பிரிட்டிசாரால் ஊட்டி வளர்க்கப்பட்ட பார்ப்பன பனியா தரகு முதலாளிய கும்பலால் 1946லிருந்து 1952வரை மிகப் பெரிய யாகம் வளர்த்தது. அந்த யாகத்தில் தலித் உரிமை, மொழி உரிமை, தேசிய அடையாளங்கள், பழங்குடியினரின் உரிமை, சிறுபான்மையினர் பாதுகாப்பு அனைத்தும் எரியூட்டப்பட்டது. அதன் விளைவாக இந்திய பூதம் கிளம்பியது. அது இன்று விசுவரூபம் எடுத்த போதும் அதன் உருவாக்கத்தில் எரியூட்டப்பட்ட அடையாளங்கள் உயிர்ப்பித்து எழும்போது இந்த இந்திய பூதம் அஞ்சி நடுங்குகிறது.

காஷ்மீர் மற்றும் வட கிழக்கு தேசங்கள் இப்பூதத்தை அடக்க துப்பாக்கி குரலெழுப்ப மற்ற இந்திய துணைக் கண்ட பகுதிகளில் வெவ்வேறு அடையாளங்களை தாங்கி மக்கள் அணி அணியாக திரண்டு தங்கள் உரிமைக்காக போர்க்குரல் எழுப்புகின்றனர்.

அப்படிப்பட்ட அடக்கப்பட்ட அடையாளமாகவே தெலுங்கானா திகழ்கிறது. போராட்டம், துரோகம் என்று நகர்ந்து கொண்டிருக்கும் தெலுங்கானாவை அரசியல், பொருளாதார சமூக ரீதியில் உற்று நோக்கினால் மட்டுமே அதன் விடுதலையின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும்.

தெலுங்கானாவின் வரலாற்றுப் பின்னணி:

கடலோர ஆந்திரா மற்றும் இராயலசீமா பகுதி இருநூறு ஆண்டுகால பிரிட்டிசு ஆட்சியின் கீழ் ஆட்சி செய்யப்பட்ட நிலையில் தெலுங்கானா பகுதி நிஜாம் நில உடைமை (1724 முதல் 1948) ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. பிரிட்டிசு ஆட்சிக் காலத்தில் பல்வேறு முன்னேற்றங்களை கடலோர ஆந்திர பகுதி கண்டிருந்தது. குறிப்பாக அங்கு ஒரு ஆளும் கும்பல் உருவாக்கப்பட்டது. ஆனால் தெலுங்கானாவை பொருத்தவரை பின்தங்கிய சமூக நிலையிலேயே இருந்தது. இங்கே குறிப்பாக குறிப்பிட வேண்டியது என்னவெனில் மொழி மட்டுமே ஒரு தேசிய இனத்திற்கான அடிப்படையாகக் கொள்ள முடியாது. பொருளாதாரம், பண்பாடு, ஒரு பரந்த நிலப்பரப்பு போன்ற கூறுகளுடன் உற்று நோக்க வேண்டி இருக்கிறது. இச்சூத்திரம் கொண்டு ஆந்திராவையும், தெலுங்கானாவையும் ஒப்பிட்டுப் பார்த்தோமே யானால் தெலுங்கானா தனிப்பண்பாடு, தனி நிலப்பரப்பு கொண்ட தனி தேசியம் என்பதனை உணர்ந்து கொள்ள முடியும். அதற்குச் சான்றாக நிஜாம் ஆட்சிக் காலத்தில் இருந்த தொழிற்சாலைகள் பின்வருமாறு: (1) சிங்காரின் குளோரிஸ் (2) நிஜாம் சர்க்கரை ஆலை (3) ஆல்வின் மெட்டல் ஒர்க்ஸ் (4) பிரையா டூல் (5)சர்சில்க் (6) ஐதரபாத் அபேஸ்ட் மற்றும் பல. மஹராட்டிரம், கர்நாடகம் எல்லையோரத்தில் அமைந்திருந்ததனாலும் நிஜாம் ஆட்சிக் காலத்தில் உருது ஆட்சி மொழியாக இருந்ததனாலும் ஒரு கூட்டுத் தளர்வு பண்பாட்டை உருவாக்கி இருந்தன.

எளிதாக விளங்கிக் கொள்ள ஈழ மக்களும், தமிழக மக்களும் ஒரு மொழியைக் கொண்டிருந்தாலும் வெவ்வேறு நிலப்பரப்பு, பொருளாதாரம், பண்பாடு கொண்டிருப்பதால் இரண்டும் இருவேறு தேசிய இனங்கள் என்பதனை புரிந்து கொள்ளலாம். அந்த அடிப்படை புரிதலைக் கொண்டு ஆந்திராவையும், தெலுங்கானாவையும் தனித்தனி தேசிய இனங்கள் என்பதனை புரிந்து கொள்ளலாம்.

மக்கள் எழுச்சியும் இ.பொ.க.வின் துரோகமும்

நிஜாம் ஆட்சிக் காலத்தில் மக்கள் வறுமையிலும், கல்வியறிவு அற்றும் வரிச்சுமையிலும் இருந்து வந்தனர். நில உடைமை ஆதிக்கம் தாங்காமல் நிஜாமிற்கு எதிராக ஆயுதம் தாங்கி போராடினார்கள். மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் விடுதலைப் பிரதேசங்கள் ஆக்கப்பட்டது.

பத்து இலட்சம் ஏக்கர் நிலம் ஆண்டைகளிட மிருந்து பறிக்கப்பட்டு ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. (1946 முதல் 1948) இந்திய துணைக் கண்டத்தில் இணைய மறுத்த நிசாமை இணைய வைப்பது என்ற பெயரில் சோசலிசப் பருந்து நேருவின் ஆலோசனைப்படி இந்திய இராணுவம் போராடிய மக்களை மிகக் கொடூரமாக ஒடுக்கியது. 1948 வலுக்கட்டாயமாக இந்திய பகுதியில் தெலுங்கானா சேர்க்கப்பட்ட பின்னும் மேலும் நான்கு ஆண்டு காலம் தெலுங்கானா பகுதியில் இராணுவம் தங்கி இருந்து போராடிய விவசாயிகளை ஒடுக்கியது. 1941ல் தெலுங்கானா ஆயுதப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய இ.பொ.க. தன்னுரிமை கொண்ட தெலுங்கானா என்ற அடுத்த கட்டத்திற்குச் செல்லாமல் இந்திய தரகு முதலாளிகளுக்கு வால் பிடிப்பது என்ற நிலைப்பாடு எடுத்த பின் இ.பொ.க. துரோகத்தால் நேருவின் இராணுவம் நான்காயிரம் ஏழை விவசாயிகளை மூன்றே வருடத்தில் கொன்று குவித்தது.

ஏழை விவசாயிகள் பறித்து வைத்திருந்த நிலங்களை காங்கிரசை ஆதரித்த நிலப்பிரபுக்கள், சாகிதார்கள், ஜமீன்தார்கள், மகிதார் கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இறுதியில் 1952ல் பொதுத் தேர்தல் நடத்தப் பட்டு ஐதராபாத் மாநிலத் தின் (தனித் தெலுங்கானா பகுதி) புதிய முதல்வராக இராமகிருஷ்ணாராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒன்றுபட்ட ஆந்திராவும், நெருக்கடியில் தெலுங்கானாவும்

மொழிவாரி மாநிலம் அமைப்பது என்று முடிவெடுத்தபின் 1956, நவம்பர் 1ல் தெலுங்கானாவை இணைத்து ஒன்றுபட்ட விசால ஆந்திரா உருவாக்கப் பட்டது. மாநில சீரமைப்புக் குழு தெலுங்கானாவை ஆந்திராவுடன் இணைப்பது ஏற்புடையது அல்ல. அது சமூக ரீதியில் தெலுங்கானாவிற்கு எதிராக அமைந்து விடும் என்று எச்சரித்த பின்னும் இணைத்ததற்கான முக்கிய காரணங்கள் பின்வருபவை:

(1) உருவாக் கத்தின் போது கடலோர ஆந்திர பகுதி பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்தது. அதை தீர்த்துக் கொள்ள தெலுங்கர்களின் வளங்கள் தேவைப் பட்டது.

(2) ஆந்திர பகுதியில் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் செயல்படவில்லை. ஆனால் தெலுங்கானாவில் நிசாம் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டிருந்த 26க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் அரசுடைமையாக் கப்பட்டிருந்தது.

(3) தெலுங்கானாவின் மிகுதியான வரி வருமானம் அரசாங்க கஜானாவை நிரப்பிக் கொண்டிருந் தது. இவைகள் பின்னாட் களில் ஆந்திராவின் ஆளும் கும்பலின் மேம் பாட்டிற்கு திருப்பி விடப் பட்டது.

(4) ஆந்திராவின் தலைநகர் கர்னூலைக் காட்டிலும் மேம்பட் டிருந்த தெலுங்கானா வின் ஐதராபாத்தை தலை நகராக மாற்ற திட்ட மிட்டிருந்தது

(5) 1957 தேர்தலில் இ.பொ.க. ஐதராபாத் மாநிலத்தின் ஆட்சியைப் பிடித்து விடும் என்கிற அச்சம் காங்கிரசுக்கு இருந்தது.

(6) தெலுங்கானா தனித்திருந்தால் அடக்கப்பட்ட நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான மக்களின் ஆயுதப் போராட்டம் மீண்டும் எழுச்சி பெறும் என்று ஆளும் கும்பல் அஞ்சியது.

தெலுங்கானா எழுச்சியும், தொடர்ச்சியான துரோகமும்:

விசால ஆந்திரா உருவாக்கும்போது கனவான்களின் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில் சொல்லப்பட்டவை:

(1) அரசாங்கம் அதன் சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு களிலும், கல்வி நிறுவனங்களிலும் 1/3 என்ற அடிப் படையில் நிரப்படும் என்றும், அல்லது தெலுங் கானாவில் இருக்கும் கல்லூரி களில் வெளியாட்கள் அனுமதிக்கப்பட மாட்டார். முழுமையான தெலுங்கானாவைச் சார்ந்தவர்களுக்கே செயல்படும். இந்த ஏற்பாடு படிப்பறிவு பெற்ற கடலோர ஆந்திரர்களிடமிருந்து பின்தங்கிய தெலுங்கானா பாதுகாக்கப்படும்.

(2) இரு பகுதிக்கும் சரியாக பகிர்ந்தளிக்கப்பட்ட பின் மீதமுள்ள அரசு வருமானம் தெலுங்கானா முன்னேற்றத்திற்கே பயன்படுத்தப்படும்.

(3) எல்லாவிதமான தெலுங்கானா முன்னேற்றத்தை உறுதிப்படுத்த ஒரு பகுதி குழு அமைக்கப்படும். மேற்கூறிய இந்த கனவான்களின் ஒப்பந்தம் இன்றள வுக்கும் ஏட்டில் இருக்கின்றதே தவிர செயல்பாட்டில் இல்லை.

தெலுங்கானா பூர்வ குடிகளுக்கு முக்கியத்து வம் கொடுக்கப்பட வேண் டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு கிடப்பில் போடப் பட்டு மதிக்கப்படவில்லை. இதற்கிடையே 1969ல் எழுந்த தெலுங்கானா மாணவர் எழச்சியை ஒடுக்க மிகப் பெரிய அடக்குமுறை கட்ட விழ்த்து விடப்பட் டது.

327க்கும் மேற்பட்ட வர்கள் கொல்லப்பட்ட னர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு அதாவது தெலுங்கானாவின் தன்னுரிமையை உறுதிப்படுத்திய தீர்ப்பு ஆந்திர மேட்டுக் குடியினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஜெய் ஆந்திரா என்ற போராட்டத்தை ஒருங்கிணைத்தனர். தெலுங் கானா மக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அனைத்து பாதுகாப்பு மற்றும் உச்ச நீதிமன்ற தெலுங்கானாவிற்கு ஆதரவாக அளித்த தீர்ப்பு உட்பட மாற்றியமைக்கப்பட வேண்டும் என முழங்கினர்.

கடலோர ஆந்திர கும்பலின் கோரிக்கை ஏற்ற இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு 8 அம்ச திட்டம் 5, 6 அம்ச திட்டம் என்று தெலுங்கானா பிரச்சினையை தீர்க்க முன் வைத்தனர். இதன் அடிப்படை என்னவெனில் இதுவரை நிகழ்ச்சி நிரலில் இருந்த தெலுங்கானா சுயமரியாதை, தன்னுரிமை போன்ற கோரிக்கைகள் நீர்த்துப் போக வைக்கப்பட்டு பின் தங்கிய பகுதிகளின் முன்னேற்றம் என்பது அடிப்படையாக்கப்பட்டது.

1973ல் அனைத்து விதமான முன்னேற்றத்தை உறுதிப்படுத்த அமைக்கப்பட்ட பகுதி குழு கலைக்கப் பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த தடையாக சட்டங்களை மாற்றி அமைத்தனர். 1944ல் முழுமை பெறாத நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு போராட்டத்தை முழுமை பெற 1980களில் எழுச்சிப் பெற்ற மக்கள் யுத்தக்குழு, தலைமையிலான ஆயுதப் போராட்டம் மிகக் கொடூரமாக ஒடுக்கப்பட்டது. எண்ணற்ற தலைவர்கள் போலி மோதலில் கொல்லப்பட்டனர்.

காவல் நிலைய படுகொலை, ஜனநாயக மறுப்பு போன்ற கொடூர கைகள் ஓங்கி நின்றன. நிலப்பிரபுத் துவத்திற்கு எதிரான போராட்டத்தில் உறுதியாக நின்ற அக்கட்சி சுதந்திர, சனநாயக தெலுங்கானா கோரிக்கைகள் நிலப்பிரபுத்துவ போராட்டத்துடன் இணைக்கப்படவில்லை என்று பலராலும் இன்ற ளவும் விமர்சிக்கப்படு கின்றது என்பது குறிப் பிடத்தக்கது.

புறக்கணிக்கப்படும் தெலுங்கானா மக்கள்:

ஆந்திராவுடன் தெலுங்கானா இணைக் கப்படும்போது முன்னேற்றத்திற்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. 1990களுக்கு பிறகு தெலுங்கானா பகுதி முழுக்க முழுக்க பெரும் பாலும் ஏகாதிபத்திய கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. மாநிலத்தின் அரசு மற்றும் அதன் சார்பு நிறுவனங்களின் வேலைவாய்ப்பு 15 லட்சம்.

இதில் மக்கள் தொகை அடிப்படையில் 40% தெலுங்கானாவிற்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 20% கூட ஒதுக்கவில்லை. மாநிலத்தின் செயலகத்தில் 5000 வேலை வாய்ப்புகள் இருக்கின்றது. இதில் 10% கூட தெலுங்கானாவுக்கு ஒதுக்கப்பட வில்லை. 130 தலைமை இலாகா அதிகாரிகளில் 8 பேர் மட்டுமே தெலுங்கானாவைச் சார்ந்தவர்கள். 23 மாவட்ட ஆட்சியாளர்களில் தெலுங்கானாவைச் சார்ந்தவர்களை கண்டுபிடிப்பது கடினம்.

1952க்கு பிறகு தெலுங்கானாவை ஆந்திராவோடு ஒப்பிடுகையில் ஆந்திர பகுதியில் அதிக தொழிற் சாலைகள் தொடங்கப்பட்டிருக்கிறது. நிசாம் ஆட்சி காலத்தில் தெலுங்கானா பகுதியில் உருவாக்கப்பட்டி ருந்த நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டது. அல்லது திவால் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தெலுங்கானா பகுதி குழுவால் உருவாக்கப்பட்டி ருந்த 12 பால் பதன தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன.

ஒன்றுபட்ட ஆந்திரா உருவாக்கும்போது ஒட்டு மொத்த ஆந்திர மக்கள் தொகையில் தெலுங்கானா 34.40% விழுக்காடாக இருந்தது. ஆனால் இன்று 40.54% விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. கடலோர ஆந்திர மக்கள் தொகை 44.70% லிருந்து 41.69% விழுக்காடாக சரிந்திருக்கிறது.

இராயலசீமா மக்கள் தொகை 19.47% விழுக்காடி லிருந்து 17.07 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது. இது தெளிவாக கடலோ ஆந்திர மேட்டுக் குடிகளின் தெலுங்கானா இடப் பெயர்வை காட்டுகிறது. இதில் வேடிக்கை என்னவெனில் புலம் பெயர்ந்த கடலோர ஆந்திர வர்க்க கும்பல் தெலுங்கானா பிரதிநிதிகளாக சட்டமன்ற பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர். சிலர் அமைச்சர்களாகவும் வலம் வருகின்றனர்.

 ஆந்திராவின் பாசன நிலப்பகுதி 24.45 லட்சம் ஏக்கரிலிருந்து 26 லட்சமாக உயர்ந்திருக்கிறது. ஆனால் தெலுங்கானா 9.12 லட்சம் ஏக்கராக இருந்த பாசன நிலப்பரப்பு இன்று 7.8 லட்சம் ஏக்கராக குறைந்திருக் கின்றது. 26% விழுக்காடு பாசன நிலப்பகுதி தெலுங்கானாவில் காணாமல் போவதற்கு யார் காரணம்? இணைப்பின்போது தெலுங்கானாவின் பாசன வசதி அதிகரிக்கப்படும். பல்வேறு கால்வாய்த் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதிகள் வெறும் வாய்ச் சவடலாகத்தான் மாறிப் போயின. கீழ்க்கண்ட பட்டியல் அதனை உறுதிப்படுத்துகின்றன.

பகுதி கால்வாய்ப் பாசனம்   கிணற்றுப் பாசனம்

கடலோர ஆந்திரா     1224559 ஏக்கர்    131002 ஏக்கர்

இராயலசீமா     124567 ஏக்கர்     108077 ஏக்கர்

தெலுங்கானா    30062 ஏக்கர் 588884 ஏக்கர்

கிருஷ்ணா நதி நீரின் ஆந்திராவின் பங்கு 811 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கின்றது. அதில் 68.5% தெலுங்கானாவிற்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 32% மட்டுமே கொடுக்கப்படுகின்றது. கிருஷ்ணா நதி நீரில் 35 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றது. அதில் தெலுங்கானா மிகக் குறைந்த அளவான 5 லட்சம் ஏக்கர் நிலமே பாசன வசதி பெறுகின்றது. அதேபோல் கோதாவரி ஆற்றால் கிடைக் கும் பலன்களும் தெலுங்கானாவிற்கு கிடைப்ப தில்லை. அப்படியாக இன்று கால்வாய்ப் பாசனம் கடலோர ஆந்திராவில் 74.5% விழுக்காடாகவும் தெலுங்கானாவில் 18.20% விழுக்காடாகவும் இராயல சீமாவில் 7.5% விழுக்காடாகவும் இருக்கின்றது. தெலுங்கானாவில் உறிஞ்சப்படும் வளங்களைக் கொண்டு எவ்வித பாசன வசதி திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை.

ஒருங்கிணைக்கும்போது தெலுங்கானாவின் கல்வித் திறன், முன்னேற்றப்படும் என்ற வாக்குறுதி கள் வெறும் வாய் வார்த்தையாகவே இருக்கின்றது. ஆந்திர மாநிலத்தில் மிகவும் குறைந்த அளவே கல்வி அறிவு பெற்றோர்களின் எண்ணிக்கை காணப்படு கின்றது. அதனை உறுதிப்படுத்த கடலோர ஆந்திரா வில் 63.58% விழுக்காடாகவும் இராயலசீமாவில் 60.53% விழுக்காடாகவும் மற்றும் தெலுங்கானாவில் 58.77% விழுக்காடாகவும் கல்வி அறிவு பெற்றோர் எண்ணிக்கை ஆரம்ப பள்ளியில் 60,60,394 மாணவர்கள் இணைந்திருந்தனர். பகுதி வாரி விபரம் பின்வருமாறு:

 கடலோர ஆந்திரா சார்ந்த மாணவர்கள் 27,57,269 (45.50%) இராயலசீமா மாணவர்கள் 13,02,673 (21.49%) மிகக் குறைந்த அளவில் தெலுங்கானா மாணவர்கள் 20,00,452 (33.10%) மட்டுமே. ஆந்திராவின் தலைநகர் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் அதிகமான பல்கலைக் கழகங்கள் நிறைந்திருப்பதாக ஊதிப் பெருக்கப்படுகின்றது. ஆனால் இப்பல்கலைக் கழகம் எவ்விதத்தில் பயன்படுகிறது என்பதை சில உதாரணங் களிலிருந்து புரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட ஒரு உதாரணமாக இப்பல்கலைக் கழகத்தில் நிரப்பப்படும் வேலைவாய்ப்புகளில் 10% பேர் கூட தெலுங்கானா வைச் சேர்ந்தவர்கள் இல்லை. இதிலிருந்து பல்கலைக் கழகம் ஆதிக்கம் யாரின் கீழ் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும் என்ற வாக்குறுதிகள் வெறும் வாக்கியங்களாகவே இருந்து வருகின்றன. தெலுங்கானா பகுதி விளை நிலங்கள் மெல்ல ஆந்திர பகுதி கம்மா, ரெட்டி ஆகியோரின் ஆளுகையின் கீழ் நிலங்கள் சென்று கொண்டிருக் கையில் விவசாய நிலங்கள் பிடுங்கப்பட்டு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பது எந்த விதத்திலும் பெரும்பான்மை மக்களுக்கு உதவிகரமாக இருக்கப் போவதில்லை. ஐதராபாத் சுற்றிலும் அமைக்கப்படும் தொழில் நிறுவனங்களும் தொழிற் சாலைகளும் கணினி பூங்காக்களும் தெலுங்கானாவின் நிலம் தண்ணீர் மின்சாரத்தை பயன்படுத்துகின்றன.

ஆனால் இவைகளின் 95 சதவீத வேலை வாய்ப்புகள் வந்தேறிகளே அனுபவிக்கின்றார். தெலுங்கானா இந்தியாவுடன் இணைந்த பிறகு கடந்த 60 ஆண்டுகளில் கிடைத்த பரிசு பண்பாட்டு அழிப்பு சுயபொருளாதாரத்தை அழிப்பது சொந்த மண்ணி லேயே அடிமைப்படுத்தப்பட்டதை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆந்திராவையும் தெலுங் கானாவையும் மொழி அடிப்படையில் மட்டுமேடு பார்ப்பது என்பது பிரச்சனையை சிக்கலாக்குகிறது. குறிப்பாக ஆந்திராவில் பிரிட்டிஷ் மூல தனத்திற்கு சில அடிமைகள் உருவாக்கப்பட்டதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தெலுங்கானாவை பார்ப்பது முட்டாள் தனமானது.

துணிச்சலாக ஆளும் வர்க்கத்தின் மீது போர் தொடுக்கும் அமைப்பு மக்களின் இயல்பான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வது இயல்பே. அரசு எதிர் போராட்டம் என்ற அடிப்படையில் ஆதரிக்கப் படுவதாகக் கூறும் உலகப் புரட்சிகர இயக்கத்திற்கு வழிகாட்டும் வாய் சவடால் புத்தக புழு பார்ப்பனிய கம்யூனிஸ்டுகளுக்கு மக்களின் எதார்த்தத்தைப் புரிந்து கொள்வதும் கடினமே.

உலக மயம் தனியார் மயம் தீவிரமாக அமல்படுத் தப்படுவதால் ஏற்படும் நெருக்கடியால் இந்திய துணைக் கண்டத்தில் அடைபட்டுக் கிடக்கும் தேசிய இனங்களும், உழைக்கும் மக்களும் தீவிரமாகப் போராட்டங்களை கட்டி அமைக்கும் நிலையில் மீண்டும் 2009ல் தெலுங்கானா தனி மாநில கோரிக்கை தீவிரமாக நிகழ்ச்சி நிரலில் வந்தது. பல்வேறு உயிர் இழப்பு மாணவர்கள் முற்றுகைக்குப் பிறகு டி.ஆர்.எஸ். தலைவர் சந்திரசேகரராவ், உண்ணாவிரத நாடகத்திற்கு ஊடாகவும், நவம்பர் 30, 2009ம் பிப்ரவரி 2010 இடைப்பட்ட காலத்தில் 313 பேர் தெலுங்கானா கோரி தற்கொலைக்குப் பிறகு தனி மாநிலம் அமைப்பதற்கான வேலை துவங்கி விட்டதாக ப.சிதம்பரம் அறிவித்தார்.

அதன் முதல் கட்டமாக ஸ்ரீ கிருஷ்ணா தலைமை யில் குழு அமைக்கப்பட்டது. பொதுவாக இந்தியாவில் குழு அமைப்பது என்பது போராடும் மக்களின் வீரியத்தைக் குறைக்கவே அமைக்கப்படுகிறது. ஆகையால் அதைப் பற்றி ஆராய்வதுநேரத்தை வீணடிப்பதே. அக்குழுவின் அறிக்கை முடிவில் தெளிவான முடிவு எதுவும்காண முடியவில்லை. பிரிக்கலாம், நீடிக்கலாம், ஐதராபாத்தை தனித்து வைத்து இருக்கலாம் ஒரே மாநிலமாக நீடிக்கலாம் என்று குழப்புகிறது. தவிர எங்கேயும் தெலுங்கானா சுயமரியாதை பாதுகாக்கப்படவேண்டும் என்றும் தன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறப்பட வில்லை.

ஒட்டு மொத்த தெலுங்கானா மக்கள் தொகையில் 42 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினராகவும் 22 சதவீதம் தாழ்த்தப்பட்டவராகவும் 12 சதவீதம் பேர். பழங்குடியினராகவும் 8 சதவீதம் ஆதிக்க சாதிகளாக இருக்கின்றனர். பிரதான ஆதிக்க சாதியான வெள்ள மாவை டி.ஆர்.எஸ். பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

மற்றொரு பிரிவான ரெட்டி, பார்ப்பனர்களை காங்கிரசும் பி.ஜே.பி.யும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

ஆகையினாலேயே இம்மூன்றுகட்சிகளும் தெலுங்கானா மாநில கோரிக்கையோடு மட்டும் நின்று விடுகின்றன. ஜனநாயக தெலுங்கானாவைப் பற்றி வாய் திறப்பதே இல்லை. இவர்களின் தனி மாநில போராட்டம் என்பது இந்திய தரகு முதலாளிகளுக்கும் வல்லரசுக்கும் யார் எடுபிடிகளாய் இருப்பது, ஆந்திராவை சார்ந்தவர்களா தெலுங்கானாவைச் சார்ந்தவர்களா என்பதிலேயே முடிந்து விடுகிறது.

பரந்த மனப்பான்மை கொண்ட மார்க்சிய “மைப்புகள் ஜனநாயக தெலுங்கானாவிற்கு சரியான திட்டங்கள் அமைக்காததாலே மேற்சொன்ன கட்சிகள் தலைமையை ஏற்கக் கூடிய ஓர் அவல நிலை ஏற்படுகிறது. இதில் குறிப்பிட வேண்டியது என்னவெனில் இப்போது எழும் தெலுங்கானா எழுச்சி என்பது எந்த ஒரு தனி அமைப்பாலும் திட்டமிடப்பட்டு ஒருங் கிணைக்கப்படாமல் தன் எழுச்சியாக உருவானது. இறுதியாக தனி மாநில போராட்டத்தில் நாம் பார்க்க வேண்டியது சேர்க்க வேண்டியது பின்வருபவையே:

1.     இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட தெலுங்கானாவின் சுய மரியாதை அங்கீகரிக்கப்பட வேண்டும்.

2.     தெலுங்கானாவின் தன்னுரிமைப் பயணத்தில் இன்றைய மக்களின் மக்கள் மன நிலையில் உள்ள தனி மாநில கோரிக்கை அங்கீகரிக்கப்பட வேண்டும்.

3.     வெறுமனே அதிகாரத்திற்கான போராட்டமாக இல்லாமல் ஜனநாயக தெலுங்கானாவிற்கான போராட்டமாக இருக்க வேண்டும்.

4.     சுதந்திர தெலுங்கானா போராட்டத்தோடு நில பிரபுத்துவ எதிர்ப்பு போராட்டத்தையும் இணைக்க வேண்டும்.

5.     ஆந்திரா ஆளும் வர்க்கத்திற்கெதிரான போராட்டமாக மட்டுமே இல்லாமல் இந்திய பார்ப்பனிய கட்டமைப்பிற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராகவும் விரிவுபடுத்த வேண்டும்.

6.     ஆந்திரா தெலுங்கானா மக்களின் ஒற்றுமை என்பது ஆந்திரப் பகுதி உழைக்கும் மக்கள் தெலுங்கானாவின் தன்னுரிமையை அங்கீகரித்து அந்த மக்களை ஒடுக்கும் சொந்த ஆளும் கும்பலுக்கு எதிராக போராடுவதிலேயே சாத்தியப்படும்.

"தன்னுரிமை பெற்ற ஜனநாயக தெலுங்கானாவிற்கு குரல் கொடுப்போம்''

இந்திய பார்ப்பனிய கட்டமைப்பை தகர்த்தெறிந்து சுதந்திர தேசிய இன அரசாங்கம் அமைய போராடுவோம்!

Pin It