மே,11 அன்று ஒரு கேலிச்சித்திரம் நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மாபெரும் மேதை அம்பேத்கர் அவர்களை அவமானப்படுத்தி விட்டது. அதற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறி நமது நாட்டின் 'கண்ணியம்' மிக்க பாராளுமன்றத்தில் 'மக்களுக்காகவே' தமது வாழ்வை அர்ப்பணித்துள்ள மக்கள் பிரதிநிதிகள் அமளியில் ஈடுபட்டனர்.

ambedkar_361கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக் குழுவால் (NCERT) பதினோராம் வகுப்புக்காக வைக்கப்பட்டுள்ள நடைமுறையில் உள்ள இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் (Indian Constitution at work) என்ற பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கேலிச்சித்திரம்தான் இந்த அமளிக்குக் காரணம் ஆகும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் என்ற நத்தையின் மீது கையில் ஒரு சாட்டையுடன் அம்பேத்கர் அமர்ந்து இருக்கிறார். அதற்கு அருகில் ஜவகர்லால் நேரு கையில் ஒரு சாட்டையுடன் நிற்கிறார். இதுதான் விவாதத்திற்கு உரிய கேலிச்சித்திரம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது அது எடுத்துக் கொண்ட கணிசமான காலத்தையும், அதற்கான காரணங்களையும் விளக்கும் வகையில் இந்தக் கேலிச்சித்திரம் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடப்புத்தகம் 2006-ல் வெளிடப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளாக மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. அல்லும் பகலும் மக்கள் நலனுக்காகவே பாடுபட்டு வரும் நமது பிரதிநிதிகளின் பார்வையில் இப்பொழுதுதான் இந்தக் கேலிச்சித்திரம் பட்டுள்ளது. சும்மா இருப்பார்களா? வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி விட்டார்கள்.

மக்கள் சபையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இந்தக் கேலிச்சித்திரம் அம்பேத்கரையும் நேருவையும் அவமதிக்கிறது. அந்தக் கேலிச்சித்திரத்தை உடனடியாக நீக்க வேண்டும். அதற்குப் பொறுப்பான மனிதவளத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் எனத் தொடங்கியதும் அவருக்குத் துணையாக பிற கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டனர். இந்தக் கேலிச்சித்திரம் வெளிடப்பட்டதற்குப் பொறுப்பானவர்கள் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் அவையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி போர்க்கொடி உயர்த்தினார்.

இந்தக் கேலிச்சித்திரம் வெளிடப்படுவதற்கு அனுமதி அளித்தவர்கள் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும். கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக் குழு கலைக்கப்படவேண்டும் என்றும் லோக் ஜன சக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். உடனே இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி(மார்க்சிஸ்ட்), தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தங்கள் பங்குக்குத் தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

தலித் மக்களின் வாக்கு வங்கியை மற்றவர்கள் கொள்ளையடிக்க காங்கிரஸ் கட்சி விட்டுவிடுமா? பார்த்தார் நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய வேத வியாசகர் டாக்டர் அம்பேத்கர். அவரைப் பற்றிய இந்தக் கேலிச்சித்திரம் முற்றிலும் தவறானது. என ஒரு போடு போட்டார்.

நமது நாட்டின் மனித வள அமைச்சர் சும்மா இருப்பாரா? அந்தப் புத்தகத்தில் உள்ள அனைத்துக் கேலிச்சித்திரங்களையும் நாம் நீக்கி விடுவோம். இந்த ஆண்டு இந்தப் புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்படமாட்டாது. என்று கூறிய அமைச்சர் அத்தோடு நிற்கவில்லை. தொடர்ந்து இந்த ஆட்சேபனைக்குரிய கேலிச்சித்திரத்தை வரைந்தவர் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியுமா என அரசாங்கம் பரிசீலிக்கும் எனவும் வாக்குறுதி அளித்தார்(The Hindu,12.5.2012).

இந்தக் கேலிச்சித்திரம் வரையப்பட்ட ஆண்டு 1949. அதனை வரைந்தவர் புகழ்பெற்ற கேலிச்சித்திர ஓவியர் கே.சங்கர் பிள்ளை. அவர் மறைந்த ஆண்டோ 1989. அவர் மீதுதான் குற்றவியல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப் போவதாக அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார். ஆழமான வரலாற்று அறிவும், பொது அறிவும் பெற்றுள்ள ஒரு மனிதவள அமைச்சர் நமக்குக் கிடைத்துள்ளார் என நாம் மிகவும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்!

கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக் குழுவின் முதன்மை ஆலோசகர்கள் யோகேந்திர யாதவும் சுகாஷ் பல்சிகாரும் உடனே தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர். பபல்சிகார் புனே பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியர். மே, 12 அன்று புனே பல்கலைக்கழகத்தில் உள்ள பல்சிகாரின் அலுவலகத்தை குடியரசுச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் தாக்கியுள்ளனர்.

பாடப்புத்தகத்திலிருந்து குறிப்பிடப்பட்ட கேலிச்சித்திரம் நீக்கப்படும் எனக் கபில் சிபல் அறிவித்ததைக் கண்டித்தும், பல்சிகார் அலுவலகத்தைத் தாக்கியதைக் கண்டித்தும் சப்தர் ஹாஷ்மி நினைவு அறக்கட்டளை சார்பாக ரொமிலா தாபர், பிரபாத் பட்நாயக் போன்ற புகழ்பெற்ற பெரும் அறிஞர்கள் அறிக்கை விடுத்துள்ளனர். இந்த மாதிரியான தாக்குதல் அம்பேத்கர் போற்றிய ஜனநாயக மதிப்பீடுகளுக்கு எதிரானது எனக் கண்டித்து உள்ளனர்.

கேலிச்சித்திரங்களுடன் பாடப் புத்தகங்கள் கொண்டு வரும் முறை படைப்பாற்றல் மிக்க புதிய கல்விமுறைக்கான ஒரு எடுத்துக்காட்டு. இது நமது பள்ளிக் கல்விமுறையில் இல்லை என்றே கூறலாம். இது நமது மாணவர்களின் படைப்புத்திறனைத் தூண்டிவிடும். பாராளுமன்றப் பிரதிநிதிகளின் இந்த எதிர்ப்பு அர்த்தமற்றது என ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் முனைவர் பணிக்கர் கூறுகிறார்.

கருத்துச் சுதந்திரம், படைப்புச் சுதந்திரம் ஆகியவற்றின் மீதான தாக்குதல் என்பது நமது நாட்டில் புதியதான ஒன்றல்ல. புகழ்பெற்ற ஓவியர் எம்.எப். ஹுசேன் அவர்களின் ஓவியங்களின் மீதான தாக்குதல்கள், டெல்லிப் பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டத்திலிருந்து ஏ.கே. ராமானுஜத்தின் இராமாயணம் பற்றிய கட்டுரை நீக்கப்பட்டது, ராஜஸ்தானில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டுக்கு எழுத்தாளர் சல்மான் ரஷ்டியை வரவிடாமல் தடுத்தது போன்ற பல எடுத்துக் காட்டுகள் நமது ஜனநாயகத்தின் உள்ளீடற்ற தன்மையை, போலித்தனத்தை அம்பலப்படுத்துகின்றன. இவை அனைத்தும் மதவாத சக்திகளால், வலதுசாரிப் பிற்போக்கு சக்திகளால் ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள்.

ஆனால் கேலிச்சித்திரம் பற்றி எழுந்துள்ள இப் பிரச்சினையில் தலித் மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் அம்பேத்கர் இழிவுபடுத்தப்பட்டுள்ளார் என்பதன் அடிப்படையில் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் வரலாறு பற்றிய தவறான புரிதலின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எழுத்து வடிவம் பெற மூன்றாண்டுகள் எடுத்துக் கொண்டது. கால தாமதத்திற்குக் காரணம் அம்பேத்கர் அல்ல. அரசியல் நிர்ணய சபைதான். கேலிச்சித்திரத்தில் உள்ள நத்தை அதைத்தான் குறிப்பிடுகிறது. அதை விரைவு படுத்தத்தான் அம்பேத்கரும் நேருவும் படாதபாடு படுகின்றனர். அந்த அரசியல் நிர்ணய சபையில் இருந்த பிரதிநிதிகளிடையே பல்வேறு முரண்பட்ட கருத்துகள் நிலவி வந்தன. அவை அரசியல் அமைப்புச் சட்டம் விரைவில் உருவாவதைத் தடுத்து வந்தன. மேலும் வரைவுக் குழுவில் இருந்த ஆறு பேரில் உண்மையில் செயலாற்றியவர் அம்பேத்கர் மட்டும்தான். அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுத வேண்டிய முழுச் சுமையும் அம்பேத்கர் மீது விழுந்தது. இக்காரணங்களினால்தான் அரசியல் அமைப்புச் சட்டம் உருவாகக் காலதாமதமாகியது. இந்த வரலாற்று உண்மையை அறிந்து இருந்தால் இந்த அமளி ஏற்பட்டிருக்காது. கேலிச்சித்திரமும் சரியான பொருளில் புரிந்து கொள்ளப்பட்டிருக்கும். இந்த வரலாற்று உண்மையைத்தான் அந்தப் பாட நூல் கூறுகிறது.

அம்பேத்கரால் எழுத்து வடிவம் தரப்பட்ட இந்த அரசியல் அமைப்புச் சட்டம் மிகவும் புனிதமாக தலித் அரசியல் கட்சித் தலைவர்களால் கருதப்படுகிறது. ஆனால் அம்பேத்கரே அதைப் புனிதமாகக் கருதவில்லை. தன் கையால் அரசியல் அமைப்புச் சட்டம் எழுத வைக்கப்பட்டது என அவர் கூறுகிறார். அதன் பொருள் என்ன? அதன் பின்னணியில் இருந்து இயக்கியது வேறு சக்திகள் என்பதுதான். அவரை ஒரு கருவியாக இந்திய ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்திக் கொண்டன என்பதுதான். அதன் காரணமாகத்தான் பிற்காலத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது அவர் கடுமையான விமர்சனங்களை வைக்க நேரிட்டது.

மேலும் இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபை உண்மையான ஜனநாயக அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டிருக்கவில்லை. அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் அமைக்கப்பட்ட சபை. மன்னர்கள், முதலாளிகள், பட்டாதாரர்கள், படித்த பட்டதாரிகள் ஆகியோரின் பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட சபை. பெரும்பான்மை மக்களாக இருக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலன்களைப் பற்றி அக்கறை கொள்ளாத சபை. இங்குள்ள பெரும் முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் நலன்களைக் காப்பாற்றுவதில் அக்கறை கொண்ட சபை. அதற்கேற்ற வகையில் உருவாக்கப்பட்டதுதான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம். அதன் அடிப்படையில் அமைந்த பாராளுமன்ற ஆட்சிமுறை கடந்த அறுபது ஆண்டுகளில் இந்த நாட்டிலுள்ள பரந்துபட்ட மக்களுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துத் தரவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விடுதலையை வழங்கவில்லை.

தலித் மக்களின் விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் தலைவர்கள் இந்த உண்மையை தமது மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்குப் பதிலாக இந்தப் பாராளுமன்ற ஆட்சி முறையைப் புனிதப்படுத்துகிறார்கள். இதன் மூலம் அவர்கள் தமது மக்கள் விடுதலை பெற வழி காட்டவில்லை. மாறாகத் தம்மை மேன்மேலும் முன்னேற்றிக் கொள்ளவே நினைக்கிறார்கள்.

அம்பேத்கரை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி மாபெரும் அமளியில் ஈடுபட்டு அடையாள அரசியல் நடத்தித் தமது மக்களிடையே தமது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள முனையும் இவர்கள் அம்பேத்கரின் கொள்கைகளுக்கு உண்மையில் விசுவாசம் உடையவர்களாக இல்லை.

சூத்திரர்கள், பெண்கள் ஆகியோரின் அடிமைத்தனத்திற்கு மனுஷ்மிருதி காரணமாக இருக்கிறது என்ற காரணத்திற்காக அதை எரித்தவர் அம்பேத்கர். ஆனால் மனுஷ்மிருதிதான் நமது புகழ் வாய்ந்த அரசியல் அமைப்புச் சட்டம் எனப் புகழ்ந்தவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் எம்எஸ் கோல்வால்கர். இந்து சாம்ராஜ்யத்தை நிறுவக் கனவு கொண்டிருக்கும் அவருடைய வாரிசுகளுடன் இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலேயும் பகுஜன்சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும், பிற கட்சியினரும் கூட்டணி அமைத்துக் கொள்ளத் தயங்குவதில்லை. இவர்கள் தமது மக்களின் நலன்களுக்காக சமரசமற்ற முறையில் போராடுவதற்குப் பதிலாக சந்தர்ப்பவாதிகளாக நடந்து கொள்வதால் தமது மக்களின் ஆதரவையும் இழந்து விடுகின்றனர். இழந்த ஆதரவை மீண்டும் பெறவும், இருக்கும் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ளவும் அவர்கள் அடையாள அரசியலில் ஈடுபடுகின்றனர்.

கேலிச்சித்திரத்தை எதிர்த்த இந்த அமளியில் கட்சி வேறுபாடின்றி அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் ஈடுபட்டதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம், இந்த அடையாள அரசியலில் தாங்கள் வீழ்த்தப்பட்டு அதனால் தங்கள் வாக்கு வங்கியை இழந்து விடக்கூடாது என்பது. இரண்டாவது காரணம், அனைத்துக் கட்சித் தலைவர்களைப் பற்றியும் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கேலிச்சித்திரங்கள்தான். எடுத்துக்காட்டிற்கு, புகழ்பெற்ற கேலிச்சித்திர ஓவியர் ஆர்.கே.லட்சுமணன் அவர்களின் ஒரு கேலிச்சித்திரத்தைக் குறிப்பிடலாம். அதில் அவர் இந்திய அரசியல்வாதிகளின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்தி உள்ளார்: வாக்குச் சேகரிப்பதற்காக மக்களை அணுகும்போது ஒருமுகம், வெற்றி பெற்று அதிகாரத்தில் அமர்ந்ததும் உள்ள இன்னொரு முகம். இத்தகைய கேலிச்சித்திரங்களை நமது மக்கள் பிரதிநிதிகள் எப்படிச் சகித்துக் கொள்வார்கள்? இதில் இடம் பெற்றுள்ள படங்கள் நம்மைக் கொள்ளைக்காரர்களாகவும், கொலைகாரர்களாகவும், கிரிமினல்களாகவும் சித்தரிக்கின்றன. இவற்றைப் படிக்கும் மாணவர்கள் மத்தியில் நம்மைப்பற்றி நல்ல எண்ணங்கள் எப்படி உருவாக்கும்? என ஒரு பிரதிநிதி புலம்புகிறார். எனவே இதுதான் வாய்ப்பு எனக் கருதி அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து சுதந்திரமான விமர்சனத்தையும், சிந்தனையையும் தூண்டும் படைப்பாற்றல் மிக்க ஒரு பாடத்திட்டத்திற்கு சாவு மணி அடித்து விட்டனர்.

மத்திய கால ஐரோப்பவில் கிருத்துவத் திருச்சபையும், முடியாட்சியும் கை கோர்த்துக்கொண்டு சுதந்திரமான சிந்தனைகளைக் காட்டுமிராண்டித்தனமான முறைகளில் அடக்கி ஒடுக்கி வந்தன. பிரிட்டிஷ் பாராளுமன்றம் 1401-ல் மதக் கோட்பாடுகளுக்கு எதிரானவர்களை எரித்தல் பற்றிய சட்டத்தை இயற்றியது. நிறுவப்பட்ட கிருத்துவத் திருச்சபையின் கருத்துகளுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்த காரணத்தால் புருனோ என்னும் தத்துவ அறிஞர் 1600 ஆம் ஆண்டு ரோம் நகரில் எரித்துக் கொல்லப்பட்டார். மத எதிர்ப்புக் கருத்துகளுக்காக பல அறிஞர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். மத்திய கால முடியாட்சி காலத்தில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலைகள் இங்கு ஜனநாயகம்என்ற பெயரில் அரங்கேற்றப்படுவதுதான் மிகப்பெரிய முரண்நகையாகும்.

அம்பேத்கரைக் கடவுளாகக் கருதுபவர்களுக்கு இறுதியாக ஒன்றைத் தெரிவித்துக் கொள்கிறேன். அம்பேத்கர் உருவ வழிபாட்டுக்கு எதிரானவர். 1949-ஆம் ஆண்டு, நவம்பர் 25ந் தேதி அரசியல் நிர்ணய சபையில் ஆற்றிய தனது உரையில் அவர் பின்வரும் கருத்தைத் தெரிவிக்கிறார்: மதத்தில் பக்தி என்பது ஆன்மா முக்தி அடைவதற்கான பாதையாக இருக்கலாம். ஆனால் அரசியலில் பக்தி அல்லது வீர நாயக வழிபாடு என்பது சீரழிவுக்கும் சர்வாதிகாரத்திற்கும் இட்டுச் செல்லும் உறுதியான பாதையாக இருக்கும்.

Pin It