ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8ம் நாள் சர்வதேச பெண்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இங்கிலாந்தில் ஆடை தையல் பணி செய்யும் பெண் தொழிலாளர்கள் கூலி உயர்வுக்காகவும், ஆண்களைவிட அதிக நேரம் வேலை வாங்கப்படுவதை எதிர்த்தும், வேலை நேரக் குறைப்பிற்காகவும் ஆலை முதலாளிகளால் அவமானப் படுத்தப்படுவதற்கு எதிராகவும் ஒன்று சேர்ந்து சங்கம் அமைத்து போலீசின் தாக்குதலுக்கும் அஞ்சாது தீரமுடன் போராடினர். இது நிகழ்ந்தது 1820 இல்.

இந்தப் பெண் தொழிலாளர்களின் போராட்டம் அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் பல ஆலைகளுக்கும் பரவியது வழக்கம் போல் அரசாங்கக் காவலர்களின் அடக்குமுறைக்கும் உள்ளானது.

1900 மாவது ஆண்டில் பெண்கள் ஆடைப் பணியாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து 1903ல் சர்வதேச பெண்கள் தொழிற்சங்கமும் கட்டமைக்கப்பட்டது. இந்தக் கட்டத்தில் 20 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற பெரும் எழுச்சிப் போராட்டமும் நடைபெற்றது. இந்தப் போராட்டமும் அரசாங்கத்தின் அரக்கத்தனத்தால் நசுக்கப்பட்டது. 1908ல் மீண்டும் பெண் தொழிலாளர்களின் எழுச்சி. அவர்கள் பஞ்சாலைத் தொழிலாளர்கள்.

1901ல் கோபன்கேஹன் நகரில் நடைபெற்ற சர்வதேசத் தொழிலாளர் பிரதிநிதிகள் கூட்டத்தில் தொழிலாளர் போராட்டங்களில் பெண்களின் பங்கேற்பை போற்றும் வகையில் ஜெர்மன் தலைவர் கிளாரா ஜெட்கின் மார்ச் 8 ஐ சர்வதேசப் பெண்கள் தினமாக முன்மொழிந்தார். ரஷ்யாவில் கொடுங்கோலன் ஜாரின் ஆட்சியை வீழ்த்திய பிறகு 1917 மார்ச் 8ல் வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச பெண்கள் தினம் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் நடைபெற்றது. ரஷ்யாவில் ரொட்டிக்காகவும் அமைதிக்காகவும் என்று ரஷ்யாவில் பெண்கள் மார்ச் 8 முதல் 5 தினங்கள் போராட்டம் நடத்தினர்.

(அப்போது, முதலாளிகள் கூட்டத்தின் தலைவன் கெரன்ஸ்கி என்பவனின் தற்காலிக ஆட்சி நடைபெற்றது. )

1917 நவம்பர் சோஷலிஸப் புரட்சிக்குப் பின்னர் மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினமாக புதிய சோவியத் காலண்டர்களில் குறிக்கப்பட்டதுடன், 1921ல் சர்வதேசப் பெண்கள் தினம் அதிகாரப்பூர்வமாகவும் ஆனது. உலகத் தொழிலாளர்களின் மேதினம் போராட்டக் களத்தில் பிறந்தது போலவே சர்வதேச பெண்கள் தினமும் போராட்டக் களத்தில் பிறந்தது.

கல்வி, அறிவியல்-தொழில் நுட்பம், மருத்துவம், விளையாட்டு, ஆட்சி நிர்வாகம் போன்ற ஏராளமான துறைகளில் இன்னும் விண்வெளிப் பயணத்திலும் கூட ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்பதாகப் பெண்ணின் ஆற்றல் விளங்கிய போதிலும் பெண் சமத்துவம், பெண்ணுரிமை என்பது சமுதாயத்தில் மறுக்கப்பட்டே வருகிறது. 'சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை' என்று பெண்ணை இரண்டாம் நிலையில் வைக்கும் சமூகத்தின் மனோபாவம் காலங்காலமாய்த் தொடர்கிறது. பெண்ணுக்கு எதிரான ஈவ்டீஸிங், பாலியல் வன்கொடுமை, வரதட்சணைக் கொடுமை சம உழைப்பென்றாலும் பெண்ணுக்கு ஆணைவிடக் குறைவான கூலியே கொடுக்கும் பாரபட்சம் ஆதிவாசிப் பெண்கள், தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் என்றால் மேலும் கூடுதலான கொடுமைகளை அனுபவிக்க வேண்டிய நிலை.

கேரள இடதுசாரி அரசு ஊராட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு செய்திருப்பது ஓர் ஆறுதலான விசயம் என்றாலும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. தேசத்தின் வாக்காளர்களில் சரி பாதிப்பேர் பெண் வாக்காளர்கள். ஆனாலும் நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு 33 சதவிகித பிரதிநிதித்துவம் கூட மறுக்கப்பட்டே வருகிற அநீதி தொடர்கிறது.

ஜனநாயகம், தேசத்தில் இருந்தால் மட்டும் போதாது. ஆணுக்குப் போலவே பெண்ணுக்கும் சம மரியாதையும் சம உரிமையும் உள்ள குடும்ப ஜனநாயகமும் மலர வேண்டும். இந்த இலட்சியங்களுக்காக மாதர்கள் ஸ்தாபமாக ஒன்றுபட்டுப் போராடி வருகிறார்கள்.

மார்ச் 8 சர்வதேச பெண்கள் தின இலட்சிய நிறைவேற்றத்திற்கான போராட்டம் நாட்டில் தொடரும்...

Pin It