இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ச்சமூகத்தில் ‘தொல்காப்பியம் என்ற ஓர் இலக்கணப்பிரதி நிகழ்த்திய ஊடாட்டம் என்பது சாதாரணமானதல்ல. பிற்காலங்களில் தோன்றிய பல்வேறு இலக்கணப் பிரதிகளுக்கும் தொல்காப்பியம் ஒரு முதன்மைப் பிரதியாக நின்று அவையனைத்திலும் தன் தாக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டது.

தொல்காப்பியத்திற்குப் பிறகு பல்வேறு இலக்கணப்பிரதிகள் இங்குத் தோன்றியுள்ளன. அப்பிரதிகள் அதனதன் தன்மையில் சிறப்பாக நிலைபெற்றிருந்த போதிலும் தொல்காப் பியத்தோடு அவற்றை ஒப்பவைத்து எண்ணும்போது அவற்றின் விழுமியங்கள் மாறுபடவேச் செய்கின்றன. தமிழ்ச்சமூகத்தின் தொன்மை மரபின் ஆணிவேராக இன்று மையம்பெற்றுள்ள தொல்காப்பியம் ஒரு செறிவான தன்மைக்குள் கட்டப்பட்டுப் பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்திருந்த போதிலும் அப்பிரதியின் தெளிவான காலத்தையும் சமயத்தையும் அறுதியிட்டு வரையறை செய்யமுடியவில்லை.

இருந்தபோதிலும் தொல்காப்பியம் இத்தனை நூற்றாண்டுகள் நிலைபெற அதன் திட்டமிட்ட முறையியலான ஒழுங்கமைவு மற்றும் செய்நேர்த்தி, எல்லாக் காலத்திற்குமான பொருத் தப்பாடு, பல்வேறு காலங்களில் எழுந்த பலப்பல உரைகள், முதனூல் வழிநூல் என்ற மரபில் பிற்கால இலக்கணங்களுக்கு முதனூலாக நின்றமைதல், சமயச்சார்பின்மை ஆகிய அனைத்தும் மிகமுக்கியக் காரணங்களாக அமைகின்றன.

நீண்ட நெடுங்காலமாகச் சுவடிகளிலும் அறிஞர்களின் சிந்தனை மரபிலும் பயணித்த தொல் காப்பியம் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் அச்சில் நிலைபெற்றது. ‘தமிழ்ப்பதிப்பு வரலாற்றின்’ தொடக்கக் காலமாக அமையும் இந்நூற்றாண்டில்தான் சுவடிகளில் எஞ்சியும் ஆங்காங்கே சிதறியும் கிடந்த தமிழின் தொன்மை இலக்கண இலக்கியங்கள் பலவும் அச்சாக்கம் பெற்றன. அவ்வகையில் தமிழின், தமிழரின் அடையாளமாகப் போற்றப்படுகின்ற தொல்காப்பியம் அச்சான முறைமையினைப் பின்வரும் தரவுகளின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

பதிப்புகளும் காலவரிசை முறையும்:

1. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை, மழைவைமகாலிங்கையர் (ப-ர்), கல்விக்கடல் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1847. 

2. தொல்காப்பிய நன்னூல், இ. சாமுவேல்பிள்ளை - வால்ற்றர் ஜாயீஸ் (ப-ர்), கிறிஸ்து மதக்கியான விளக்கச் சங்கத்தார் அச்சுக்கூடம், சென்னை, 1858. 

3. தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர்உரை, சி.வை. தாமோதரம்பிள்ளை (ப-ர்), நல்லூர் ஆறுமுகநாவலர் பரிசோதனை செய்தது, கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்ன பட்டணம், 1868, புரட்டாசிமாதம்.

4. தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, கோமளபுரம் இராசகோபால பிள்ளை (ப-ர்), வர்த்தமான தரங்கிணீசாகை அச்சுக்கூடம், சென்னை, 1868, கார்த்திகை மாதம்.

5. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை, சோடசாவதானம் சுப்பராய செட்டியார் (ப-ர்), அத்திநீயம் அன்ட் டேலி நியூஸ்பிரான்ச் அச்சுக்கூடம், சென்னை, 1868, கார்த்திகை மாதம்.

6. தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியார் உரை, சி.வை. தாமோதரம் பிள்ளை (ப-ர்), ஸ்காட்டிஷ் பிரஸ், சென்னை, 1885.

7. தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர்உரை, சி.வை. தாமோதரம்பிள்ளை (ப-ர்), நல்லூர் ஆறுமுகநாவலர் பரிசோதனை செய்தது, வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1886, (எண்-3இன் மறுபதிப்பு).

8. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியார் உரை, சி.வை. தாமோதரம்பிள்ளை (ப-ர்), வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1891, (எண்-1 இன் மறுபதிப்பு).

9. தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியார் உரை (பகுதி1), சி.வை. தாமோதரம் பிள்ளை (ப-ர்), விக்டோரியா ஜூபிலியந்திர சாலை, சென்ன பட்டணம், 1892. 

மேற்சொல்லப்பட்ட ஒன்பது பதிப்புகளில் உரையோடு கூடிய முதற்பதிப்புகள் ஆறு, ஒப்பீட்டுப் பதிப்பு ஒன்று, மறுபதிப்புகள் இரண்டு ஆகும். இவ்வாறமைந்த இப்பதிப்புகளில் தொல் காப்பியத்தின் முதல்பதிப்பாக விளங்குவது 1847இல் வெளிவந்த மழைவை மகாலிங்கையரின் பதிப்பே ஆகும். எவ்விதப் பதிப்பு நெறிமுறைகளுமின்றி உரைநடை வடிவிலேயே அமைந்த இப்பதிப்பு காலத்தால் முந்தியது என்றாலும் ஆய்வாளர்களின் மாணவர்களின் பயன்பாட்டிற்கு இன்று பயன்படத்தக்க வகையில் இல்லை. இருந்தபோதிலும் இப்பதிப்பு நமக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பதிப்பாக விளங்குகின்றது. இதே பதிப்பை 1891இல் சி.வை.தாமோதரம்பிள்ளை மறுபதிப்பாக வெளியிட்டார். ‘ஒரு முறையாயினும் பிறர் பிரசுரித்த நூல்களை மீள அச்சிடு விக்காத எனக்கு இவ்வெழுத்ததிகாரம் ஒரு விலக்காயிற்று’ (பதிப்புரை) என்று எழுதும் சி.வை.தா. மகாலிங்கையரின் பதிப்பிலிருந்து மாறுபட்டுச் சில பதிப்பு நுணுக்கங்களைக் கையாண்டு இதனை வெளியிட்டுள்ளார். இதற்குக் காரணம் காலஇடைவெளியே ஆகும். பதிப்பு நெறிமுறைகள் வளர்ச்சிபெற்ற காலத்தில் சி.வை.தா.வின் இப்பதிப்பு அதற்கான தன்மை களோடு அமைந்திருப்பது அதன் சிறப்பு ஆகும். மழைவை மகாலிங்கையரின் பதிப்பைத் தொடர்ந்து 1858ஆம் ஆண்டு சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ் என்பவர் உதவியுடன் தொல்காப்பிய மூலம் முழுவதையும் நன்னூல் மூலத்தோடு ஒப்பிட்டுத் ‘தொல்காப்பிய நன்னூல்’ என்ற தலைப்பில் ஒரு பதிப்பை வெளியிட்டார். இப்பதிப்பு தொல்காப்பிய நன்னூல் ஒப்பீட்டிற்கு முதற்பதிப்பாக அமைவதோடு தொல்காப்பியம் மூலம் முழுவதையும் முதன் முதலாகவும் கொண்டமைகின்றது. தமிழ்ப்பதிப்பு வரலாற்றில் முதல் ஒப்பீட்டுப் பதிப்பாகவும் இப்பதிப்பு விளங்குகின்றது.

இதனைத் தொடர்ந்து 1868ஆம் ஆண்டு மட்டும் தொல்காப்பியத்திற்கு மூன்று பதிப்புகள் வெளிவந்தன. சொல்லதிகாரம் சேனாவரையத்தைச் சி.வை.தா. மற்றும் இராசகோபால பிள்ளையும் எழுத்ததிகாரம் இளம்பூரணத்தைச் சுப்பராயச் செட்டியாரும் பதிப்பித்திருந்தனர். சி.வை.தா. 1868ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் தன் சேனாவரையப் பதிப்பை வெளியிட இரண்டு மாதம் கழித்து அதாவது கார்த்திகை மாதம் இராசகோபாலபிள்ளை சேனாவரையர் உரைக்கு மற்றொரு பதிப்பை வெளிக்கொணர்ந்தார். இரண்டுமாத இடைவெளியில் ஒரே உரையை இருவர் பதிப்பித்ததற்கான பின்புலம் குறித்து 17-9-1950 ஈழகேசரி ஞாயிறு பத்திரிகையில் சி. கணபதிப் பிள்ளை விரிவான தகவல்களோடு சுவையானதொரு விவாதத்தை நிகழ்த்தியுள்ளார். அப்பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையினைச் “சி.வை.தா. பதிப்புரைகளின் தொகுப்பு’’ எனும் நூலில் பின்னிணைப்பாகத் தந்துள்ளனர்.

தொல்காப்பியத்திற்குக் கிடைத்தவற்றுள் முதல் உரையாகவும் காலத்தால் முந்திய உரை யாகவும் இன்று நமக்கிருப்பது இளம்பூரணர் உரையே. தொல்காப்பியம் முழுமைக்கும் இவர் இயற்றிய உரையே இன்று பூரணமாய்க் கிடைக்கின்றது. இருந்தபோதிலும் 19ஆம் நூற்றாண் டில் இளம்பூரணரின் எழுத்ததிகார உரை மட்டுமே அச்சாக்கம் பெற்றது. மற்ற அதிகாரத்து உரைகள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பதிப்பிக்கப்பட்டன.‘சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார்’ என்பவர் 1868ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் முதன்முதல் இளம்பூரணர் எழுத்ததிகார உரையை அச்சுக்குக் கொண்டுவந்தார். பாடவேறுபாடுகள் மற்றும் அடிக்குறிப்புகள் தரப்பட்டுப் பதிப்பிக்கப்பெற்ற இப்பதிப்பு இளம்பூரணர் உரையை முதன்முதல் அச்சுக்குக் கொண்டு வந்த சிறப்பைப் பெறுகிறது.

இதன்பின் 19ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் வெளிவந்த நான்கு தொல்காப்பியப் பதிப்புகளையும் வெளியிட்டவர் என்ற பெருமை சி.வை.தா. அவர்களையேச் சாரும். முறையே 1885, 1886, 1891, 1892 ஆகிய காலங்களில் வெளிவந்த பதிப்புகளில் இரண்டு மறுபதிப்புகள் (1886, 1891) ஆகும். இதில் சி.வை.தா. 1885 ஆம் ஆண்டு தொல்காப்பியப் பொருளதிகாரத்தினை நச்சினார்க்கினியர் உரையோடு பதிப்பித்திருந்தார். பல்வேறு சுவடிகளை ஒப்புநோக்கி விரிவான பதிப்புரை எழுதப்பட்டு இப்பதிப்பு பதிப்பிக்கப்பட்டிருந்த போதிலும் முழுமையான நச்சினார்க் கினியர் உரையோடு கூடியதான பதிப்பாக அமையவில்லை. இப்பதிப்பின் முதல் ஐந்து இயல்கள் மட்டுமே ‘நச்சினார்க்கினியருடையது’, பின்னான்கு இயல்களும் பேராசிரியர் உரையாக இருந்தது. சி.வை.தா.வின் கவனத்திலிருந்து தவறிய இந்த உண்மையை ஆராய்ந்தறிந்து 1902 செந்தமிழ் இதழில் கட்டுரையாக வெளியிட்டவர் ரா. இராகவையங்கார் அவர்களே.

1885 ஆம் ஆண்டைத் தொடர்ந்து இரண்டு மறு பதிப்புகளை வெளியிட்டு அதன்பின் 1892 ஆம் ஆண்டு தொல்.சொல்.நச்சினார்க்கினியர் உரையைப் பதிப்பித்து வெளியிட்டார். இப்பதிப்பை இவர் வெளியிட்டதன் வழி 19ஆம் நூற்றாண்டில் தொல்காப்பிய நச்சினார்க்கினியர் உரையை (செய்யுளியல் தவிர) முழுமையாகப் பதிப்பித்த பெருமையைப் பெறுகின்றார். அதோடு தொல்காப்பியப் பதிப்பு வரலாற்றில் தனக்கான ஓர் இடத்தையும் நிலைநிறுத்திக் கொள்கிறார்.

இதுவரை சொல்லப்பட்ட 19ஆம் நூற்றாண்டுத் தொல்காப்பியப் பதிப்புகளின் மூலம் அக்காலப் பதிப்பியல் முறைமைகள் சிலவற்றை நாம் அறியமுடிகின்றது. 19 ஆம் நூற்றாண்டில் வெளி வந்த தொல்காப்பியப் பதிப்புகள் அனைத்தும் சுவடியிலிருந்தே பதிப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சி.வை.தா.வின் ஒருசில பதிப்புகளைத் தவிர மற்ற எவற்றிலும் பதிப்புரையோ, விரிவான முன்னுரையோ தரப்படவில்லை. பதிப்புரை, முன்னுரை இல்லாத பதிப்புகளுக்கு அப்பதிப்புகளின் முகப்புப் பக்கங்களே பதிப்புரையாக நின்று பலவிதமான தரவுகளையும் தருகின்றன. தரவுகள் என்றால் நூல்பெயர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், பதிப்பாளர், அச்சுக் கூடம், ஆண்டு ஆகியவை மட்டுமே தரப்பட்டிருக்கும். இவைதவிர அப்பதிப்பு எத்தனைச் சுவடி களை ஒப்புநோக்கிப் பதிப்பிக்கப்பட்டது, சுவடிகளுக்கான விவரங்கள் போன்ற எவற்றையும் அறியமுடிவதில்லை. ‘பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு’, ‘பல பிரதிரூபங்களைக் கொண்டு’ என முகப்புப் பக்கத்தில் வரும் இவ்வாக்கியங்களைத் தவிர அது எந்த தேசம், எச்சுவடி என்ற ஒருகுறிப்பையும் விளங்கிக்கொள்ள முடிவதில்லை.

விதிவிலக்காக 1885ஆம் ஆண்டு சி.வை.தா. தான் வெளியிட்ட தொல்காப்பியப் பொருளதிகார நச்சினார்க்கினியர் உரைப் பதிப்பில் ஒரு விரிவான பதிப்புரையினை எழுதியுள்ளார். இப்பதிப்புரையின் வழி சி.வை.தா. பல்வேறு அரிய தரவுகளைப் பதிவு செய்துள்ளார். 19ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியக் கல்வி நிலை இருந்த நிலைமையினை விளக்கிச் செல்வதோடு தாம் பதிப்பிக்கப் பயன்படுத்திய சுவடிகளின் எண்ணிக்கை, அவை யார் யாரிடமிருந்து பெறப் பட்டன போன்ற செய்திகளையும் குறிப்பிடுகின்றார். தொல்காப்பியப் பதிப்புகளில் ‘பல பிரதி ரூபங்கள்’ என்ற தொடருக்கான விளக்கம் சி.வை.தா.வின் இந்தப்பதிப்புரையிலிருந்தே பெறப்படுகின்றது. தனது பதிப்பு வெளிவர யார் பணம் தந்தார்களோ அவர்களது பெயரைப் பதிப்புரையில் சுட்டிச் செல்கிறார். தனது பதிப்பைப் பிழையில்லாமல் வெளியிட மிகுந்த சிரத்தையோடு செயல்பட்டுள்ளார். அதையும் மீறி பிழையோடு வெளிவந்துவிட்டால் அதைப் படிப்பவர்கள் அதில் உள்ள பிழைகளைக் கண்டுபிடித்துச் சொன்னார்களானால் திருத்தப்பட்ட ஒரு பிரதியினை இலவசமாக அவர்களுக்கு அனுப்பிவைக்கும் வழக்கத்தையும் கொண்டிருந் தார். இதன்மூலம் சி.வை.தா.வின் பதிப்பு நேர்மையினைப் புரிந்து கொள்ளமுடிகிறது. இக்காலப் பதிப்புகளில் பெரும்பான்மையும் தமிழ் எண்களே தரப்பட்டுள்ளன. நூற்பா எண்கள், பக்கஎண்கள், ஆண்டு அனைத்தும் பெரும்பாலும் தமிழிலேயே அமைந்து காணப்படுகின்றது. இயலகராதி, சூத்திரவகராதி, நூற்பா அமைப்பு, உரைஅமைப்பு, எழுத்து அளவு ஆகியவை பதிப்புக்குப் பதிப்பு வேறுபடுகின்றது. உரைநடை வடிவில் தொடங்கப்பட்ட முதல் பதிப்பிலிருந்து கடைசிப் பதிப்பு முற்றிலும் மாறுபட்டு ஓர் இலக்கணப் பிரதிக்கான தன்மையைப் பெற்று அமைகிறது. 

இருபதாம் நூற்றாண்டில் தொல்காப்பியப் பதிப்புகள் (தெரிவு செய்யப்பட்டவை)

1. தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (பகுதி 1) (அகத்திணையியல், புறத்திணையியல்), ச.பவானந்தம்பிள்ளை, மினெர்வா அச்சுக் கூடம், சென்னை, 1916

2. தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (பகுதி 2) (களவியல், கற்பியல், பொருளியல்), ச.பவானந்தம்பிள்ளை, மினெர்வா அச்சுக்கூடம், சென்னை, 1916

3. தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியர் உரை (பகுதி 3) (மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல்), ச.பவானந்தம்பிள்ளை, லாங்மென்ஸ் க்ரீன் அண்ட் கம்பெனியார், சென்னை, 1917

4. தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியர் உரை (பகுதி 4) (செய்யுளியல், மரபியல்), ச.பவானந்தம்பிள்ளை, லாங்மென்ஸ் க்ரீன் அண்ட் கம்பெனியார், சென்னை, 1917

5. தொல்காப்பியம் செய்யுளியல் நச்சினார்க்கினியருரை, ரா.ராகவையங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1917

6. தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணம், பகுதி –க, (அகத்திணையியல், புறத்திணையியல்), நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1920.

7. தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணம், அகத்திணையியலும், புறத்திணை யியலும், வ.உ.சிதம்பரம் பிள்ளை, பிரம்பூர், சென்னை, 1921.

8. தொல்காப்பியம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், நமச்சிவாய முதலியார், ஸி. குமார சாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1922

9. தொல்காப்பியம் மூலம் ( கருத்து, பாடபேதக்குறிப்பு முதலியவற்றுடன்), பி. சிதம்பர புன்னைவனநாத முதலியார், பி.என்.சிதம்பரமுதலியார் அன் கோ. மதுரை, 1922

10. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை, தி.த.கனகசுந்தரம்பிள்ளை, கழகப்பதிப்பு, 1923

11. தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையருரையோடும் கந்தசாமியார் திருத்திய திருத்தங்களோடும் குறிப்புரையோடும், கழகப்பதிப்பு, 1923

12. தொல்காப்பியம் பொருளதிகாரம் (மூலம்), கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1924.

13. தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் காவேரிபாக்கம் நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், காக்ஸ்டன் பிரஸ், 1927.

14. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் பதவுரை, வ.உ.சிதம்பரம்பிள்ளை, அகஸ் தியர் பிரஸ், அம்பாசமுத்திரம், 1928

15. தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை, ரா.வேங்கடாசலம், கரந்தைத் தமிழ்ச்சங்கம்,1929

16. தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம், (களவியல், கற்பியல், பொருளியல்), வ.உ.சிதம்பரம்பிள்ளை, வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட் சன்ஸ், சென்னை, 1933

17. தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் (நச்சினார்க்கினியர் உரை), இது எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்களால் ஓலைப்பிரதியைக் கொண்டு பரிசோதிக்கப்பட்டு ம.நா.சோமசுந்தரம்பிள்ளை ஆராய்ச்சிக்குறிப்புக்களுடன் எஸ்.கனகசபாபதிப் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது, சென்னை சாது அச்சுக்கூடம், 1934

18. தொல்காப்பியம் பொருளதிகாரம் இரண்டாம்பாகம் (பேராசிரியம்), இது வே.துரைசாமி ஐயரவர்களால் ஏட்டுப்பிரதியோடு ஒப்பிட்டு ஆராய்ந்து திருத்தப்பட்டு ம.நா.சோமசுந்தரம் பிள்ளை ஆராய்ச்சிக்குறிப்புக்களுடன் எஸ்.கனகசபாபதிப் பிள்ளையால் பதிப்பிக்கப் பட்டது, சென்னை சாது அச்சுக் கூடம், 1935

19. தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம், (மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல்), வ.உ.சிதம்பரம்பிள்ளை, வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட் சன்ஸ், சென்னை, 1935

20. தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் முழுவதும் வ.உ.சிதம்பரம்பிள்ளை, எஸ்.வையாபுரிப்பிள்ளை, வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்த்ருலுஅண்ட்சன்ஸ், சென்னை, 1935

21. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை, சி.கணேசையர் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளுடன் நா.பொன்னையாவால் பதிப்பிக்கப்பட்டது. சுன்னாகம் திருமகள் அழுத்தகம், 1937

22. தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, சி.கணேசையர் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளுடன் நா.பொன்னையாவால் பதிப்பிக்கப்பட்டது. சுன்னாகம் திருமகள் அழுத்தகம், 1938

23. தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியார் உரை , மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, பவானந்தர் கழகம், சென்னை, 1941

24. தொல்காப்பியம் மூலம், தி.சு.பாலசுந்தரம்பிள்ளை எழுதிய விளக்கக் குறிப்புகள், கழகம், 1943

25. தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) பேராசிரியர் உரை, சி.கணேசையர் ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளுடனும் நா.பொன்னையாவால் பதிப்பிக்கப்பட்டது. சுன்னாகம் திருமகள் அழுத்தகம், 1943

26. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை, புலவர் ஞா. தேவநேயப் பாவாணர் அடிக்குறிப்புடன், கழகம், 1944

27. தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்) நச்சினார்க்கினியர் உரை, சி.கணேசையர் ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளுடனும் நா.பொன்னையாவால் பதிப்பிக்கப்பட்டது. சுன்னாகம் திருமகள் அழுத்தகம், 1948

28. தொல்காப்பியம் ( மூலம்) பதிப்பாசிரியக் குழுவினரால் பல பிரதிகளை ஒப்புநோக்கிப் பரிசோதித்து வெளியிடப்பெற்றது, எஸ்.ராஜம், மர்ரே வெளியீடு, சென்னை, 1960

29. தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியார் உரை , பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்துப் பதிப்பித்தவர் இராம.கோவிந்தசாமி பிள்ளை, தஞ்சை சரசுவதி மகால் நிர்வாகக் குழுவினருக்காக எஸ்.கோபாலனால் வெளியிடப்பட்டது. 1962

30. தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கோவை முதற்பாகம் (கிளவியாக்கம், வேற்று மையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு) ஆபிரகாம் அருளப்பன், வி.ஐ.சுப்பிர மணியன், அருள் அச்சகம், பாளையங்கோட்டை, 1963

31. தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தியுரையும் பழைய உரையும், கு.சுந்தரமூர்த்தி எழுதிய விளக்கவுரையுடன், கழகம், 1964

32. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை, ஆராய்ந்து விளக்கக்குறிப்புகளுடன், அச்சிட்டார், அடிகளாசிரியர், கும்பகோணம் காவேரி கலர் அச்சுக்கூடம், 1969

33. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் (விளக்கவுரையுடன்), கு.சுந்தரமூர்த்தி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1969

34. தொல்காப்பியம் சொல்லதிகாரம், கல்லாடனார் விருத்தி, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், தமிழ்நாடு அரசு, 1971

35. தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, கு.சுந்தரமூர்த்தி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1981

36. தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் இளம்பூரணர் உரை, அடிகளாசிரியர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1985.

37. தொல்காப்பியம் பொருளதிகாரம் பிற்பகுதி (மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யு ளியல், மரபியல்), பேராசிரியர் உரை, (குறிப்புரையுடன்) கு.சுந்தரமூர்த்தி, அண்ணா மலைப் பல்கலைக்கழகம், 1985

38. தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர்உரை,தொகுதி 1,2, கு.சுந்தரமூர்த்தி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1986

39. தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை, அடிகளாசிரியர், தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1988.

40. தொல்காப்பிய மூலம், பாடவேறுபாடுகள் – ஆழ்நோக்காய்வு, கே.எம்.வேங்கடராமையா, ச.வே.சுப்பிரமணியன், ப.வெ.நாகராசன், பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம், திருவனந்தபுரம், 1996.

இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த தொல்காப்பியப் பதிப்புகளில் தெரிவு செய்யப்பட்ட பதிப்பு களின் பட்டியலே மேலே தரப்பட்டுள்ளன. இத் தெரிவு செய்யப்பட்ட பட்டியல் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட உரைகளின் பதிப்புகள், பெரும்பாலும் சுவடிகளை ஒப்புநோக்கிப் பதிப்பிக்கப்பட்ட பதிப்புகள், பதிப்புகளை ஒப்புநோக்கிப் பதிப்பிக் கப்பட்ட பதிப்புகள், ஆராய்ச்சிப் பதிப்புகள், முதல் பதிப்புகள் என்ற பல்வேறு அடிப்படைகளில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

தொல்காப்பியத்திற்கு வெளிவந்த புத்துரைப் பதிப்புகள் ( அரசஞ் சண்முகனார், பி.சா.சுப்பிர மணிய சாஸ்திரி, நாவலர் சோமசுந்தர பாரதியார், வேங்கடராஜூலு ரெட்டியார், புலியூர் கேசிகன், புலவர் குழந்தை, ச.பாலசுந்தரனார் என இன்னும் பலர் செய்த உரைகளோடு கூடிய பதிப்புகள்), உரைவளப் பதிப்புகள் (மு.அருணாசலம் பிள்ளை, ஆ.சிவலிங்கனார், க.வெள்ளை வாரணன், கே.பகவதி), ஒப்பீட்டுப் பதிப்புகள் (க.வெள்ளைவாரணன்,ச.வே.சுப்பிரமணியன், க.ப.அறவாணன், ரா.சீனிவாசன்) ஆங்கிலமொழிபெயர்ப்புகள், மறுபதிப்புகள் ஆகியவற்றின் விவரங்கள் இங்கு அளிக்கப்படவில்லை.

தொல்காப்பியத்திற்கு வெளிவந்த பதிப்புகள் குறித்து விரிவான விவரங்களை அறிந்துகொள்ள பின்வரும் நூல்கள், கட்டுரைகள் பயனுள்ளவையாக இருக்கும்,

1. சண்முகம்பிள்ளை, மு., தொல்காப்பியப் பதிப்புகள், (பக்.1-70), தமிழாய்வு தொகுதி-8, சென்னைப் பல்கலைக்கழகம், 1978 

2. மெய்யப்பன், ச., தொல்காப்பியப் பதிப்புகள், தொல்காப்பியச் சிந்தனைகள், அண்ணாமலை நகர், 1978, ப-ம். 46. 

3. கிருட்டிணமூர்த்தி, கோ., தொல்காப்பிய ஆய்வின் வரலாறு, சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை, 1990. 

4. சுப்பிரமணியன், ச.வே., தொல்காப்பியப் பதிப்புகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1992. 

5. மதுகேசுவரன், பா., தொல்காப்பியப் பதிப்பு வரலாறு, சந்தியா பதிப்பகம், 2008. 

6. தொல்காப்பியம், சங்க இலக்கியம்: பதிப்பும் பதிப்பாளரும், பதிப்பாசிரியர், ச.சிவகாமி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2009. 

தொல்காப்பியப் பதிப்பாசிரியர்கள்:

பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பதிப்பாசிரியர்களுள் சி.வை.தா. முக்கிய இடம்பெற இருபதாம் நூற்றாண்டில் வேறு சிலர் தனித்த கவனம் பெறத்தக்கவர்களாக உள்ளனர். சங்க இலக்கியங்கள் முழுவதும் பதிப்பாவதற்கு முன் வெளிவந்த (பத்து பதிப்புகள்) தொல்காப்பியப் பதிப்புகளின் எண்ணிக்கையையும் சங்க இலக்கியங்கள் பதிப்பானதற்குப் பின் வெளிவந்த (பெரும் எண்ணிக்கை) தொல்காப்பியப் பதிப்புகளின் எண்ணிக்கையையும் பார்க்கும்போது சங்க இலக்கிய வாசிப்பும் தொல்காப்பிய வாசிப்பும் எவ்வளவு பின்னிப்பிணைந்தவை என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

அந்த வகையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொல்காப்பியப் பதிப்புகளை வெளியிடுவதில் பலர் ஆர்வம் காட்டினர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள், பவானந்தம் பிள்ளை, ரா.ராகவையங்கார், கா.நமச்சிவாயமுதலியார், பி.சிதம்பரபுன்னை வனநாத முதலியார், வ.உ.சிதம்பரம்பிள்ளை, பி.சா.சுப்பிரமணியசாஸ்திரி எஸ்.வையாபுரிப்பிள்ளை, சி.கணேசையர், நா.பொன்னையா, ரா.வேங்கடாசலம்பிள்ளை, வே.துரைசாமி ஐயர், கழகப் பதிப்புகளின் வழியாக கு.சுந்தரமூர்த்தி, அடிகளாசிரியர் என இன்னும் பலர். இவர்களுள் அதிகமான பதிப்புகளை வெளியிட்டவர்கள் கா.நமச்சிவாய முதலியார்,வ.உ.சிதம்பரம்பிள்ளை, சி.கணேசையர் ஆகியோர்.

தொல்காப்பியப் பதிப்புகளின் வளர்ச்சிப் படிநிலை

1847ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை ஏராளமான பதிப்புகள் வெளிவந்துள்ளன. இப்பதிப்பு களின் படிநிலை வளர்ச்சி என்பது பலநிலைகளில் அமைந்து காணப்படுகின்றன. தொடக்க காலங்களில் நூற்பாவும் உரையும் தனித்தனியே பிரிக்கப்படாமல், நூற்பா அமைப்பில் கூட தரப்படாமல், முகவுரை எழுதப்படாமல், முன்பின் இணைப்புகள் தரப்படாமல், அடிக்குறிப்புகள், பாடவேறுபாடுகள், விளக்கக்குறிப்புகள் தரப்படாமல், மேற்கோள் பாடல்கள், பாடல் அமைப்பில் இல்லாமல், நூற்பாவிற்குத் தலைப்புகள் தரப்படாமல் இருந்த தொல்காப்பியப் பதிப்புகள் படிப்படியாக பல்வேறு தன்மைகளை உள்ளடக்கி வெளிவரத் தொடங்கின. ஒவ்வொரு பழைய உரைக்கும் வெவ்வேறு பதிப்பாசிரியர்களால் பல பதிப்புகள் வெளியிடப்பட்டன. இப்பதிப்புகள் ஏதோ ஒரு வகையில் செம்மைப்படுத்தப்பட்டுக் கொண்டே இருந்தன. காலம் செல்லச் செல்ல பதிப்புகள் ஒருவித வளர்ச்சியை நோக்கி நகராமல் சில தேக்க நிலைகளை அடைந்தன. தொடக்க காலத்தில் வெளிவந்த பதிப்புகள் இன்று வரலாற்று நிலைப்பட்ட பதிப்புகளாக உள்ளனவே தவிர அவை பயன்பாட்டுப் பதிப்புகளாக இல்லை. இதனாலேயே தொல்காப் பியத்திற்கு ஏராளமான பதிப்புகள் வெளிவந்தும் அவற்றில் எந்தெந்த உரையாசிரியர் உரைக்கு எந்தெந்தப் பதிப்புகளைப் பயன்படுத்தலாம் என்பதில் ஆய்வாளர்களிடையே பல முரண்கள் காணப்படுகின்றன.

சங்க இலக்கியங்களைப் பொறுத்தவரை தொடக்ககாலங்களில் வெளிவந்த உ.வே.சாமி நாதையர். உள்ளிட்ட பதிப்பாசிரியர்களின் பதிப்புகளில் பெரும்பாலானவை இன்றைய நிலையிலும் பயன்பாட்டுப் பதிப்புக்களாக உள்ளன. உ.வே.சா. அவர்கள் தாம் வெளியிட்ட பதிப்புகளைக் கிடைக்கின்ற சுவடிகளின் அடிப்படையில் திரும்பத் திரும்பத் திருத்தம் செய்துகொண்டே இருந்தார். விரிவான முகவுரை, பயன்படுத்தப்பட்ட சுவடிகளின் விரிவான பட்டியல், அந்தப் பாடல்கள் பிற உரைகளில் பதிவுபெற்றுள்ள இடங்கள், அடிக்குறிப்புகள், பாடவேறுபாடுகள் எனப் பல்நிலைப்பட்ட தகவல்களோடு அவரின் பதிப்பு அமைந்ததால் இன்றும் ஆய்வாளர்கள் உ.வே.சா.வின் பதிப்புகளை ஆய்விற்குப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் தொல்காப்பியப் பதிப்பாசிரியர்களைப் பொறுத்தவரை தொல்காப் பியத்தை அச்சில் கொண்டு வரவேண்டும் என்று உழைப்பைச் செலுத்தினார்களே தவிர அப்பதிப்பு எவ்வெவ் வகையில் எல்லாம் செம்மைப்பட வேண்டும் என்று நினைக்கவில்லை.

தொல்காப்பியப் பதிப்பாசிரியர்களுள் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோனோர் உ.வே.சா. போன்று தாம் பதிப்பித்த பதிப்பை மீண்டும் மீண்டும் செம்மைப்படுத்திப் பார்க்கவில்லை. விரிவான முகவுரைகள் கூட அவர்களது பதிப்பில் இடம்பெறவில்லை. பல முகவுரைகள் மிகச்சுருக்கமாகவும், கடமைக்காக எழுதப்பட்டவையாகவுமே உள்ளன. தாம் பதிப்பிக்கப் பயன்படுத்திய சுவடிகளின் விவரங்கள், அவை யார்யாரிடமிருந்து, எந்தெந்த ஊரிலிருந்து பெறப்பட்டன என்ற எந்த விவரங்களையும் (ஒரு சிலரைத் தவிர) அளிக்கவில்லை. இதனை ‘தொல்காப்பியத்திற்கு 1847 முதல் இன்றுவரை 144 ஆண்டுகளில் பலவகையான பதிப்புகள் 130 வந்துள்ளன. ஒவ்வொரு பதிப்பும் ஒவ்வொரு நிலையில் பயனுடையது. ஆயின் சாமிநாதையர் சங்க இலக்கியப் பதிப்புகளைப் போன்று ஒன்று கூட அமையவில்லை’. என்னும் ச.வே.சுப்பிர மணியத்தின் கூற்று உறுதிப்படுத்துகிறது.(ச.வே.சுப்பிரமணியத்தின் இக்கூற்றிலிருந்து ஒரு கேள்வி எழுகிறது. தமிழின் முதன்மை இலக்கியங்களையெல்லாம், நன்னூல் உள்ளிட்ட இலக்கணங்களையெல்லாம், சிற்றிலக்கியங்களையெல்லாம் பதிப்பித்த உ.வே.சாமிநாதையர் தமிழின் முதன்மை இலக்கணமான தொல்காப்பியத்தைப் பதிப்பிக்காததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை)

இவ்வாறு தொல்காப்பியப் பதிப்புகளின் நிலை இருந்தாலும் இன்றைய நிலையில் பயன் பாட்டுக்கு உரிய பதிப்புகளாக எஸ்.கனகசபாபதிப்பிள்ளை, மே.வீ.வேணுகோபாலப்பிள்ளை, சி.கணேசையர், அடிகளாசிரியர், கு.சுந்தரமூர்த்தி ஆகியோரின் உரைப்பதிப்புகளும், பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம் வெளியிட்ட மூலப்பதிப்பும் குறிப்பிடத்தக்கவையாக விளங்கு கின்றன. இப்பதிப்புகள் ஆய்வாளர்களின் ஆய்விற்குப் பயன்படத்தக்க வகையில் உருவாக்கப் பட்டுள்ளன. இவை தவிர்ந்த வேறு பல பதிப்புகள் கல்விநிறுவனங்களின் பயிற்றுதலுக்காக உருவாக்கப்பட்ட பதிப்புகளாகவே உள்ளன.

ஒப்பீட்டு நோக்கில் பார்க்கும்போதுதான் தொல்காப்பியப் பதிப்பாசிரியர்களின் பதிப்புகளை இவ்வகையில் மதிப்பிடமுடிகிறதே தவிர தனித்த நிலையில் நோக்கும்போது அவர்களின் பணி பாராட்டிற்குரியது. 1847ஆம் ஆண்டு ஒரு இலக்கணப் பனுவல் என்ற தன்மையில் பதிப்பிக்கப்பட்ட தொல்காப்பியம் இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழரின் அடையாளமாக, தமிழ்ச்சமூகத்தின் அடையாளமாக இங்கு மாற்றம்பெற்றது. இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருப்பவர்கள் பதிப்பாசிரியர்களே என்பதை இத்தருணத்தில் சுட்டிச்சொல்லியே ஆகவேண்டும்.

Pin It