தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த 30.04.2012 அன்று மத்திய தகவல் ஆணையம், இந்திய அணு சக்தி கழகம் 25.05.2012 க்குள் கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள இடத்தின் தல ஆய்வு அறிக்கை மற்றும் பாதுகாப்பு ஆய்வு அறிக்கைகளை அதன் (மூன்றாவது நபராக கருதப்படும் ரஷ்ய கம்பெனி) உரிமையாளருக்குச் சொந்தமான தகவல்களை மட்டும் எடுத்து விட்டு பிற தகவல்களை அளித்து அவை உண்மையானவை என்று அறுதியிட்டு, அவற்றை அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சு.ப உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது.

koodankulam_371இதன் அடிப்படையில், இந்திய அணு சக்திக் கழகம் மத்திய தகவல் ஆணையத்திற்கு அனுப்பிய பதிலில், பாதுகாப்பு ஆய்வு அறிக்கை மூன்றாவது நபருக்கு சொந்தமானது என்றும் அந்த நபரின் ஒப்புதல் இல்லாமல் பொது மக்களுக்கு தர முடியாது என்றும், மத்திய தகவல் ஆணையத்திற்கு வேண்டுமானால் அந்த அறிக்கையை பகிர்ந்து கொள்ளலாம் என்று அறுதியிட்டுக் கூறியுள்ளது. இதனால் இந்திய அணு சக்திக் கழகம் ரஷ்ய கம்பெனி மற்றும் ரஷ்யாவின் நலன் விரும்பிகளின் பாதுகாப்பு குறித்து மட்டும் கவலைப்படுகிறது, இந்திய மக்களின் பாதுகாப்பு எந்தக் கவலையும் படுவதாகத் தெரியவில்லை.

அதன்படி மத்திய தகவல் ஆணையத்தின் அலுவலர் திரு. ஸ்ரீவஸ்தா அவர்கள் 17.05.2012 அன்றைய தேதியிட்ட கடிதத்துடன், கூடங்குளம் அணு உலை 1 & 2 இன் இட ஆய்வு அறிக்கையை அனுப்பி வைத்துள்ளார்.

கூடங்குளம் அணு உலைகளின் இட ஆய்வு அறிக்கை என்று சொல்லப்படுகின்ற இந்த 12 பக்கங்களைக் கொண்ட இந்த இட ஆய்வு அறிக்கை படிக்க முடியாத வகையிலே, தெளிவில்லாமல் தட்டச்சு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒரு முகப்போ, இதை தயாரித்தவர் குறித்த தகவலோ , இதன் சொந்தகாரர் குறித்தோ, இதை வெளியிட்டவர் குறித்தோ , எந்த தேதியோ , உள்ளடக்கமோ ஒரு தலையோ வாலோ இல்லாமல் உள்ளது.

இத்தகைய தரமற்ற வகையில் அச்சடிக்கப் பட்ட இட ஆய்வு அறிக்கையின் மூலம், கூடங்குளம் அணு உலைகளின் தரத்தை கணிக்கும் போது, நமது நாட்டின் எதிர்காலம் குறித்து நாம் மிகவும் கவலைப்பட வேண்டியுள்ளது. இந்த ஆய்வு அறிக்கையில் மூலம் நாம் எந்த எழுத்தையும், எந்த கருத்தையும் நாம் புரிந்து கொள்ள முடியாது. அணு சக்திக் கழகம் எவரும் வாசிக்க முடியாத வகையில், புரிந்து கொள்ள முடியாத, பகிர்ந்து கொள்ள முடியாத, கேள்வி கேட்க முடியாத வகையில் மக்களின் பாதுகாப்புக் குறித்து அறிக்கையைத் தயாரித்து இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இது தவிர, இந்த இட ஆய்வு அறிக்கையில் பல இடங்களில் சோவித் யூனியன் குறித்து அதிகம் பேசப்படுகிறது. இதனால் இந்த ஆய்வு அறிக்கை மிகவும் பழமையானது என்றும் காலாவதியானது என்றும் நாங்கள் கருதுகிறோம். இதைப் பார்க்கும் போதே, இது உண்மையான , முழுமையான இட ஆய்வு அறிக்கை இல்லை என எந்த சாமானியரும் உடனே சொல்லிவிட முடியும். இது உண்மையாக இருக்கும் எனில், இந்தியக் குடிமக்கள் இந்த அறிக்கை குறித்து மிகவும் கவலைப் பட வேண்டியுள்ளது. இது மத்திய தகவல் ஆணையத்தின் ஆணையின் காலக்கெடுவை சமாளிக்க, அவசர அவசரமாக தயாரிக்கப் பட்ட, மக்களை தவறாக வழிகாட்ட தயாரிக்கப்பட்ட தரமற்ற குறிப்புகள் போன்றுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய அணு உலைப் பூங்கா, அதுவும் ஆறு முதல் எட்டு அணு உலைகள் அமைய விருக்கின்ற இடத்தின் இட ஆய்வு அறிக்கை வெறும் 12 பக்க அளவிலான தாள்களில் முடக்கப்பட்டுள்ளது குறித்து வருத்தமடைய வேண்டியுள்ளது. மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்படுகின்ற இந்திய - ரஷ்ய கூட்டு முயற்சியில், அதிக முதலீடான ரூ. 14,000 கோடி மதிப்பில் கட்டப்படுகின்ற இந்தத் திட்டத்திற்கு இப்படி மிகவும் பொறுப்பற்ற முறையில், அக்கறையில்லாமல் இப்படியான ஒரு இட ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டிருகிறது என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

இட ஆய்வு அறிக்கை என்று சொல்லப்படுகின்ற இந்த 12 பக்க அறிக்கையில்,1,2,3 மற்றும் 13 வது பக்கங்கள் இதிலிருந்து எந்த விளக்கமும் கொடுக்காமல் எடுக்கப்பட்டுள்ளன. இப்படி எடுக்கப்பட்டுள்ள பக்கங்களில் அணு உலையின் வடிவமைப்பு குறித்த செய்திகள் இருக்க வாய்ப்பில்லை. இப்படி செய்யப்பட்டிருப்பதினால், இந்திய மக்களின் பாதுகாப்பு குறித்து, மக்கள் அவசியம் தெரியவேண்டிய செய்திகளை இந்திய அணு சக்திக் கழகமானது இன்னமும் தொடர்ந்து மறைத்து வருகிறதோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. இந்த அறிக்கையின் நான்காவது பக்கத்தின் இறுதிப் பகுதியில், இட தேர்வுக் குழு மற்றும் தற்போதைய குழு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது, அந்தக் குழுவில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை குறித்தோ அல்லது அவர்களின் பெயர்கள் குறித்தோ எந்தத் தகவலும் குறிப்பிடப்படவில்லை. எதற்காக இந்திய அணு சக்தி கழகம் இத்தகைய அடிப்படையான, தேவையான தகவல்களை ஏன் தொடர்ந்து மறைத்து வருகிறது என்று இன்னமும் புரியவில்லை.

இட ஆய்வு அறிக்கை என்று கருதப்படுகின்ற அறிக்கையில் அதிர்ச்சி தரும் தகவல்கள்

நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற இந்த இட ஆய்வு அறிக்கையில் 6 மற்றும் 7 ஆம் பக்கங்களில், இந்த உலைகளுக்கான தண்ணீர் தேவைகளின் கூடுதல் சார்புத் தன்மையை மேம்படுத்திக் கொள்ள, உலைகளின் இருக்கும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாட்டிற்கு அடிப்படைத் தேவையான நன்னீரைப் பெற பேச்சிப்பாறை அணையில் தாழ்ந்த கிணறு ஒன்று குறைந்த உயர் மட்டத்தில் குறைந்த அளவு நீரை எடுப்பதற்கான முறையில் அமைக்கபடவேண்டும். இப்படி அமைக்கப்படும் கிணற்றில், தண்ணீரின் அளவு போதுமான வகையில் பகிர்ந்தளிக்கப்படும் முறையில், தண்ணீரின் அளவு அணையின் கீழ் மட்டத்திற்கு உயரே இருக்கும் படி முறையாக பராமரிக்கப் படவேண்டும். பக்கம் 11இல், உள் பயன்பாட்டிற்கும், அவரச காலத்திற்கு போதுமான நன்னீரைப் பெற மாநில அரசாங்கம் 65 கி.மீ தூரத்திற்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து நன்னீர் எடுக்க, குழாய் பதிக்க, அரசு உறுதி அளித்துள்ளது என இந்த இட ஆய்வு அறிக்கை கூறுகிறது. ஆனால், ஏற்கெனவே இரண்டு குழாய்கள் பதிக்கப்பட்டுவிட்டன.

ஒன்று, கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை வழியாக குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கடைக்கோடி முதல் கோவளம் கிராமம் வரை வருகிறது, மற்றொரு குழாய் பேச்சிப்பாறை அணையில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் முதல் நாகர்கோவில் கோவில் நகரத்தின் வழியாக பதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அணு சக்தி கழகத்தை சார்ந்த அதிகாரிகள் கிளிப்பிள்ளை போன்று பொறுப்பற்ற வகையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் எடுக்க மாட்டோம் என்று தேவையற்ற, பொய்யான உறுதிமொழியை வழங்கி வருகின்றார்கள். ஆனால், தமிழக அரசோ, எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேச்சிப்பாறை அணையில் இருந்து கூடங்குளம் அணு உலைகளுக்கு தண்ணீர் எடுக்க மாட்டோம் என்ற ஒரு சட்டசபைத் தீர்மானத்தை தொடர்ந்து நிராகரித்து வருகிறது. ஆனால் உண்மை என்னோவோ, தமிழக அரசு பேச்சிப்பாறை அணையை தூர்வாரி , பராமரிக்க ரூ.5 கோடியை ஒதுக்கியுள்ளது.

இடப் பெயர்ச்சி செய்வதற்கான வழிகள் மற்றும் இடங்கள் திட்டமிடப்படவில்லை, குறிப்பிடப்படவில்லை!

இட ஆய்வு அறிக்கை என்று சொல்லப்படுகின்ற இந்த ஆய்வு அறிக்கையில் 8 ஆம் பக்கத்தில், அவசர காலத்தில், அணு உலைப் பகுதியில் இருந்து இடப் பெயர்ச்சி செய்வதற்கான குறைந்த பட்சம் இரண்டு இடங்களாவது ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். பக்கம் 16 இல், இந்தப் பகுதியில் இருந்து வெளியேறுவதற்கான 3 வழித்தடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது 30 கி.மீ தூரத்தில் நாகர்கோவில் நகரமும், 100கி.மீ தூரத்தில் திருநெல்வேலி நகரமும், 100 கி.மீ தூரத்தில் தூத்துக்குடி நகரத்தில் தற்காலிக பாதுகாப்பு உறைவிடங்களுக்காக போதுமான பள்ளிகள் மற்றும் பொது கட்டிடங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவைகள் போதுமான தொலைத்தொடர்பு, மருத்துவ வசதிகள் மாறும் நிர்வாக உதவிகள் வழங்கும் மையங்களாக உள்ளன. ஆனால், இதில் தப்பித்து செல்வதற்கான வழித்தடங்கள், இந்த சாலைகளின் தரங்கள், மற்றும் அவசர சிகிச்சை அளிக்கும் மையங்கள் குறித்தோ எந்தக் குறிப்போ , விவாதமோ இல்லை .

எதிர்கால விரிவாக்கம் தொடர்பாக...

இந்தப் பகுதியின் புவியியல் மற்றும் நிலவியல் குறித்து இந்த இட ஆய்வு அறிக்கை என்று சொல்லப்படுகின்ற ஆய்வு அறிக்கையில், எதிர்கால விரிவாக்கத் திட்டத்திற்கு போதுமான நிலம் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருகிறது. ஆனால்,அணு உலை அதிகாரிகளோ நாங்கள் எந்த நிலங்களையும் இனி கையகப்படுத்த மாட்டோம் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நிலவியல், நீரியல், கடலியல் மற்றும் நில அதிர்வியல் தொடர்பான அரைகுறையான, தெளிவற்ற தகவல்கள்

மேற்சொன்ன இந்த முக்கியமான பிரச்சனைகள் தொடர்பாக குறைவான தகவல்கல் மற்றும் மேலோட்டமான, ஆழமில்லாத, அவசர செய்திகள்தான் கொடுக்கப்பட்டிருகின்றன.

ஆழிப்பேரலையை பொறுத்த வரையில், முதல் கட்ட தகவல்கள்/அறிக்கைகள் அடிப்படையில் சொல்லிக்கொள்ளும் படி அப்படி ஒன்றும் இல்லை .

பூமிக்கு கீழ் நகரும் தட்டுக்களை பொறுத்தவரை அந்தச் சூழல் குறித்து சொல்லும்போது , ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை எந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய எந்த நிலப் பிளவும் இல்லை என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது.1983 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளின் ஆய்வுப்படி, இந்தப் பகுதியானது நில அதிர்வை ஏற்படுத்தும் பகுதியின் இரண்டாம் கட்டப் பகுதியில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் 14வது பக்கத்தில், 70 ஏக்கர் பரப்பளவு சுண்ணாம்புப் பாறை எடுக்கும் சுரங்கப் பணிகள் இந்த ஆலையின் 5 கி.மீ பகுதிக்குள் (sterilized Zone) அமைந்துள்ளது. இந்த சுரங்கப் பணிகளுக்கான குத்தகை 1994 ஆம் ஆண்டே முடிந்து விட்டது. ஆனால், 1994 க்குப் பிறகும் இந்தக் குத்தகையை நீட்டிப்பதற்கான கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. உண்மையில், இந்த சுரங்கப் பணிகள் அண்மைக்காலம் வரை நடைபெற்றிருக்கிறது. ஆனால், முக்கியமான, தேவையான தகவல்களான கார்ஸ்ட் குழிகள் மற்றும் வண்டல் மண் குவியல்கள், அண்மையில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நடந்த நில அதிர்வு குறித்தோ எந்த தகவல்களும் நமக்கு கிடைக்கவில்லை.

கதிரியக்க கழிவுகள்

திடக் கழிவுகள்

இட ஆய்வு அறிக்கை என்று சொல்லப்படுகின்ற இந்த அறிக்கையில், ஒரு உலையில் இருந்து சுமார் 160 – 180 m cu, அளவு எரித்து செரிமானமான கழிவுகளும், 40 cu/yr நெரித்து சுருக்கப்பட்ட கழிவுகளும், 5m cu/yr சாம்பல் கழிவுகளும் திடக் கழிவுகளாக வெளிவரும்.

தரம் குறைந்த திடக் கழிவுகளை ஆலையில் 1.6 கி.மீ தூரத்திற்குள் (Exclusion Zone) இருக்கும் கசிவு இல்லாத கான்கிரிட் குழிகளுக்குள், ஒட்டைகளுக்குள், பொந்துகளுக்குள் புதைக்கப்படும்.

எரிக்கப்பட்ட கதிரியக்க கழிவு

ஒவ்வொரு அணு உலையின் திட்ட வரைபடத்திலும் உள்ளது போல இந்த எரிக்கப்பட்ட கதிரியக்கக் கழிவுகளையயும் ஐந்து அணு உலையின் ஆயுள் காலம் (சுமார் 150 முதல் 200 ஆண்டுகள்) வரை காந்தமயமாக்கப்பட்ட எரிக்கப்பட்ட எரிபொருள் தொட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும்.

திரவக் கழிவுகள் கடலுக்குள் கொட்டப்படும்

திரவக் கழிவுகள் 2x10E-7 micro Ci/1, என்ற அளவுக்கு குறைக்கப்பட்டு கடலுக்குள் அனுப்பப்படும்.

ஓர் ஆண்டில் இரண்டு அணு உலைகளில் இருந்தும் வெளிவரக் கூடிய திரவக் கழிவில் உள்ள 6000mCu கதிரியக்க அளவானது நீக்கப்பட்டு கடலில் கொட்டப்படும். இது மீண்டும் குளிர்ந்த கன்டென்சர் தண்ணீர் மூலம் பக்குவப்படுத்தப்பட்டு அணு சக்தி ஒழுங்கு முறை ஆணையம் வகுத்துள்ள அளவுக்குள் மட்டுப்படுத்தப்பட்டு கடலுக்குள் அனுப்பப்படும்.

வாயுக் கழிவுகள்

முதல் மற்றும் இரண்டு அணு உலைகளில் இருந்து தினமும் வெளியாகக் கூடிய வாயுக்களில்,I - 131, நீண்ட வாழ்நாள் உள்ள மற்றும் குறைந்த வாழ்நாள் உள்ள கதிர்வீச்சுக் கழிவுகளும் அடங்கும்.

கழிவினால் கடல் வெப்பத்தில் ஏற்படும் மாசுபாடு

உலைகளைக் குளிர்விக்கும் சூடான தண்ணீர் பரந்து விரிந்த கடலுக்குள் செலுத்தப்படுவதனால் கடல் வெப்பத்தில் மாற்றம் இருக்காது.

மக்கள் தொகை

மக்கள் தொகையை பொறுத்த வரையில் தவறான தகவல்களையே கொடுத்திருக்கிறார்கள். இந்தப் பகுதியில் 10 கி.மீ. சுற்றளவுக்குள் 10,000 மக்கள் தொகை கொண்ட எந்தக் கிராமும் இல்லை என்றும், 30 கி.மீ. சுற்றளவுக்குள் 1,00,000 மக்கள் தொகை கொண்ட எந்த நகரமும் இல்லை என்று தவறாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்த ஆய்வு அறிக்கையிலே கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் , அணு உலைக் கழிவுகளை எவ்வாறு கொண்டு செல்லப் போகிறார்கள் போன்ற முக்கிய மான பிரச்சனைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. . சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், இந்த அறிக்கையானது கேலிக்கூத்தாக இருக்கிறது. அப்பாவி தென் தமிழக மற்றும் கேரள மக்களின் வாழ்வோடு விளையாடுவதாகத் தெரிகிறது.

அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் இந்த இட ஆய்வு அறிக்கை என்று சொல்லப் படுகின்ற அறிக்கையை முற்றிலும் நிராகரிக்கிறது. மத்திய தகவல் ஆணையம் ஆணையிட்டுள்ள படி முழுமையான, உண்மையான, புதிய தகவல்களைக் கொண்ட இட ஆய்வு அறிக்கை மற்றும் பாதுகாப்பு ஆய்வு அறிக்கையையும் உடனே வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. 

இவண், 

போராட்டக்குழு, 

அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

Pin It