எனக்கு, உடன் பிறந்த தம்பிகள் உண்டு; அண்ணன் இல்லை. அண்ணன் இல்லாக் குறையை நீக்கியவர் அண்ணன் குருசாமி. தோழர் குருசாமி பொது மக்களுக்கு குத்தூசி குருசாமி பகுத்தறிவு படையின் முதல் அணிக்கு, அத்தான் குருசாமி, எனக்கோ அண்ணன்.

1940 ஆம் ஆண்டு அக்டோபர் கடைசி வாரம், நான் அவருக்குத் தம்பியானேன். நான் அவரது மைத்துனியை மணந்தது முதல் 1965 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி வரை அவர் என் அண்ணனாகவே வாழ்ந்தார். இடைக்காலத்தில் சில ஆண்டுகள், அலுவல் பற்றி நான் வெளியூர்களில் இருந்தேன். மற்றக் காலமெல்லாம், அவர்களது குடும்பத்தில் ஒருவனாகவே அருமைத் தம்பியாகவே செல்லப் பிள்ளையாகவே வாழ்ந்தேன்.

அண்ணனுக்கு அதிகாரம் பண்ணும் உரிமை உண்டு. தம்பிக்கு அடங்கிப் போகும் கடமை உண்டு. இதுவே நம் மரபு. நாங்கள் இருவரும் இதற்கு முழுக்க விதிவிலக்கு.

பெரியவர் என்று அவர் எதையும் என்னிடம் எதிர் பார்த்ததில்லை. இளையவன் என்று நான் எதையும் அவருக்குச் செய்ததில்லை. ஏற்றுக் கொண்ட பொறுப்பு, சுமை, சகித்துக் கொண்ட சங்கடங்கள்அத்தனையும் அவருடையனவே. வீட்டுக் கவலையெதையும் எனக்கு விட்டு வைக்கவில்லை அவர். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையினால், நான் பெற்ற நன்மைகளே நிறைய. அவர் என்னால் அடைந்த பலன் ஒன்றுமில்லை. அவர் என் விவகாரம் எதிலும் தலையிட்டதில்லை. அவருக்காக நான் எதிலும் விட்டுக் கொடுத்ததில்லை.

அண்ணன் குருசாமி, மதிநுட்பம் மிகுந்தவர், நல்ல உடல் நலமும் உடையவர், அவரது கூரிய மதியும். நலமான உடலும், இறக்கை கட்டிப் பறக்கும் இயல்பின. அறிவுக்கும் தெளிவிற்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய அவர், மன, உடற் சுறுசுறுப்பிற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக, கடைசி வரை விளங்கினார்.

அண்ணன், இளமைப் பருவத்திலேயே நிறைய படித்தவர். பாட அளவிற்குப் படிக்க அஞ்சி, குறிப்பைத் தேடி அலையும் இயல்பினர் அல்லர் அவர். வகுப்புப் பாடங்களுக்கும் அப்பால் அவர் கற்றது பெரும் அளவு.

மாணவப் பருவத்தே அவர் தாமே கற்று மனப்பாடஞ்செய்து கொண்ட கம்பராமாயணப் பாடல்கள் பலப்பல. கம்பராமாயணக் காலட்சேபத்தால் புகழோடு விளங்கின பலரைவிட, அவருக்கு அதிகமான பாடல்கள் மனப்பாடம் என்பதை, நான் நேரில் அறிவேன். அதைப் போலவே, தமிழிலுள்ள சமயப் பாடல்கள் மிகப் பல அவருக்குத் தண்ணீர் பட்டபாடு.

இளமைப் பருவத்தே பண்டைத் தமிழ்ப் பாடல்களைப் பயின்று, மனப்பாடஞ்செய்து வைத்துக் கொண்டதைப் போன்றே, ஆங்கிலச் செய்யுட்கள் பலவற்றையும் ஆர்வத்தோடு, மனப்பாடஞ்செய்து வைத்திருந்தார். தமிழையும் ஆங்கிலத்தையும் கசடறக் கற்றிருந்தார். அவரது, தமிழ்ப் பேச்சு, எழுத்துவன்மையை தமிழ் மக்கள் அறிவார்கள். ஆங்கிலத்திலும் அவர் அதே நிலையில் எழுதவும் பேசவும் கைவரப்பெற்றவர் என்பதை அவரோடு நெருங்கிப் பழகியவர்களே அறிவர்.

தமிழ் மொழி, தாய் மொழி, தம் மக்கள் என்று தங்களது தமிழ்த் திறமையைமட்டும் வளர்த்துக்கொண்டு, பிற திறமைகளை மறந்தே போன சிலரை நான் அறிவேன். அவர்கள், தங்கள் தமிழாற்றலை வளர்த்துக்கொண்டதைப் போல, பிற ஆற்றல்களையும் வளர்த்துக் கொண்டிருந்தால், விழுங்குணவை, விழுங்குவதற்கு உணர்ச்சியற்ற தமிழ்ச் சமுதாயம், அவர்களால் பயன்பெறத் தவறிவிட்டாலும், வாழத்துடிக்கும் பிற சமுதாயங்களாகிலும் வளர்ந்திருக்கும். இனப்பற்றின் பொருட்டு, தன்னையே தெரிந்து, சிறிது சிறிதாகத் தியாகம் செய்தவர்களில் தலை சிறந்தவர் என் அண்ணன் என்பதை என்னால் மறைக்க முடியவில்லை.

குருபக்தி என்னுடைய அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. அதிற்சிறந்தவன் நான் என்று தற்பெருமை கொண்டிருக்கிறேன். என் அண்ணனோடு சேர்ந்த பிறகு அந்த அகந்தைஅழிந்தது. ஏன்? என்னுடைய குருபக்தியை விடச் சிறந்து விளங்கியது அவரது குருபக்தி. பார்ப்பனருக்குப் பகைவர் என்று, பெயர் வாங்கிய அவர், திருவாரூரில் தனது உயர்நிலைப் பள்ளிக்குத் தலைமையாசிரியராக இருந்த, திரு. துரைசாமி சாஸ்திரி அவர்களைப்பற்றியும் திருச்சி தேசியக் கல்லூரியில் தனக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்த பேராசிரியர் ஆ. இராமய்யர்அவர்களைப் பற்றியும் பக்தியோடு புகழ்வதைப் பலமுறை கேட்டு மகிழ்ந்தவன் நான்.

சமயப் பற்றிலும் சமயக் கல்வியிலும் இளமையில் மெய்மறந்து திளைத்திருந்த அவர், வாலிபப் பருவத்தில் பகுத்தறிவுவாதியாக மாறி, பின்னர் நாத்திகராகி, அக்கொள்கையில் சிறிதும் வழுவாது வாழ்ந்தார். பகுத்தறிவுவாதியான பிறகு, அத்துறை பற்றிய ஆங்கில நூல்களையெல்லாம், இதழ்களையெல்லாம் நிறைய படித்துச் சிந்தித்து நாத்திகத்தில் ஊன்றி விட்டார்.

சாதியைச் சாடவேண்டும் விரைவில் ஒழிக்க வேண்டும் என்பது அவரது கொள்கை, அதற்குக் கலப்பு மணமே வழி என்பது அவரது கருத்து. அவ்வழியைப் பின்பற்றும் வாலிபர்கள் எண்ணிக்கை, ஆயிரக்கணக்கில் ஆண்டிற்கு ஆண்டு பெருக வேண்டும் என்பது அவரது அவா.

வாழ்க்கைக்குத் துணையாக வேண்டிய பெண்ணின் நல்லாள் ஒருத்தியை–மனைவியை–வெறும் வேலைக்காரியாக, சமையற்காரியாக, பிள்ளைப்பேறு கருவியாக மட்டுமே நடத்தும் சமுதாய முறையைக் கண்டு சீறும் சமத்துவவாதி, தோழர் குருசாமி. பெண்கள் நகைப்பித்தை விடும் அளவிற்குத்தான், ஆண்களோடு சமநிலைக்கு உயர்வார்கள் என்று பொதுக் கூட்டங்களில் மட்டுமல்ல, வீட்டுப் பேச்சுகளிலும் வற்புறுத்துவார். பெண்கள் ஆண்களைப் போன்ற, உடல் வலிமையும், வளர்ச்சியும் பெறவேண்டுமென்று மேடைதோறும் முழங்கியவர். பாலிஷ் ஆகாத அரிசியும் கஞ்சி வடிக்காத சோறுமே தமிழர்கள் இழந்து வரும் வலிமையைத்திருப்பித் தரும் என்று பன்முறை, சொல்லாலும் எழுத்தாலும் இடித்துக் காட்டியவர்.

அவரது அசையாத நம்பிக்கை ஆண் பெண் சமத்துவத்தோடு நிற்கவில்லை. மக்கள் அனைவரும் சமம் என்பதே அவரது கொள்கை, எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம் என்ற சமத்துவக் கொள்கையை மெய்யாகவே ஏற்றுக் கொண்டவர்; எழுதிப் பரப்பியவர்; ஆயிரம் ஆயிரம் மேடைகளில் நின்று பேசிப் பரப்பியவர்.

சமுதாயச் சமத்துவத்தில் அவருக்கு இருந்த பற்றுக்கு அதற்காக அவர் செய்த தொண்டிற்கு ஈடு இணையாக எதைச் சொல்ல?

பொருளாதாரச் சமத்துவத்தில் அவருக்கு இருந்த ஆழ்ந்த பற்று, அதற்காக அவர் செல்லும் வாயெல்லாம் செய்த தொண்டு, அவற்றையே இணைப்படுத்தலாம். வெறும் பாராட்டிற்காக, இதில் அவர் முன்னோடியாக இருக்கவில்லை. இதற்காகத் துணிச்சலாக ஆபத்துக்களை ஏற்றுக் கொண்டவர் தோழர் குருசாமி.

புரட்சிகரமான தன் கொள்கைகளை எடுத்துரைப்பதிலும், எழுதி எழுதி, ஊசி போடுவதிலும் அவர் சிறந்த விளங்கினார். எவ்வளவு பெரியவர்களுக்காகவும் அவரது மெய்க்கருத்து பதுங்கியதில்லை; ஒதுங்கியதில்லை. எதையும் சுற்றி வளைத்துச் சொல்லும் இயல்பு பெறாதவர். வெட்டொன்று துண்டிரண்டு என்ற அவரது இயல்பு மனிதாபிமானத்திற்குக் குறுக்கே நின்றதில்லை. தனி நபர் நட்பைக் குறைத்ததில்லை. கருத்துகளிலே தன்னோடு பெரிதும் மாறுபட்ட, வெளிப்படையாக விரைவாக, வலிவாக மோதிக் கொள்ளும் பல பொதுத் தொண்டர்களோடு அவர் மெய்யன்போடு இனிமையோடு நட்போடு பழகி வந்தார்.

தனக்கென்று ஒரு கொள்கை–ஒரு வாழ்க்கை முறை– அதிலேயிருந்து இம்மியும் மாறாத நெறி – இவற்றிற்காக உற்றார் உறவினர், சாதி உயர்வு, புலமை முதல், வளர்ச்சி வாய்ப்புகள் செல்வாக்கு, பாராட்டுகள் – அத்தனையும் உளமாரத் துறந்த என் அண்ணனுக்குச் சில குறைகள் உண்டு. அவற்றிலே ஒன்று இதோ.

“தம்பி நெ.து.க.விற்கு எவ்விதக் குறையுமில்லை. அறிவா, நேர்மையாக, உழைப்பா உறுதியா, உயர்நோக்கா, நல்லொழுக்கமா எது குறை? என் சகலன் என்ற ஒரே குறைக்காக எத்தனை விலை கொடுப்பது?''

இப்படி அவர் வீட்டில் நான் இல்லாத வேளை, குறைப்பட்டுக் கொண்டதாகக் கேள்வி.

"நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு' – என்று, நம்மைப் பார்த்து உமிழ்ந்தான் பாரதி. வெறும் பிழைப்பிற்காக, அதிகப்படியான நாலு பணத்திற்காக, கூடுதலான கைத்தட்டலுக்காக எதையும் இழக்கப்

பக்குவப்படுத்தக் கொள்ளும் சமுதாயத்திலே, கொள்கை வேளாக, பொதுமை நோக்காளராக, சமத்துவவாதியாக, பண்பாட்டின் பிழம்பாக, தியாகச் சுடராக வாழ்ந்த ஒரு அண்ணனோடு, இருபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்த நற்பேற்றிற்கு, எதைத்தான் விலையாகக் கொடுக்கக் கூடாது?

Pin It