ஒரிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்ட ஆட்சித் தலைவர் விநீல் கிருஷ்ணாவும், இளநிலைப் பொறியாளர் பபித்ரா மஜியும் 16-2-2011 அன்று மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார்கள். அவர்களில் இளநிலைப் பொறியாளர் 23-2-2011 அன்றும், மாவட்ட ஆட்சித் தலைவர் 24-2-2011 அன்றும் விடுவிக்கப்பட்டனர். மாவோயிஸ்டுகள் தங்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தியதாகவும், தங்களுக்கு எந்த வித இடையூறும்  ஏற்படாதவாறு மிகவும் கவனத்துடன் பார்த்துக் கொண்டதாகவும் இரு அதிகாரிகளும் தெரிவித்தனர்.
 
          இப்படி அழைத்துக் கொண்டு போய் விருந்தளித்து விட்டுத் திரும்பக் கொண்டு வந்து விடுவதற்கு அந்த அதிகாரிகள் மாவோயிஸ்டுகளுக்கு மாமன் மைத்துனன் உறவுகளா? அப்படி இல்லாத பொழுது, நடந்த இந்நிகழ்வுகள் நமக்குத் தெரிவிக்கும் செய்திகள் யாவை?
 
          tribes_380இவ்வதிகாரிகளைக் கடத்தியது பற்றி மாவோயிஸ்டுகள் தெரிவித்துள்ள செய்திக் குறிப்பில் அந்தத் தனி மனிதர்களின் குணநலன்கள் காரணமாக அவர்களைக் கடத்தவில்லை என்றும், உழைக்கும் மக்களை வன்முறையால் ஒடுக்கும் அரசின் உறுப்பாக இருப்பதினால் கடத்தியதாகவும் தெரிவித்து உள்ளனர்.
 
          விடுவிக்கப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் 25-2-2011 அன்று, தான் கடத்தப்பட்ட அனுபவத்தைப் பற்றிப் பேசினார். இந்நிகழ்வைப் பற்றிய விளக்கங்களைத் தன்னால் சிறிதளவு மட்டுமே அளிக்க முடியும் என்றும் முழு விளக்கங்களை மக்களால் தான் அளிக்க முடியும் என்றும் கூறினார்.
 
          அவர் அளித்த சிறிதளவு விளக்கம் இது தான். மல்கங்கிரி மாவட்டத்திலுள்ள மலைவாழ் மக்கள் வாழும் இப்பகுதியுடன் மற்ற பகுதிகளை இணைக்கும் பாலத்தைக் கட்டி முடிக்க வேண்டும் என்றும், இதற்கான திட்டம 1980 ஆம் ஆண்டில் வகுக்கப்பட்டு இரு முறை அடிக்கல் நாட்டப்பட்டது என்றும் ஆனால் அதற்கான வேலை தொடங்கப்படவே இல்லை என்றும் கூறினார். மேலும் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டும்பொழுது, அதனால் இடம் பெயர வேண்டி ஏற்படும் மக்களுக்கும் வேறுவிதமாகப் பாதிக்கப்படும் மக்களுக்கும் தேவைப்படும் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தான் விடுவிக்கப்பட்ட 24-2-2011 அன்று, மாவோயிஸ்டுகள் சுற்றுப்புறத்திலுள்ள கிராம மக்களைச் சந்திக்க வைத்தனர் என்றும், அவர்களுடன் நான்கு மணி நேரம் உரையாடியதாகவும் தெரிவித்த அவர், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இப்படி ஒரு கிராம மக்கள் வாழ்கிறார்கள் என்பதையே அறிந்து கொள்ள முடியாத மத்திய மாநில அரசுகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் தங்கள் வாழ்வாதாரங்களைப் பறிக்கத் துடிப்பது எவ்விதத்தில் நியாயம் என்று கேட்டதாகவும், கடந்த ஆண்டுகளில் நடந்தவற்றைப் பற்றித் தன்னால் பதிலளிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
 
          இதுவரையிலும் விடுவிக்கப்பட்ட அதிகாரிகளைப் பற்றிப் பார்த்தோம். இனி விடுவிக்கப்படாத சிந்தனைகளைப் பற்றிப் பார்ப்போம்.
 
          1980களில் திட்டமிடப்பட்டு இரு முறை அடிக்கல் நாட்டப்பட்ட குருப்பரியா பாலத் திட்டம் தொடங்கப்படவே முடியாமல் போனதற்கு என்ன காரணம்?
 
           எந்த ஒரு திட்டத்தையும் அமல்படுத்துவதற்கு, செலவு - பயன் பகுப்பாய்வு (cost benefit analysis) செய்து பார்ப்பார்கள். எந்தத் திட்டத்தில் மூலதனத்தை / மூலாதாரத்தை ஈடுபடுத்தினால் அதிக இலாபம் கிடைக்குமோ அத்திட்டத்தை அமல்படுத்துவார்கள். குருப்பிரியா பாலத்தைப் பொறுத்த மட்டில் மத்திய மாநில அரசுகளுக்கோ, தனிப்பட்ட  முதலாளிகளுக்கோ, முதலாளிகளின் குழுமத்திற்கோ எவ்வித இலாபமும் இல்லை. ஆகவே அமல்படுத்தப்படவில்லை.
 
          குருப்பிரியா பாலத்தை அமல்படுத்த முடியாது என்றால், ஏன் அதற்கான அடிக்கல்லை நாட்டினார்கள்? அதுவும் இரு முறை.
 
          நம் அரசுகளைப் பொறுத்த மட்டில் முதலாளிகளும் உயர்சாதிக் கும்பலினரும் தான் உண்மையான சுகங்களை அனுபவிக்க வேண்டும். மற்றவர்கள் கற்பனைச் சுகத்தில் திருப்தி அடைந்து கொள்ள வேண்டும். குருப்பிரியா பாலத்தைப் பொறுத்த மட்டில், அது வரப் போகிறது; வரப் போகிறது என்று சம்பத்தப்பட்ட கிராம மக்கள் கற்பனை செய்து கொண்டு இருக்கட்டும் என்பதற்குத்தான் அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
 
          கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் இந்தியக் குடிமக்கள் என்ற நினைவே இல்லாமல் இருந்த/இருந்து கொண்டிருக்கும் மத்திய மாநில அரசுகள், முதலாளிகளுக்கு இலாபம் தரும் திட்டங்களை நிறைவேற்றும்போது மட்டும், பொறுப்பான இந்தியக் குடிமக்கள் என்ற முறையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக ஒத்துழைக்க வேண்டும் என்றும், அதற்காக வாழ்வாதாரங்களைத் தியாகம் செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனவே?
 
          கடந்த 60 ஆண்டுகளாக மட்டுமல்ல; ஏடறிந்த வரலாற்றுக் காலம் முதலாகவே உழைக்ககும் மக்களை நாட்டின் குடிமக்களாகக் கருதும் வழக்கம் ஆளும் வர்க்கத்திற்கு இல்லை. இப்போதைய முதலாளித்துவ அரசுகளைப் பொறுத்த மட்டில், முதலாளிகளின் மூலதனத்திற்கு இலாபம் கிடைக்கும்படி முதலீடு செய்ய வழி வகுத்துக் கொடுப்பதே முதன்மையான கடமை. இதற்கு ஊறு நேராமல் எந்த வேலைகளையும் செய்யும். இதற்கு ஊறு விளைவிக்க முனைவோர் மீது சாம, பேத, தான, தண்ட உபாயங்களைப் பிரயோகித்து அடக்கியாளும். மல்கங்கிரி மாவட்டத்தின் கிராம மக்களுக்குப் பயன்படும் திட்டங்களை அமலபடுத்தினால் எந்த ஒரு தனி முதலாளிக்கோ அல்லது முதலாளிகளின் குழுமத்திற்கோ இலாபம் கிடைக்காது. ஆகவே அவை எதுவும் அமல்படுத்தப்படவில்லை. அதாவது அம்மக்களை இந்தியக் குடிமக்களாகக் கருதவே இல்லை. ஆனால் இப்போதைய வளர்ச்சித் திட்டங்கள் முதலாளிகளுக்கு இலாபம் கொடுப்பதாக இருப்பதால் அவற்றை அமல்படுத்த மத்திய மாநில அரசகள் துடித்துக் கொண்டு இருக்கின்றன. நாட்டின் (?!) முன்னேற்றத்திற்காக மக்கள் தியாகம் செய்வது தேச பக்தி அல்லவா?
 
          இப்பொழுது மாவோயிஸ்டுகள் மாவட்ட ஆட்சித் தலைவரைக் கடத்திக் கொண்டு போய், மக்களின் பிரச்சினைகளைப் புரிய வைத்து, விடுவித்து அனுப்பியிருக்கிறார்களே? அவர் மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்தாமல் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவாரா? மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்தினால் மூலதனத்திற்கு இலாபம் குறைந்து விடுமே?
 
          மக்கள் நலத் திட்டத்திற்கான செலவு, மூலதனத்திற்குப் போதிய இலாபம் கிடைக்காதபடி செய்துவிடுமானால், வளர்ச்சித் திட்டங்களைக் கைவிட்டுவிடுவார்கள். மூலதனத்தை ஈடுபடுத்தியே தீரவேண்டும் என்ற அளவிற்கு நெருக்கடி இருந்தால், இப்போதைய மாவட்ட ஆட்சியரை மாற்றி வேறு ஒரு துணிச்சலான (?!) அதிகாரியை நியமிப்பார்கள். அப்படி ஒரு துணிச்சலான அதிகாரி கிடைக்காவிட்டால், வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் மட்டும் செல்லும் ஒரு பொம்மை அதிகாரியை நியமித்து விட்டு, (சல்வார் ஜுடும் போன்ற) ரெளடிகளின் துணையுடன் தங்கள் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்திக் கொள்வார்கள்.
 
          அப்படியானால் அப்பகுதி மக்களின் கதி?
 
          கற்பனைச் சுகத்தில் திருப்தி அடையாத உழைக்கும் மக்களைப் பற்றி யார் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியும்? மூலதனத்திற்கு இலாபத்தை உறுதி செய்யும் வேலைகளே தலைக்கு மேல் இருக்கிறதே? மக்கள் நலத் திட்டங்கள் என்று எவையாவது அமல்படுத்தப்படுகிறது என்றால், அவை மூலதனத்திற்கு இலாபம் வரும் வழியில் உராய்வு இருக்கக் கூடாது என்பதற்கான மசகு எண்ணெய் போலத் தானேயொழிய, மனமுவந்து செய்யப்படுபவை அல்ல. அப்படி நிறைவேற்றப்படும் நலத் திட்டங்களில் திருப்தி அடைய வேண்டும் என்பது தான் அரசின் உறுதியான முடிவு.
 
          அப்படியானால் உழைக்கும் மக்கள் கற்பனையில் அல்லாமல் உண்மையில் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் என்ன தான் செய்ய வேண்டும்?
 
          முதலாளிகள், முதலாளித்துவ அறிஞர்கள், முதலாளித்துவ அரசுகளின் சிந்தனைகள் மட்டுமல்ல; மற்றவர்களின் சிந்தனைகளும் இலாபம் வரும் தொழில்களில் தான் மூலதனத்தை ஈடுபடுத்த முடியும் என்று சிறைபட்டுக்கிடக்கின்றன. இலாபம் வராத தொழில்களில் முதலீடு செய்வது என்றால் இயற்கை மூலாதாரங்களையும், மனித வளங்களையும் வீணடிக்கும் செயல்கள் என்று நினைக்கிறோம். முதலில் இதிலிருந்து விடுபட வேண்டும்.
 
          இயற்கை மூலாதாரங்களையும், மனித வளங்களையும் இலாபம் என்ற குறியீட்டை மையமாக வைத்துக் கொண்டு ஈடுபடுத்துவதற்குப் பதிலாக, உழைக்கும் மக்களின் நலன்களைக் குறியீட்டாக வைத்துக் கொண்டு ஈடுபடுத்தப்பட வேண்டும். உதாரணமாக ஆயுதம் மற்றும் சிற்றுந்து உற்பத்தித் தொழில்களில் முதலாளிகளுக்கு இலாபம் உறுதிப்படுகிறது. ஆனால் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைவதுடன் சுற்றுச் சூழலின் தூய்மையும் கெடுகிறது. பேருந்துகளின் எண்ணிக்கையைக் கணிசமாகப் பெருக்குவதிலும், இலவசக் கல்வி இலவச மருத்துவம் ஆகியவற்றிலும் முதலாளிகளுக்கு நஷ்டமும், உழைக்கும் மக்களுக்கு நலன்களும் கூடுகின்றன. இவ்வாறு உழைக்கும் மக்களின் நலன்களைக் கணக்கில் கொண்டு அவற்றின் உயர்வு குறித்த குறியீடுகளைத் தணிக்கை செய்யும்படியான அமைப்பில் இயற்கை மூலாதாரங்களும் மனித வளங்களும் வீணாகாமல் தடுக்கப்பட்டு, செம்மையாகப் பயனபடுவதை உறுதி செய்யும் வழிகள் உள்ளன.
 
          ஆகவே முதலாளித்துவ உற்பத்தி முறையில் தான் இயற்கை மூலாதாரங்களையும் மனித வளங்களையும் செம்மையாகப் பயன்படுத்தும் உந்துவிசை உள்ளது என்ற பொய்யான சிந்தனைகளில் இருந்து முதலில் விடுபட வேண்டும். (உண்மையில் முதலாளித்துவ உற்பத்தி முறையில் தான் இயற்கை மூலாதாரங்களும், மனித வளங்களும் அளவின்றி வீணாக்கப்படுகின்றன.)
 
          நம் சிந்தனைகளை, அவை அடைபட்டுக் கிடக்கும் முதலாளித்துவச் சிறையில் இருந்து விடுவிக்க, நாட்டில் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கொடுமைகள் போதுமா? அல்லது இன்னும் கொடுமையான அனுபவங்கள் ஏற்பட்ட பிறகு தான் நம் சிந்தனைகளை விடுவிப்பதைப் பற்றி யோசிக்கப் போகிறோமா?

Pin It