கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

 

I

லிபியா குறித்த இந்திய-தமிழக இடதுசாரிகளின் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வரும்போது வேதனையே மிஞ்சுகிறது. பெரும்பாலுமான கட்டுரைகள் இப்படியாக முடிகிறது : லிபியாவில் அமெரிக்க-மேற்கத்திய-நவகாலனிய ஆக்கிரமிப்பை முறியடிப்போம், நாம் இப்படிச் சொல்வதால் கடாபி செய்வதை சரி என்று சொல்கிறோம் என அர்த்தம் இல்லை. முதலில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, பிற்பாடு, ஆனால் என்று ஒரு இழுவை இழுத்து, கடாபி பற்றி ஒரு சொல்.

obama_gaddafiகடாபியின் 42 ஆண்டுகால குடும்ப ஆட்சி, அவரது சர்வாதிகாரம், அவரினால் ஆயுத ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்கள், தூக்கி எறியப்பட வேண்டிய அரசியல் அமைப்பைக் கொண்டிருக்கிற கடாபியின் காலாவதியாகிப் போன அதிகார அமைப்பு பற்றி எங்கேனும் இவர்கள் பொருட்படுத்தி எழுதுகிறார்களா? வெறுமனே ஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற மரபான-வைதீகச் சொல்லணிகள் தவிர, லெனின் கேட்கிறபடியிலான ‘குறிப்பான நிலைமைகள் குறித்த, குறிப்பான ஆய்வுகள் அடிப்படையிலான’ பார்வை இந்தச் சொல்லணிகளில் இருக்கிறதா? சமிர் அமின் போன்ற மத்தியக் கிழக்கு மார்க்சியர்களை, தாரிக் அலி போன்ற மேற்கத்திய மார்க்சியர்களை, குறைந்தபட்சமேனும் இவர்கள் பொருட்படுத்தி வாசிக்கிறார்களா? குறைந்தபட்சம் மத்தியக் கிழக்கு மக்கள் எழுச்சிகளின் பின்னுள்ள சமூக உளவியலின் அரசியல் பின்னணி பற்றியேனும் இவர்கள் மதிப்பீடுகளை மேற்கொள்கிறார்களா?

பிடல் காஸ்ட்ரோ, சேவாஸ் போன்ற இலத்தீனமெரிக்கப் புரட்சியாளர்கள் தமது அனுபவங்களைப் பொதுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்திய-தமிழக இடதுசாரிகள் அதனையே எதிரொலி செய்து கொண்டிருக்கிறார்கள். காஸ்ட்ரோவினதோ அல்லது சேவாசினதோ கருத்துக்களை எந்த மத்தியக் கிழக்கு மார்க்சியர்களும் ஏற்பதில்லை; அரசுகளும் பொருட்படுத்துவது இல்லை. மத்தியக் கிழக்கு மக்கள் எழுச்சிகளைத் தூண்டிய இளைஞர்களும் பொருட்படுத்துவது இல்லை.

பெனானும், குவேராவும் போற்றிய அல்ஜீரியப் புரட்சியின் நிலைமை இன்று என்ன? 1991 முதல் கடந்த இருபது ஆண்டுகளாக அவசரநிலைத் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிற ஒடுக்குமுறை அரசாக அது இருக்கிறது. இஸ்லாமியர்கள்-இடதுசாரிகள்-தாராளவாதிகள் அங்கு இப்போது அரசியல் பன்மைத்துவத்திற்காகவும் கருத்துச் சுதந்திரத்திற்கான ஜனநாயகத்திற்காகவும்தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். லிபியாவில் அந்நிய ஆக்கிரமிப்புப் பற்றிப் பேசும் நாடாக அலஜீரியா இருக்கிறது. அந்நிய ஆக்கிரமிப்புப் பற்றிப் பேசும் பிறிதொரு நாடு, மக்களை ராணுவத்தைவிட்டு ஒடுக்கிக் கொண்டிருக்கும் சிரியா எனும் அமெரிக்க ஆசி பெற்ற நாடு.

தோழர்களே, சர்வதேசியம் என்றால் என்ன? உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின்பால் உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதரவு காட்டி அதனை அங்கீகரிப்பது அல்லவா மார்க்சீயம்? ஒடுக்குமுறை அரசு குறித்த ஒரு நிலைபாட்டை மேற்கொள்வதல்லவா மார்க்சீயம்?

சீனாவை இன்னும் கம்யூனிஸ்ட்டு நாடு என்றுதான் இந்தியாவின் இரு கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. சீனா உண்மையிலேயே ஏகாதிபத்திய எதிர்ப்புத்தன்மை கொண்டிருந்திருக்கும் என்றால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தனது இரத்து அதிகாரத்தைப் பிரயோகித்திருக்கலாம். கிளர்ச்சியாளர்களுடன் பேசுங்கள் என கடாபிக்கு அது அறிவுரை கூறியிருக்கலாம். குறைந்தபட்சம் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்திருக்கலாம். ஏன் செய்யவில்லை? இப்போது எதற்கு இந்தியாவுடனும் ரஸ்யாவுடனும் சேர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கிறது?

சீனாவும் கடாபியின் அமைப்பைப் போன்ற அமைப்பைத்தான் கொண்டிருக்கிறது. லிபியாவில் கடாபி. சீனாவில் எழுபது ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு அதிகாரிகள். தியானன்மென் சதுக்கப் படுகொலைகள் சீனாவின் ஜனநாயக மரபுக்கான சாட்சி. சீன மாதிரி, இனி உலகில் சாத்தியமில்லை. அது இந்தியாவில் சாத்தியமில்லை என்பது இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தெரியும்.

ராஜபக்சே கடாபிக்கான ஆதரவைத் தெரிவிப்பதன் மூலம் இப்போது ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியாளராக ஆகப் போகிறார். இலங்கையின் இடதுசாரிகள் அவரது தலைமையில் அணிவகுக்கவும் செய்யலாம். இந்திய இடதுசாரிகளும் அவரது ஏகாதிபத்திய எதிர்ப்பு முழக்கத்திலும் சேரலாம். தமிழர்களை ராஜபக்சே இனக்கொலை செய்தால்தான் என்ன? அல்லது பத்திரிக்கையாளர்களை கொன்று, கலைஞர்களை மிரட்டினால்தான் என்ன? அவர் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் அணியில் இருப்பதால் அவரை காஸ்ட்ரோவும் சேவாசும் ஆதரிக்கிறார்கள். நமது தோழர்களும் அவரது ஏகாதிபத்திய எதிர்ப்புக்காக அவரை ஆதரிக்கவும் செய்வார்கள்.

இங்கே ஒடுக்கப்பட்ட மக்களின் பாலான சர்வதேசிய ஒருமைப்பாடு எங்கே? இன்று லிபிய மக்களுடனான, மத்தியக் கிழக்கு மக்களுடனான, ஈழத்தமிழ் மக்களுடனான ஒருமைப்பாடுதான் சர்வதேசியம். மார்க்சீயர்கள் அறிக்கைகளின் முதல் வாசகம் இங்கிருந்துதான் துவங்கவேண்டும். இந்த சர்வதேசியம்தான் லெனின் பேசிய சர்வதேசியம். அங்கோலாவுக்குப் படையனுப்பிய அன்றைய காஸ்ட்ரோ பேசிய சர்வதேசியமும் இதுதான். இன்று சர்வதேசியம் என்பதன் பெயரால், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதன் பெயரால், ஒடுக்குமுறை அரசுகள் பற்றியும், ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்கள் பற்றியும் இவர்கள் பேச மறுக்கிறார்கள். ஆகவே உலகெங்கிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களில் இருந்து மார்க்சியர்கள் அந்நியமாகி வருகிறார்கள்.

முதலில் ஒடுக்கப்பட்ட மக்களின் பாலான ஆதரவை மார்க்சியர் கொண்டிருக்க வேண்டும். பிற்பாடு ஒடுக்குமுறை அரசுகள் பற்றிய மதிப்பீட்டை மார்க்சியர் கொண்டிருக்க வேண்டும். அந்த ஒடுக்குமுறை அரசுகளுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாத்திரம் இருக்கிறது என மார்க்சியர் கருதினால், அந்த ஆட்சியாளளர்களை ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணக்கப்பாட்டுக்கு வாருங்கள் என மார்க்சியர் வலியுறுத்த வேண்டும்.

இதுவன்றி அந்த மக்களை நொந்து என்ன பயன்? ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்கள், அழிவை எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கு தமக்கு ஆதரவு தருவோர் தவிர போக்கிடம் ஏது? கிழக்கு திமோர் பற்றி, குர்திஸ்தான் பற்றி, ஈழ விடுதலை பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். இவர்களில் கிழக்கு திமோர் புரட்சியின் தலைவர் குசாமா சனானா மார்க்சியர். குர்திஸ் விடுதலை இயக்கத் தலைவர் ஒச்சலான் மார்க்சியர். ஆரம்ப ஈழ விடுதலை இயக்கங்கள் அனைத்தினதும் ஆதர்ஷமாக மார்க்சியமும் இலத்தீனமெரிக்கப் புரட்சிகளும் சேவின் போகோ தியரியும்தான் இருந்தன. இவர்களை உலக-இந்திய-ஈழ மார்க்சியர் அங்கீகரிக்கவில்லை. பிற்பாடு இவர்கள் அமெரிக்காவிடம் போனார்கள், மேற்கத்தியர்களிடம் போனார்கள் எனப் பேசி என்ன பயன்?

ஏகாதிபத்திய எதிர்ப்புச் சொல்லணிகளை அள்ளிவீசுகிறவர்கள் ஒரு உண்மையை மறந்துவிடுகிறார்கள். லிபியாவின் மீது பறத்தலற்ற பிரதேசம் கோரியவர்கள் கடாபியின் வான் தாக்குதலுக்கு உள்ளான லிபிய மக்கள். பிற்பாடு அதனை வலியுறுத்தியவர்கள் லிபிய மக்களின் உயிரைக் காக்க விரும்பிய அரபுநாடுகளின் அமைப்பான அரபு லீக்கினர்.

இந்தக் கோரிக்கையை சீனா செவிமடுத்ததா? அல்லது ரஸ்யா கேட்டதா? அல்லது ஐம்பதினாயிரம் ஈழத்தமிழ் மக்களை விமானக் குண்டுவீச்சில் படுகொலை செய்த இந்திய-இலங்கை அரசுகள் கேட்டதா? அல்லது இந்திய-தமிழக கம்யூனிஸ்ட்டுகள் இந்த நிலைமையை தமது அணிகளுக்கு அறிவுறுத்தினார்களா?

அவசரநிலைக் காலத்தின் போது இந்திராகாந்தி ஏகாதிபத்திய அந்நிய ஆபத்து என்றுதான் அவசரநிலையைக் கொண்டுவந்தார். மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி அதனை எதிர்த்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. பிற்பாடு தாம் தவறு செய்தோம் எனச் சொன்னது. இந்திராகாந்தியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது உள்நாட்டு ஒடுக்குமுறையை நியாயப்படுத்திய ஒரு அரசியல் பித்தலாட்டம் என்பது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இப்போது திட்டவட்டமாகத் தெரியும்.

இதுதான் இன்று அல்ஜீரியாவின் நிலைமை. இதுதான் இன்று சிரியாவின் நிலைமை. இதுதான் இன்று பெஹ்ரைன், யேமான் போன்ற நாடுகளின் நிலைமை. இதுதான் லிபியாவின் நிலைமையும். கடாபி இன்று பேசுகிற காலனிய எதிர்ப்பு-ஏகாதிபத்திய எதிர்ப்பு-பாசிச எதிர்ப்பு எல்லாமும் வெறும் பித்தலாட்டம். இரண்டு மாதங்கள் முன்பு வரை அமெரிக்க-மேற்கத்திய பயங்கரவாத எதிர்ப்பின் பாசமிகு கூட்டாளி இந்த ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம்.

II

இப்போது ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரச்சினை பற்றிப் பேசுவோம். லிபியக் கிளரச்சியாளர்கள் எந்த அந்நிய நாட்டுப் படைகளையும் தமது மண்ணில் வரவேற்கவில்லை. ஆனால் விமானப் பறத்தலற்ற பிரதேசத்தை அவர்கள் கோருகிறார்கள்.

அமெரிக்க-மேற்கத்திய-நேட்டோவினரைப் பொறுத்து அவர்களது திட்டம் தெளிவாக இருக்கிறது. பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தெளிவாகவும் பேசுகிறார். ஏற்கனவே பரிசோதிக்கப்பட்ட வழிமுறைகளும் தொழில்நுட்பமும் (tested means and technology) நேட்டோவிடம் இருப்பதால், நேட்டோ லிபியத் தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கவேண்டும் என அவர் கோருகிறார். பரிசோதிக்கப்பட்ட வழிமுறைகளும் தொழில்நுட்பமும் என்பது இங்கு அவர்களது ஈராக், பொஸ்னிய குண்டுவிச்சு அனுபவங்களைத் தான் குறிப்பிடுகிறது. மிலோசோவிச்சை, சதாம் குசைனை அழித்தது போல கடாபியை அழிப்பதுதான் அவர்களது திட்டம். கடாபி போக வேண்டும் என்பதனை அமெரிக்க-பிரித்தானிய-பிரெஞ்சு அரசுகள் வெளிப்படையாகவே சொல்கின்றன.

விமானப் பறத்தலற்ற வெளியை உருவாக்குவது மற்றும் வெகுமக்களைப் பாதுகாப்பது எனும் இரு இலக்குகள்தான் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் வரையறைகள். ஆட்சி மாற்றம் (regime change ) என்பது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானத்தின் இலக்கு இல்லை. ஆட்சி மாற்றம் எனும் சொற்றொடர் ஈராக் பிரச்சினையில் இவர்கள் பாவித்த சொற்றொடர். இவர்கள் தமது திட்டத்திற்கு ஒப்ப இப்போது ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானத்தை வியாக்யானப்படுத்துகிறார்கள். கடாபி தொடர்ந்து அதிகாரத்தில் இருந்து கொண்டு ஆயுதப் படையினரைப் பாவித்து, கிளர்ச்சியாளர்களையும் வெகுமக்களையும் கொல்வரானால், அப்போது கடாபியும் தமது தாக்குதலின் இலக்காகவே கொள்ளப்படுவார் என வியாக்யானப்படுத்துகிறார்கள்.

இப்பிரச்சினையில், அமெரிக்க-ஐரோப்பிய அரசுத் தலைவர்கள், கடாபியும் தமது இலக்கு எனச் சொல்ல, இந்த நாடுகளின் ராணுவத்தளபதிகள் அது ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானத்தில் இல்லாதது எனத் தெரிவித்து வருகிறார்கள். இதுவன்றி நேட்டோ உறுப்பு நாடான துருக்கி நேட்டோ அமைப்பு இதில் ஈடுபடக் கூடாது எனத் தெரிவித்திருக்கிறது. ஓரு நேட்டோ அமைப்பு நாடு ஆட்சேபம் தெரிவித்தாலும், நேட்டொ அமைப்பு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடமுடியாது என்பதால், நேட்டோ நாடுகளும் பிற நாடுகளும் உள்ளிட்ட தலைமை இருக்கும் எனவும், தாக்குதலில் நேட்டோவின் பரிசோதிக்கப்பட்ட வழிமுறைகளும் தொழில்நுட்பமும் பாவிக்கப்படும் எனவும் பிரான்ஸ் சாதுர்யமாகத் தெரிவித்திருக்கிறது.

இந்நிலைமையில், இன்றைய சூழலில், லிபியாவுக்கு ஆதரவான, அமெரிக்க-மேற்கத்திய திட்டங்களுக்கு எதிரான வெகுஜன எழுச்சிகள் என்பன மத்தியக் கிழக்கில் இல்லை. பான் கீ மூன் மீது கல்லெறியப்பட்ட கெய்ரோ சம்பவம் தவிர பிற எந்த எதிர்ப்பும் வெகுமக்களிடம் இல்லை.

அரசுகள் எனும் அளவில் அல்ஜீரியாவும் சிரியாவும் மட்டுமே அந்நியத் தலையீட்டை எதிர்க்கின்றன. இவை இரண்டும் தமது சொந்த மக்களை படையினரைக் கொண்டு ஒடுக்கிக் கொண்டு இருக்கின்றன. அரபு லீக் இதுவரை தாக்குதல்களை ஆதரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. எனினும், அமெரிக்க-மேற்கத்திய விமானத் தாக்குதல்களில் பாரிய அளவில் லிபிய மக்கள் கொல்லப்படுவார்களானால், மத்தியக் கிழக்கு அரசுகளின் நிலைபாடும், வெகுமக்களின் நிலைபாடும் இதுபோலவே இருக்கும் எனச் சொல்ல முடியாது.

அவர்களது நினைவுகளில் ஈராக் அனுபவம் இருக்கிறது. அதே அளவில், சர்வாதிகாரிகளுக்கும் கொடுங்கோலர்களுக்கும் எதிரான மத்தியக் கிழக்கு மக்களின் கூட்டுமனநிலையையும் போராட்ட உளவியலையும் அவர்கள் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு எழும் எதிர்ப்புணர்வு கூட நிச்சயமாக கடாபி எனும் சர்வாதிகாரிக்கான ஆதரவாக இருக்காது. லிபிய வெகுமக்களின் மரணத்திற்கான இரங்கலாகவும், அதனால் விளைந்த எதிர்ப்பாகவுமே இருக்கும்.

III

மத்தியக் கிழக்கு மக்கள் எழுச்சிகளின் நிகழ்வுப் போக்கை அவதானித்து வருபவர்கள் ஒன்றை உணர முடியும். இந்த எழுச்சிகள் ஏகாதிபத்தியத்தால் திட்டமிடப்பட்டது இல்லை. இது அவர்களுக்கு திகைப்பையும் அதிர்ச்சியையும் சவால்களையுமே முன்வைத்தது. ஆரம்பத்தில் முபாராக்கையும் பென் அலியையும் அவர்கள் காப்பாற்ற நினத்தார்கள். இப்போதும் லிபியா போலவே மக்களைக் கொன்று வரும் யேமான் அரசையும் பெஹ்ரைன் அரசையும் காப்பாற்றவே நினைக்கிறார்கள். தமக்கான மத்தியக் கிழக்கு எண்ணைய் சப்ளையைப் பாதுகாக்க பெஹ்ரைனில் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை இருக்கிறது. யேமான் அமெரிக்காவின் கூட்டாளி நாடு. லிபியாவை அமெரிக்காவும் மேற்கும் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், சதாம் போன்று தமக்கு முழுமையாகச் சாதகமாக இல்லாத ஒருவரை இல்லொதொழிப்பதற்காகத்தான. பச்சையாகச் சொன்னால் கடுமையான இஸ்ரேலிய எதிர்ப்பாளரான கடாபியை ஒழிப்பதன் மூலம் தமது அரசியல் வல்லமையையும் பொருளாதார வல்லமையையும் ஈராக் போன்று லிபியாவின் மீது நிறுவலாம் என்பதுதான்.

இதற்கான வாய்ப்பை கடாபி தனது சர்வாதிகார அரசியலின் மூலம் உருவாக்கித் தந்திருக்கிறார். லிபியாவின் ஒரு பகுதி மக்களே அமெரிக்க-மேற்கத்தியத் தலையீட்டை விரும்பி அழைத்தார்கள். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானம் எனும் சர்வதேசியச் சட்ட அங்கீகாரத்துடன் இம்முறை அவர்கள் செயலாற்றுகிறார்கள். ஈராக், ஆப்கான் போன்று வெகுமக்களின் பாரிய மரணங்களை அவர்கள் தவிர்க்குமுகமாகத் திட்டமிடுகிறார்கள். அதனது சாத்தியங்கள், சாத்தியமின்மைகளைப் பொறுத்துத்தான் மத்தியக் கிழக்கு மக்கள் மற்றும் லிபியக் கிளர்ச்சியாளர்களின் எதிர்வினைகள் எதிர்காலத்தில் அமையும்.

ஏகாதிபத்தியத் தலையீட்டை இரண்டு காரணங்களுக்காகவே இடதுசாரிகள் எதிர்க்கிறார்கள். ஒன்று, சர்வாதிகாரிகளின் கீழ் மரணமுறும் மக்களை விடவும் பன்மடங்கு மக்களின் சாவையும் அழிவையும் ஏகாதிபத்திய ராணுவத்தலையீடு கொண்டு வரும். மற்றது, நீண்ட கால நோக்கில் தமது ஏகாதிபத்தியச் சுரண்டல் உலக ஓழுங்குக்குத் தக்கவகையிலான ஒரு அரசு நிர்வாகத்தையே அது நிலைநாட்டும் வகையில், அது நிரந்தரமாகத் தனது படைகளையும் அந்த நிலப்பரப்பில் கொண்டிருக்கும். ஈராக்கிலும் ஆப்கானிலும் முதலாவது காரணம் மெய்யென நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவதான காரணமான ராணுவம் அப்படியே தொடர்ந்து இருத்தல் என்பது, அங்கு உருவாகும் அரசமைப்பின் தன்மையைப் பொறுத்து அமையும். அந்நியப் படைகளை விரும்பாத லிபியாவினுள் அமெரிக்க-மேற்கத்தியப் படைகள் தொடர்ந்தும் இருப்பதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவானதாகவே இருக்கும். தமக்கு அறிவுறுத்தாமல் பாராசூட்டில் சென்று இறங்கிய பிரித்தானிய உளவுத்துறையினரை பென்காசி கிளர்ச்சியாளர்கள் கைது செய்து, பிறகே விடுவித்தார்கள் என்பதனை இங்கு நினைவுகொள்வது நல்லது.

மத்தியக் கிழக்கு மக்கள் எழுச்சிகளை, மத்தியக் கிழக்கு மற்றும் மேற்கத்திய இடதுசாரிகளும் மார்க்சியர்களும் வரவேற்பதிலுள்ள மிகப்பெரிய காரணம், இது ஜனநாயகத்திற்கான மக்களாட்சிக்கான வெகுஜன எதிர்ப்பு என்பதுதான். இந்த தேசிய அவா ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மையையும் தனக்குள் கொண்டிருக்கிறது. அந்தப் பொறி இந்த மக்கள் எழுச்சிக்குள்ளாகவே இருக்கிறது. அவர்கள் தமது வரலாற்றைத் தாமே எழுதுவார்கள். ஈராக் யுத்தத்தின் போது அதனை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

மத்தியக் கிழக்கில் இன்று உள்ள நிலைமைகளை மக்கள்தான் தேர்வு செய்தார்கள். ஏகாதிபத்தியவாதிகள் தமது நகர்வுகளை சாதுர்யமாக மேற்கொள்கிறார்கள். அது அம்மக்களுக்கு எதிராகத் திரும்புகிறபோது அதனை எதிர்கொள்கிற வலிமை அவர்களுக்கு உண்டு என நம்புவதுதான் சரியான பார்வையாக இருக்க முடியும். இதற்கு மாற்றாக, மக்களை முன்னிலைப்படுத்தாமல், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதனை முன்னிலைப்படுத்தி, சர்வாதிகாரிகளைக் காக்கிற பார்வை எந்த வகையிலும் இடதுசாரிகளின் பார்வையோ அல்லது வரலாற்றை முன்னுந்திச் செல்லும் பார்வையோ ஆகாது. இந்தத் தவறுகள் ‘ஏகாதிபத்திய எதிர்ப்பாளன்’ மகிந்த ராஜபக்சேவின் படுகொலைகளைப் பாதுகாக்கிற பார்வையாகவும், இந்தியப் பழங்குடி மக்கள் மீதான ராணுவத் தாக்குதலை நிகழ்த்திய ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு’ இந்திய அரசைப் பாதுகாத்து நிற்கிற பாசிச ஆதரவுப் பார்வையாகவும்தான் சென்று முடியும்...

- யமுனா ராஜேந்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)