train artரயில் வாராங்கல் நிலையத்திற்குள் நுழைந்த போது இரவு மணி எட்டு. வண்டி நிற்கும் முன்னரே டீ காபி இட்லி வடை பூரி பானிபானி என்ற வியாபாரிகளின் குரல்கள் பெட்டிக்குள்ளேயே ஒலிக்கத் தொடங்கியிருந்தன.

முன்னல்லாம் டூ டயர் ஏசி கோச்சுக்குள்ள வந்து இப்படியெல்லாம் வித்துக்கிட்டு இருக்க மாட்டாங்க. இப்ப எல்லாந் தலகீழ என்று முகத்தைச் சுளித்து காதுகளை கைகளால் பொத்தியபடி அங்கலாய்த்தார் எதிர் இருக்கை பெரியவர் தன் மனைவியிடம்.

ஜன்னல் ஓரத்தில் என் மனைவி வேணியின் மடியில் அமர்ந்து விற்றுக் கொண்டு போகிறவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ஒன்றரை வயது மகள் அம்மு. தெலுங்கு செய்தித்தாளால் சுற்றப்பட்ட பொதியை என்னைத்  தாண்டி அம்முவிடம் நீட்டியவனைத் திரும்பிப் பார்த்தேன். அழுக்குச்சட்டை அழுக்கு வேட்டி எண்ணெய் காணாத தலை நாலு நாள் தாடி வியர்வை நாற்றம் என படு பரிதாபமாக இருந்தான். நாற்பது வயது இருக்கலாம்.

வேண்டாம் அம்மு என்பதற்குள் அவனிடம் இருந்த அந்த பொதியை வாங்கியிருந்தாள். வெறும் 25 ரூபாய்தான் ஜி ஒரு பார்சல். அஞ்சு இட்லி இருக்கும். ரெண்டு பார்சல் வாங்கிக்கோங்க …..

இல்லப்பா பசி இல்ல.

உங்களுக்கு பசியில்ல ஆனா எனக்கு பசிக்குதுல்ல என்று அதட்டலாகச் சொன்னவனைப் பொருட்படுத்தாமல் அம்முவிடம் இருந்து வலுக் கட்டாயமாக பொதியை வாங்கி இந்தா இந்த ரூபாயை வச்சுக்க ஆனால் எனக்கு இட்லி வேண்டாம் என பொதியோடு சேர்த்து ஐம்பது ரூபாயை அவன் கையில் கொடுத்தேன்.

இட்லிய வாங்கினாதான் டப்பு வாங்குவேன். உங்களுக்கு வேண்டாம்னா யாராவது பசிக்கிறவன் வருவான் கொடுங்க ரெண்டு பேர் பசியைத் தீர்த்த புண்ணியம் கிடைக்கும் என்றவன் இருக்கையில் பொதிகளை வைத்தான்.

இத எடுத்துட்டுப் போன்னு சொல்றேன்ல.. சும்மா தொணதொணன்னுகிட்டு..

ஹலோ .. அவர்தான் சொல்றாருல்ல எடுத்துட்டு. போடா என்று பெரியவர் அவர் பங்குக்கு எரிந்து விழுந்தார். அவருக்கு அவன் நிற்பதே பிடிக்கவில்லை என்பது அவர் உடல்மொழியிலேயே தெரிந்தது .

பிச்சைக்காரனை உழைச்சு சாப்புடச் சொல்றது.. உழைக்க நினைக்கிறவனுக்கு பிச்சை போடுறது.. ஆண்டவா!  தின்னா தின்னு இல்லாட்டித் தூக்கிப் போடு என்று ஒருமையில் பேசிவிட்டுச் செல்பவனின் முதுகிலேயே இட்லியை எறிந்து விடத் தோன்றியது.

விக்கிறவன் கொஞ்சம் சுத்தமா வரக்கூடாதா என்றாள் வேணி. ஆமா ஒரே நாத்தம் என்ன மாவோ.. எப்ப பண்ணானோ.. யாரும்  பிச்சைக்காரங்க வந்தா போட்டுரலாம் என்றபடி முதுகுக்குப் பின்னால் புத்தகங்கள் வைப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த வலைப் பையில் சொருகினேன்.

வேண்டா வேண்டாம்னாலும் கேட்கிறானா பாருங்க.. வெளியே தூக்கி போட்டுருங்க யாராவது பிச்சைக்காரனுக்கு கொடுத்து அவனுக்கு ஏதாவது நோய்வந்துடப் போகுது என்றார் எதிர் இருக்கைக்காரர் மனைவி.

பொதியைப் பிடுங்கியதால் அழத் தொடங்கிய அம்முவை அதைத் தின்னா பூச்சி வரும்மா. இந்த பாரு அத்தை கொடுத்த சப்பாத்தி சூப்பரா இருக்கும். இதைச் சாப்பிடுவோம் என்று ஊட்டத் தொடங்கியிருந்தாள் வேணி.

இன்னுமா சப்பாத்தி இருக்கு ! அக்கா எப்போதும் அப்படித்தான் அவள் ஒரு வேளைக்கு வைக்கும் உணவை இரண்டு நேரம் அல்லது மூன்று நேரம் கூட சாப்பிட்டுக் கொள்ளலாம். அதனால் நாங்கள் கிளம்பிய நேற்று இரவுக்கும் இன்று காலைக்கும் மட்டும் தயார் செய்து கொடு போதும் என்று கறாராகச் சொல்லியிருந்தேன். அரை மனதாக ஒப்புக் கொண்டு வைத்த இட்லி மற்றும் சப்பாத்திகளைத்தான் நேற்றிரவு இன்று காலை மதியம் இரவு என உண்டு கொண்டிருக்கிறோம்.

விமானப்படையில் வேலை எனக்கு. நேற்று அதிகாலை அமிர்தசரஸில் இருந்து கிளம்பி மதியம் டில்லி அடைந்து அக்காவையும் பிள்ளைகளையும் ஒரு எட்டு பார்த்துவிட்டு இரவு ரயில் ஏறினோம்.

அக்காவுக்கு நான் டில்லியில் அவள் வீட்டுல இரண்டு நாட்களாவது தங்கி விட்டு போகாதது வருத்தம். வாரதயாவது சொன்னானா பாரு என்றவளிடம் அம்மு, லக்கேஜ்லாம் வச்சுக்கிட்டு நடக்குறது கஷ்டம். நான் வர்றேன்னு சொன்னா நீ வேற அம்மாக்கு அப்பாக்கு அம்முவுக்குன்னு ஒரு பெட்டியே தயார் பண்ணீருவ. அதான் சொல்லலன்னு சமாதானப்படுத்தினேன்.

எதிர் இருக்கை தம்பதியருக்கு ரயிலிலேயே ஏற்பாடு செய்திருந்த உணவுகள் வந்திருந்தன. முன்னர் ரயிலில் உணவு எப்படி இருக்கும் இப்போது எப்படி இருக்கிறது என ஒப்பிட்டுச் சொல்லியபடியே சாப்பிட்டனர். நாங்களும் ஒருவழியாய் சப்பாத்திகளைத் தீர்த்திருந்தோம்.

காலை ஏழு மணிக்கெல்லாம் சென்னை வந்து விடும். இரவு எட்டரைக்கு மேல்தான் பொதிகை எக்ஸ்பிரஸ் தென்காசிக்கு. பகல் நேரத்தில் வள்ளி மாமா வீட்டுக்குப் போகணும். இல்லனா என்னடே மாப்ள.. பெரிய மனுஷன் ஆயிட்டியோடே.. மெட்ராஸத் தாண்டி போற.. தாய்மாமாவ  பாக்கணும்னு தோண மாட்டங்க எனத் தொலைபேசியில் சிடுசிடுப்பார்.

அத்தை அடையோ பூரியோ சுட்டுத் தருவார்கள். உங்க அம்மை மாதிரில்லாம் எனக்கு செய்ய தெரியாதுப்பா என்று சொன்னாலும் அருமையாக இருக்கும்.. வேணி அருமையான பொறுமையான புள்ளடா என்று அத்தை ஒரு வாஞ்சையுடன் அவளைப் பார்ப்பது என் நெஞ்சை நிறைக்கும்.

நானும் எதிர் இருக்கைப் பெரியவரும் மேல் படுக்கைகளிலும் என் மனைவியும் பெரியவரின் மனைவியும் கீழ் படுக்கைகளிலும் படுத்திருக்க ரயில் சீரான சத்தத்துடன் போய்க் கொண்டிருந்தது. என் மனைவி அருகில் படுத்து இருந்த மகள் மட்டும் அவள் மொழியில் தூங்கிக் கொண்டிருந்த தன் அம்மாவிடம் புரியாத பாஷையில் வாயைக் குவித்துக் குவித்து ஏதோ பேசிக்கொண்டே இருந்தாள்.குழலினிது யாழினிது குறள் வந்து போனது . அந்த இசையிலேயே உறங்கிப் போனேன்.

அதீதமாய் கேட்ட மனிதக் குரல்களில் விழித்துக் கொண்டேன் நான். என் படுக்கையில் இருந்து தலையை சற்று வெளியே நீட்டிக் குனிந்து பார்த்தபோது வேணியும் அம்முவும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தனர். கைபேசியை ஒளிரச் செய்து நோக்கிய போது மணி ஆறென்றது.

இன்னும் ஒண்ணு ஒன்றரை மணி நேரத்திற்குள் சென்னை போய்விடுவோம் என்ற நினைப்பைக் கெடுத்தது இன்ஜின்ல எதோ பெரிய பிரச்சனையாம் இன்னும் மூணு நாலு மணி நேரத்துக்கு வண்டி நகருமான்னே தெரியல என்று யாரோ யாரிடமோ சொலலும் குரல்.

அடுத்த அரை மணி நேரத்திற்குள் பெட்டி முழுவதும் சலசலக்க ஆரம்பித்திருந்தது. இந்திய ரயில்வே துறையின் அலட்சியத்தைப் பற்றியும் தங்களுக்கு இதற்கு முன் ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றியும் ஒருத்தருக்கு ஒருத்தர் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியிருந்தனர்..

எழுந்து அமர்ந்திருந்த பெரியவருக்கும் மனைவிக்கும்பொத்தாம் பொதுவாய் குட் மார்னிங் என்றபடி மேலிருந்து இறங்கினேன். என்னத்த குட்மார்னிங் இன்னும் நாலஞ்சு மணி நேரத்துக்கு இன்ஜின் சரியாகாதாமே என வெறுப்பானார்..

இருக்கைக்கு அடியில் இருந்த காலணிகளை காலாலேயே துழாவி வெளியே எடுத்து அணிந்து கொண்டு பல் தேய்க்கச் சென்றேன். ஆனால் அங்கு தண்ணீர் இல்லை. பின்பு குடிக்க வைத்திருந்த நீரை எடுத்து பல் தேய்த்து முடித்துவிட்டு வேணியின் காலடியில் வந்து அமர்ந்து கொண்டேன்.

ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன். இரண்டு-மூன்று பெயர் தெரியா மரங்கள் அடங்கிய ஒரு பொட்டல் காடு மஞ்சள் வெயிலில் தகதகத்தது. பயணிகள் பலர் இறங்கி பேசிக் கொண்டும் புகைத்துக் கொண்டும். ஒன்றிரண்டு இளஞ்ஜோடிகள் எந்த கவலையும் இல்லாமல் உரசி பேசி சிரித்தபடி உலவிக் கொண்டிருந்தனர்.

ரயில் இப்ப கிளம்பாதா என்றபடி எழுந்து கொண்ட வேணி அம்முவுக்கு பால் வாங்கி வச்சிருங்க.. தீந்துடாம என்றாள். ஐயா உங்களுக்கு எதுவும் வேண்டுமா என்று கேட்டதற்கு எதுவானாலும் வாங்கி வாருங்கள் ஆனால் பணம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றார் பெரியவர் .. அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் என்று சிரித்துவிட்டு  ரயிலின் சமையலறைப் பெட்டி தேடி நடந்தேன்.

அங்கே பெரும் கூட்டம் எதையோ அடிபிடி போட்டு வாங்கிக் கொண்டிருந்தது. உற்றுப் பார்த்ததில் உப்புமா என்று தெரிந்தது. ஒரு கரண்டி உப்புமாவை நூறு ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் முண்டியடித்து வாங்கும் திறமையெல்லாம் இல்லாததால் அமைதியாக இருக்கைக்குத் திரும்பினேன்.

பெரியவர்க்கு நான் வெறுங்கையோடு திரும்பியது அதிருப்தியைத் தந்திருக்க வேண்டும். அவ்வளவு கூட்டமா இருக்கு என்று சலித்துக் கொண்டார். 

மணி எட்டரை.  அம்முவும் எழுந்து விட்டிருந்தாள். அவசரத்திற்கு என்று வைத்திருந்த மாரி பிஸ்கட் பாக்கெட்டை எடுத்துப் பிரித்து பெரியவருக்கும் அவர் துணைவியாருக்கும் கொடுத்துவிட்டு நாங்களும் உண்ணலானோம்.

கைபேசியில் அம்மா முறுக்கு சுற்றிக் கொண்டிருப்பதை அப்பா படம் பிடித்து அனுப்பியிருந்தார். ஏட்டி ஆச்சியப் பாரு உனக்கு முறுக்குச் சுடுதாங்க என்று அம்முவிடம்  கைபேசியை நீட்டியபோது அதைத் தட்டி விட்டவள் சிணுங்கத் தொடங்கினாள். வேணி, சத்தம் வராமல், பாலுக்கு அழுகிறாள் என்றதாக உதடசைத்தாள்.

மீண்டும் உணவகப் பெட்டிக்கு சென்ற போது கூட்டம் இல்லையே என மகிழ்வதற்குள் பால் கூட இல்லை என்று கையை விரித்தார்கள். இரண்டு தண்ணீர் பாட்டில்களும் பிளாஸ்கில் வெந்நீரும் மட்டும் வாங்கிக் கொண்டு திரும்பினேன். அம்மு ஸ்நிக்கர்ஸ் சாப்பிட்டபடி கண்ணாடி ஜன்னல் வழி வெளியே  பயணிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

வெயில் ஏற ஆரம்பித்திருந்தது பொட்டல் காட்டில் உலவியவர்கள் பலர் மீண்டும் பெட்டிக்குள் ஏறி விட்டிருந்தனர்.

விஜயவாடாவில் இருந்து சரி பண்ணுவதற்கு மிஷின் எல்லாம் வந்து விட்டதாம் என்று சொன்னபடி யாரோ கடந்தார்கள். சிலர் சீட்டு விளையாடத் தொடங்கியிருந்தனர். சில அப்பாக்கள் அழும் குழந்தைகளை தூக்கியபடி பெட்டிக்குள்ளே நடந்து கொண்டிருந்தனர். இவ்வளவு தாமதமானால் இன்றிரவு பொதிகை ரயிலைப்  பிடித்து விட முடியுமா இல்லையெனில்என்ன செய்யலாம் என்ற கவலை தொற்றியிருந்தது.

ரயிலை விட்டால் தனியார் பேருந்தில் போய்விடலாம்தான். ஆனால் பொதிகை ரயிலில் தென்காசிக்கு போவது ஒரு சுகானுபவம் .

ரயில் மதுரையைத் தாண்டி விட்டாலே ஒரு சொல்லொணா மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும். அநேகமாக ரயில் பெட்டி காலியாகி விட்டிருக்கும். வயல்களுக்கும் தோப்புகளுக்கும் வாழைத் தோட்டங்களுக்கும் நடுவிலூடே ரயில் பாய்ந்து செல்கையில் தோன்றும் உணர்வு அம்மாவின் மடியில் தலை வைத்துக் கொள்வதைப் போன்றது. அதற்காகவே குளிர்சாதன வசதிப் பெட்டியிலிருந்து மாறி இரண்டாம் வகுப்பு பெட்டிக்கு மாறி அமர்ந்து கொள்வோம்.

எய்யா.. ச்சீனிக் கொய்யாய்யா.. வாங்கிக்க ராசான்னு நார்ப் பெட்டியத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வரும் கிழவி, கோயில்பட்டி கடலே  மிட்டாய் மரபா இஞ்சி மரபாவென ராகத்தோடு தோள் பையிலும் கையிலுமாக கொண்டு வரும் வாலிபன் என ஊர் வாடை அடிக்கத் துவங்கிவிடும்

கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலும் காற்றை வைத்தே கண்டுபிடித்து விடலாம் கடையநல்லூர் வந்துவிட்டது என்று. தென்காசி காற்று குளிர்ந்துதானிருக்கும். ஆனால் போர்வையைத் தேட வேண்டாம். ஒரு காதலியைப் போல உடம்போடு தழுவி சிலிர்க்க வைக்கும்.

போதும்.. சின்னப் புள்ளை மாதிரி குதி குதின்னு குதிக்காதீங்க ஒரு இடத்தில உட்காருங்க என்பாள் வேணி என் மனநிலையை உள்ளூர ரசித்துக் கொண்டே . . ஆனாலும் குதூகலம் கட்டுக்குள் அடங்காது.

காலை 8:15க்கு தென்காசி சென்றடையும் ரயிலுக்கு அப்பா ஆறு மணிக்கே  வந்து காத்திருப்பார். நடைமேடையில் மிகத் துல்லியமாக நாங்கள் இருக்கும் பெட்டிக்கு நேரே நின்று கொண்டிருப்பார். பயணம் எல்லாம் சௌகரியம்தானே என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் மருமகளுக்கு ஒரு புன்னகையைத் தந்துவிட்டு  பேத்தியை வாங்குவதிலேயே குறியாக இருப்பார்.

பேத்தியை வாங்கியதும் அவளை தலைக்கு மேலே தூக்கி அம்மை வந்தியா அம்மை வந்தியா என்று அண்ணாந்து பார்த்துக் கொஞ்சுவார். அம்முவையோ அக்காவின் மகள்களையோ பார்த்தால் மட்டுமே வாயெல்லாம் பல்லாக மனமாரச் சிரிப்பார் அப்பா . கூட வந்த ஆட்டோக்கார முருகன் எட்டு மணிக்கு மேலதானய்யா ரயில் வரும்னு சொன்னா ஐயா எங்க காது கொடுத்துக் கேக்காஹ ஆறு மணிக்கே வந்து குத்த வச்சாச்சு என்றபடி  பெட்டிகளை எல்லாம் சுமந்து செல்வான்.

நண்பகல். எதிரிருக்கைப் பெரியவருக்கு ஏ.சி. குளிரிலும் வியர்த்தது. படபடன்னு வருது என்றவருக்கு பாட்டில் தண்ணீரைக் கொடுத்தேன். காலையிலிருந்து வெறும் ரெண்டு பிஸ்கட் மட்டும்தான் சாப்பிட்டாரா அனேகமாக பசியா இருக்கும்னு நினைக்கிறேன். பசி தாங்க மாட்டார் என்று கலங்கினார் அவர் மனைவி.

பெரியவரை பார்த்ததாலா அல்லது  கடும் பசியா என்று தெரியவில்லை அம்மு ஓவென்று அழ ஆரம்பித்தாள். எத்தனை சமாதானப்படுத்தினாலும் அழுகை நின்றபாடில்லை. அம்முவின் அழுகை சத்தத்திலும் எதிர் இருக்கை பெரியவர் அரைக்கண் செருகி சாய்ந்து அமர்ந்திருந்தார்.

நான் அவர் அருகே போய் சார் சார் என்ற போதுதான் கண்ணில் பட்டன எதிரே அந்த வலைப் பையில் திணித்து வைத்திருந்த இட்லி பொட்டலங்கள்.படக்கென்று எழுந்து அந்தப் பொதிகளை வெளியே எடுத்துப் பிரித்து முகர்ந்து பார்த்தேன். கெட்டுப் போயிருக்கவில்லை. உடனே அந்த இட்லிகளை இரண்டு தட்டுகளில் தட்டி சட்னியைப் பிரித்துக் கொட்டி வேணியிடமும் எதிர் இருக்கை அம்மாவிடமும் நீட்டினேன்.

வேணி அம்முவுக்கும் அம்மா ஐயாவிற்கும் ஊட்ட அம்மு அழுகையை நிறுத்தியிருந்தாள் அவரும் மெல்ல கண்களைத் திறந்தவர் ஒரு மிடறு நீரருந்திவிட்டு தானே தட்டை வாங்கி உண்ணத் துவங்கினார்.

எந்த அருவருப்பும் வியர்வை நாற்றமும் மனதில் தோன்றவில்லை . இப்போதும் அவன் யாரிடமாவது வலுக்கட்டாயமாக இட்லி விற்றுக் கொண்டிருக்கக் கூடும் .அந்த அடாவடி அழுக்குச் சட்டைக்காரனை நினைத்துக் கரம் குவித்தேன்.

ரயில் மெல்ல நகரத் தொடங்கியிருந்தது.

- ரமணி முருகேஷ்

Pin It