பேருந்துப் பயணம் என்ற பெயரில், மக்கள் ஜடப் பொருள்களை விடக் கேவலமாக அடுக்கி வைக்கப்பட்டுக் கொண்டு செல்லப்படும் சென்னைப் பெருநகரில், அதன் தொடர்பான புள்ளி விவரங்கள் கீழ்கண்டவாறு;
 
சென்னைப் பெருநகரின் மக்கள் தொகை                                    88.71 இலட்சம்
ஒரு நாளில் மக்கள் செய்யும் பிரயாணங்களின் எண்ணிக்கை        133.07 இலட்சம்
இரயிலில் பிரயாணம் செய்பவர்களின் எண்ணிக்கை                     18.30 இலட்சம்
பேருந்தில் பிரயாணம் செய்பவர்களின் எண்ணிக்கை                    54.89 இலட்சம்
சொந்த வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை                     59.88 இலட்சம்
சென்னைப் பெருநகரில் ஓடும் பேருந்துகளின் எண்ணிக்கை          3,140
 
          இப்பெருநகரில் ஓடும் பேருந்துகள் ஒரு நாளைக்குப் பத்து முறை ஒரு தடத்தில் போய் வந்தால் 54.89 இலட்சம் பயணிகளை இருபது தடவைகளில் ஏற்றிக் கொண்டு சென்று வந்ததாகக் கொள்ளலாம். அப்படிப் பார்த்தால் ஒரு பேருந்து சராசரியாக (5489000/(3140x10x2)) 87 பேர்களை விட அதிகமாக ஏற்றிக் கொண்டு செல்கிறது. நெரிசல் நேரங்களில் இவ்வெண்ணிக்கை குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று மடங்காக இருக்கும். அதாவது நெரிசல் நேரங்களில் ஒரு பேருந்தில் குறைந்த பட்சம் 174 பேர்களை விட அதிகமானோர் பயணம் செய்கின்றனர்.
 
          ஒரு பேருந்து அதிக பட்சமாக 48 பேர்கள் அமர்ந்து செல்வதற்கும் 25 பேர்கள் நின்று செல்வதற்கும் ( மொத்தம் 73 பேர்கள் செல்வதற்குத்) தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட புள்ளி விவரங்களின் படி சென்னைப் பெருநகரின் போக்குவரத்தைச் சமாளிக்கக் (நெரிசல் நேரப் பிரச்சினையைக் கணக்கில் கொள்ளாவிட்டால்) குறைந்த பட்சம் (54,89,000/(73x20)) 3,760 பேருந்துகள் தேவை. ஆனால் நெரிசல் நேரங்களில் பயணிகளின் எண்ணிக்கை சராசரியை விட இருமடங்கிற்கும் அதிகமாகவே உள்ளது. அதைச் சமாளிக்கக் குறைந்த பட்சம் 7,520 பேருந்துகள் தேவை. இது போக பேருந்துகள் பழுதானாலோ, நடுவழியில் நின்று விட்டாலோ உடனடி உதவிக்காக 500 மாற்றுப் பேருந்துகளாவது இருப்பில் இருக்கவேண்டும். இக்கணக்கின்படி நம் மாநகரப் போக்குவரத்துக் கழகம் 8,020 பேருந்துகளை வைத்திருக்க வேண்டும். (ஆனால் அதனிடம் 3,140 பேருந்துகள் தான் உள்ளன.)பேருந்துகளின் தேவைக்கான இக்கணக்கீடும், மக்கள் ஜடப் பொருட்களாக அடுக்கி வைத்துச் செல்லப்படாமல் இருப்பதற்குத் தானேயொழிய, வசதியான பிரயாணத்திற்காக அல்ல.
 
          ஆனால் நமது அரசும், மாநகரப் போக்குவரத்துக் கழகமும், பேருந்துகளின் எண்ணிக்கைக் குறைவைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல், தகவல் பரிமாற்றச் சாதனங்களின் குறைபாடு பற்றியும், பேருந்து நிலையங்களில் மற்ற வாகனங்களை நிறுத்த இடமின்மை பற்றியும் விரிவாகப் பேசிக் கொண்டு இருக்கின்றன. மாநகரப் போக்குவரத்துக் கழகம் 9-3-2011 அன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஒரு குறிப்பிட்ட பேருந்து குறிப்பிட்ட நேரத்தில் எங்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள, புவி இடனறி அமைப்புக் (Geographical Positioning System - GPS) கருவியைப் பேருந்துகளில் பொருத்த இருப்பதாகவும், பேருந்துகள் இருக்கும் இடத்தை, குறுஞ் செய்திச் சேவை (SMS) மூலம் தொ¢ந்து கொள்ள முடியும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
 
          மேலும் 14-3-2011 அன்று வெளியிடப்பட்டுள்ள இன்னொரு செய்திக் குறிப்பில், பேருந்து நிலையங்களிலோ அல்லது அதற்கு அருகிலோ, சொந்த வாகனங்களை நிறுத்தி விட்டு, பேருந்துகளில் பயணத்தைத் தொடர்வதற்குத் தேவையான இடவசதி போதுமானதாக இல்லை என்றும், அவ்வசதிகளைச் செய்து கொடுத்தால் பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிககையை அதிகப்படுத்த முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடல்லாமல் பயணிகளின் கருத்தையும் வெளியிட்டுள்ளது. பயணிகள் பேருந்து நிலையங்களில் தகவல் அறிவிப்பு முறை (public announcement system) மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், பேருந்து நிலையங்களின் பரப்பளவு போதாமல் இருப்பதால் இரவு நேரங்களில் பேருந்துகள் சாலைகளில் நிறுத்தப்படுன்றன என்றும், பேருந்து நிலையங்களில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இவையெல்லாம் குறைபாடுகள் தான்; ஆனால் முதல் நிலைத் தேவைகள் அல்ல.

பேருந்துகளின் எண்ணிக்கையைக் குறைந்த பட்சம் மூன்று மடங்காக உயர்த்த வேண்டும் என்பதே முதல் நிலைத் தேவை என்று மட்டுமே கூறி மற்றவற்றை எல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று கூற வேண்டிய மக்கள் அதைப் பற்றி ஒரு வார்த்தையையும் பேசவில்லை. (மக்கள் பேசியிருப்பார்கள்; போக்குவரத்துக் கழகம் தான் மறைத்து விட்டது என்று கூறினாலும், அற்ப விளம்பரத்திற்கு ஆசைப்பட்டு, தங்களுடைய உண்மையான பிரச்சினையைப் பற்றித் தான் பேசுவோமே ஒழிய, முக்கியத்தவம் குறைந்த பிரச்சினைகளைப் பற்றிப் பேச மாட்டோம் என்று உறுதியாய் இல்லாத மக்கள் இருக்கும் வரையில் அரசும் அரசு நிறுவனங்களும் பிரச்சினைகளைத் திசை திருப்பிக் கொண்டு ஏமாற்றிக் கொண்டே இருக்கலாம்.)
 
          சரி! முதல் நிலைத் தேவைகளைப் பற்றித் தான் பேசவில்லை; அடுத்த அடுத்த .........அடுத்த தேவைகளையாவது நிறைவேற்றுவார்களா என்றால் அதுவும் முடியாது என்று, பல போக்குவரத்துக் கழகங்களில் தலைமைப் பதவிகளை வகித்த திரு.எஸ்.ஏ.விஜயகுமார் என்பவர் தெரிவித்துள்ளார். இப்பொழுது ஓடிக் கொண்டிருக்கும் பேருந்துகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு தேவையைக் கூடப் பூர்த்தி செய்யாத நிலையில், அவற்றை நிறுத்தி வைப்பதற்கு இப்பொழுது உள்ள பேருந்து நிலையங்களின் பரப்பளவு போதுமானதாக இல்லை என்றும், நகர்ப்புற நிலங்கள் கிடைப்பதற்கு அரிதாகவும் விலை அதிகமாகவும் இருக்கும் போது, மக்கள் தங்கள் சொந்த வாகனங்களை நிறுத்தி விட்டுப் பயணத்தைத் தொடர இடம் கிடைக்காது என்று கூறியிருக்கிறார். மேலும் பேருந்துச் சேவை நஷ்டத்திலேயே ஓடுவதாகவும், பேருந்து நிலையங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும், பேருந்துகளிலும் விளம்பரங்கள் செய்வதன் மூலம் வருவாய் ஈட்டி இந்நஷ்டங்களைத் தவிர்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
          சென்னை, இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தின் (I.I.T.) போக்குவரத்துத் துறைப் பேராசிரியர் முனைவர் வி.தமிழரசன், பேருந்துகளுக்கான தனி வழித் (exclusive bus way) திட்டத்தை பல அறிஞர்கள் முன்னிலையில், பல கருத்தரங்குகளில் விளக்கிக் கொண்டே இருக்கிறார். சென்னைப் பெருநகர்ச் சாலைகளில் பேருந்துகளுக்கென தனி வழியைக் குறித்து ஒதுக்கி விட்டால், பேருந்துப் பயணிகளின் பயண நேரம் வெகுவாகக் குறைந்து விடும் என்று தெளிவாக விளக்கிக் கொண்டு இருக்கிறார். அவருடைய திட்டத்தைச் செயல்படுத்துவதில் நிதி ஒதுக்கீடுப் பிரச்சினையும் இல்லை. ஆனால் யாருமே அதைக் கண்டு கொள்ள மறுக்கிறார்கள். ஏன்?
 
          நம் சிந்தனைகள் யாவும் முதலாளித்துவப் பொருளாதார உற்பத்திமுறைக்கு அடிமைப்பட்டு உள்ளதோடு உலகின் மற்ற பகுதி மக்கள் துய்க்கும் அடிப்படை உரிமைகள் நமக்கும் வேண்டும் என்று குரல் கொடுப்பதற்கும் துப்பற்று இருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் வசதியான நகரப் போக்குவரத்து மிகக் குறைந்த செலவில் கிடைக்காவிட்டால், அந்நாட்டு மக்கள் உழைப்பிடங்களுக்கு வரமாட்டார்கள். அதனால் தொழில் முடங்கி, முதலாளிகளுக்கு இலாபம் வரும் வழியில் மிகப் பொ¢ய உராய்வு ஏற்பட்டு விடும். ஆகவே அந்நாட்டு அரசுகள் கூட்டு நுகர்வு (collective consumption) என்ற பெயரில், நம் மக்கள் நினைத்தும் பார்க்க முடியாத வசதியான பிரயாணத்தை, நாம் நினைத்தும் பார்க்க முடியாத குறைந்த கட்டணத்தில் அளிக்கின்றன. ஆனால் நம் நாட்டுப் படிப்பாளிகளோ போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் ஓடுகின்றன என்றும், ஆகவே கட்டணத்தை உயர்த்துவது அவசியமாகிறது என்றும் முதலாளித்துவ அரசுடன் சேர்ந்து ஒத்து ஊதுகின்றனர். பொதுப் போக்குவரத்தில் நஷ்டம் ஏற்பட்டுத்தான் தீரும் என்றும், கட்டணம் என்பது ஏதோ பெயருக்குத்தான் இருக்க வேண்டும் என்றும், உலக நாடுகளில் இப்படித்தான் நடந்து கொண்டு இருக்கிறது என்றும் கூறும் துணிவு யாருக்கும் இல்லை. எவ்வளவு கொடூரமான வாதைகள் வதைத்தாலும் முதலாளிகளின் இலாபச் சக்கரப் பாதையில் உராய்வு ஏற்படுத்துவதைப் பற்றி யோசிக்கக் கூட மாட்டோம் என்று மக்களும் படிப்பாளிகளும் உறுதியாய் இருக்கும் பொழுது, முதலாளிகளின் ஏவலாளான அரசுகள் மக்கள் நலனைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?
 
          பேராசிரியர் முனைவர் தமிழரசனின், பேருந்துகளுக்கான தனி வழித் திட்டத்தினால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லையே? இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டே செயல்படுத்தி, பேருந்துப் பயணிகளின் வசதியை அதிகரிக்கலாமே என்று சிலர் நினைக்கக் கூடும். யாருக்கும் பாதிப்பு இல்லை என்று நினைப்பது தவறு. பேருந்துப் பயணத்தை வசதியாக்கி விட்டால், கணிசமான மக்கள் சொந்த வாகனங்களை விட்டு, பேருந்துப் பயணத்திற்கு மாறிவிட வாய்ப்புண்டு. அப்படி நடந்து விட்டால் சிற்றுந்து விற்பனை குறைந்துவிடும். அதன் விளைவாக சிற்றுந்து உற்பத்தித் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கும் மூலதனம் வேறு தொழில்களுக்குத் திருப்பி விடப்பட வேண்டும். வேறு தொழில்களை எங்கே தேடி அலைவது?
 
          பெல்ஜியம் நாட்டிலுள்ள ஹாஸெல்ட் நகரில் பேருந்துப் பயணத்தை இலவசமாக்கி விட்டு, தனிவாகனப் பயணத்தை ஒழித்துக் கட்டி இருக்கிறார்கள் என்றால், தனிவாகனப் போக்குவரத்தால் ஏற்பட்ட சுற்றுச் சூழல் கேட்டைக் குறைக்காவிட்டால் அந்நகரத்தில் வாழ மாட்டோம் என்று அந்நாட்டு மக்கள் அச்சுறுத்தினார்கள். அந்நகா¢ன் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்ட  மூலதனம் முடங்கிவிடக் கூடாது என்ற அச்சத்தில், அம்மாதிரியான முடிவை அந்நாட்டு அரசு எடுத்து இருக்கிறது. நம் நாட்டு மக்கள் என்றைக்காவது தங்களுடைய வசதியைப் பெருக்காவிட்டால் இலாபச் சக்கரப் பாதையில் உராய்வை ஏற்படுத்துவோம் என்று எச்சரித்து இருக்கிறார்களா? முதலாளிகளின் இலாபச் சக்கரப் பாதை சீராக இருக்க வேண்டும் என்பதில் முதலாளிகளை விட மக்கள் அல்லவா அதிக அக்கறையை எடுத்துக் கொள்கிறார்கள்?
 
          அப்படியானால் பிரச்சினைகளைத் தீர்க்க முயல்வது போல் அரசும் அரசு நிறுவனங்களும் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?
 
          முதலாளிகளுக்கு எவையெல்லாம் நன்மையோ அவையெல்லாம் உழைக்கும் மக்களுக்குக் கெடுதல் என்பதையும், உழைக்கும் மக்களுக்கு எவையெல்லாம் நன்மையோ அவையெல்லாம் முதலாளிகளுக்குக் கெடுதல் என்பதையும் உணர்ந்த உண்மை அறிஞர்கள் சிலர் நம்மில் இருக்கவே செய்கின்றனர். மக்கள் சிந்திப்பதற்கு விஷயம் எதுவும் இல்லாத நிலையில் உண்மை அறிஞர்களின் கருத்துகளை உள்வாங்க ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில், அம்மாதிரி வெற்றிடம் ஏற்படாமல் தடுப்பதற்காக, மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முயல்வது போல் பாசாங்கு செய்கிறார்கள். முதல் நிலைத் தேவைகளைத் தவிர வேறு பிரச்சினைகளைப் பற்றிப் பேச வைக்கிறார்கள்.
 
          மொத்தத்தில் பிரச்சினைகள் மறக்கடிக்கப்படுவதற்காகத் தானே யொழிய தீர்க்கப்படுவதற்காக அல்ல என்பதில் முதலாளிகளும், அவர்களுடைய ஏவலர்களான அரசும் முதலாளித்துவ அறிஞர்களும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறார்கள்.

Pin It