நூற்றாண்டுகளைத் தாண்டி கனவு காணுகிறோம் இந்தியப் பெண்கள் உலக அழகிகளாக வலம் வருகிறார்கள். விண்வெளியில் ஆய்வு செய்கிறார்கள். எல்லாம் சாத்தியம். சாலை ஓரத்தில் செல்போனில் பேசியபடியே போய்க்கொண்டிருக்கிறார்கள். அனைத்து எல்லைகளும் உடைக்கப்பட்டு விட்டன. பல ஆண்டுகளுக்கு முன் பெண்கள் தடைகளில் இருந்து விடுவித்து வெளிக்கொண்டு வரப் போராடிய சமூக சிந்தனையாளர்கள் கண்ட கனவு நனவாகிவிட்டதா? இல்லையே கிராமப்புறங்களில் நம் கால்களின் இடையே பெரு வெள்ளமாய் வழிந்தோடுகிறது சாக்கடை. எவளோ ஒருத்தி உலக அழகியாகிறாள். அவள் அழகுக்காக பயன்படுத்தும் அழகு சாதனம் பொருளை கொத்து வேலைக்குப் போகும் செல்வியும் முகத்திற்குப் பூசிக்கொண்டு பயணிக்கிறாள். அவளும் தன்னை உலக அழகியாக கற்பனை செய்து கொள்கிறாள். பெண், சுதந்திரம் அடைந்துவிட்டதற்கான அடையாளமாக இதைக் கொள்ளமுடியுமா?

பெண்கள் மீதான மதிப்பீடுகள் மாறாமல் பெண்விடுதலை சாத்தியமில்லையே நாம் எவற்றையெல்லாம் விடுதலைக்கான அளவுகோல்களாய் எடுத்துக் கொண்டு கற்பிதம் செய்து வைத்திருக்கிறோம். பிறந்தது முதல் பெண்ணுக்கு வெட்கப்படக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அவளது உடல் உடைகளுக்குள் பாதுகாக்கப்படுகிறது. யாரோ ஒருவனுக்காக தன்னுடைய உடலை புனிதம் கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க வேண்டியவளாக ஆக்கப்படுகிறாள். இங்கு பெண்கள், ஆண்களுக்கான பண்டமாக வளர்க்கப்பட்டு தானம் கொடுக்கப்படுகிறார்கள்.

கருவிலேயே ஆரம்பித்து விடுகிறது இவர்களுக்கான ஒதுக்குதல் ஆம்பளைப்பிள்ளை ஒசத்தி'' என்கிற எண்ணம் இன்னும் சமூகத்தில் உள்ளது. உடலுழைப்பு சார்ந்த மக்களின் சொத்தே ஆண்பிள்ளை தான். அந்த பிள்ளைக்காக எத்தனை பெண்குழந்தைகளை வேண்மென்றாலும் அனாதைகளாக்கி அரசுத் தொட்டிலில் போட இவர்கள் தயராக இருக்கிறார்கள்.

அரசுத் தொட்டிலின் மூலம் சிசுக் கொலைகளை மட்டும் தான் தடுக்க முடிந்திருக்கிறதே தவிர பெண் குழந்தைகளின் மீதான புறக்கணிப்பு தொடர்கிறது. பெண் என்கிற ஒரே காரணத்திற்காக அவரவர் பெற்றோராலேயே ஒரு குழந்தை அனாதையாக்கப்படுவது இந்த சமூகத்தின் அவலம். குழந்தைகளின் உரிமைபற்றி நாம் பேசிக்கொண்டிருப்பது எவ்வளவு பெரிய பொய் என்பதற்கு அனாதைகளாக்கப்படும் இந்தக் குழந்தைளே சாட்சி.

பெண் என்பவள் ஆணின் தேவையை நிறைவு செய்ய வேண்டும் என்கிற இலட்சியத்திற்காகப் படைக்கப்பட்ட உயிர்ப்பொருளா? கல்வி, பொருளாதாரம் இரண்டும் கிடைத்த பெண்களின் கருப்பை ஆண்களின் ஆதிக்கத்தின் கீழ்தான் உள்ளது. அவள் கற்ற கல்வி சம்பாதிக்கும் ஊதியம் இரண்டும் அந்த ஆதிக்கத்தை சமாளித்துத்தான், தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காகப் பயன்படுகிறது. இந்தச் சூழலில் பெண்ணானவள் ஆணின் பத்தினியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் போராடுபவளாகவே மாற்றப்பட்டிருக்கிறாள். தனக்கான அடையாளத்தைத் தேடி வெளிவரும் பெண்களும் ஆண்களின் இச்சைகளை சமாளித்து விட்டுத்தான் அந்த உன்னத நிலைகளில் போய் அமரமுடியும் என்ற நிலையும் நிலவுகிறது. தாலிகட்டியோ, கட்டிக்கொள்ளாமலோ அவள் ஆண்களின் பசிக்கு உருவாக்கப்பட்டிருக்கும் பண்டம்

அவ்வளவே அதை உறுதிப்படுத்தும் விததில் தமிழ்நாட்டில் வழக்கில் இருக்கும் முறைதான் ‘சுமங்கலித் திட்டம்'. அதுபற்றிப் பார்ப்போம்.

இதற்கு திருநெல்வேலிதான் தாயகம். வேலைக்குச் செல்வதன் மூலம் குறிப்பிட்ட தொகை பெண்களுக்கு சம்பளமாக கொடுக்கப்படும். அதை அவர்களின் திருமணத்திற்கு பயன்படுத்திக் கொள்லாம் இது தான் இத்திட்டத்தின் அடிப்படை விவசாயத்தை நம்பியிருக்கும் மக்கள் வறட்சியால் பாதிக்கப்படுகின்றனர். கூலி வேலையை நம்பி குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து கொடுப்பது சவாலான விஷயம். இந்த சுமங்கலித்திட்டம் ஏழை பெற்றோருக்கு சாதகமாக இருக்கிறது. மழை பொய்த்து வருவதால் வேலைக்கே திண்டாட வேண்டிய நிலை. வேலை தேடி இடம் பெயர்ந்து செல்கின்றனர். வாழ்க்கைச் சிக்கல்கள் பெண்களையும் சுமங்கலித் திட்டம் போன்ற மறைமுகமான வழிகளில் கொத்தடிமைகளாக மாற்றுகிறது.

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, அனைவருக்கும் கல்வித்திட்டங்கள் செயல்படுத்தப்படும் தீவிரம் சுமங்கலத் திட்ட ஒழிப்பு இல்லை என்று சொல்லலாம்.

ஒவ்வொரு பிரச்சனை எழுகின்ற போதும் அரசு அதற்கான உதவித் தொகையை அறிவித்துவிடுகிறது, பசித்தவனுக்கு பிச்சை போடுவதை மனிதாபிமானச் செயலாகப் பார்க்கலாம். ஆனால் ஓர் அரசு சலுகைகளை கொடுத்து தனது மக்களை பிச்சை எடுப்பவர்களாக வைத்திருப்பதற்கான திட்டங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. இந்த சுமங்கலித் திட்டம் குறித்து தீவிரமாக பேசப்பட்ட காலத்தில் ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தை அரசு அறிவித்தது. இது அடிப்படைப் பிரச்சனைக்கான தீர்வாக இல்லை.

கொத்தடிமைகளை ஒழித்துக் கட்ட நம்மிடம் சட்டம் உள்ளது. சுமங்கலித் திட்டத்தில் பெண்கள் ஈடுபடுத்தப்படுவது குறித்து இந்தச் சட்டம் இன்றும் கவலைப்படவே ஆரம்பிக்கவில்லை. பின்தங்கிய பகுதிகளான மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், விருத்தாச்சலம், பொள்ளாச்சி, பல்லடம் போன்ற இடங்களில் தொழிற் சாலைகள் தொடங்க அரசு உதவியது. நவீனமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கலுடன் போட்டியிட முடியாத இந்தச் சிறிய ஆலைகள் நொடிந்து போய்மூடப்பட்டன. சில தொழிற்சாலைகள் நவீனமயமாக்கப்பட்டு தொழிலாளிகள் வேலை இழந்தனர்.

இங்கெல்லாம் சொற்ப கூலி வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டனர். இதற்கு பெண்களின் திருமணக் கனவு கைகொடுத்தது. திருமணம் என்பது பெண்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. நல்ல வாழ்க்கை அமைய வேண்டும். குறைந்தபட்சம் 10 பவுனும் ரூ. 30 ஆயிரமும் வரதட்சணை தேவைப்படுகிறது. இந்த சுமங்கலித்திட்டத்தைப நூற்பாலைகள் ஆரம்பித்து வைத்தன. 15 முதல் 20 வயது வரை உள்ள பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பணியில் அமர்த்தப்பட்டனர்.

பெண்களைப் பிடித்து நூற்பாலைகளுக்கு அனுப்பிவைக்க முகவர்கள் பலர் செயல்படுகின்றனர். இனிக்க இனிக்கப் பேசி சாதிக்கும் வேலை அவர்கள் கையில் உள்ளது. மூன்று ஆண்டுகள் வேலை செய்தால் போதும் ரூ 30 ஆயிரம், கிடைக்கும் என்ற ஆசைகாட்டி பெண்களை வேலைக்கு அமர்த்துகின்றனர். ஒரு பெண்ணை சேர்த்து விட்டால் முகவருக்கு ரூ. 500. கிடைக்கும்.

சுமங்கலித் திட்டத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் அந்த நூற்பாலை விடுதியில் தங்கிக் கொள்ள வேண்டும். வெளியில் எங்கும் செல்ல முடியாது. மூன்று ஷிப்ட் வேலை பார்க்க வேண்டும்

மாதத்திற்கு ஒருமுறை மட்டும் அலுவலக வேனில் பாதுகாவலருடன் கடைவீதிக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். தாய் தந்தையர் கூட மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே பார்த்து விட்டுச் செல்லமுடியும். மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு தான் உடன் செல்ல முடியும். இவர்கள் வீட்டுக்கு அனுப்பும் கடிதங்களும் படித்துப் பார்க்கப்பட்ட பின்பே அனுப்பப்படும்.

சுமங்கலித் திட்டத்தில் இந்தப் பெண்கள் கொத்தடிமைகளாக மாற்றப்படுகின்றனர். கடுமையாக வேலை வாங்கப்படுகிறது. ஒவர்டைம் வேலை பார்த்தாலும் அதற்குத் தனியாகக் கூலி வழங்கப்படுவதில்லை. அடிமாடுகளாக மாற்றப்பட்டு வேலை வாங்கப்படுகின்றனர். இதுமட்டுமில்லை. இவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கும் ஆளாகின்றனர். 10க்கு 10 அளவு கொண்ட அறையில் எட்டு முதல் பத்துப் பெண்கள் வரை தங்க வேண்டும். இவர்களுக்கு ரூ 35 முதல் ரூ 40 வரை தினக் கூலி வழங்கப்படுகிறது. ஆண்டுகளுக்கு ரூ.2 கூலி உயர்வாக வழங்கப்படுகிறது. வாங்கும் கூலியில் இருந்து உணவு, இருப்பிடம், போன்றவற்றிக்காக தினமும் ரூ 20 முதல் ரூ 25 வரை கழித்துக் கொள்ளப்படுகிறது.

இவர்கள் அனுபவிக்கும் கொடுமையின் உச்சகட்டமே பாலியல் ரீதீயான வன்முறைகள்தான். பாதியில் வேலையை விட்டுச் சென்றால் எந்தப் பணமும் கிடைக்காது. அதனாலேயே இவர்களின் கொடுமைகளை சகித்துக் கொண்டு வேலை செய்ய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறது. சிலர் தப்பிக்க முயற்சி செய்வதும் உண்டு. இந்த கொடுமைக்கு காரணமானவர்கள் மீது அரசு நடவடிக்கை ஏதும் இல்லை. மதுரை பரவை மீனாட்சி நூற்பாலையில் வேலை செய்த அபிராமிக்கு 19 வயது. அவர் நூற்பாலை விடுதியில் கடந்த நவம்பர் 2005 இல் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 2006 ஆம் ஆண்டு திருப்பூர் சூர்யா மில்லில் வேலை பார்த்த காளியம்மாள் (19)தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது போன்ற சம்பவங்கள் அவ்வப் போது நடக்கின்றன. இந்தத் தற்கொலைகள் பல கேள்விகளை எழுப்புகின்றன.

சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த பெண்கள் நான்கு பேர் கோவை பட்டணத்தில் உள்ள நூற்பாலை சுற்றுச் சுவரைத் தாண்டிக் குதித்து தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். இதுபோன்ற துயர சம்பவங்கள் அப்போதைக்கு அப்போது பரபரப்பாக பேசப்படுகின்றன. இதைத் தடுக்க அரசு திருமண உதவித்தொகை வழங்குகிறது. பிரச்சினையின் வேரைப் பற்றி அரசுக்கு கவலை இல்லை.

பெண்களை கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குபவர்களை சட்டத்திடம் இருந்து பணம் காப்பாற்றி விடுகிறது. பெண்களை அடிமைகளாக மாற்றியிருப்பது திருமணமுறைக்குள் ஒளிந்திருக்கும் வரதட்சனை என்கிற பழக்கம். அதை ஒழிக்காமல் இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காணமுடியும்? பெண்கள் என்றால் கட்டாயம் திருமணம் செய்தாக வேண்டும். குழந்தைகளை பெற்றுத்தராவிட்டால் இந்த உலகம் தலைக்காது. அல்லது குறிப்பிட்ட வயதிற்குப் பின் சில ஆண்களால் எற்பட இருக்கும் அபாயங்களை கருத்தில் கொண்டாவது ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டியாக வேண்டும். இது போன்ற கருத்தியல்களை உடைத்தெறியாமல் பெண் விடுதலை சாத்தியமற்றது. எரியும் புண்ணிற்கு மருந்து போடும் அரசு மக்கள் பிரச்சினைகள் குறித்த தொலைநோக்கு சிந்தனை அற்ற அரசு அறிவிக்கும் சலுகை என்கிற எலும்புத் துண்டுக்குப் பின்னால் மக்கள் போகிற வரைக்கும் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.

குடும்ப அமைப்பு குறித்த புனிதங்களை வண்டி வண்டியாகச் சுமந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் தான் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தையும் கொண்டு வரவேண்டியிருக்கிறது. காதல் என்கிற விஷயமும் எந்தக் கேள்வியும் கேட்காத அடிமைகளை துணையாக தேர்வு செய்து கொள்ள ஆண்கள் பயன்படுத்தும் ஆயுதமாகவே தொடர்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பெண்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஒரு பெண் வாழ்வாதாரத்திற்காக சம்பாதிக்கலாம். அவள் இன்னொருவனுக்கு கழுத்தை நீட்டுவதற்கு தட்சனை கொடுப்பதற்காக கூலி அடிமைகளாக மாற்றப்படுவது பெண்ணடிமைத்தனம். நம் சமூகத்தில் ஆழமாக இருப்பதற்கான அடையாளமே. பெண் விடுதலை என்பது உடை தடைகளற்ற போக்கு, வரம்பற்ற பாலியல் நுகர்வு போன்றவற்றைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை.

அவளுக்கான அரசியல், மொழி, சிந்தனை, அடையாளம் அதற்கான போர்க்குணம் போன்றவை தேவைப்படுகின்றன. படிக்காத காட்டு வேலையை நம்பியிருந்த பாட்டிகள் கணவன் இறந்தபின் தன் உடல் உழைப்பை மட்டும் வைத்துக் கொண்டு குழந்தைகளைக் கரை ஏற்றி விட்டு கதை பேசிக் கொண்டிருக்கிறார்கள். படித்து பொருளாதாரத்திலும் வெற்றி கண்ட பெண்கள் குடும்பப் பிரச்சினையைக் காரணம் காட்டிக் குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்து முடித்துக் கொள்ளும் நம்பிக்கையற்ற சூழலில் நாம் இருக்கிறோம்.

இதை மாற்றப் பெண்களுக்காக எழுதிக் கொண்டிருக்கும், பெண்களுக்காகச் சிந்திக்கும், பெண்களுக்காகப் போராடும் அமைப்புகள் என்ன செய்யப் போகின்றன?
Pin It