மூன்றாவது அணி அல்ல மாற்று அணிதான் தமிழகத்திற்கு அவசியம் தேவை என்பது பெரும்பான்மையினரின் கருத்து. தலைமை பொறுப்பு ஏற்க உரிய கட்சி ஏதும் இல்லை என்பது தான் உண்மை. ஒரு சமூகத்தில் மாற்றம் ஏற்பட உரிய வாய்ப்பும், சந்தர்ப்பமும் இருக்கவேண்டும். அதே நேரத்தில் அந்த மாற்றத்தை நிகழ்த்தும் ஒரு சக்தியும் வேண்டும். அந்த சக்தி ஒன்று திரள சரியான காரணியும் இருக்கவேண்டும்.
 
 தமிழக மக்களின் மாற்று அணி தேவை என்ற உணர்வு அரசியல் கட்சிகளின் மோசமான செயல்பாடுகள், லஞ்ச ஊழல், நம்பகத்தன்மை இன்மை, பாரபட்சம் போன்றதாகும். அரசியல் கட்சிகளின் கொள்கை அற்ற அணி சேர்கை நிகழக் காரணம் நம் தேர்தல் முறை. மாற்றத்தை உணர்ந்துள்ள மக்களுக்கு முதலில் நம்பகத்தன்மையை ஏற்படுத்த நம்பகத்தன்மை கொண்ட சக்திகளின் ஒற்றுமை காணவேண்டும். அந்த பகுதியினர் தமிழ் சமூகத்தில் அக்கறை கொண்டவர்களாகவும் நேர்மையானவர்களாகவும், சமூகப் பிளவுகளில் இருந்து மாறுபட்டவர்களாகவும் தெரியவேண்டும். 

 எது அந்த சக்தி? 2011 சென்சஸ்படி 8 கோடி மக்கள் தொகையை நெருங்கி விடும். மக்கள் நல திட்டங்களால், சமுக வர்க்கங்களின் அளவும், குணமும் பல மாறுபாடுகளை அடைந்துள்ளது. தன்னலம் அற்ற புரட்சி வர்க்கமாக கருதப்பட்ட தொழிளாளி வர்க்கம் பொருளாதார நிலைகளில் பல அடுக்கு கொண்டதாக மாறி ஒற்றுமை அடைவதில் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. புதிய முறை சுரண்டல்களில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு கூட ஒன்றுபட முடியாமல் உள்ளன. ஏழை எளிய மக்கள் ஒன்று திரள்வதில் அரசின் இலவசங்கள் தடையாய் உள்ளன. இலவசங்கள் அனைவருக்கும் இல்லாத நிலையில் அடுத்து கிடைக்கும் என்ற ஏக்கத்தில் பொறுமை காக்கின்றனர்.

சுதந்திரத்திற்குப் பிந்திய இரண்டாம் தலைமுறை அரசியல்வாதிகள் பொறுப்புக்கு வந்த பின்னால், அவர்களின் சுயநலம், பேராசை, சொத்து குவிப்பு, பதவி வெறி எல்லாம் அவர்களை ஒரு வர்க்கமாக அணிதிரள செய்து விட்டது. அரசியல் அதிகாரம் அதன் கையில் இருப்பது அதிகார வர்க்கத்தை அடிபணிய வைத்துள்ளது. அரசுகளின் புதிய பொருளாதாரக் கொள்கை, புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பு, எளிய தொலைதொடர்பு, உலகாளவிய வர்த்தகம், நுகர்வுப்பண்பு போன்ற மாற்றங்கள் அரசியல் வர்க்கத்தையும் அதிகார வர்க்கத்தையும் பிணைத்து சமுக விரோத சக்திகளின் துணையை தேட வைத்துள்ளது. இந்த முக்கூட்டை உடைத்து எறியாமல் புதியதை எதுவும் செய்யமுடியாது.

 இந்த கூட்டணியை முறிக்க, நாம் ஏற்றுக்கொண்டுள்ள ஜனநாயக வழியில் என்ன செய்ய வேண்டும்? யார் அல்லது எந்த சக்தி செய்ய முயல வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். அதற்கு நம் சமுக கட்டமைப்பு பற்றிய அறிவு தேவை. உழைத்து களைத்தவர்கள் சுமார் 55 லட்சம், உழைக்கக்கூடாத வயதினர் 2 கோடி. உழைக்கும் பகுதியினர் 3 கோடியே 50 லட்சம். பள்ளி கல்லுரி மாணவர்கள் 2 கோடிக்கும் சற்று குறைவு. உழைப்பவர்களில் 90% ஒன்று திரட்டப்படாத தொழிலாளர்கள். அவர்களுக்கு பணி பாதுகாப்பு, கூலி பாதுகாப்பு, குடிநீர் பாதுகாப்பு, கல்விப் பாதுகாப்பு, இருப்பிடப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு எதுவும் கிடையாது. அரசியல் சட்டமும் அரசியல்வாதிகளும் இவைகளை மக்களுக்கு வழங்குவதாக பறைசாற்றிக் கொள்கின்றனர். அதற்காக 29 வகையான திட்டங்கள் உள்ளது. அனைத்தும் கட்சி சார்பு உடைய, தகுதி அற்ற ஒரு பகுதியினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் மற்றவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது என்ற எதிர்பார்ப்போடும் ஏக்கத்தோடும் எதிர்க்கத் துணிச்சல் இன்றி உள்ளனர். பொதுவாக மக்கள் பகுதியினர் ஒன்று திரள்வதில் தடையாக இருக்கும் ஜாதி, மதம், இனம், கலாச்சாரம், மொழி போன்ற கூறுகளும் ஒரு காரணியாக உள்ளது. இக்கூறுகளில் இருந்து ஓரளவிற்கு விடுபட்டு ஒன்றிணைய வாய்ப்பும், எண்ணமும் உள்ளவர்கள் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும் தான். அவர்களிடையே நிலவும் நட்பே சான்றாகும்.

 அமைகின்ற ஆட்சி எதுவானாலும் எதிர்காலத்திற்கானது. எதிர்காலம் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் உரியது. உருவாக்கத்தில் இருக்கின்ற சமுகம் அறிவுச் சமுகம். ஏர் ஓட்டுவது முதல் எல்லா வேலைகளுக்கும் விஞ்ஞான அறிவு அவசியமாகி விட்டது. அதனால் அறிவு படைத்த மாணவர் சமுகம் தான் மக்களுக்கு வழி காட்டும் பொறுப்பையும் ,தலைமையையும் ஏற்று மாற்று அணியையும் மாற்று திட்டத்தையும் முன் வைக்க முடியும். அவர்களிடம் நிலவுகின்ற வெறுப்பும் விரக்தியும் அவர்களின் சக்தியை உணரவிடாமல் தடுத்துவருகிறது. அஸ்ஸாம் மாநில மாணவர்களின் வழி காட்டுதல் உள்ளது. தெலுங்கான பகுதி மாணவர்கள் வழிகாட்டிக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் சமூக ஆர்வம் கொண்ட, அணிகளின் பலம் அற்ற தலைவர்கள் உள்ளனர். அவர்கள் மாணவர்களிடம் உள்ள போராடும் உணர்வைக் கிளர்த்து எழச் செய்ய பணி ஆற்றினால் மாற்று அணி சாத்தியம்.

 இந்த அரசமைப்பில் மக்களின் உரிமைகள் எல்லாம் சலுகைகளாக உள்ளன. அதை உரிமைகளாக மாற்ற வேண்டும். இந்திய அரசியல் சட்டம் 73 ,74 வது திருத்தங்கள், மாநில அரசுகளிடம் கீழ்மட்ட அரசமைப்புகளான பஞ்சாயத், நகராட்சி, மாவட்ட பஞ்சாயத் போன்றவற்றின் உரிமைகளை அட்டவணை 11 ,12களில் வழங்கி உள்ளது. ஆனால் எந்த அரசியல் கட்சி ஆளும் மாநிலமும் மக்களுக்கு அதிகாரங்களை வழங்க முன் வரவில்லை. ஏனெனில் எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே வர்க்கமாக உள்ளதால் 5 வயது முதல் 14 வயது வரையிலான கல்வி அரசே இலவசமாகவும் கட்டாயமாகவும் வழங்க அரசியல் சட்டம் வழிவகுத்துள்ளது. ஆனால் மைய மாநில அரசுகள் தங்களின் பொறுப்பை தட்டிக்கழிக்கின்றன. தனியாருக்கு அனுமதி வழங்கி பெரும் கட்டணத்தையும் நிர்ணயித்து மக்களை கொள்ளை அடிக்க ஏற்பாடு செய்து லாபம் கண்டு வருகின்றனர். இவைகளுக்காகப் போராடினால் அரசு இங்கு தண்டகாருண்யாவில் நடத்துவதைப் போன்று வேட்டை ஆட முடியாது. ஒருவேளை அப்படி முற்பட்டாலும் மக்களை ஒன்று திரட்டவே அது உதவும்.
 
 1950 ஜனவரி 26 இந்தியா குடியரசாக மலர்ந்த பொழுது தோழர் நம்பூதிரிபாட் சொன்னார் "இந்திய அரசியல் சட்டம் மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவில் ஜனநாயகத்தை வழங்கி உள்ளது ஆனால் மாநில கிராம சபைகளுக்கிடையே அதிகார வர்க்கத்தை மட்டுமே வழங்கி உள்ளது." சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும் அதே நிலை நீடிப்பது அரசியல் வர்க்கம் உருவானதால் என்பது நிரூபணம் ஆகிறது. மகாத்மா காந்தி சொன்னது போல ஒவ்வொரு கிராம சபையும் ஒரு குடியரசு போல செயல்பட வேண்டும் என்பது நிறைவேறினால் தான் சுதந்திரக் காற்றை மக்கள் சுவாசிக்க முடியும். அதற்கான வழி "கிராமங்களுக்கு சுயாட்சி, மக்களுக்கு அனைத்து அதிகாரமும்" இப்படிப்பட்ட அரசமைப்பில் பன்னாட்டு மூலதனமோ, ஏகபோகமோ, ஏகாதிபத்தியமோ நாட்டின் வளங்களை கொள்ளை அடிப்பது அவ்வளவு சுலபமாகி விடாது. சுதந்திரம் அடைந்த காலத்தில் கிராம சபைகளுக்கு சுய உரிமை கிடைப்பதற்கு அம்பேத்கர் மறுப்பு கூறினார் என்பது உண்மை தான். அன்றைய சாதிய சமூகத்திற்கு அந்த நிலைப்பாடு சரிதான். கால வளர்ச்சியும்,பொருளாதார வளர்ச்சியும், அறிவு வளர்ச்சியும் பரிமாற்றங்களும் இன்றைய கிராம சமூகத்தை உயர்த்தி உள்ளது. அதனால் தவறுகளே நடக்காது என்று சொல்ல முடியாது, ஆனால் அதை திருத்திக் கொள்ள முடியும். எந்த ஒரு புதிய முறையிலும் முதலில் தவறுகள் நேர வாய்ப்பு இருக்கும், அனுபவம் தான் ஒழுங்கை வழங்கும். 

மா.சுந்தரராசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It