கல்வெட்டுச் சொல்லாட்சிகள் அவற்றின் எழுத்தமைதி வாயிலாகக் காலவரம்பு காட்டும் என்பது உண்மை. ஆனால் அந்தச் சொல்லாட்சிகள் ஒருமொழி செம்மொழி என்பதை வரையறுக்கும் என்பது முற்றிலும் தவறானது. உலகில் 2000 ஆண்டுக்கு முன்னரே தமக்கெனத் தனித்த வரிவடிவ எழுத்தமைதி கொண்ட மொழிகளே செம்மொழிகள் என்று ஏற்கப்பட்டுள்ளன. இவை அறிஞர்களால் எடுக்கப்பட்ட முடிவுகள். அரசும் மொழிநூல் அறிஞர்களின் முடிவை உலக அளவில் கேட்பது பொருத்தமாயிருக்கும்.


செம்மொழிக்குரிய வரையறை என்பது தனக்கேயுரிய இலக்கண இலக்கிய வளம், பிறமொழிகளைச் சாராமல் தனித்தியங்கும் தன்மை, தனக்கேயுரிய எழுத்துவளம், தனித்ததொரு பண்பாட்டு அடித்தளம், நெடிய காலத் தொன்மை என்னும் ஐந்தையும் உயிராகக் கொண்டது.


பிராமி எழுத்து தமிழுக்கும் பிராகிருதத்திற்கும் உரியது. பிராமிக் கல்வெட்டுச் சொற்களை மலையாளமாகக் காட்டுவது பெருங்குற்றமாகும். மலையாள மொழி எக்காலத்திலும் பிராமி எழுத்தில் எழுதப்படவில்லை. தமிழைச் சாராமலும் சமற்கிருதத்தைச் சாராமலும் கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகள் தனித்து இயங்குவனவல்ல. இவற்றின் எழுத்துகள் சமற்கிருத எழுத்தமைப்பைக் கொண்டவை; தமக்கே உரிய தாய்மொழியின் தனிப்பாங்கான எழுத்தமைப்பைக் கொண்டனவல்ல. பண்பாட்டு அடித்தளம் தமிழைச் சார்ந்தது. இலக்கியங்கள் வடமொழிக் காப்பியச் சார்பும் நாட்டுப்புற இலக்கியச் சார்பும் கொண்டவை. நாட்டுப்புறப் பாடல்களைச் செம்மொழி இலக்கியச் சான்றாகக் கொள்ள முடியாது. அப்படிக் கொள்வதாயின் உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன. இதன் வண்ணம் உலகமொழிகள் எல்லாவற்றை யும் செம்மொழிகள் என்று கொள்ள வேண்டி வரும். வெறும் ஆயிரம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்ற புதுமொழிகள் காலத் தொன்மையை நிறுவ முடியாது. செம்மொழிக் காலத்தொன்மையை வெறும் ஆயிரம் ஆண்டுக்குள் குறுக்கிக் கொள்வதாயின் இந்திய மொழிகள் அனைத்தையும் செம்மொழிகளாக அறிவிக்க வேண்டி வரும்.


வெறும் சொல்லாட்சிகளை மட்டும் சுட்டிக்காட்டிச் செம்மொழித் தகுதி கேட்பது கேலிக்கூத்தாகிவிடும். ‘உம் - உந்து’ எனத் திரியும் தொல்காப்பியச் சொல்லாட்சி சிந்தி மொழியில் உள்ளது. ‘சிவணுதல்’ என்னும் தொல்காப்பியச் சொல்லாட்சி, குசராத்தி மொழியில் உள்ளது. சங்க இலக்கியங்களில் பயிலும் உண்ணிய, காணிய போன்ற வற்றிலுள்ள ‘இய’ வியங்கோள் ஈறு இந்தி மொழியில் பைட்டிய, காயிய, ஆயிய என விரிவாகப் பயன்பாட்டில் உள்ளது. விளையாட்டைக் குறிக்கும் ‘கெடவரல்’ என்னும் தொல்காப்பியச் சொல்லாட்சி, பஞ்சாபி மொழியில் ‘கெடா’ என வழங்கி வருகிறது. ‘செள்ளை’ (நச்செள்ளையார்) எனும் சங்கக்காலத் தமிழ்ச் சொல்லின் ஆண்பால் வடிவ மான செள்ளன் வங்காள மொழியில் செளே (இளை ஞன்) என வழங்கி வருகின்றது. முளவுமா (முயல்) கொடிச்சி போன்ற பழந்தமிழ்ச் சொற் கள், முறையே துளுமொழியிலும் குடகு மொழியிலும் வழங்கி வருகின்றன.


தொல்காப்பியத்திலுள்ள அது, இது, உது என்னும் மூவகைச் சுட்டுச்சொற்களில் உது என்பது இன்றும் வடதமிழியக் குருக்கு மொழியில் வழங்கிவருகிறது.


இவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு இந்தி, சிந்தி, மராட்டியம், குசராத்தி, பஞ்சாபி, வங்காளம், துளு, குடகு, குருக்கு மொழியினர் தம் மொழிகளைச் செம்மொழிகளாக அறிவிக்கவேண்டும் என்று கேட்க வாய்ப்பு ஏற்படும்.


இதிலிருந்து செம்மொழித் தகுதிக்கு இலக்கியத் தொன்மையும் தனித்தியங்கும் தன்மையும் காட்டுவதை விடுத்துச் சொல்லாட்சிகளைக் காட்டுவது எள்ளளவும் பொருந்தாது என்பது வெளிப்படை.


கல்வெட்டு அறிஞர் ஐ. மகாதேவன் தன் ஆய்வு முடிவுகளைக் கல்வெட்டோடு மட்டும் நிறுத்திக் கொள்வதே அவருக்கு மேன்மேலும் பெருமை தருவதாக அமையும். உலக மொழியியல் அறிஞர்கள் நன்கு ஆராய்ந்து, குறிப்பிட்ட மொழி செம்மொழி ஆகும் தகுதியுடையதா என முடிவுகட்ட வேண்டும். உலக மொழியறிஞர்களைக் கேட்காததால், அவர்கள் எதுவும் பேசாமல் இருக்கின்றனர். இதனை வாய்ப்பாக வைத்துக்கொண்டு, ‘பிள்ளையில்லாத வீட்டில் கிழவன் துள்ளிக் குதித்தானாம்’ என்னும் பழமொழிக்கேற்ப, செம்மொழித் தகுதி எந்தெந்த மொழிக்கு இருக்கிறது என்பதற்கு மேலோட்டமானவும், தவறாகப் பொருள் உணரப்பட்டனவுமாகிய கல்வெட்டுச் சொற்களை எடுத்துக்காட்டுவது நல்லதன்று. கல்வெட்டில் பயின்றுள்ள சொற்கள் செம்மொழி வரையறைக்கு எடுத்துக்கொள்ளக் கூடியனவல்ல. கல்வெட்டுச் சொற்கள் பெரும்பாலானவை திருந்தாத கொச்சை வழக்குச் சொல்லாட்சிகள். வட்டார வழக்கும் கிளைமொழிச் சொல்லாட்சிகளும் தனி மொழியை நிலைநாட்டுவனவல்ல.

செம்மொழி (Classical Language) என்பதை வரையறுத்த உலக அறிஞர்கள், மிகத் திருத்தமான உயரிய பண்பாட்டை வெளிப்படுத்தும் சான்றோரின் இலக்கிய மொழியே செம்மொழி என்று கூறினர்.  Classical என்னும் பிரஞ்சு மொழிச் சொல் Classicus என்னும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து வந்தது. இதற்கு (of the highest class) உயர்ந் தோர் வழக்கு என்று பொருள். எனவே பல்வேறு வகையில் சிதைவுற்ற கல்வெட்டுச் சொற்களை, செம்மொழிச் சொல் என்று சொல்ல எவரும் நாணுவர். சமற்கிருதம், இலத்தீனம், கிரேக்கம் போன்றவை கற்றறிந்த உயர்ந்தோரின் இலக்கியப் படைப்புகளாக இருந்ததால் செம்மொழித் தகுதி பெற்றன. Refined Language என்பதை, செந்தமிழ், செம்மொழி எனும் சொல்லாட்சிகள் குறிக்கின்றன. சமற்கிருதத் தாக்கத்தினால் உருமாறிப்போன மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்றவற்றைத் (refined language) திருத்தமாகப் பேசப்பட்ட எழுதப்பட்ட தனித்தன்மையுடைய மொழிகள் என்று சொல்ல முடியாது.


தமிழ் ஒரு செம்மொழி என்பதற்கு அறிஞர் பலரும் கருத்துரைத்தபோது, ஐராவதம் மகாதேவனார் வேறெந்தக் குடும்ப மொழிகளிலும் இல்லாத சிறப்பெழுத்துகளான ழ, ற, ன போன்ற தமிழின் தனித்தன்மை எழுத்துகள், தென் பிராமி என்னும் தமிழிக் கல்வெட்டுகளில் உள்ளன என ஆணித்தரமான சான்றுகளைக் காட்டினார். இப்படித் தமிழினின்று வேறாகவும் சமற்கிருதத்தினின்று வேறாகவும் கன்னட, தெலுங்கு, மலையாள மொழிகளுக்குத் தனித் தன்மை காட்டும் சிறப்பு எழுத்துகள் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளில் உள்ளன எனக் காட்ட முன்வராதது ஏன்? தனித்தன்மை காட்டும் அடையாளங்கள் அம்மொழிகளில் இல்லாததால் ஒப்புக்குச் சப்பைகட்டுவதற் காகவும், நொண்டிச் சாக்காகவும், மனம் போன போக்கில் கருத்து வெளியிடுவது அழகாகாது.


மொழியின் தனித்தன்மையான உள்கட்டமைப்பை அதன் எழுத்துகள் காட்டும்; தொன்மையை இலக்கியங்கள் காட்டும்! சொற்கள் காலந்தோறும் திரியக் கூடியவை. ஆதலால் சொற்களைக் காட்டித் தகிடுதத்தம் செய்ய லாகாது. கிரேக்கமொழி இலக்கியம் கி.மு. 700இல் தொடங்கிவிட்டது. இன்றைய ஐரோப்பிய மொழிகள் அனைத்தும் கிரேக்கம், இலத்தீன், எபிரேயம் ஆகிய மொழிகளின் துணையால் வளர்ந்தவை. அதுபோன்று வடக்கில் சமற்கிருதமும் தெற்கில் தமிழும் தந்த கொடையால்தான், கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்தமிழியக் கிளைமொழிகளும், வடஇந்தியக் கிளைமொழிகளும் தோன்றியுள்ளன. எனவே, ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளும் ஏனைய இந்திய மொழிகளும் கிளைமொழித் தன்மை கொண்டன என்பதால் செம்மொழித் தரவுக்குப் போட்டியிடும் தகுதி இழந்தவை. உலக மொழியாகிவிட்ட ஆங்கிலமே செம்மொழித் தகுதிக்குப் போட்டியிடாதபோது, கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகள் போட்டியிடத் துணிவது தகாது என்றே அறிஞர் பலரும் நடுநிலையாகக் கருத்து வெளியிடுவர்.


சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஏ.கே.இராமானுசம், தமிழைக் குறிப்பிடும் போதெல்லாம் செம்மொழித் தமிழ் ('Classical Tamil') என்றே குறிப்பிட்டிருக்கிறார். அப்படி எந்த உலகளாவிய புகழ்பெற்ற அறிஞராவது கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளை சிறீணீssவீநீணீறீ என்னும் அடைமொழி சேர்த்து எழுதியிருக்கிறார்களா என்று எடுத்துக்காட்டுத் தர முன்வரவேண்டும்.


பண்டைய தமிழிலக்கியம் உலக இலக்கியச் சொத்தாக ('Greatest literary treasure of the world') விளங்குகிறது என கலிபோர்னிய மொழியியல் பேரறிஞர் சியார்சு எல்.ஆர்ட் (George L. Hart) குறிப்பிட்டிருக்கிறார். அப்படி உலக இலக்கிய சொத்தாகக் கருதக்கூடிய, உயர் பண்பாட்டுப் பொதுமை நோக்கிய இலக்கியச் செல்வம் ஒன்றையேனும் தமிழியக் கிளைமொழிகள் பெறவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.


சமற்கிருதத்தில் காப்பியக் காலம் கி.பி. 4ஆம் நூற்றாண்டு. காளிதாசன் முதல் தொடங்குகிறது. தமிழ் இலக்கியக் காலம் இதற்கும் பல்லாயிரம் ஆண்டு முந்தையது. ஏனைத் தமிழிய மொழிகளிலும் வடஇந்திய மொழிகளிலும் சைவ வைணவ இறைப்பற்று இலக்கியம் வளர்வதற்குத் தமிழில் தோன்றிய தேவாரப் பாடல்களும் ஆழ்வார் பாடல்களுமே காரணமாக இருந்திருக்கின்றன. ஏனைய எழுத்துக் கடனைச் சமற்கிருதத்திலிருந்தும், இலக்கியக் கடனைத் தமிழிலிருந்தும் பெற்ற கன்னட, தெலுங்கு, மலையாளக் கிளைமொழிகள், தனிமொழிகளாக வளர்ந்தாலும் செம்மொழித் தகவு அறவே பெறவில்லை.


துளசி இராமாயணம் தமிழ் ஆழ்வார் பாடல் களுக்குக் கடன்பட்டிருக்கிறது என்றே அறிஞர்கள் கூறுகின்றனர். நெடுங்காலத்திற்கு முன்பே செம்மைப் படுத்தப்பட்டதும் தனக்கேயுரிய தனித்தன்மை காட்டும் இலக்கியம் பெற்றதுமான செம்மொழி இலக்கணம் தமிழ், சமற்கிருதம் தவிர வேறெந்த இந்திய மொழிகளுக்கும் பொருந்தாது.


தனித்தன்மையைக் கணித்துக் காப்பதற்காக மலையாளத்திற்குப் பச்சமலையாள இயக்கமும், கன்னடத் திற்கு பழங்கன்னட (திருள்கன்னட) இயக்கமும், தெலுங்கிற்கு அச்சதெலுகு இயக்கமும் செய்த முயற்சிகள் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டன. வடசொற்களை அறவே நீக்கிய மறைமலையடிகள், பாவாணர் போன்றோ ரின் தனித்தமிழ் இயக்கம் முழுமையாக வெற்றிகண்டது.


சமற்கிருதத்தை விடுத்துத் தமிழே மிகுதொன்மை இலக்கிய மொழி (Apart from Sanskrit, Tamil is the oldest literature in India) எனப் பிரித்தானியக் கலைக்களஞ்சியம் (Vol II,p.530) குறிப்பிடுகிறது. அதில் கன்னட, தெலுங்கு, மலையாள இலக்கியங்கள் ஏன் குறிப்பிடப்படவில்லை. கல்வெட்டுச் சொற்களைக் காட்டி ஏமாற்ற முடியாது என்பது இதனாலும் உறுதிப்படுகிறது.


செம்மொழித் தொன்மையைக் காட்டியவர்கள் இலக்கியம் தோன்றிய காலத்தினொடு, முதன்முதல் தனக்கென எழுத்துருவம் பெற்ற காலத்தையும் செம்மொழித் தகுதிக்கு அடிப்படையாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். சீனமொழி கி.மு. 3000 அளவில் படவெழுத்து பெற்றது. எபிரேய மொழி (பிமீதீக்ஷீமீஷ்) கி.மு. 1200இல் எழுத்து வடிவம் பெற்றது. அரபி, பாரசீக மொழிகள் கி.மு. 300 அளவில் தனித்த எழுத்து வடிவம் பெற்றன. கன்னட, தெலுங்கு, மலையாள மொழிகள் பல்லவர் காலக் கிரந்த எழுத்தைக் கடன்பெற்று கி.பி. 10ஆம் நூற்றாண்டு அளவில் கிளைமொழியிலிருந்து தனிமொழி களாகியுள்ளன. அதற்கு முந்தைய கிளைமொழிக் காலச் சொல்லாட்சிகளைத் தனிமொழிச் சொல்லாட்சிகளாக எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மலையாள அகரமுதலியில் பழைய மலையாளத்துக்குத் தமிழ் என்றே பெயர் வழங்கியது எனக் கூறப்பட்டுள்ளது.


ஐராவதம் மகாதேவனார் வட்டார வழக்கு, கிளைமொழி, தனிமொழி ஆகிய மொழிவளர் நிலைகளை ஒப்பிட்டுப் பார்க்கவில்லை.


ஒரு கல்வெட்டில் தாயியரு என்னும் சொல் காணப்பட்டால் உடனே அதனைக் கன்னடம் என்கிறார். தமிழில் யார் - யாரு, பார் - பாரு, நில் - நில்லு என ரகர, லகர ஈற்றுச் சொற்கள் உகரத்துணை ஈறு பெறுவது வட்டார வழக்குத் திரிபுகள். இவற்றை அக்காலத்துக் கிளைமொழியென்றோ தனிமொழியென்றோ சொல்லிவிட முடியாது. அவர் கருத்து சரியென்றால் இப்பொழுதும் தமிழில் பேசப்படும் பாரு, யாரு, ஊரு, மோரு, கேளு என்னும் தமிழ்ச் சொற்கள் அனைத்தும் கன்னடத்திலிருந்து பிறந்தவை என்றாகிவிடும்.


வட்டார வழக்கு, கிளைமொழியாகப் பிரிவதற்குப் பல நூற்றாண்டுகள் ஆகும் என்பதை விட அந்த வட்டார வழக்கிலுள்ள அடிப்படைப் பெயர்ச் சொற்களும், வினைச்சொற்களும், மூலத் தாய்மொழித் தொடர்பு அறுத்துத் தனித்து விடப்பட்ட வரலாற்றுச் சூழல் உறுதிப்பட வேண்டும். துளு, குடகு போன்றவை வணிகத் தொடர்பு, அரசியல் தொடர்பு, சமயத் தொடர்பு எனப் பலவகையாலும் பிரிந்து வாழ நேர்ந்ததால் கிளைமொழி யாகிப் பின்னர்த் தனிமொழி நிலை எய்தியுள்ளன. தமிழ் நாட்டிற்கு வந்த சமணத் துறவிகள் உகர ஈறு சேர்த்துப் பேசியது ஒரு வட்டார வழக்கைக் காட்டும், தனிமொழி இயல்பு ஆகாது. தமிழர்களின் சமகால இலக்கியங்களிலும் செப்பேடுகளிலும் ஏன் அத்தகைய உகர ஈற்றுச் சொல்லாட்சிகளும் பிராகிருத வடிவங்களும் காணப்பட வில்லை என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். பிராகிருதம் பேசிவந்த சமணர்கள், கன்னட நாட்டின் வழியாக வந்ததால் வழிநெடுகப் பல்வேறு வட்டார வழக்குகளை உடன்கொண்டு வந்து தமிழ்நாட்டுச் சமணக் கல்வெட்டுகளில் திணித்துள்ளனர். தமிழ்நாட்டில் தமிழன் எழுதியதைத் தான் தமிழ் என்று சொல்ல முடியும்.


தெலுங்கு நாட்டில் தம்பைய என்னும் கல்வெட்டுச் சொல் கண்டு இது தெலுங்கு எனக் கூறுவது தவறு. முருகடு, சுப்புடு என்பவைபோல் தம்பையடு என்றிருந்தால்தான் தெலுங்கு என்று சொல்ல முடியும். தம்பி+ஐய - தம்பைய என்பது தமிழ் வட்டார வழக்கு. அது தெலுங்கு ஆகாது.

தேனி மாவட்டம் புலிமான்கோம்பையில் கிடைத்த நடுகல், தமிழர் பண்பாடு காட்டுவதாக அமைந்துள்ளது. இன்றைய மலையாளிகள் எவரும் இறந்தவர்க்கு நடுகல் நடுவதில்லை. மலையாள இலக்கியத்திலும் இவ்வழக்கம் குறிக்கப்படுவதில்லை. இன்றைய மலையாள எழுத்திலும் இந்த நடுகல் எழுதப்படவில்லை. மலையாள எழுத்தில் எழுதப்படாத ஒரு கல்வெட்டை மலையாளம் என்று சொல்வதும் மலையாளம் செம்மொழித் தகுதியுடையது என்பதும் பட்டப்பகலில் செய்யும் ஏமாற்றாகும். கல்பேடு என்னும் ஊர்ப்பெயர் முற்றிலும் தமிழ்ச்சொல். கோயம்பேடு, மப்பேடு, தொழுப்பேடு எனப் பெயர் கொண்ட ஊர்கள் தமிழ்நாட்டில் பெருமளவில் உள்ளன. கேரளத்தில் பேடு எனும் ஊர்ப்பெயர்கள் காண்பது அரிது. பேடு - போடு என்பன உழுது பயிர் செய்யப்படாத கரம்புநிலப் பகுதியைக் குறிக்கும் முல்லை, மருதநிலச் சொல்லாட்சி. இது குறிஞ்சி நிலச் சொல்லாட்சியன்று. இதனை வலிந்து மலையாளச் சொல்லாகக் கருதக்கூடாது. போடு என்னும் சொல் புதிதாகக் காடுவெட்டிச் செய்த நிலத்தைக் குறிப்பது தெலுங்கு அகரமுதலியிலும் கூறப்பட்டுள்ளது.


‘தயன்’ எனும் சொல்லாட்சி முதன்முதல் ஈழத்தில் தோன்றியது. ஆவு - ஆவன் என்பது ஆயன் என்று திரியும். இதைப்போன்றே தீவு - தீவன் என்னும் சொல் ‘தீயன்’ என்று திரியும். பழங்காலத்தில் ஈழத்திற்குச் ‘சேரன் தீவு’ என்னும் பெயர் வழங்கியது. எனவே ஈழத்திலிருந்து சேரநாட்டில் குடியேறிய ஒரு பிரிவினர் தீயன் - தீயர் எனப்பட்டனர். இதனை மலையாளச் சொல் என்பது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். சிவகங்கை மாவட்டத்தில் தீயனூர் இருக்கிறது. தீயத்தாளன் என்னும் சொல்லுக்கு, தீவில் வாழ்பவர் என்று மலையாள அகரமுதலியில் சொல்லப்பட்டுள்ளது.


செம்மொழி என்பதற்குரிய உண்மையான அடிப்படைத் தகுதிகள் எவை? அவற்றை ஏனைய திராவிட மொழிகள் பெற்றிருக்கின்றனவா என ஆராயாமல் எதற்கும் உதவாத வட்டார வழக்குச் சொற்களை, வரலாற்று உணர்வு ஏதுமின்றி வாய்வெருவலாக இவை மலையாளச் சொற்கள், இவை கன்னடச் சொற்கள், இவை தெலுங்குச் சொற்கள் எனத் தன்னை மொழிநூல் வல்லுநராக நினைத்துக் கொண்டு முடிவெடுப்பது, நல்லிணக்கமுள்ள அண்டை மாநில உறவுகளைக் கெடுப்பதாக அமைந்துவிடுமோ என அஞ்ச வேண்டியுள்ளது.

மூவேந்தரிடையே இருந்த ஒற்றுமை கெட்டுப் பகைமை தோன்றுவதற்குச் சில விருதுப் பெயர்கள் இடைக்காலச் சோழர் வரலாற்றில் காரணமாக இருந்தன என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


வேதங்களிலும் இதிகாசங்களிலும் வல்லவர்கள், மூவேந்தரிடையில் ஒற்றுமை வளர்க்கும் பாங்கில் செயற்படவில்லை. மாறாக, பாண்டிய குலாந்தகன் (பாண்டியர் குலத்திற்கு எமன்) என்று சோழனுக்கு விருதுப் பெயர் தந்தனர். சோழகுலாந்தகன் (சோழர் குலத்திற்கு எமன்) என்று பாண்டியனுக்கு விருது வழங்கினர். மீண்டும் கேரளாந்தகன் (கேரளத்தார்க்கு எமன்) எனச் சோழனுக்கு விருது வழங்கினர். இத்தகைய விருதுகள் தமிழர் மீது தமிழர்களே போர்வெறி கொண்டு தாக்கும் பகைமையை வளர்த்தன. இதன் விளைவாக மூவேந்தர் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. தமிழினம் பிறமொழியாளர்க்கு அடிமை யாகும் நிலைக்கு வழிவகுத்தது.


ஒளவையாரும் கோவூர்கிழாரும் தமிழ் வேந்தர்களுக்குள் நேர்ந்த பகைமையை நீக்கி, ஒற்றுமை வளரப் பாடுபட்டார்கள். ஆனால் சமற்கிருதம் படித்தவர்கள், பகை வளர்த்து, உசுப்பேற்றிப் புகழ்பெற்ற தமிழின வரலாற்றைத் தரைமட்டமாக்கிவிட்டனர் என்பதை மூடி மறைக்க முடியவில்லை. அந்தக் காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ இவ்வாறு நடந்துவிட்டது எனலாம். அதே தவற்றை இப்பொழுதும் பின்பற்றித் தென் மாநிலத்தவர்க்குள் செம்மொழிப் பகை வளரும் சூழல் வராமல் தவிர்க்கப்படவேண்டும் என்றே நல்ல உள்ளங்கள் எதிர்பார்க்கின்றன.

 

 

 

Pin It