தமிழர்களின் வடஎல்லைப் போராட்டம் தமிழ் நாட்டுடன் இருந்த பகுதிகளை (சென்னை மாகாணம்) இழக்காமல் இருப்பதற்காக நடந்த போராட்டம். திருவிதாங்கூர் தமிழர் போராட்டம் இன்னொரு நாட்டிலிருந்த தமிழ்ப்பகுதிகளை மீட்பதற்காக நடந்த போராட்டம். இந்தப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர் தென்எல்லைக் காவலன் குமரித்தந்தை மார்ஷல் நேசமணி.

திருவிதாங்கூர் தமிழர்கள் சமூகநீதி, பெண்ணு ரிமை, மண்காப்பு, ஆலய நுழைவு, ஓட்டுரிமை, மொழிகாப்பு ஆகியவற்றிற்காக சுமார் 300 ஆண்டுகள் போராடி வந்தனர். 1921லிருந்து 1956 வரை நேசமணி வழிகாட்டுதலிலும் தலைமையிலும் இந்தப் போராட்டம் நடந்தது. தேவிகுளம், பீருமேடு தமிழர் களை மிகவும் துன்புறுத்தியது திருவிதாங்கூர் அரசு. தமிழ்த் தலைவர்களைக் கையில் விலங்குபோட்டு அழைத்துச் சென்றனர். 650-க்கு மேல் வழக்குகள் போட்டனர். குப்புசாமி என்ற இளைஞரை அடித்து செவிப்பறையைக் கிழித்துவிட்டனர். சுப்பையா என்ப வரை விலங்குபோட்டுக் கடைவீதியிலே நடக்கச் செய்தனர். 434 தமிழர்களையும் 20 தமிழ்ப் பெண் களையும் ஒரே சிறையில் அடைத்தனர். எங்கும் கதறலும் கண்ணீருமாக இருந்தது. அவர்களின் அபயக் குரல் கேட்ட தலைவர் நேசமணி ஜனாப் அப்துல் ரசாக், திரு. சிதம்பரநாதன் ஆகியோர் தேவிகுளம் சென்றனர். 4.7.1954 அன்று அவர்கள் மூணாற்றில் வைத்து பி.சி. அலெக்சாண்டரால் கைது செய்யப் பட்டனர்.

தென்எல்லைக் காவலன் நேசமணியையும் உடன் சென்றவர்களையும் விடுதலை செய்யப் போராட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 9ஆம் நாள் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். நேசமணி விடுதலை நாளும், நாடு விடுதலை நாளும் இணைந்து கொண் டாடத் திருவிதாங்கூர் தமிழ் மக்கள் திட்டம் போட்டனர். எங்கும் ஊர்வலமும் கூட்டமும் நடைபெற்றன. இதனால் விளவங்கோட்டில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இறந்த தமிழ்த் தியாகிகள் நாள் தான் ஆகசுட்டு 11.

இப்போராட்டத்தில் தன் இன்னுயிரைத் தமிழ் மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் ஈன்ற தியாகிகள் :

1.            ஏ. அருளப்பன் நாடார், புதுக்கடை

2.            எம். முத்துசாமி நாடார், கிள்ளியூர்

3.            எம். குமரன் நாடார், தோட்டவாரம்

4.            எம். செல்லப்பா பிள்ளை, புதுக்கடை

5.            ஏ. பீர்முகமது, தேங்காபட்டணம்

6.            சி. பப்புப் பணிக்கர், தொடுவெட்டி

7.            எஸ். இராமையன் நாடார், நட்டாலம்

8.            ஏ. பொன்னப்பன் நாடார், தோட்டவிளை

9.            எம். பாலையன் நாடார், தோட்டவிளை, மணலி

இவர்களுக்கு முன் திருவிதாங்கூர் தமிழ் மக்களுக் காக, 1948 பிப்ரவரி 8இல் தேவசகாயம் நாடார், செல் லையா நாடார் ஆகிய இருவரும் தமிழ் மண்ணுக் காகவும், சமூக நீதிக்காகவும் போராடித் தம் இன்னுயிரை ஈந்தனர். மேலும் இப்போராட்டத்தில் சங்கரன் நாடார் என்பவர் கிணற்றில் வீசிக் கொல்லப்பட்டார். ஒருவர் வண்டியேற்றிக் கொல்லப்பட்டார். பனை உச்சியிலிருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப் பட்டார். மடிச்சல் சங்கு நாடார் கொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டார். கர்ப்பிணிப் பெண் ஒருத் தியும் கொல்லப்பட்டார். மொத்தம் 36 பேர் பலியான தாகச் சான்றுகள் உள்ளன.

இந்தத் தியாகிகளைத் தமிழ் உலகம் கண்டு கொள்ளவே இல்லை. அவர்களுக்குச் சிலை வைக்கவோ, பாராட்டு நடத்தவோ இல்லை. அதைவிட வேத னையான ஒன்று, திருவிதாங்கூர் தமிழர்களே இந்தத் தியாகிகளை மறந்துவிட்டார்கள். தியாகிகளின் தியாகத் தை நினைவுகூருவோம்; மதிப்போம். அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை கொடுத்து வாழ வைக்கும்படி வேண்டுகிறோம். விடுபட்ட தியாகிகளுக்கு ஓய்வூதியம் கொடுத்துச் சிறப்பிக்கும்படி, தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.