டுகள் பலவீனமடைந்து வருகின்றன.

எனவே சோகம் ததும்பும் விடுதலைப் பத்திரங்களுக்கு இணையாக கத்திக் கூச்சலிடும் பாகப் பிரிவினைப் பத்திரங்களும் சம எண்ணிக்கையில் பதிவாகித் தான் வருகின்றன. ஆண்கள் பாகம் பிரித்துக் கொள்வதை ஏற்றுக் கொண்ட சமூகம் இதை ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறது. எனவே ஆதிக்க சாதிச் சங்கங்கள், பெண் சொத்துரிமைக்கு எதிராக தற்போது உரக்கக் குரல் கொடுக்கின்றன - சில போது கோவை போல நேரடியாகவும் சிலபோது ராமதாஸ் போல இலைமறைவு காய்மறைவாகவும்.

சாதிமறுப்புத் திருமணங்களின் போது இந்த வெறுப்புணர்வு தீவிரமாக வெளிப்படுகிறது. உள் சாதித் திருமணங்களில் ஏதாவது பழைய பரம்பரை வீட்டை பெண்ணுக்குத் தள்ளிவிட்டுவிட்டு, பெண் கொடுப்பதாகவோ எடுப்பதாகவோ ஆசைகாட்டி முழுமையான பாகப் பிரிவினையிலிருந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. சாதிமறுப்புத் திருமணங்களில் இப்போதைக்கு அது இல்லை. காதல் திருமணங்களுக்குப் பின் நடக்கும் மனித வேட்டை, புறக்கணிப்பு ஆகியவற்றால் வழக்கமாக பெண்களிடம் பயன்படுத்தப்படும் செண்டிமெண்டல் பிளாக் மெய்ல்கள் செல்லுபடியாவதில்லை.

எனவே பெண்ணுக்குரிய சொத்தைக் கைப்பற்றும் போராட்டத்தில் முதல் குறி சாதிமறுப்புத் திருமணங்களாக இருக்கின்றன. சொந்த சாதி உறவுக்கார மருமகனையே அடுத்தவன் என்பவர்கள் தலித்தையா ஒப்புக் கொள்ளப் போகிறார்கள். ஆதிக்க சாதி ஆண்கள் நடத்தும் இந்த சொத்துரிமைப் போராட்டம் விரைவில் எல்லாப் பெண்களுக்கும் விரிவுபடுத்தப்படக் கூடிய அறிகுறிகள் தெரிகின்றன.

எங்கள் நோக்கம் தூய காதலை எதிர்ப்பது அல்ல; சொத்துக்காக தலித்துகள் காதலிப்பதைப் போல நடிப்பதை எதிர்ப்பதுதான்; தடை செய்வதுதான் என்று முழங்கும் சாதி சங்கத் தலைவர்கள் என்றாவது கீழ்கண்ட செயல்களில் ஈடுபட்டதுண்டா?

1. சொந்த சாதியில் பெற்றோர் பார்த்த மணமகனையே திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு மறுப்பில்லாமல் சட்ட ரீதியாகக் கொடுக்க வேண்டிய சொத்துரிமையை கொடுத்துவிட வேண்டும் என்று எப்போதாவது குரல் கொடுத்ததுண்டா?

2. வழக்கு இல்லாமல் பெண்களுக்கு சொத்துக்களை கொடுத்துவிட வேண்டும் என்று வாயளவிலாவது தீர்மானம் போட்டது உண்டா?

3. எந்தக் காரணத்தினாலாவது கணவனோடு வாழ முடியாமல் பிறந்த வீட்டுக்குத் திரும்பிவரும் பெண்களை உரிய மரியாதையோடு நடத்த வேண்டும் என்று தனது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியதுண்டா?

 4. திருமணம் தொடர்பான பிரச்சினைகளால் பெண்கள் தற்கொலை செய்துகொண்டது போன்ற சூழ்நிலைகளில் அவளுக்கு உரிய சொத்தைக் கொடுக்க மறுத்த பெற்றோரையும் குற்றவாளிகளாக்க வேண்டும் என்று போராடியதுண்டா?

 5. சொந்த சாதிக்குள் காதலிப்பவர்களை அந்தஸ்த்து பார்க்காமல் ஊக்குவிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது உண்டா?

 6. சாதிமறுப்புத் திருமணங்களுக்கு எதிராக இயக்கம் நடத்துபவர்கள் அதற்கு முக்கிய காரணமாக இருக்கும் வரதட்சணைக்கு எதிராக இயக்கம் எடுத்தது உண்டா?

இந்த எல்லாக் கேள்விகளுக்கும் பதில் திட்டவட்டமாக இல்லை என்றே இருக்கும். ஆதிக்க சாதி சங்கங்கள் ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவையாகவே, பெண்களுக்கான எல்லா உரிமைகளையும் மறுக்கக் கூடியவைகளாகவே இருக்கின்றன.

பெண்கள் சொத்துக் கேட்கக் கூடாது என்பதற்காக அவர்களை குடும்பத்தினர் மூளைச் சலவை செய்து சொத்து வேண்டாம் என்று விடுதலைப் பத்திரம் எழுதி வாங்குகின்றனர். பெற்றோர்கள் ஆண்வாரிசுகளுக்கு சொத்துக்களை தானமாக வழங்கி பெண்களை ஏமாற்றுகின்றனர். அல்லது ஆண்வாரிசுகளுக்கு உயில் எழுதி வைத்து விடுகின்றனர். இது போன்ற சித்து வேலைகளால் பெண்கள் இழந்த சொத்துக்கள் பல்லாயிரம் கோடி இருக்கும்.

இது தவிர பெண்ணின் உணவு முதல் கல்வி வரையில் செலவுகளில் காட்டப்படும் பாரபட்சம் தனியாக உள்ளது.

தமிழகத்தில் சராசரியாக வருடத்திற்கு ஆயிரம் பெண்கள் மணவாழ்க்கை தொடர்பான காரணங்களால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வெளியில் வராத தற்கொலைகள் ஒருவேளை இன்னும் அதிகம் இருக்கலாம். இந்தப் பெண்கள் பெரும்பாலும் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்கள்தான். ஆதிக்க சாதி ஆண்களை முறைப்படி திருமணம் செய்து கொண்டவர்கள்தான். இந்தப் பெண்களின் கணவர்களும் மாமனார் மாமியார்களும் வரதட்சணைக் கொடுமைக்காகவும் தற்கொலைக்குத் தூண்டியதற்காகவும் சிறைக்குப் போகிறார்கள். சரியானதுதான்.

women_200ஆனால் புகுந்த வீட்டின் கொடுமை காரணமாகத் திரும்பி வந்தால் பிறந்த வீட்டில் முழு உரிமையுடன் வாழ முடியும் என்ற நம்பிக்கையோ தனக்குரிய சொத்தைப் பெற்று பொருளாதார சுதந்திரத்துடன் வாழும் நிலையோ இருந்திருந்தால் இவர்களில் பாதிப் பெண்களாவது உயிருடன் இருந்திருப்பார்கள் அல்லவா? பொருளாதார சுதந்திரம் உள்ள பெண்கள் கூட பிறந்த வீட்டுக்கு வந்து வாழாவெட்டி என்ற பட்டத்துடன் வாழ விரும்பாமல் அல்லவா தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

எனவே தலித்துகளை மணந்த பெண்களுக்கு மட்டும் இவர்கள் சொத்துரிமை மறுப்பதில்லை, அனைத்துப் பெண்களுக்கும் சாத்தியமான வழிகளில் எல்லாம் சொத்துரிமை மறுக்கத்தான் செய்கிறார்கள். பெண்களின் சொத்துரிமையை உரிமையை மறுக்கும் இந்தக் கொடூரம், திருமணமானவுடன் கைகழுவிவிடும் அவலம் பல நேரங்களில் அவர்களை வெறுமைக்கும், விரக்திக்கும் தள்ளி வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தூண்டுகிறது.

கணக்கிலடங்கா செல்வங்களை தங்கள் சொந்த மகள்களுக்கும் சகோதரிகளுக்கும் மறுக்கும் இவர்கள்தான், தலித்துகள் சொத்துக்காக தங்கள் பெண்களைக் காதலிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

இட ஒதுக்கீட்டில் படித்து நல்ல வேலையில் அமர்ந்திருக்கும் தலித்துகளை மணந்து கொண்டு நன்றாக வாழும் பல ஆயிரம் பிற சாதிப் பெண்களைக் காட்ட முடியும். (இதனால் தலித் சமூகத்திற்கு ஒருவகையில் நட்டம்தான் என்றாலும், காதல் சாதிமறுப்புத் திருமணங்களுக்கு எதிரான உணர்வு தலித்துகளிடம் கிடையாது.) அப்படி தலித்துகளை மணந்த சிலர் நிம்மதியாக வாழ முடியவில்லை என்றால் விடாது விரட்டும் சாதிய வெறியும் அவர்கள் வாழ்வை வெற்றிடமாக்கும் ஆதிக்க சாதிப் பகைமையும் தான் அதற்குக் காரணமாக இருக்க முடியும். இந்த ஆண்டில் மட்டும் மூன்று நான்கு கெளரவக்கொலைகளை தமிழகம் பார்த்துள்ளது. காதல் தம்பதிகள் தாங்கள் வேட்டையாடப்படும் விலங்குகள் போல உணர்வதற்கு யார் காரணம்? நாயக்கன் கொட்டாயிலும் நடந்தது இதுதானே?

ஆதிக்க சாதித் தலைவர்களின் அக்கறை, 15 வயதுப் பெண் காதலிப்பதைப் பார்த்து துடித்துப் போகும் தகப்பனின் நியாயமான பரிதவிப்போ பயமோ அல்ல. குடும்பச் சொத்துகளின் மீதும் கிராம பொதுச் சொத்துக்கள் உரிமைகள் மீதும் ஆண்களின் குறிப்பாக உள்ளூர் ஆண்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட எடுக்கப் படும் நன்கு திட்டமிடப்பட்ட அடிவைப்பு ஆகும்.

 இது பெண் சொத்துரிமையை மறுக்க முயலும் அனைத்து சமூகங்களிலும் நிகழ்ந்துள்ளது. மேரிராயின் வழக்கு பலருக்குத் தெரிந்திருக்கலாம். மேரிராய் புகழ் பெற்ற எழுத்தாளர்; அருந்ததி ராயின் தாயார் ஆவார். அவர் கேரளாவின் சிரியன் கிருத்துவ சமூகத்தைச் சேர்ந்தவர். வங்காளியான ராயைத் திருமணம் செய்து கொண்டார். அவருடன் சேர்ந்து வாழ முடியாமல் திரும்பியவருக்கு வீட்டில் கிடைத்தது புறக்கணிப்பு. எனவே குடும்பச் சொத்தில் தன் பங்கைக் கேட்டு வழக்குத் தொடர்ந்தார். ஒவ்வொரு நீதி மன்றத்திலும் வெற்றி பெற்ற வழக்கு இறுதியாக உச்சநீதிமன்றத்திலும் வென்றது.

இதன் பிறகு சிரியன் கிருத்துவ சர்ச்சுகள் சொத்துகளில் பெண்கள் உரிமை கோருவதைத் தடுக்க ஆண்வாரிசுகளுக்கு உடனடியாக உயில் எழுதி வைக்கும் படி அறிவுறுத்தினவாம். இது பார்ப்பன்னரான ராயைத் திருமணம் செய்து கொண்ட மேரி ராய்க்கு எதிரான நடவடிக்கை மட்டும் அல்ல என்பதில் எந்த சந்தேகமும் எழ வாய்ப்பில்லை அல்லவா?

பெண் சொத்துரிமைக்கு எதிரான ஆணாதிக்கத்தின் இந்தத் தாக்குதல், தகர்ந்து வரும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தைத் தாங்கிப் பிடிக்கும் வெறி இப்படி தங்கள் பெண்களின் மீதான அதீத அன்பு என்ற போர்வையில் வருகிறது. ஓர் ஒடுக்கப்பட்ட பிரிவினரான தலித்துகளுக்கு எதிரானவர்கள் இன்னொரு ஒடுக்கப்பட்ட பிரிவினரான பெண்களுக்கு ஆதரவானவர்களாக இருந்துவிட முடியாது என்பதைதான் இந்த நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.

ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுதால் எங்கோ பிரச்சினை இருக்கிறதென்பது ஈசாப் கதை கூறும் நீதி.

- வழக்கறிஞர் இரா.முருகவேள் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It