மனித நாகரீகத்தின் ஒட்டுமொத்த சிறப்பம்சங்களை எதிர்காலத் தலைமுறையினருக்குக் கொண்டு செல்வது கல்வியே.

       கல்வி கொடுப்பதன் வாயிலாக மட்டுமே, நாட்டில் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நிலையான, நீடித்த மாற்றத்தையும், மேம்பாட்டையும் உருவாக்க முடியும் என்பதே அனுபவப்பூர்வமான உண்மையாகும். குறிப்பாக, வருங்காலத் தூண்களான குழந்தைகளின் மத்தியில் கல்வியைக் கொண்டு சென்று உத்தரவாதம் செய்வதிலிருந்தே நாட்டின் ஒளிமயமான எதிர்காலம் அடங்கியுள்ளது. அப்படி கொடுக்கப்படும் கல்வியானது, பாகுபாடின்றி பொதுவானதாகவும், ஒரே தன்மையானதாகவும், சமமானதாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் அமுல்படுத்தப்பட்ட “சமச்சீர் கல்வி” முறையானது, இன்றைய ஆடசியாளர்களால் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. குழந்தைகளின் எதிர்காலத்தை மாற்றியமைக்கப் போவதாகக் கூறி, முன் வைக்கப்பட்ட இந்த திட்டத்தின் எதிர்காலம் இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

இப்படியாக கல்வி வழங்குவது என்பது ஆட்சியாளர்களின் விருப்புரிமை சார்ந்ததாகக் கருதப்பட்டும், காட்டப்படும் வரும் நம் நாட்டில் தான், கல்வி பெறுவது அனைத்து குடிமக்களுக்கான அடிப்படை உரிமை என்று உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சாசனம் 1950:

“இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு பத்தாண்டுகளுக்குள் குழந்தைகள் அனைவருக்கும் பதினான்கு வயது முடிவடையும் வரையில், இலவசமாகவும், கட்டாயமாகவும் கல்வி பெறுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்” என சரத்து 44 தெளிவாகக் கூறுகிறது. எனினும் ஆறு பத்தாண்டுகள் கடந்து போன பிறகு தற்போது தான் இது குறித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

1992 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் “தலைக் கட்டணம்” வசூலித்தல் (Capitation Fee) குறித்த தாக்கல் செய்யப்பட்ட “மோகினி ஜெயின் எதிர் கர்நாடக மாநில அரசு” எனும் பிரபலமான வழக்கில் “தனிமனிதனுடைய மாண்பையும், வாழ்வையும் கல்வி உரிமை இல்லாமல் எவராலும் அறுதியிட முடியாது. அடிப்படை உரிமைகளான பேச்சு மற்றும் கருத்து வெளியிடும் உரிமைகளை, கல்வி கொடுத்தல் மற்றும் அதன் வாயிலாக, தனிமனித மாண்பை உணர வைத்தல் போன்ற செயல்களின் மூலமாகவே முழுமையாக அனுபவிக்க முடியும். தலைக் கட்டணம் வசூலித்தல் என்ற பெயரிலான அதிகப்படியான கல்வி கட்டண வசூலிப்பினால், நாட்டில் எந்த குடிமகனுக்கும் கல்வி மறுக்கப்படக்கூடாது” என்று கூறியதோடு, இது நாள் வரையில் “அரசின் நெறியுறுத்தும் கொள்கை”யின் கீழ் இருந்து வந்த கல்வியானது, இந்திய அரசியலமைப்புச் சாசனம் உத்தரவாதப்படுத்தியுள்ள “வாழ்வுரிமை” என்ற பதத்திற்குள் “கல்வியும் உள்ளடங்கும்” என்றும் “கல்வி பெறுவது ஒரு அடிப்படை உரிமை அதனைத் தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது” என்றும தெளிவுபடக்கூறியது.

மேலும், “இந்தியாவில் கல்வியானது, எந்த சூழ்நிலையிலும், விற்பனைக்கான ஒரு பண்டமல்ல” என அந்த வழக்கில் நீதிபதிகள் தெளிவாகவும், உறுதியாகவும் கூறியிருந்தார்கள்.

அதேபோல 1993ம் ஆண்டில் உச்சநீதிமன்றம், “உண்ணிகிருஷ்ணன் எதிர் ஆந்திரபிரதேச மாநில அரசு” எனும் வழக்கில், கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்பதை உறுதிப்படுத்தியதோடு, பதினான்கு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி வழங்க வேண்டும் என்றும், அதற்கு மேற்பட்ட வகுப்பகுளுக்கு கல்வி வழங்குவது என்பது அந்தந்த மாநில அரசுகளின் பொருளாதார வசதிகளைச் சார்ந்தது என்றும் கூறியது.

குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் : 2009

மேற்கண்ட தீர்;ப்புகளைத் தொடர்ந்து பல்வேறு விவாதங்களுக்கும், ஆய்வுகளுக்கும் பிறகு, சமீபத்தில் மத்திய அரசு “குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம”; ஒன்றை இயற்றியது. தற்போது இந்த சட்டமானது நாட்டில் பரவலாக அமலாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

அகில உலக மனித உரிமைப் பிரகடனம் : 1948

“மானுட ஆளுமையின் முழு வளர்ச்சியை, மனித உரிமையை, அடிப்படை சுதந்திரங்களின்பால் மதிப்பை வலுப்படுத்துவதே கல்வியின் நோக்கமாக இருத்தல் வேண்டும். தேசங்கள், மரபின அல்லது சமயக் குழுக்களிடையே நல்லிணக்கத்தையும், சகிப்புணர்வையும், நட்புணர்வையும் வளர்;த்திடுவதாகவும், அமைதி காத்திட ஐக்கிய நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்குத் துணை புரிவதாகவும் கல்வி இருக்க வேண்டும்” என்று அகில உலக மனித உரிமை பிரகடனத்தின் சரத்து 26 (2) கூறுகிறது.

ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகளுக்கான உடன்படிக்கை, 1989

“ஒவ்வொரு குழந்தைக்கும் சம வாய்ப்பின் அடிப்படையில் ஆக்கப்பூர்வமான, முன்னேற்றமான முறையில் கட்டாய, இலவச, தரமான கல்விக்கான உரிமையுண்டு” என்று ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகளுக்கான உடன்படிக்கையின் சரத்து 28 கூறுகிறது.

பெண்கள் பாகுபாட்டிற்கெதிரான அகில உலக உடன்படிக்கை, 1979

“கல்வி அமைப்பில் பெண்கள் மீது மூடெண்ணச் சிந்தனைகளால் உருவாக்கியுள்ள பாகுபாடுகள் களையப்பட்டு, கல்வியின் அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு சமத்துவக் கல்வி தரப்பட வேண்டும். இருபாலரும் சேர்ந்து படிக்கின்ற வாய்ப்புகள் உருவாக்கப்படல், பாடத்திட்டங்களை மறுபரிசீலனை செய்தல், கற்பிக்கும் முறையில் புதுமை செய்தல் போன்றன மூலம் பெண் கல்விக்கு வழிவகை செய்தல் வேண்டும்” என்று பெண்கள் பாகுபாட்டிற்கெதிரான அகில உலக உடன்படிக்கையின் சரத்து 10 (M) கூறுகிறது.

கல்வியின் நோக்கம் :

       சாதி, மதம், பாலினம், இனம், மொழி, பொருளாதாரம் உள்ளிட்ட கணக்கற்ற வேறுபாடுகளைக் களைந்து, மனிதர்கள், மனிதநேயம், மனித உரிமைகள் போற்றப்பட வேண்டிய வகையில், சமூக சீர்திருத்தங்கள் உருவாகிட அடிப்படைக் காரணியாக விளங்குவதே “கல்வியின் நோக்கமாக” இருக்க முடியும். அப்படிப்பட்ட கல்வியில் ஆட்சியாளர்களோ, தனியார் நிறுவனங்களோ அல்லது மூன்றாம் நபர்களோ தங்களது சுய விருப்பு வெறுப்புகளின்படி அணுகுவதன் காரணமாக ஏற்படப்போகும் மாற்றங்களுக்கும், அதன் விளைவாக நீண்ட காலம் கழித்து ஏற்படப் போகும் விளைவுகளுக்கும் பொறுப்பேற்க போவது யார்?

 காசு இருந்தால் கல்வி பெறலாம் என்று கல்வி வியாபாரப் பொருளாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில் “சமச்சீர்கல்வி” என்பது தவிர்க்க முடியாததாகும். ஆனால் இதில் தலையீடு செய்ய வேண்டிய நீதிமன்றமும், எதிர்கட்சிகளும், இயக்கங்களும் தங்களது அதிகாரங்களை உணர்ந்தும் அதனை பயன்படுத்திட தயங்குபவர்களாகவே இருந்து வருவது வெட்கக்கேடு. முந்தைய ஆட்சியாளர்களின் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியும், அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட தனியார் கல்வி நிறுவன அதிபர்களின் தொடர் தலையீடுகளாலும் பள்ளி செல்லும் குழந்தைகள் மட்டுமின்றி, குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்க வேண்டியதை தம் கடமைகளாகக் கொண்டுள்ள பெற்றோர்களின் நிலையும் கேள்விக்குள்ளாகியுள்ளது.

உலக நாடுகளும், இந்திய அரசியலமைப்பு சாசனமும் உத்தரவாதப்படுத்தியுள்ள பாகுபாடற்ற சமமான கல்வி நமது குழந்தைகளுக்கு கிடைக்க செய்ய நமது பங்களிப்பு என்ன என்பது குறித்து ஒவ்வொரு பெற்றோரும் திடமாக சிந்திக்க வேண்டிய நேரமிது. அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கு ஒரு காலத்தில் அடிப்படை கல்வியே மறுக்கப்பட்டது. இப்போது கணிப்பொறி யுகத்தில் பொருளாதார அடிப்படையில் சமச்சீர் கல்வி மறுக்கப்படுகிறது. இதன் மூலமான இழப்புகளை நமது குழந்தைகளுக்கு எதைக் கொண்டு சரிசெய்ய போகிறோம்? சமமற்ற, பாகுபாடான கல்வியை நாம் கொடுத்துவிட்டு அதை பயின்று வெளிவரும் குழந்தைகளிடம், நாம் எவ்விதம் எதிர்பார்க்க முடியும் சமமான உலகத்தை?

- இ.இ.இராபர்ட் சந்திரகுமார், வழக்கறிஞர், மதுரை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It