அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு என்ற பதாகையின் கீழ் இன்று காலை 9 மணிக்கு, நெல்லை பாளையங்கோட்டை திடலில், பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர், மனிதநேய மக்கள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, சேவ் தமிழ்ஸ், தமிழக இளைஞர் எழுச்சி பாசறை, SDPI, மே 17 இயக்கம், த.தே.பொ.க., தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட பல கட்சிகள், இயக்கங்கள் ஒன்றிணைந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், விடுதலை சிறுத்தைகள் வன்னிஅரசு, தோழர் தியாகு, பண்ரூட்டி வேல்முருகன் ஆகிய தலைவர்களின் தலைமையில் "மக்களின் அச்சத்தைப் போக்கி அணு உலையை திறக்கக்கூடாது என்ற தமிழக அரசு இன்று மக்களை அச்சுறுத்தி திறப்பது நியாயமா? கூடங்குள அணு உலையை திறக்காதே! கைது செய்தவர்களை உடனே விடுதலை செய்!" என்கிற கோரிக்கை முழக்கத்துடன் 5000க்கும் மேற்பட்ட தோழர்கள் இடிந்தகரை நோக்கி படையெடுத்தபோது, போலிசாரால் கைது செய்யப்பட்டனர். விண்ணதிர வைக்கும் முழக்கங்களுடன் காற்று அங்கு வேறு மாதிரியாக இருந்தது. ஏறத்தாழ 800க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகினர். கைது செய்யப்பட்டவர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்ட ரோஸ் மஹால் நிரம்பி வழிந்தததால் மென்மேலும் தோழர்களை அடைத்து வைக்க முடியாமல் காவல் துறையினர் விழி பிதுங்கினர்.

மாலை ஐந்து மணிக்கு விடுவிக்கப்பட்ட தோழர்கள் இன்று ஒரு எதிர்பாராத திருப்பத்தை  சந்திக்க நேர்ந்தது. இன்றைய போராட்டத்தில் பங்கு பெற்ற தோழர் சதீஸ், மற்ற இயக்கத் தோழர்களுடன் வெளியே சென்றபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு வந்த சிலர் அவரை சுற்றி வளைத்து வண்டியில் போட்டு கடத்திச் சென்றிருக்கின்றனர். இது கியூ பிராஞ்ச் போலிசின் நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எந்தவித வாரண்டோ, காரணங்களோ இல்லாமல், இப்படியான ஒரு நிகழ்வு அரங்கேற்றப்பட்டிருக்கிறது. கூடங்குள அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு பெருவாரியான‌ மக்களிடையே  ஆதரவு பெருகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்த அறப்போரை திசைதிருப்ப எல்லா வழிகளிலும் ஆளும் அரசால் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பதையே இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. போராடும் மக்களை நெருங்க முடியாத கையாலாகாத‌ அரசு, மாற்று வழியில் உளவியல் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.

ந‌மது அடிப்படை வாழ்வாதார உரிமைகளுக்காக ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைகளை எதிர்த்து உலகெங்கும் போராடி வரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கெல்லாம் ஒரு மாபெரும் முன்னுதாரணமாகத் திகழும் கூடன்குளம் இடிந்தகரை மக்கள் இம்மாதிரியான அடக்குமுறைகளை தூசு போலத் துடைத்தெறியத் துணிந்திருக்கின்றனர். முதலாளித்துவ ஏகாதிபத்திய நலன்களுக்காக ஒரு சமூகத்தையே பலியிடத் துடித்துக் கொண்டிருக்கும் இந்திய அரசையும் தமிழக அரசையும் எதிர்த்து, கொலைகார‌ அணு உலையை மூடும் வரை மக்கள் இந்த அறவழிப்போரை இம்மியளவு கூட விட்டுக் கொடுக்கப் போவதில்லை. ஆயிர‌க்கண‌க்கான‌ போலீசின் பிரம்மாண்ட அணிவகுப்பும், இராணுவ‌மும் துப்பாக்கிக‌ளும் நெஞ்சுர‌ம் கொண்ட அந்த‌ குழந்தைகளைக் கூட‌ மிர‌ட்ட‌ப் போதுமான‌தாக‌ இருக்கவில்லை.

kudankulam_625

இன்னொரு முள்ளி வாய்க்காலை நிறைவேற்றி விட‌லாம் என‌ ல‌ட்சிய‌ வெறியோடு க‌ள‌மிற‌ங்கியிருக்கிற‌து அர‌சு இய‌ந்திர‌ம். உண‌வு, குடிநீர் காய்க‌றி எல்லா அத்தியாவ‌சிய‌ப் பொருட்க‌ளும் த‌டை செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன. ராதாபுரம் பகுதியில் 144 த‌டை உத்த‌ர‌வு பிற‌ப்பிக்க‌ப்ப‌ட்டிருக்கிறது. உள்ளே வெளியே போக்குவ‌ர‌த்து அனும‌தி இல்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மருந்துகளின் கையிருப்பு குறைந்து கொண்டே வருகிறது. கூட‌ங்குள‌மும் இடிந்த‌கரையும் வெளியுல‌கோடு தொட‌ர்ப‌றுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. உதயகுமார் அவர்களின் துணைவி நடத்தும் பள்ளிக்கூடம் கூலிப்படையினரால் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. வலியால் அவதிப்பட்ட ஒரு கர்ப்பிணிப்பெண் மருத்துவமனைக்குச் செல்ல போலிசு மறுத்திருக்கிறது. கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை. கைதானவர்களில் 45-க்கும் மேற்பட்ட பெண்கள் பேருந்துகளில் கொண்டு சென்ற போது, மலஜலம் கழிக்கக்கூட போலிசு வண்டியை நிறுத்த‌ அனுமதிக்கவில்லை.

ச‌ங்க‌ர‌ன் கோவில் இடைத்தேர்த‌ல் நிகழ்ந்த ம‌றுநாளே, த‌ன் கோர‌ முக‌த்தைக் காட்டிக் கழுத்தறுத்த‌ த‌மிழ‌க அரசையும், ஒரு இனப்படுகொலைக்குத் தயாராகும் முஸ்தீபுகளோடு தன் திட்டத்தை வரையறுத்திருக்கும் மாநில அரசையும் மக்கள் அவதானிக்கத் தொடங்கி விட்டனர். ஏற்கெனவே சிங்கள் அரசின் உதவியோடு அம்பலமான ஈழப்படுகொலைகளைப் பார்த்து கண்ணீரோடு (சற்று தாமதமாக) கொதித்துப் போயிருக்கிற தமிழனுக்கு காங்கிரசு அரசின் மீதான தேச வளர்ச்சி பொய்க்கரிசனம் தெற்றென விளங்கியிருக்கிறது.

இடிந்தகரையில் அணு உலையை எதிர்த்துப் போராடும் மீனவ விவசாய மக்களின் நியாயத்தையும், ஏன் அணு உலைக‌ளை இந்தியா உள்ளிட்ட‌ மூன்றாந்த‌ர‌ நாடுக‌ள் ஆதரிக்கின்றன என்ற‌ பின்ன‌ர‌சியலையும் ம‌க்க‌ளிடையே அவசரமாய்க் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இங்கே தான் இருக்கிறது. தின‌ம‌ல‌ம் போன்ற‌ பாசிச‌ நாளித‌ழ்க‌ளின் க‌ருத்துக‌ளுக்கு போதுமான‌ ஆத‌ர‌வு குறைந்து வருகிற இவ்வேளையில்,நம் சந்ததிகளைக் காக்க இரவு பகலாக போராடி வரும் அந்த மக்களுக்கான ஆதரவைத் திரட்ட‌ நம்மாலான முயற்சிகளைச் செய்வோம்.

தமிழகத்தையே கூறுபோடக் காத்திருக்கும் எண்ணிலடங்கா திட்டங்கள் மத்திய அரசிடம் இன்னும் நிறைய இருக்கின்றன. எனவே இந்த அவலம் நாளை ஒவ்வொரு தமிழனுக்கும் நேரும் காலம் வெகுதொலைவில் இல்லை. நமது நிலங்கள் பறிக்கப்படவிருக்கின்றன. நமது வீடுகள் சூறையாடப்படவிருக்கின்றன. நமது உயிர்களைச் சுவைக்க‌ பிணந்தின்னி கழுகுகள் காத்திருக்கின்றன. அரசியல்வாதிகள் எப்போதும் போல நம்மைக் கைவிட்டு விடுவார்கள். கூடங்குளத்தையும் இடிந்தகரையையும் வட்டாரப் பிரச்சினையாக பாவித்து பாராமுகமாய் இருக்கப் போகிறோமா? தொலைக்காட்சியையும் கிரிக்கெட்டையும் ஓட்டரசியல் கட்சிகளின் இலவசக் கவர்ச்சி விளம்பரங்களையும் பார்த்து கிறங்கிக் கிடக்கப் போகிறோமா?

ஒடுக்கப்பட்ட மக்களின் மீது வன்முறைச் சேற்றை வாரியிறைத்து வாழ்வாதாரப் போராட்டங்களை நசுக்கத்துடிக்கும் ஒவ்வொரு அரசும் இறுதியில் வீழ்ச்சியைச் சந்தித்தே ஆக வேண்டுமென்பதை, போராடும் மக்களுக்கு தோள் கொடுப்பதன் மூலம் இந்திய அரசை எச்சரிப்போம். நம் மன உறுதியையும் காற்றையும் கடலையும் அவர்களால் அடைக்க முடியாது என்பதை சாவு வியாபாரி அரசுகளின் துப்பாக்கி ரவைகளுக்கு உரக்கச் சொல்வோம்.

- அ.மு.செய்யது (சேவ் தமிழ்சு இயக்கம்)

Pin It