தேர்தல் என்பது ஒரு நாட்டில், பொதுவாழ்வில் உள்ள பதவிகளை நிர்வகிப்பதற்காக, ஒரு தனி நபரையோ அல்லது ஒரு கட்சியையோ மக்களால் தேர்ந்தெடுக்க முடிவெடுக்கும் செயல்முறை என்று கூறலாம். தேர்தல் என்பவை 17 ஆம் நூற்றாண்டு வரை உருவாகவில்லை.

இங்கிலாந்தில் 1714 ஆம் ஆண்டு முதல் பிரதமரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. அதுபோல் அமெரிக்காவில் 1789 ஆம் ஆண்டு முதல் குடியரசுத் தலைவரை, தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் எங்கே எப்போது நடைபெறுகிறது என்றால் எந்த நாடு சனநாயக நாடு என்று தன்னை அறிவித்துக் கொள்கிறதோ அந்த நாட்டில் தேர்தல் நடைபெறுவது வழக்கம். தேர்தலில் அதிக வாக்குகள் அல்லது அதிக இடங்களில் வெற்றிபெறுவோர் ஆட்சி அமைக்கின்றனர். வெற்றி பெற்ற கட்சி ஆளும் கட்சி என்றும் மற்ற கட்சிகள் எதிர்கட்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் பல எதிர்கட்சிகள் ஆளும் கட்சியைச் சார்ந்தே செயல்படுகின்றன.

1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலைப் பெற்றாலும், முதல் பொதுத் தேர்தல் 1952 ஆம் ஆண்டே நடைபெற்றது. தமிழ்நாட்டில் 1952 முதல் 1962 வரை நடைபெற்ற மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திரு. சி. இராச கோபாலாச்சாரி, திரு. கு. காமராசர், திரு. எம். பக்தவச்சலம் ஆகியோர் முறையே முதலமைச்சர்களாகப் பொறுப்பேற்று ஆட்சி செய்தனர். இவர்களில் இராசாசி தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவிக்கு வந்தவரல்ல. கொல்லைப்புறம் வழியாய் உள் நுழைந்து நாற்காலியைக் கைப்பற்றிய குல்லுகப்பட்டர்.

1967 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், காங்கிரசுக் கட்சி தோல்வி அடைந்து, தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது. அறிஞர் அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

1967 தேர்தல் விவரம்

கட்சி      போட்டியிட்ட    வெற்றி    பெற்ற மொத்த விழுக்காடு

       தொகுதி    பெற்ற தொகுதி வாக்குகள்      

தி.மு.க.    174   137   62,30,556     40.69%

காங்கிரசு   232   51     62,93,378     41.10%

பிற கட்சிகள்    234   46     2,78,678      18.21%

காங்கிரசுக் கட்சி தி.மு.க.வைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தாலும் வெற்றி பெற்ற தொகுதிகள் குறைவு என்பதால், தி.மு.க. ஆட்சி அமைக்கும் உரிமை பெற்றது (தி.மு.க. போட்டியிட்ட தொகுதிகள் 174 காங்கிரசு போட்டியிட்ட தொகுதிகள் 232 ) இதனால் காங்கிரசுக் கட்சி படுதோல்வி என அறிவிக்கப்பட்டது.

1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர். தலைமையில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

1977 தேர்தல் விவரம்

கட்சி      போட்டியிட்ட    வெற்றி    பெற்ற மொத்த விழுக்காடு

       தொகுதி    பெற்ற தொகுதி வாக்குகள்      

அ.தி.மு.க. 200   130   51,94,876     30.36

தி.மு.க.    230   48     42,58,771     24.89

பிற கட்சிகள்    234   56     76,54,499     44.75

பதிவான வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கு வாக்குகளை மட்டுமே பெற்ற அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றது என்றும் நான்கில் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்ற தி.மு.க. படுதோல்வி அடைந்தது என்றும் அறிவிக்கப்பட்டது. இதர கட்சிகள் பெற்ற வாக்குகள் 69 விழுக்காடு ஆகும். 31 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது.

2011 தேர்தல் விவரம்

கட்சி      போட்டியிட்ட    வெற்றி    பெற்ற மொத்த விழுக்காடு

       தொகுதி    பெற்ற தொகுதி வாக்குகள்      

அ.தி.மு.க. 160   150   1,41,50,289   38.41%

தி.மு.க.    119   23     82,49,991     22.39%

பிற கட்சிகள்    234   61     1,20,38,800   39.20%

தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 4,59,50,620. பதிவான வாக்குகள் 3,67,53,114. அதாவது பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் 30.79 விழுக்காடும் பதிவான வாக்கில் 38.41 விழுக்காடும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக கிடைத்துள்ளது.

இன்றைய தேர்தல் நடைமுறைகளின்படி குறைந்த வாக்குகளைப் பெற்றிருந்தாலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றவர் ஆட்சி அமைக்கும் தகுதி பெறுகிறார்.

1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற காங்கிரசுக் கட்சி படுதோல்வி என அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்றிருந்தாலும் அதிக இடங்களைக் கைப்பற்றிய தி.மு.க. ஆட்சி அமைத்தது.

தற்போது நடைபெற்ற தமிழகத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 38.41 விழுக்காடு வாக்குகள் பெற்ற அ.தி.மு.க. ஆட்சி அமைத்து இருக்கிறது. 61.59 விழுக்காடு வாக்குகள் பெற்றவர்கள் எதிர் கட்கியாகச் செயல்படுகின்றனர். மேலும் 8.00 லட்சம் வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க.வும் 5.00 இலட்சம் வாக்குகளைப்பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒரு பிரதிநிதியைக் கூட சட்டப் பேரவைக்கு அனுப்ப முடியவில்லை. இது சரிதானா? இவர்களுக்கு வாக்களித்த பொதுமக்களின் வாக்கு செல்லாத வாக்கா? அப்படி அவர்கள் நினைக்க மாட்டார்களா? இதற்கு என்ன வழி? போட்டியிட்டுக் கணிசமான வாக்குகளைப் பெறும் கட்சியின் பிரதிநிதிகள் சட்டப் பேரவையில் இடம் பெற வாய்ப்புத் தர வேண்டும். அது தான் உண்மையான சனநாயகம் ஆகும்.

(எ–கா) ஒரு பதவிக்கு நடைபெறும் தேர்தலில் 5 பேர் போட்டியிடுகிறார்கள், வாக்காளர்கள் 100 பேர் என வைத்துக்கொள்வோம். தேர்தலில் 3 பேர் தலா 20 வாக்குகளும் ஒருவர் 19 வாக்குகளும், அடுத்தவர் 21 வாக்குகளும் பெற்றால், 21 வாக்குகள் பெற்றவர் வெற்றி பெற்றவராகக் கருதப்படுகிறார்.

அப்படிப்பார்த்தால் 79 வாக்குகள் வெற்றி பெற்றவருக்கு எதிராகவே பதிவாகியுள்ளது. இது சரியா? வெற்றி பெற்றவருக்கு எதிராக 79 பேர் வாக்களித்து இருக்கும்போது அவர் எப்படிப் பெரும்பான்மையினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று கருத முடியும்?

இதற்கு என்ன வழி?

தேர்தலில் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுவதைத் தவிர்த்து கட்சிகள் போட்டியிட வேண்டும். பெரும்பாலும் கட்சியைத் தான் மக்கள் தேர்ந்தெடுக்கிறார்களே தவிர தனி நபரை அல்ல. அதாவது கட்சிகளின் சின்னங்களில் வாக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். பெற்ற வாக்குகளைக் கணக்கிட்டுக் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கவேண்டும். அப்படிச் செய்தால் போட்டியிட்ட அனைத்து கட்சிகளும், கணிசமான வாக்குகள் பெற்று இருந்தால், பேரவையில் இடம் பெற வழி உண்டு. பதிவான வாக்கில் குறைந்தது 1 விழுக்காடு வாக்குகள் பெற்ற கட்சிகளுக்கே இடங்கள் ஒதுக்க முடியும் என்று அறிவிக்கலாம். தேர்தலில் போட்டியிட ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. எனவே, சுயேட்சைகளும் தங்களுக்கு ஒதுக்கப்படும் சின்னத்தில் போட்டியிடலாம்.

நடந்து முடிந்த தேர்தலில், இந்தப் புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் எந்தெந்தக் கட்சி எத்தனை இடங்களைப் பிடித்திருக்கும் என்பதைப் பார்ப்போம்.

மொத்த வாக்குகள்     –    4,59,50,620

பதிவான வாக்குகள்    –    3,67,53,114

தொகுதி எண்ணிக்கை  –     234

ஒரு தொகுதி பெற தேவையான வாக்குகள்       

                                  3,67,53,114

                                      234                = 1,57,064

இம்முறையில் நடந்து முடிந்த தேர்தலில் மூன்று அணிகள் பெற்ற வாக்குகளை வைத்து கீழ்க்கண்டவாறு தொகுதிகளைப் பிரிக்கலாம்.

       கட்சி            பெற்ற வாக்குகள்       தொகுதி

அ.தி.மு.க. அணி      1,90,84,139   137

தி.மு.க. அணி   1,45,29,501   92

பா. ஜனதா      8,24,826      5

       மொத்த தொகுதிகள்   234

மேலும், ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளை வைத்துத் தொகுதி ஒதுக்கினால் கீழ்கண்டவாறு அமையும்.

கட்சி                   பெற்ற வாக்குகள்       தொகுதி

அ.தி.மு.க. 1,41,50,289   91    

தி.மு.க.    82,49,985     53

காங்கிரசு   34,26,247     22

தே.மு.தி.க 29,02,813     19

பா.ம.க.    19,27,260     13

இ.கம்யூனிஸ்ட் (மா)   8,88,364      6

பா.ஜனதா  8,24,826      6

இ. கம்யூனிஸ்ட் 7,27,394      5

விடுதலை சிறுத்தைகள்     5,55,965      4

இதர கட்சிகள் மற்றும்

சுயேட்சைகள்    23,14,648     15

              234

மேற்கண்ட முறை கடைபிடிக்கப்பட்டால் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. அதிகத் தொகுதிகளைப் பெறும் கட்சி ஒத்துப்போகும் கட்சியோடு கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கலாம்.

இம்முறை கடைபிடிக்கப்பட்டால்..

நன்மைகள்

வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கத் தேவை இல்லை, குறிப்பாக சாதிக்கு இடம் இல்லை. வசதி படைத்தவர்களுக்குத்தான் வாய்ப்பு என்ற நிலை இருக்காது.

வேட்பாளர் போட்டியிடாததால். சண்டை சச்சரவுகள் குறையும், கட்சிக்குள் அணி தோன்ற வாய்ப்பு இல்லாமல் போய்விடும். கட்சித் தொண்டர்கள் உண்மையான ஒற்றுமையுடன் செயல்படுவர்.

சிறிய கட்சிகளுக்கும் பேரவையில் இடம் பெற வாய்ப்பு உண்டாகும்.

ஒரு கட்சி ஆட்சி என்ற நிலை மாறும்

தேர்தலுக்கு முன் கூட்டணி என்ற நிலை மாறி தேர்தலுக்குப் பின் கூட்டணி என்ற நிலை உருவாகும்.

கூட்டணி ஆட்சி என்றால் லஞ்சம், அதிகாரச் சீர்கேடுகள் குறைய வாய்ப்பு உண்டு.

தீமைகள்

கட்சியே தேர்தல் செலவு முழுவதையும் செய்யவேண்டும்.

கட்சித் தலைமை யாரை விரும்புகிறதோ அவர்கள் மட்டுமே சட்டப் பேரவையில் நுழைய முடியும்.

தனித்துப் போட்டியிடுவதால் எந்த கட்சியும் பதிவான வாக்கில் 50 விழுக்காடு பெற முடியாது, எனவே எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை.

ஒவ்வொரு கட்சிக்கும் மக்களிடம் என்ன செல்வாக்கு உண்டு என்பதை வெளிப்படையாக அனைவரும் தெரிந்துகொள்ள முடியும். பா.ஜனதா தனித்துப் போட்டியிட்டுத் தமிழகத்தில் தனது செல்வாக்கு எந்த அளவு உள்ளது என்பதை இந்த தேர்தல் மூலம் தெரிந்த கொண்டது.

இந்திய நாடு முழுவதும் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது. அதிகாரப் போட்டி விண்ணில் பறக்கிறது. ஏழை மக்களின் வாழ்க்கை நிலையோ படுபாதாளத்தை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறது. குறிப்பாக மருத்துவம் ஏழைகளுக்கு எட்டாக் கணியாக உள்ளது. இக்காலகட்டத்தில் தேர்தல் சீர்திருத்தம் அவசியம் என்று கருதுகிறோம்.

அனைவரும் புதிய முறையை ஆதரித்துக் குரல் கொடுத்தால் மத்திய அரசும். தேர்தல் ஆணையமும் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று நம்புகிறோம்.

Pin It