subaveerapandian 350ஆதி சங்கரரைப் பிரசன்ன பௌத்தர் என்று வைணவர்கள் அழைப்பதுண்டு. ஆசையைத் துறப்பது, புலாலை மறுப்பது போன்றவைகளை எல்லாம் புத்தரிடத்திலிருந்துதான் ஆதி சங்கரர் எடுத்துக்கொண்டார் என்பதனாலே அவரை அவ்வாறு அழைப்பார்கள்.
 
அத்வைதம் என்ற கோட்பாட்டைக் கொஞ்சம் மாற்றி, புத்த மதத்திலிருந்துதான் அவர் பெற்றார் என்றும் அவர்கள் கூறுவார்கள். உலகத்திலிருக்கிற அனைத்தும் மாயை என்பதற்குப் பதிலாகக் கடவுளைத் தவிர அனைத்தும் மாயை என்று ஆதிசங்கரர் குறிப்பிட்டார். பிரசன்ன பௌத்தர் என்று சொன்னால் ஒரு மறைமுகமான பௌத்தர், அதாவது பௌத்த மதத்தின் கோட்பாடுகளை ஆதிசங்கரர் எடுத்துக்கொண்டு, அதை வேறு பெயரில் மறைமுகமாகச் சொல்லுகிறார் என்பது வைணவர்களினுடைய குற்றச்சாட்டு.
 
இரண்டு பேருக்கும் இன்னொரு ஒற்றுமையும் உண்டு. தன்னுடைய கருத்துகளைப் பரப்புவதற்காகப் புத்தர் எப்படிச் சங்கங்களை உருவாக்கினாரோ, அப்படித்தான் ஆதிசங்கரரும் மடங்களை உருவாக்கினார். இந்தியாவிலே நான்கு மடங்களை அவர் நிறுவினார் என்று கூறுவார்கள். திசைக்கு ஒன்றாக நான்கு மடங்களை அவர் நிறுவினார். வடக்கிலே பத்திரிநாத், மேற்கே துவாரகா, தெற்கிலே சிருங்கேரி, கிழக்கிலே பூரி என நான்கு மடங்கள்.
 
மேற்காணும் கூற்றை மறுக்கிறவர்களும் உண்டு. அவருடைய சீடர்கள்தான் மடங்களை உருவாக்கினார்களே தவிர அவர் உருவாக்கவில்லை என்று கூறுகிறவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். காரணம், ஆதிசங்கரரினுடைய இறுதி நாட்கள் தெளிவாக இப்போதும் வரையறுக்கப்படவில்லை. அவர் எங்கே இறுதியாகச் சமாதி நிலை அடைந்தார் என்பதனை யாரும் சொல்லவில்லை. அவருக்கு ஒரு கல்லறையோ அல்லது நினைவிடமோ எங்கும் இல்லை. 32 வயதில் அவர் மறைந்துவிட்டார் என்று ஒரு கூற்று இருக்கிறது. 32 வயது மட்டுமே இந்த உலகத்திலே வாழ்ந்திருப்பார் என்றால், அந்த 32 வயதிற்குள் இந்தியா முழுவதும் சுற்றித் திசைக்கு ஒன்றாக நான்கு மடங்களை நிறுவியிருக்க முடியுமா என்பது ஒரு பெரிய கேள்விதான். இன்றைய விஞ்ஞான வளர்ச்சிகளெல்லாம் இல்லாத அக்காலத்தில், இன்றைக்கு இருப்பது போலப் போக்குவரத்து வசதி இல்லாத அக்காலத்தில், நான்கு திசைகளில் 32 வயதிற்குள் நான்கு மடங்களை உருவாக்கி இருக்க முடியாதுதானே!
 
அந்த மடங்களைச் சங்கரர் நிறுவினார் என்றே வைத்துக் கொண்டாலும், அந்த நான்கு மடங்களின் பட்டியல்களைப் பார்க்கும்போது, காஞ்சி மடத்தைக் காணவில்லையே என்ற கேள்வி நமக்கு வரும். ஆதி சங்கரருடைய மடம் காஞ்சியிலே இருக்கிறது என்றுதான் நாம் எல்லோரும் கருதுகிறோம். ஆனால் அந்த மடம் எப்பொழுது உருவாக்கப்பட்டது என்பதை அக்னி ஹோத்ரம் ராமானுஜம் தாத்தாச்சாரியார் மிக விரிவாகத் தன்னுடைய நூலிலே எழுதியிருக்கிறார்.
 
நான்கு மடங்கள்தான் முதலில் நிறுவப்பட்டன. தெற்கிற்கு அதாவது தமிழகம் உள்ளிட்ட தென்பகுதிகள் அனைத்திற்குமாகச் சேர்த்து, கர்நாடகத்தின் மத்தியப் பகுதியிலே இருக்கிற சிருங்கேரியிலேதான் மடம் உருவாயிற்று. அந்த மடத்துக்குத்தான் எல்லோரும் போய்க்கொண்டிருந்தார்கள். ஆனால் அங்கே பல கட்டுப்பாடுகள் இருந்தன. அந்த மடத்திற்கு வந்த பெண்கள் தடுக்கப்பட்டார்கள். காரணம், ஆதிசங்கரருடைய உபதேசங்களின்படி, மூன்றை அவர்கள் துறந்திருக்க வேண்டும். தனம், பாரியாள், புத்திரர் என்று வடமொழியிலே அவர்கள் சொல்கிற, செல்வத்தை, இல்லறச் சுகத்தை, குழந்தைகளைத் துறந்தவர்கள்தான் ஆதிசங்கரரைப் பின்பற்ற முடியும். ஆகவே பெண்களும் அங்கே புறக்கணிக்கப்பட்டார்கள்.
 
அதற்குப் பிறகு தென்னிந்தியாவிலே இருந்து வந்த பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்களும் சிருங்கேரி மடத்திற்குள்ளே அனுமதிக்கப்படவில்லை. எங்களை ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டபோது, "நீங்கள் எந்தக் கோத்திரமாக இருந்தாலும் சரி, எந்த வேதப் பிரிவாக இருந்தாலும் சரி, உங்களை அனுமதிக்க முடியாது' என்று அவர்கள் சொன்னார்கள்.
 
பழைய சங்கர மடங்களில், உள்ளே சமையல் செய்வது கூடக் கிடையாது. அங்கே இருக்கிற சந்தியாசிகள் எல்லோரும் பிச்சாந்தேகிகளாய்த்தான் இருக்கவேண்டும். பசிக்கிறபோது வெளியே போய்ப் பிச்சை எடுத்து உண்ண வேண்டுமே தவிர, அடுத்த வேளை உணவுக்காக ஒரு பருக்கை நெல்லைக்கூடச் சேர்த்து வைத்துக்கொள்ளக் கூடாது என்பதுதான் அங்கே விதியாக இருந்தது. எனவே பிச்சாந்தேகிகளுக்குச் சமையலறை தேவையில்லை. அதனால் பெண்களின் உதவியும் அவர்களுக்குத் தேவைப்படவில்லை.
 
இந்நிலையில், தமிழ்நாட்டிலே இருந்து வருகின்ற எவருக்கும் இடமில்லை என்று சொன்னபோது, கோபப்பட்டுக் குமுறி எழுந்து நாம் நமக்கென்று தனியாக ஒரு மடத்தை அமைத்துக் கொள்ளலாம் என்று 600 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் நாட்டுப் பிராமணர்கள் முடிவெடுத்தனர். அதன்படி கும்பகோணத்தில் முதன் முதலாக ஒரு மடம் நிறுவப்பட்டது. அந்தக் கும்பகோண மடம் சென்ற நூற்றாண்டின் மையப் பகுதி வரையிலே இருந்தது. அண்ணல் காந்தியடிகள் மூன்று முறை சங்கர மடத்தினுடைய பெரியவரைச் சந்தித்திருக்கிறார். மூன்று சந்திப்புகளும் கும்பகோணத்திலேதான் நிகழ்ந்திருக்கின்றன.
 
கும்பகோணத்திலே இருந்து அம்மடம் காஞ்சிக்கு வந்தது பிறகுதான். அதற்கான ஒரு விசித்திரமான காரணத்தையும் தாத்தாச்சாரியார் குறிப்பிடுகிறார். அந்தந்தச் சங்கர மடங்கள் அந்தந்தப் பகுதியிலேதான் கருத்துப் பரப்ப வேண்டும். அவர்களுடைய அடிப்படை நோக்கமே, ஆங்கிலத்திலே மிசினரி என்று சொல்லுகிறோமே அதைப் போல, கருத்துகளைப் பரப்புவதுதான். ஆனால் பூரி சங்கராச்சாரியார் சென்னைக்கு வந்து அவருடைய கருத்துகளைப் பரப்பத் தொடங்கினார். நாம் மிகவும் உள்ளே தள்ளிக் கும்பகோணத்திற்கு வந்துவிட்டதனாலேதான், இன்னொரு எல்லையில் இருந்து அவர் இங்கே வரமுடிகிறது என்று கருதிய கும்பகோண மடத்தினர், சென்னைக்கு அருகிலே போய் ஒரு மடத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதன் விளைவாகக் காஞ்சி மடம் உருவாக்கப்பட்டது என்கிற செய்தியை அவர் தருகிறார். எனவே காஞ்சி சங்கர மடம் என்பது மிகவும் பிற்காலத்திலே உருவான மடம்.
 
இந்த மடத்திலே பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. எந்த எல்லையில் இருந்து வேண்டுமானாலும் அந்த மடத்திற்குள்ளே வரலாம். பெண்கள் தாராளமாகச் சங்கர மடத்திற்குள்ளே வரலாம். அதுமட்டுமல்லாமல் வேறு சமூகத்தைச் சார்ந்தவர்களும் மெல்ல மெல்ல அனுமதிக்கப்பட்டார்கள். இப்படி விதிகள் தளர்த்தப்பட்டன. சங்கராச்சாரியார்கள் கடல் கடந்து செல்லக்கூடாது என்னும் விதியும் மிக அண்மைக் காலத்தில் மீறப்பட்டது. ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சீனா செல்வதற்கு அனுமதி (விசா) கேட்டு விண்ணப்பித்தார்.
 
இவ்வாறு விதிகள் தளர்த்தப்படுவதை, சங்கரராமன் போன்றவர்கள் எதிர்த்தார்கள். சங்கராச்சாரியார்கள் கடல் கடந்து பயணம் செய்யக்கூடாது என்றும், சங்கர மடத்திற்குள் பெண்கள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் சங்கரராமன் வெளிப்படையாகவே பேசி வந்தார்.
 
சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்தச் சங்கரராமன் கொலை செய்யப்பட்டதையும், அந்தக் கொலை வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளதையும் நாடறியும்.
Pin It