"மூன்று ஆண்டுகளுக்கோ, பத்து ஆண்டுகளுக்கோ, நாடு கடத்தலுக்கோ, தூக்குத்தண்டனைக்கோ மற்றும் பிரிட்டிஷ்காரன், காங்கிரஸ்காரன் கிளர்ச்சியின் மீது கையாண்ட எந்தவிதமான கொடிய, தீவிரமான அடக்குமுறைகள் நம்மீதும், கழகத்தின்மீதும் பிரயோகித்தாலும் கூட, அவைகளுக்குப் பயப்பட்டு என் இலட்சியத்தையோ, திட்டத்தையோ மாற்றிக் கொள்ளப் போவதில்லை தோழர்களே! தீவிர இலட்சியவாதிகளே, நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்து விட வேண்டியதில்லை! பயந்துவிட மாட்டீர்கள்! சட்டத்தைப் பார்த்து பயந்து விட்டதாக கெட்ட பேர் வாங்காதீர்கள். ஆகவே இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றப் பெயர் கொடுங்கள்'' என்று அஞ்சாத அரிமாவாய் கர்ஜித்த தமிழர் தலைவர் தான் தந்தை பெரியார்.

என் இலட்சியம் என்று அவர் சுட்டிக்காட்டியது சமத்துவத்திற்கான சாதி ஒழிப்புக் கிளர்ச்சியாகும். சாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகளை எரிப்பது என்பது தான் பெரியார் குறிப்பிட்ட திட்டமாகும். அசரமைப்புச் சட்டத்தை எரித்தார், மூன்றாண்டு கடுங்காவல் சிறை தண்டனை கிடைக்கும் என்று ஆட்சியாளர்கள் மிரட்டினார்கள். அந்த சமயத்தில்தான் தந்தைபெரியார். தோளுயர்த்தி, தொடைதட்டி அறை கூவல் விட்டு அறப்போர்க் களத்தில் நின்று கொண்டு, இயக்கத் தோழர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பத்தாயிரம் தோழர்கள் படைவீரர்களாய் வீதிக்கு வந்து சாதி ஒழிப்புப் போராட்டத்தில் பங்கேற்றார்கள். அவர்களில் 4,000 தோழர்களை அரசு கைது செய்து காராக்கிரத்தில் பூட்டியது. இளைஞர்கள், முதியோர் கர்ப்பிணித் தாய்மார்கள், ஏழைக்குடியானவர்கள் எனக் களத்தில் நின்ற போராளிகளுக்கு மூன்று மாதம் முதல் 18 மாதம் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சிறைச்சாலையிலும் சிறைக்கு வெளியேவும் அடக்குமுறைக்கு ஆளான எண்ணற்ற தோழர்கள் பலியானார்கள்.

அத்தகைய வீரகாவியம் அரங்கேறிய பெரியார் மண்ணில், இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி இருக்கின்ற தென்போனும் இருக்கின்றானே? என்று ஏக்கப் பெருமூச்சுவிட்ட புரட்சிக்கவிஞர் உலவிய மண்ணில், தர்மபுரியில் சாதிக்கலவரத்தினால், கொலை, கொள்ளை, கலவரம், அமளி நடக்கிறது என்பதே கொடுமையிலும் கொடுமை அல்லவா?

திவ்யா – இளவரசன் ஆகியோரின் சாதி மறுப்புப் காதல் திருமணம் காரணமாக திவ்யாவின் தந்தை நாகராஜனின் உயிர் பறிக்கப்படுவதும், முந்நூறுக்கும் மேற்பட்ட குடிசைகள் கொளுத்தப்படுவதும், சொத்துக்கள் சூறையாடப்படுவதும், பணம், நகை, குடும்ப அட்டைகள் மாணவர்களின் சான்றிதழ்கள் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டு, அநாதைகளாய், நடுவீதியில் நின்று அழுது புலம்புகிற ஏழைஎளிய ஒடுக்கப்பட்டமக்களின் அவலக்காட்சிகள் நம் நெஞ்சில் ஆறாத ரணமாய் – தீயில் விழுந்த புழுவாய் நம்மைத் துடிதுடிக்க வைக்கிறது!

மாவட்டத் தலைநகரான தர்மபுரியில் இருந்து பத்தே நிமிடத்தில் பயணம் செய்து அடையக்கூடிய இந்த பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் கலவரமாக வெடித்துக் கிளம்பியிருக்கிறது. இந்தத் திருமணம் தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டிருக்கிறது. இதன் தொடர்வினையாக மணமகளின்தந்தை நாகராஜின் மரணம் ஏற்பட்டிருக்கிறது. நெருக்கடியான இச்சூழ்நிலையில் காவல்துறையின் உளவுப் பிரிவு கும்பகர்ண தூக்கத்தில் இருந்திருக்கிறது. திரைப்படத்தில் படம் முடிவடையும் போது காவல் துறையினர் வருவதைப் போலவே, நிஜத்திலும் நடைபெற்றிருக்கிறது. தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையத்தின் உறுப்பினர் லதா பிரியகுமார், காவல்துறையினர் மற்றும் சமூக நலத் துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கினால்தான் கலவரம் நடைபெற்றது என்று குற்றம் சாட்டியிருக்கிறார். இதனை வழிமொழிவதைப் போல ஆதிதிராவிடர் தேசிய ஆணையத்தின் தலைவர் பி.எல். புனியா அவர்களும் "திட்டமிட்ட இத்தாக்குதலால் 6.95 கோடி மதிப்பிற்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. உளவுதுறையின் செயல் படாத நிலையை இதற்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையும், அரசும் பொறுப்புடன் நடக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் பல முறை அறிவுறுத்தியுள்ளன. மதுரையில் ஜல்லிக்கட்டு விளையாட்டு சாதிக்கலவரமாக மாறி, ஒருவர் கொலையில் முடிந்த பிரச்சனை உச்சநீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்தது. மார்க்கண்டேய கட்ஜு, இயான் சுதா மிஸ்ரா ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு இவ்வழக்கினை விசாரித்து பத்துபக்கங்கள் கொண்ட தீர்ப்பை அளித்தது. "சம்பவம் நடந்த இடமான தமிழகத்தில் இன்னமும் தேநீர்க்கடைகளில் இரட்டைக்குவளை முறை இருப்பதை அறிந்து உச்சநீதிமன்றம் கவலைப்படுகிறது. இதனை ஏற்கமுடியாது இத்தகைய போக்கினை முற்றிலுமாக ஒழிக்குமாறு மாநில அரசைக் கேட்டுக் கொள்கிறோம். சாதி தொடர்பான கௌரவக் கொலைகள், மற்றும் சாதிப்பெயர் சொல்லி அவமதிப்பது போன்ற குற்றங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாது.

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் பகுதிக்கு, பொறுப்பாக உள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சிப் பணி அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்படுவதோடு குற்றங்களைத் தடுக்கத் தவறியதற்காக அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை நடத்த வேண்டும். குற்றங்களைத் தடுக்காமல் கடமையில் இருந்து தவறும் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஆதிதிராவிடர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்ற நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். இந்த உத்தரவைப் பின்பற்றுவதற்காக அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் தீர்ப்பின் நகல் அனுப்பப்பட வேண்டும். மாநில, யூனியன் பிரதேச உள்துறை செயலாளர்கள் காவல்துறை இயக்குநர்கள் ஆகியோருக்கும் தீர்ப்பின் நகல் அனுப்பிட வேண்டும். அனைத்து மாநில உயர்நீதிமன்ற பதிவாளர்களுக்கும் ஜெனரலுக்கும் அனுப்பவேண்டும்.

மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரும், மாவட்ட ஆட்சித் தலைவரும் இது குறித்து கடுமையாக அறிவுரை வழங்கவேண்டும். (விடுதலை 20.4.2011) என்று வழங்கிய தீர்ப்பு ஏட்டுச்சுரைக்காயாகவே இருக்கிறது என்பதைத்தான் தர்மபுரி கலவரங்கள் உணர்த்துகின்றன.

"கலப்பு திருமணம் என்ற வார்த்தையையே பெரியார் கண்டித்தார். ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வது கலப்பு திருமணம் அல்ல, சாதி மறுப்புத் திருமணம் என்றுதான் சொல்லவேண்டும். ஓர் ஆண், ஆட்டையோ, மாட்டையோ திருமணம் செய்து கொண்டால்தான் அது கலப்புத் திருமணம் என்று சொன்னார். சமூக சீர்த்திருத்தத்திற்குச் சாதி மறுப்புத் திருமணங்கள் அடித்தளம் அமைக்கின்றன. சாதியத்தை வலியுறுத்துபவர்கள் அதனை எதிர்க்கத்தான் செய்வார்கள்'' என்று ஜுனியவர் விகடன் ஏடு கூட (5.12.12) பாராட்டத்தக்க வகையில் கருத்துரைக்கிறது.

ஆனால் பிராமணர்சங்கத் தலைவர் நாராயணன் சாதி மறுப்புத் திருமணங்களை ஏற்கமுடியாது என்று அறிக்கை விடுகிறார். வன்னியர் சாதிப் பெண்களைத் திருமணம் செய்யும் மற்ற சாதியினரை குத்துவேன், வெட்டுவேன் என்று வன்னியர் சங்க தலைவர் குரு கொலை வெறியைத் தூண்டுகிறாராம் சாதி மறுப்புத் திருமணங்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று தன்சாதிப் பெண்களிடம் வலுக்கட்டாயமாக உறுதிமொழி ஏற்கச் செய்கிறார் கொங்குவேளாளர் சங்கத் தலைவர் மணிகண்டன், ஆளும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா, செட்டிநாட்டுப் பெண்களை பிற சாதியினர் மணப்பதால் எங்களது பாரம்பரியம் சிதையும். பண்பாடு கெட்டுப்போகும் என்று புது விளக்கம் தருகிறார். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்கிறவர்களுக்குத் தங்கப் பதக்கம் வழங்கிப் பாராட்டி, அவர்களுக்கு வேலை வாய்ப்பு, வங்கிக் கடன் உதவி முதலான உதவிகளைச் செய்து சமத்துவ சமுதாயம் காண ஆணையிட்ட தமிழக முதல்வர்தான் அறிஞர் அண்ணா அவரது கொள்கைதான் இன்னமும் அரசின் நடைமுறையாக பின்பற்றப்பட்டுகிறது. அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராகவும், சமத்துவத்திற்கு விரோதமாகவும், வன்முறையோடு வீதியில் நின்று முண்டா தட்டி ரகளையைத் தூண்டி விடுபவர்கள் முழுசுதந்திரத்தோடு "தங்களின் திருப்பணியை'த் தொடர்ந்துகொண்டுதானே இருக்கிறார்கள்.

சாதி எனும் கொடிய நச்சரவத்தின் தன்மையினை இன்னமும் உணராத அறிவிளிகளாய் நம்மக்களும் ஆட்டம்போடுவதுதான், வேதனையானது. எந்த மதத்திலும் இல்லாத கொடுமை, வர்ணாசிரம தர்மமாய் இந்து மதத்தில் இன்னமும் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. பிறப்பின் அடிப்படையில், ஏணிப்படிகள் வடிவத்தில் சாதிய அமைப்பு முறைதிட்டமிட்டு, சூழ்ச்சியோடு நாம் ஒன்றுசேர முடியாமல் "பொறி' வைத்து வைக்கப்பட்டிருப்பதை அய்யாபெரியாரும், அறிஞர் அம்பேத்கரும் தோலுரித்துக்காட்டினார்கள். தனக்குமேலே தோளில் ஒரு சாதி அமர்ந்து ஆதிக்கம் செலுத்துவதைக் கண்டிக்கிற நாம், நமக்குக்கீழே அமைக்கப்பட்டுள்ள சாதியினரின் உரிமை வேட்கையை அலட்சியப்படுத்துவது அநியாயம் அல்லவா? இதைத்தான், "ஒவ்வொரு சமூகத் தாரும் தங்களுக்கு மேலானவர்கள் இல்லை என்று சொல்லி வருவதைப்போல தங்களுக்குக் கீழானவர்களுமில்லை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ஒன்றுமையை நிலைநிறுத்தமுடியும்'' என்று தந்தைபெரியார் அவர்கள் விளக்கிச் சொன்னார்.

ஒருதலைமுறை தலைவர் காமராசரிடம், பாபுஜெகஜீவன் ராம் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, "என்னைப் போலவே நீங்களும் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவர் என்று தான் நினைத்தேன் – பின்னர்தான் நீங்கள் எங்களைவிட உயர்ந்த சாதியில் பிறந்தவர் என்பதை தெரிந்து கொண்டேன்'' என்று தோழமையுடன் குறிப்பிட்டார். "நீங்கள் நினைப்பது தவறு. உங்கள் சாதியினைத் தொட்டால்தான் தீட்டு, நான் பிறந்த சாதியினரைப் பார்த்தாலே தீட்டு என்று இழிவாக நடத்துவார்கள். எனவே, நாம் இருவருமே ஒரே வகையினர்தான்'' என்று பெருந்தலைவர் காமராசர் பதில் அளித்தார். இதனை விளங்கிக்கொண்டு தாழ்த்தப்பட்டோரும் பிற்படுத்தப்பட்டோரும் சகோதரர்களாய் இணைந்து பொதுஎதிரியுடன் "போராட வேண்டுமேதவிர இடது கையும் வலது கையும் அடித்துக் கொள்ளலாமா? சாதியத்தின் நச்சுநீரை, போதையிலோ, அறியாமையிலோ பருகினால், அழிவு நமக்கும்தானே!

"சாதியினை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்த வாரீர்! மக்களாட்சி நெறியோடு மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்த வாரீர்! அனைத்து சுரண்டலையும் எதிர்த்து போர்க்கொடி உயர்த்த வாரீர், என்று அறைகூவல் விடுத்த அறிஞர் அண்ணா, சாதியத்தின் உண்மையான தோற்றத்தினைப் படம்பிடித்துக்காட்டும் போது, "சேரியும் கூடாது, அக்கிரகாரமும் ஆகாது; எட்டிப் போ சூத்திரப்பயலே என்று அய்யர் பேசும் பேச்சும், ஆரியம்தான். கிட்ட வராதே சேரிப்பயலே என்று அய்யர் பேசும்பேச்சும், ஆரியம்தான். மறவர் முன் மரியாதையுடன் நட, நாடார் அழைக்கிறார் ஓடிவா, செட்டியார் கேட்கிறார் தட்டாமல் கொடு என்று ஆரியம் பல வகைகளில், பலமுறைகளில் தலைவிரித்து ஆடுகிறது. நமது பணி அக்ரகாரத்தை பஸ்மீகரம் செய்து விடப்போவதாக கூறுவதுதன்று, ஆரியம் இருக்கும் இடமெல்லாம் அறிவுச் சுடர் கொளுத்தி அதன்மூலம் ஆரியத்தை ஒழிப்பதாகும்'' என்று மிகச்சரியாக சுட்டிக்காட்டினார்.

இந்த அடிப்படையில் பார்த்தால்தான் சழிஒழிப்பின் அவசியமும் முறையும் நமக்குப் புலனாகும். விளம்பரத்திற்காகவும், வாக்கு வங்கிக்காகவும், திடீர் தலைவராகும் வேட்கையினாலும் வேட்டையில் ஈடுபடும் துரோகக் கும்பலை அடையாளம் கண்டு வெறுத்து ஒதுக்குவதில் ஒடுக்கப்பட்ட மக்கள் விழிப்போடும் எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். நம்மவர்கள் யார் என்பதை யெல்லாம் அன்னப் பறவையாய்ப் பிரித்துப்பார்த்து அறிந்துகொள்ள வேண்டும்.

சென்னை பெரியார் திடலில் மன்றல் 2012 நிகழ்ச்சியில் பங்கேற்ற 291 பேரில், சாதி மறுப்பு மணம்வேண்டி பெரும்பாலானோர் முன்வந்திருப்பது நமக்கு நம்பிக்கை வெளிச்சத்தைக் காட்டுகிறது. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தில், திருச்சியில் இத்தகைய சாதி மறுப்பு, மத மறுப்பு, மாற்றுத் திறனாளிகள், மணமுறிவு பெற்றோர், துணையை இழந்தோர் ஆகியோருக்கான இணைதேடல் பெருவிழாவைத் திராவிடர் கழகம் நடத்துவதாக அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது. சமத்துவத்திற்காகப் பாடுபடும் மற்ற அமைப்புகளும் இந்த முன்மாதிரியைப் பின்பற்றவேண்டியது அவசியத்திலும் அவசியமாகும்!

இந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, இடஒதுக்கீட்டுக் கொள்கையின் கழுத்தைத் திருகிக் கொலை செய்து, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களைப் பிதைகுழியில் தள்ளவும்

நடக்கும் சதி வேலைகளையும் கவனிக்க வேண்டும். குதிரைக் கொம்பாய் இடஒதுக்கீடு அருகிக்கொண்டிருக்கிறது; அரசுத் துறைகள்மறைந்து எங்கும்தனியார் துறை நிறுவனங்கள் பெருகி வருகின்றன. அங்கு இட ஒதுக்கீடு அறவே இல்லாத அவலநிலை; சகல துறைகளிலும் இன்னமும் பார்ப்பன – பனியா ஆதிக்கசக்திகளின் ஆளுமை தானே தவிர நம்மக்கள்தொகைக்கு ஏற்ப உரியபங்கீடு என்பது இன்னமும் மறுக்கப்பட்டே வருகிறது. அவைகளையெல்லாம் வென்றெடுக்க – பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் இணைவோம்! சாதி ஒழிந்த சமத்துவம் மலர்ந்த மறுமலர்ச்சிக்கான இதயங்கள் சங்கமிக்கட்டும்! மானுடம் தழைக்க மனிதர்களாய்ப் பயணம் தொடர்வோம்!!!

Pin It