கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே நடைபெற்ற பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த பழனி படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து பல அமைப்புகள் பல குழுக்களை தாங்களாகவே அமைத்துக்கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களிடம் முதலாளித்துவ ஊடகங்களைப்போல விசாரித்து செய்திகளை உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திரு.தியாகு தலைமையில் ஒரு குழு இந்தப் பகுதிகளில் எத்தனை நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டது, யார் யாரிடம் விசாரித்தது என்பது வெளிப்படையாகத் தெரியாது என்றாலும் அதுவும் உண்மை அறியும் குழு என்ற பெயரில் பல பரிந்துரைகளை அனுப்பியுள்ளது.

தோழர் தியாகு மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் கொண்டவர்கள் நாங்கள். அவர் எழுதிய 'சுவருக்குள் சித்திரங்கள்' தொடங்கி பலவற்றில் அவரின் கருத்துகளை படித்தறிந்தவர்கள். அவரே ஒரு கொலை வழக்கில் மரணதண்டனை கைதியாக, ஆயுள் தண்டனை கைதியாக அவர் அனுபவித்த சிறைவாழ்வு புரட்சிகர சக்திகளுக்கு நிறைவாழ்வு என்பதை உணர்ந்தவர்கள். தோழர்கள் தியாகு, கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் ஆகியோரோடு ஈழத்தமிழர் பிரச்சனை தொடங்கி பலவற்றில் ஒத்த கருத்து உள்ள கட்சி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. இந்தப் பிரச்சனையில் எதிரும் புதிருமாக நிற்க வேண்டிய அவசியமில்லை. தலைவர்கள் மட்டத்தில் திறந்த விவாதத்தின் மூலம் இதற்கான தீர்வை எட்டலாம். அதை விடுத்து ஒருதலைபட்சமாக விசாரிப்பதும் தீர்ப்பு எழுதுவதும் தீர்வாகாது.

தோழர் தியாகு அவர்களை அவரது இயக்கமே 'ஒழுக்க விதிகளை'க் காட்டி, அவரது இயக்கத்திலிருந்து நீக்கியுள்ளதை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். அந்த வழிகளில் அப்படி செய்திருக்க வேண்டியதில்லை என மனப்பூர்வமாக சிந்தித்தவர்கள் நாங்கள். ஆனால் அவர் இந்தப் பிரச்சனையில் தோழர் ராமச்சந்திரனையும், லகுமையாவையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என பரிந்துரைப்பது அதிர்ச்சியளித்தது. செய்சட்டங்கள், முதலாளித்துவ ஊடங்கள், காவல்துறை செயல்பாடுகளை வைத்து ஒரு புரட்சிகர இயக்கம் செயல்பட முடியுமா? இதனை விசாரித்து உண்மையை உணர சக்தியற்றதா இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்பதையும் பார்க்க வேண்டும்.

திரு.பழனி மீது பல புகார்கள் உள்ளன. அவர் பல சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு பொருள் ஈட்டி வசதிபடைத்தவராக தன்னை மாற்றிக் கொண்டவர் என்ற கருத்து அப்பகுதிகளில் பலமாக நிலவுகிறது. அதையெல்லாம் தோழர் தியாகு அறிந்திருக்க வாய்ப்பில்லையா? அவசர கோலத்தில் தீர்ப்பெழுதிவிட்டாரே! அவசரப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற சட்டமொழிக்கு இணங்க தீர்ப்பு அமைந்துவிட்டதே!

வீரவணக்கக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியபோது ஏதோ திருவண்ணாமலை நீதிமன்றத்தில் தோழர்கள் தோன்றி தங்கள் நிலையை விளக்கி சரணடைந்தது சட்டவிரோதமானது என்பது போன்ற குற்றச்சாட்டை தோழர் தியாகு சுமத்தியுள்ளதாக அறிகிறோம். நீதிமன்ற சரணும் சட்டமுறைதான். காவல்துறை வழி கைதாவது ஒன்று தான் இன்றைய புரட்சிகர நடவடிக்கையா? எத்தனை பேர் தங்கள் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் இந்த வழிமுறைகளை கையாண்டுள்ளனர் என்பதையும் விளக்க வேண்டும்.

பணம் பறிக்கும் பிளாக்மெயிலிஸ்ட்டுகள் விந்தை வேந்தன் போன்றோர் இந்தப் பகுதிகளில் புரட்சிகர அரசியலை சந்தைப்படுத்தும் மலிவு விலை வியாபாரிகள்! அவர்களோடு இணைந்து இயக்கம் நடத்துவதில் கொள்கைவாதிகள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அவர்களது சுவரொட்டி வாசகங்களை வாங்கி வாசித்துப்பார்த்து அவர்கள் காவல்துறை, உளவுத்துறையின் கையாள்கள் என்பதை அறிந்து கொள்க! நிறைவாக புரட்சிக்கவிஞர் கோரக்பாண்டே பழங்குடி மக்களின் போர் குணத்தை, ஒரு கவிதையில் வடித்ததுதான் நினைவுக்கு வருகிறது. அது தளிப்பகுதி மக்கள் போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் இந்தியக் கம்னியூனிஸ்ட் கட்சிக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது
அவர்களுடைய கோபம்
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது
அவர்களுடைய கசப்பு
நான் அவர்களுடைய சிதறிப்போன வார்த்தைகளை
திருப்பிச் சொல்கிறேன் எதுகை மோனையுடன்
ஆனால் நீயோ பயப்படுகிறாய்
நான் தீயை பரவச்செய்கிறேன் என்று!

பழங்குடி மக்களின், அடக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் அரசியலை முன்னிலைப்படுத்தும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் பகுதிகளில் வஞ்சிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று மேலும் உறுதியோடு போராடும். காய்த்த மரம் கல்லடிபடுவதைப் போல பொறுமை காப்பதே ஒரு புரட்சிக தன்னடக்கம்தான், பலவீனம் அல்ல!

Pin It