காலம் மாறிக்கொண்டே இருக்கிறது, கருத்துகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. எனவே நாம் மட்டும் எதற்கும் மாறாமல் இருக்க முடியாது. ஆனால் மாற்றத்துக்கு நியாயமான காரணம் வேண்டும். மாற்றத்தினால் விளைகின்றவைகள் நன்மைகளாக இருக்க வேண்டும், பொது நன்மைகளாக இருக்க வேண்டும் என்கிற இரண்டையும் நாம் கணக்கிலே கொள்ள வேண்டும்.

சமரசமே செய்து கொள்ளமாட்டேன் என்று கடைசி வரையிலே பிடிவாதமாக இருக்கிறவர்களை, இருந்தவர்களை இந்த உலகம் பார்த்திருக்கிறது.

விட்டுக் கொடுத்து, வளைந்து கொடுத்து நாணலாய் நின்றவர்களையும் இந்த உலகம் பார்த்திருக்கிறது. எது சரி என்பது மிகப்பெரிய கேள்வி. இந்தச் சமரசம் என்பதை ஏற்றுக் கொள்ளலாமா, கூடாதா என்பதற்கான ஒரு சின்னச் சோதனை இருக்கிறது. எதற்காகச் சமரசம் செய்து கொள்கிறோம் என்கிற ஒரு கேள்வியை வைத்தால் அதற்கு என்ன விடை கிடைக்கிறது என்பதைப் பொறுத்து ஒரு முடிவுக்கு வந்து விடலாம். நாம் விட்டுக் கொடுப்பதினுடைய நோக்கம் என்ன? அச்சத்தின் காரணமாக விட்டுக் கொடுக்கிறோமா? தன்னலத்தின் காரணமாக விட்டுக் கொடுக்கிறோமா? அல்லது ஒரு பொது நன்மையின் காரணமாக விட்டுக் கொடுக்கிறோமா? என்கிற கேள்விகளை முன் வைத்தால் கிடைக்கும் அந்த விடை தான் நமக்கான தீர்வு. தன்னலத்திற்காக விட்டுக் கொடுப்பது தளர்ச்சிதான் போராடுகிற சக்தி இல்லாமல், போராடினால் நாம் தோற்றுவிடுவோமோ அல்லது எதிர்காலத்திலே பல நன்மைகளை நாமும் நம் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் இழந்து விடுவோமோ என்கிற அச்சத்தில் ஒரு கொள்கையை அல்லது குணத்தை மாற்றிக் கொள்வது என்பது கூடாத சமரசம்.

ஆனால் விட்டுக் கொடுப்பதால் பல நன்மைகள் இருக்கின்றன. விட்டுக் கொடுத்துப்போவதால் இன்னும் பொது நன்மைகளை நம்மால் உருவாக்க முடியும் என்கிற காரணத்துக்காகத் தன்னைவிட இந்தச் சமூகம் பெரியது என்கிற கணக்கில், தன்னுடைய குணத்தை மாற்றிக்கொண்டால் அது பெருந்தன்மையின் அடையாளமாக, முதிர்ச்சியின் அடையாளமாக இருக்கிறது.

காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. கருத்துகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. எனவே நாம் மட்டும் எதற்கும் மாறாமல் இருக்க முடியாது. ஆனால் மாற்றத்துக்கு நியாயமான காரணம் வேண்டும். மாற்றத்தினால் விளைகின்றவைகள் நன்மைகளாக இருக்க வேண்டும். பொது நன்மைகளாக இருக்க வேண்டும் என்கிற இரண்டையும் நாம் கணக்கிலே கொள்ள வேண்டும்.

ஒரு பழைய திரைப்படம் பாகப்பிரிவினை என்று பெயர். வெற்றிகரமாக ஓடிய படம் அது. அந்தப் படம் சொன்ன செய்தி வேறொன்றுமில்லை... குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அண்ணனும் தம்பியும் பாகப் பிரிவினை செய்து கொள்ளக்கூடாது. கூட்டுக் குடும்பம்தான் உலகத்துக்குச் சிறந்தது. மனிதர்கள் என்றைக்கும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதை அந்தப் படம் சொன்னது. அந்தப் படம் நூறு நாட்களைக் கடந்து ஓடியதாக நினைவு.

பிறகு அண்மையிலே சில ஆண்டுகளுக்கு முன்பு இன்னொரு படத்தை நாம் எல்லோரும் பார்த்தோம். இந்தப் படத்துக்கு சம்சாரம் அது மின்சாரம் என்று பெயர். இந்தப் படம் ஒரு செய்தியைச் சொன்னது. சேர்ந்திருப்பது நல்லதுதான். முடியவில்லை என்றால் தனித்தனியாக இருங்கள். அதிலே ஒன்றும் பிழையில்லை. சனி, ஞாயிறுகளிலே பார்த்துக் கொள்ளலாம். சிறப்பான நாட்களிலே சந்தித்துக் கொள்ளலாம். சண்டை போட்டுக் கொண்டே ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில்லை. பிரிந்து போய் விடுங்கள். எப்போதாவது விடுமுறை நாட்களில் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறது. இந்தப் படமும் வெள்ளி விழா அளவிற்கு ஓடியது.

இப்போது ஓர் ஐயம் வருகிறது. எது சரியானது. கூட்டுக் குடும்பத்தை வலியுறுத்திய படத்தையும் மக்கள் ஆதரித்தார்கள். வேண்டாம் கூட்டுக் குடும்பம், தனித்தனியாக இருங்கள் என்று சொல்லிக் கொடுத்த படத்தையும் மக்கள் ஆதரித்தார்கள். அப்படியானால் கூட்டுக் குடும்பம் கூடாது என்கிற முடிவுக்கு இந்தச் சமூகம் வந்து விட்டதா என்று கேட்டால் இங்கே ஒரு சமரசம் இருக்கிறது. இரண்டாவது படமும்கூட கூட்டுக் குடும்பம் கூடாது என்று சொல்லவில்லை. சில நேரங்களில் அது முடியாது என்கிற நிலை ஏற்படுமானால் அப்போது சமரசம் செய்து கொள்வதிலே பிழையில்லை என்பதைத்தான் இந்த இரண்டாவது படம் சொல்லிற்று.

கூட்டுக்குடும்பம் தான் உயர்ந்தது. அது ஒரு சார்க்கம், பெரும்பான்மையாக நாம் இந்த இயந்திரத்தன்மையான வாழ்க்கையிலே கூட்டுக் குடும்பம் என்கிற சொர்க்கத்தை இழந்து போய்விட்டோம். பாரடைஸ் லாஸ்ட் என்று மில்டன் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறாரே, அது ஓர் இழந்துபோன சொர்க்கம்தான். அத்தையும், மாமனும், பாட்டியும், தாத்தாவும் ஒரே குடும்பமாக இருக்கிற வீடு இருக்கிறதே அது சொர்க்கம். அதே நேரம் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கிறவரையிலேதான் அது சொர்க்கம். சொர்க்கம் என்பதை நான் வானுலகம், தேவருலகம் என்கிற பொருளிலே சொல்லவில்லை. சொர்க்கம் என்றால் மிகச் சுகமான இடம் என்கிற ஒரு கருத்து நம்மிடத்திலே பதிந்து கிடக்கிறதல்லவா? அந்தப் பொருளிலே நான் சொல்கிறேன். ஆனால் அந்தக் குடும்பம் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கிறபோதுதான் அது சுகமான இடம். காலை எழுந்ததிலிருந்து இரவு வரைக்கும் எந்நேரமும் அந்த வீட்டிலே குத்தும் வெட்டும் சண்டையுமாக இருக்குமானால் அதைவிடப் பிரிந்திருப்பதுதான் நல்லது. அது சுகமில்லை மிகப்பெரிய சோகம். சேர்ந்து ஒற்றுமையாக இருப்பது, சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது சுகமே தவிர, தினமும் ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து குதறிக் கடித்துக் கொண்டிருந்தால் அதற்குப் பெயர் சுகமில்லை. அதைவிட நல்லது சனி ஞாயிறுகளிலே பார்த்துக் கொள்ளலாம் என்னும் சமரசம்தான்.

எந்த இடத்திலே சமரசம் வருகிறது என்றால் ஒன்று இயலாதபோது இன்னொரு இடத்துக்கு நாம் வந்து சேருகிறோம். இது ஒரு பொது நன்மை கருதியது என்றுகூட நான் சொல்ல மாட்டேன். ஆனால் சமூக மாற்றம் குறித்தது. ஒரு நிலவுடைமைச் சமூகமாக, இந்த உலகம் இருந்த காலத்தில் ஒரு வயலை நம்பி அந்தக் குடும்பம் வாழ்ந்தது. அந்த வயல் அந்த ஊரிலே உள்ளது. அண்ணன் தம்பி எல்லோரும் அந்த வயலிலே உழைத்தார்கள். அந்த வயலிலே இருந்து வருகிற வருமானம் அந்தக் குடும்பத்தை வாழ வைத்தது. இது ஒரு நிலவுடைமைச் சமூகத்தினுடைய அமைப்பு. கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் வந்தது. ஒரு முதலாளித்துவத்தை நோக்கி உலகம் நகர்ந்தது. ஆலைகள் உருவாயின. தொழிற்சாலைகள் உருவாயின. வேலைகளுக்காக வெவ்வேறு இடங்களுக்குப் போகத் தொடங்கினார்கள். ஒரு பையன் டெல்லியிலே வேலை பார்த்தான். இன்னொரு பையன் சென்னையிலே வேலை பார்த்தான். இன்னொரு பெண் கோவையிலே வேலை பார்த்தாள். எல்லோரும் வேலைக்குப் போனார்கள். வெவ்வேறு தொழில்களுக்குப் போனார்கள்.

பழைய கூட்டுக்குடும்பத்தை, அந்த வயலை ஒட்டி வாழ்ந்த அந்த நிலவுடைமைச் சமூகத்தினுடைய அமைப்பை மீண்டும் கொண்டு வரமுடியாது என்ற நிலை ஏற்பட்டபோது, இல்லை இல்லை ஒன்றாகத்தான் இருப்போம் என்று சொல்ல முடியாமல் அந்தக் குடும்பங்கள் பிரிந்து போயின. அது குடும்பத்தினுடைய முன்னேற்றத்தை ஒட்டியது. காலமாற்றத்தைக் குறித்தது. எனவே அப்படிச் சில சமரசங்களைச் செய்து கொள்ளலாம். அந்த சமரசம் மேலும் பல நன்மைகளைக் கொண்டுவரும் என்று சொன்னால் அதற்காகச் சமரசம் செய்து கொள்வதிலே பிழையில்லை. விளைவு என்ன என்பதுதான் முக்கியமானது. அந்த விளைவு தன்னலம் நோக்கியதாக இருக்கக்கூடாது. பொதுநலம் நோக்கியதாக இருக்க வேண்டும். எனவே பொதுநலம் நோக்கியதாக – சமூக மாற்றம் நோக்கியதாக நாம் செய்து கொள்ளுகிற சமரசம் இருக்குமானால் அது முதிர்ச்சியானது. தன்னலத்திற்காக செய்து கொள்கிற சமரசம் என்பது தளர்ச்சியானது, பலவீனமானது, கூடாதது.

Pin It