மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு கருவிதான்! தமிழனாய்ப் பிறந்த யாரும் விரும்பியோ, முயற்சி செய்தோ தமிழனாகப் பிறக்கவில்லை என்று தமிழ்நாட்டில் பேசினால் அடிவிழலாம். இத்தகைய உணர்வுமயமான தமிழ்நாட்டில்தான் தமிழின் பெயரால் அரசியலிலும், இலக்கியத்திலும் இன்னும் மற்ற துறைகளிலும் மக்களை ஏய்த்துப் பிழைக்கும் கூட்டமும் வாழ்வாங்கு வாழ்ந்து வருகிறது. 

இந்தக் கூட்டத்தில் முக்கியமானவர் கவிஞராக அறியப்படும் திரைப்படப் பாடலாசிரியர் வாலி! 'எப்படி எப்படி சமைஞ்சது எப்படி' என்ற திரைப்பட பாடல் உட்பட இவருடைய எழுத்தில் காணப்படும் வக்கிரம் மற்றும் ஆபாசம் குறித்து எத்தனைதான் எடுத்துக்கூறினாலும் திருந்தாத நபராகவே வலம் வருகிறார். 

இலக்கியங்களில் எப்போதும் இரண்டுவகை இருக்கும். குடிமக்களின் சார்பில் ஆட்சியில் இருப்பவர்களை நோக்கி கேள்வி எழுப்பும் வகை ஒன்று. ஆட்சியில் இருப்பவர்களின் தயவில் வாழ்ந்து கொண்டு மக்களை முட்டாளாக்கும் வகை இரண்டு. இதில் வாலி எந்த வகை என்று வாசகர்களே அறிவார்கள். 

வாலி அண்மைக்காலமாக “ஆனந்தவிகடன்” இதழில் “நினைவு நாடாக்கள் - ஒரு rewind” என்ற கட்டுரைத் தொடரை எழுதி வருகிறார். அண்மைக்காலமாக சமூகப் பிரசினைகளில் கூர்மையான கவனம் செலுத்திவரும் ஆனந்த விகடனுக்கு எங்கிருந்து என்ன நிர்பந்தமோ, மற்ற பல நல்ல அம்சங்களின் இடையே கரும்புள்ளிபோல இந்தப் பகுதியும் வெளியாகிறது. 

வாலியின் வாழ்க்கைத் தத்துவங்கள் அனைத்தும் இங்கு கவிதை நடையில் பதிவு செய்யப்படுகிறது. உண்மையில் புல்லரிக்க வைக்கும் தத்துவங்களையே தமிழ் கூறும் நல்லுலகிடம் அருளாசியாக வழங்குகிறார் வாலியார்! 

சுயமரியாதையோடு வாழ்வது என்பது வீண்! ஆதிக்கச் சக்திகளிடம் அடிபணிந்து அவர்களின் கால்களை நக்கிப் பிழைப்பதே  திறமை! கயமைத்தனமான அரசியலில் வெற்றிகரமாக பங்கேற்பதே வாழும் வழி! சுயநலமே முன்னேறுவதற்கான முதல் படிக்கல்! சந்தர்ப்பவாதமே சாணக்கியத்தனம்! என்பது உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கைத் தத்துவங்களை தமிழ் மக்களுக்கு உபதேசம் செய்யவே இந்த கட்டுரைத் தொடர் என்பது படிக்கப் படிக்க தெரிகிறது. 

எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி ஆகியோரின் படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்புக்காக தனக்கு ஏற்பட்ட அவமானங்களைத் துடைத்துப் போட்டுவிட்டு பாட்டெழுதிய கதையை இவரைப்போல பெருமிதமாக சொல்லிக்கொள்ள யாராலும் முடியாது. “செருப்பால் அடித்தால் என்ன? பிறகுதான் சந்தனம் தெளித்தாரே!” என்று ஒரே பெருமைதான். சரி அதுகூட அவர் சொந்த விவகாரம் விட்டுவிடலாம். 

---

சோப்புப் போடுவது என்பதில் மனிதருக்கு டாக்டரேட் பட்டமே வழங்கலாம். (கல்வி வள்ளல்கள் கவனிக்க! டாக்டர் பட்டத்துக்குப் பதிலாக உங்களைப் புகழ்ந்து ஒரு கவிதை பிறக்கலாம்!!) நாத்திகர் என்று தம்மை அறிவித்துக் கொள்ளும் கருணாநிதியிடம் இவர் கூறினாராம்: “நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் உங்கள் நாவில் சரஸ்வதி இருக்கிறாள்; இல்லையேல் இப்படித் தகத்தகாயமாகத் தமிழ் தரையிறங்காது உங்கள் குரல்வழி; விரல் வழி!” இதைக் கேட்ட கருணாநிதி புன்னகையோடு கட்டை விரலால் காதுமடலை வருடிக் கொண்டாராம். இது கருணாநிதி நல்ல மூடில் இருந்தால் செய்யும் மேனரிஸமாம். புகழ்போதையின் உச்சத்தில் இருக்கும் ஒரு மனிதரை மென்மேலும் கவிழ்ப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது! இதற்கு பிரதிபலனாகத்தான் முரசொலி அறக்கட்டளையின் விருது வழங்கப்பட்டிருக்குமோ? 

“சரஸ்வதி நாவில் குடியிருந்தால்தான் தகத்தகாயத் தமிழ் வரும்!” என்ற முட்டாள்தனமான கருத்தை கருணாநிதி கேட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால் எங்கள் தமிழ்நாட்டின் கிராமப்புறத்தில் பிறந்த குழந்தைகூட அதை ஏற்காதே! பிறந்தவுடன் தாயின் தாலாட்டு கேட்டு வளர்ந்தவர்கள்; சிறுவராக இருக்கும்போது கிட்டுப்புள்ளு, கண்ணாமூச்சி, கபடி, ஊஞ்சல் என்று அனைத்து வகை விளையாட்டுகளிலும் தாமே பாடல்களைப்பாடி விளையாண்ட தமிழர்கள்; வயலில் உழைக்கும்போதுகூட ஏற்றப்பாடல், நடவுப்பாடல், நெற்குத்திப் பாடல் என்று ஆயிரம் பாடல்வகைகள் பாடியவர்கள்; காதல் முதல் அரசியல் வரை அனைத்து அம்சங்களையும் நையாண்டிப் பாடலாகவும் சோகத்தைக்கூட இலக்கிய நயமான ஒப்பாரிப்பாடலாகவும் பாடிய – பாடும் இனமாயிற்றே எங்கள் தமிழினம். இந்த தமிழர்கள் உமது மதிகெட்ட கருத்துகளை ஏற்கமாட்டார்கள் திருவாளர் வாலி!

--- 

அடுத்து அவர் போடுவதுதான் பிரம்மாஸ்திரம்! கவித்திறன் என்பது கற்றுப் பெறுவதல்லவாம். அது கடாட்சத்தால் பெறுவதாம். அதற்கு ஒரு கதை சொல்கிறார்: தன் பிள்ளையை கவியாக்க விரும்பிய ஒரு தாயிடம் ஒரு முனிவன் கூறினாராம், “நான் சொல்லும் மந்திரத்தை உன் குழந்தை ஒரு பிணத்தின் மீது அமர்ந்து ஜெபித்தால் நீ விரும்பும்படி உன் மகன் கவிஞனாவான்” என்று. அந்தத் தாயும் தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு மார்பில் குழந்தையை அமர்த்தி மந்திரத்தை ஜெபிக்க வைத்தாளாம். குழந்தை மந்திரத்தை ஜெபித்தபோது அந்தக் குழந்தைக்கு தெரியாமல் ஒரு வாள்மூலம் தன் கழுத்தை மெல்ல அறுத்துக் கொண்டு பிணமாகிப் போனாளாம். பிணத்தின் மீதமர்ந்து மந்திரம் ஜெபித்த அந்த குழந்தை பின்னாளில் வடமொழியில் காவ்ய தரிசனம் என்ற காவியத்தை படைத்த மஹாகவி வித்யாபதியாம்! 

அட கொலைகாரர்களே! இது போல் எத்தனை தாய்மார்களை எதற்காகவெல்லாம் கொலை செய்யப்போகிறீர்கள்? பெற்றதாய் தற்கொலை செய்துகொண்டால் அந்தக் குழந்தையை யார் காப்பாற்றுவார் என்று எங்கள் வீட்டில் பள்ளிக்கே செல்லாத குழந்தைகூட கேள்விகேட்கும் திருவாளர் வாலி அவர்களே! 

ஒரு வேளை நீங்கள் கவிஞராகும் முயற்சியில் யாரையேனும் கொலை செய்திருக்கலாம். அதையும் போதையில் உளறிவிடாதீர்கள். ஆட்சி மாறினால் சட்டம் உங்கள் மீது பாய்ந்துவிடப் போகிறது. 

---

ஐந்தே வயதில் குழலூதி குவலயத்தை மயக்கிய மேதையாம் டி. ஆர். மகாலிங்கம்! குருவருள் இல்லாமலேயே திருவருளால் இதைச் சாதித்த அந்த மகாலிங்கத்திற்கு மதுவோடு மட்டன் சுக்கா என்றால் மிகவும் பிரியமாம். அதையும் நம்ம வாலி முனியாண்டி விலாசிலிருந்து வாங்கித் தருவாராம். டி.ஆர்.மகாலிங்கம் புல்லாங்குழல் மேதையாகக் காரணம் இறையருளா அல்லது மதுபான அருளா என்பதை விசாரிக்க வேண்டும். அல்லது இரண்டும் ஒன்றுதானா என்பதையும் பரிசோதிக்க வேண்டும். 

---

 அடுத்து அண்ணன் வாலி வழிபடுவது, “நிஷ்காம்ய கர்மம்”. அதாவது இட்டபணியை விருப்பு வெறுப்பின்றி செய்வது!  ஹிந்தித் திரைப்படங்களில் பணியாற்றிய இசையமைத்த நவுஷத் அலியும், பாடகர் படேகுலாம் அலிகானும் இறைபக்தி மிகுந்த இஸ்லாமியர்களாம். ஆனாலும் அவர்கள் சினிமாவுக்காக இந்துக் கடவுளை புகழ்ந்து பாடுவதைத் தவிர்க்கவில்லையாம். அதேபோல இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த ஷாரூக் கான் இந்துக்கள் கூறும் “ஓம்! சாந்தி! ஓம்!” என்ற படத்தில் மறுப்பின்றி நடித்தாராம். அந்தப்படத்தின் இயக்குனர்கூட புகழ்வாய்ந்த பெண் நடன இயக்குனராம். (அந்தப் பெண்ணின் பெயரை சொல்லக்கூட மனம் வரவில்லை அண்ணன் வாலிக்கு) இதை எல்லாம் ஏன் இவர் குறிப்பிட வேண்டும் என்பதைப் பார்க்கவேண்டும். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் இந்துமத விவகாரங்கள் திரைப்படத்தில் வரும்போது வேலை செய்கிறார்கள். ஆனால் ஏ.ஆர். ரகுமான் அவர் நம்பும் கொள்கைக்கு எதிரான அம்சங்களைத் தவிர்க்கிறார் என்று சத்தமின்றி ஒரு குற்றச்சாட்டு.

நியூ என்ற படத்திற்கு “காலையில் தினமும்.. கண் விழித்தால் நான்... கைதொழும் தெய்வம் அம்மா!” என்ற வாலியின் வரிகளுக்கு இசை அமைக்க அவர் முன் வரவில்லையாம். இஸ்லாமிய மதத்தில் தெய்வத்தையும் தாயையும் ஒன்றாகக் கருதுவதில்லை எனவே வேறு வார்த்தை போடுமாறு ரகுமான் கேட்டுள்ளார். அதற்கு வாலியும் தெய்வம் என்பதை தேவதை என்று மாற்றித் தந்துவிட்டார். (இல்லாவிட்டால் வாய்ப்பு போய்விடுமே!) இங்கு வாலி வெளிப்படையாக சொல்லாமல் இலைமறை காயாக சொல்வது இதுதான்: ஏ.ஆர்.ரகுமான் ஒரு மதஅடிப்படைவாதி. அவருக்கு நிஷ்காம்ய கர்மம் தெரியவில்லை. 

ஒரு மனிதன் அவர் ஏற்றுக்கொண்ட மதத்திற்கு நேர்மையாக இருப்பது ஒரு குற்றமா? வாலியைப் போலவோ, அவரால் புகழப்படுபவர்களைப் போலவோ காசு வந்தால் “எதையும்” செய்யத் தயாராக இருப்பதுதான் நிஷ்காம்ய கர்மம்! நல்ல வேளையாக சினிமா உலகில் செல்வாக்கோடு இருந்த ஆட்டோ சங்கர் சினிமா தயாரிக்கவில்லை. ஆட்டோ சங்கர் சினிமா தயாரித்திருந்தால் அதில் பாட்டெழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்திருந்தால் ஆட்டோ சங்கரின் நிஷ்காம்ய கர்மத்தை புகழ்ந்து ஒரு காவியமே படைத்திருப்பார் வாலி. 

உங்களுக்கு விருப்பமான அரசியல்வாதிகள் அனைவரும் தற்போது ஊழல் புகார்களில் சிக்கி வருகிறார்கள். அதுகூட “நிஷ்காம்ய கர்மம்”தானா தத்துவப்பேராசான் வாலி அவர்களே! 

--- 

இந்தியாவின் சுதந்திர பொன்விழாவை அண்ணன் வாலி கொண்டாடியவிதம் இந்திய இளைஞர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விவரணம்.  

1972, ஆகஸ்ட் 15! கண்ணதாசனிடமிருந்து ஒரு கால்! 

“வாலி! கவிதா ஹோட்டலுக்கு நைட் எட்டு மணிக்கு வாங்க: சுதந்திரத்தின் வெள்ளிவிழாவை – நள்ளிரவில் ஜெய்ஹிந்த் சொல்லிக் கொண்டாடுறோம்”

கண்ணதாசனும் நம் அண்ணன் வாலியும் மதுவின் போதையில் தள்ளாடியவாறே  இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி சில பாடல்களைப் பாடி சுதந்திரப் போராட்ட தியாகிகளை போற்றினார்களாம். 

பிறகு நிறைபோதையில் இருந்த அண்ணன் வாலி மிகுந்த தேசபக்தியுடன் ஒரு பாலியல் தொழிலாளியான பெண்ணுடன் அங்கிருந்த அறை ஒன்றுக்குள் ஐக்கியமானாராம். 

அப்போது ஓட்டலின் பணியாளர் ஒருவர் கண்ணதாசனிடம், “வாலியை கேவலப்படுத்த இது சரியான சந்தர்ப்பம். காவல்துறைக்கு தகவல் சொல்லலாமா?” என்று கேட்டாராம். ஆனால் கண்ணதாசன் அவ்வாறு சொன்ன ஓட்டல் பணியாளரின் கன்னத்தில் அறைந்துவிட்டு, “நான் கூப்பிட்டு வந்த வாலியை போலிசுல பிடிச்சுக் கொடுக்கச் சொல்றியா? அந்த ஆளு (வாலி) ரூமை விட்டு வெளியே வந்தவுடனே ஒழுங்கா கார்ல ஏத்தி அனுப்பு!” என்று சொல்லிவிட்டு தள்ளாடியவாறே வீட்டுக்குப் போனாராம். ஆயிரம்தான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கண்ணதாசனின் பெருந்தன்மை போற்றத்தக்கதாம். நம்ம வாலி அண்ணன் சொல்றாரு. 

இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் இதுதான்: சுதந்திர தினம் என்றால் தண்ணியடித்துவிட்டு கேடுகெட்டவர்களுடன் சுற்றித்திரிய வேண்டும். போதையில் வாயில் வந்ததையெல்லாம் உளற வேண்டும். பிறகு பாலியல் தொழிலாளர்களுடன் பொழுதை உல்லாசமாக கழிக்க வேண்டும். 

நல்லது வாலி! உங்கள் தேசபக்தியை புரிந்து கொண்டோம்! 

ஒரு சந்தேகம். பாலியல் தொழிலாளர்களுடன் பொழுதைக் கழிக்கும் சுதந்திரம் உங்களுக்கு மட்டுமா? அல்லது உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் உண்டா? அது குறித்து அவர்களும் கவிநடையில் காவியம் படைப்பார்களா? அந்தக் காவியங்களை மக்களுக்கு எடுத்துச் செல்ல ஏராளமான ஊடகங்கள் இருக்கின்றனவே. அதன்மூலம்கூட நிறைய பணம் சம்பாதிக்க முடியுமே வாலி! 

நல்லது ரங்கராஜ அய்யங்கார்! கவிஞர் வாலியாகவோ அல்லது காவாலியாகவோ வாழ்வது உங்கள் விருப்பம். ஆனால் உங்கள் பொறுக்கித் தனங்களையும், பிழைப்புவாதத்தையும் வாழும் நெறியாக பொதுமைப்படுத்தி எழுதி தமிழர்களின் சிந்தனையை நஞ்சாக்காதீர்கள். 

அன்று கொல்லும் அரசன் உங்கள் பாக்கெட்டில் இருக்கலாம். நின்று கொல்லும் தெய்வமும் உங்கள் கவித்வத்திற்கு மயங்கி வாளாவிருக்கலாம். ஆனால் தமிழர்கள் அவ்வாறு எல்லாம் இனியும் இருக்க மாட்டார்கள். அண்மையில் உங்களைப் போன்ற ஒருவன் லண்டன் விமான நிலையத்தில் தப்பி ஓடிய செய்தியை படித்தீர்கள்தானே? 

 - டார்வின் சார்வாகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It