நீங்கள் பெரிய மனிதராக மதிக்கப்பட வேண்டுமா; வள்ளலாக வர்ணிக்கப்பட வேண்டுமா; கதாநாயகன் போல் காட்சிதர வேண்டுமா; ஓட்டு அரசியலுக்குள் நுழைய வேண்டுமா; புரட்சியாளர் போல் புகழப்பட வேண்டுமா; ஏழைப்பாங்காளன் என்ற பட்டம் வேண்டுமா; இவ்வளவு ஏன்? நீங்கள் முதல்வர் மற்றும் பிரதமர் பதவிகளுக்கு வரவேண்டுமா; அதற்கு மிகவும் உங்களை வருத்திக் கொள்ள வேண்டாம். ஒரு சின்ன வேலை செய்தால் போதும். மேற்குறிப் பிட்ட ஏதாவது ஒன்றுக்குள் தாராளமாக நுழைந்து விடலாம். இதைக் கிராம மொழியில் “நோவாமல் நோன்பு கும்பிடுவது” என்றும் சொல்லலாம்.

அது என்ன சின்ன வேலை?

நண்பர்களே! கண்களில் கருணை தெரிய வேண் டும். நாவினில் பொய் தவழ வேண்டும். நான்கு எடுபிடிப் பேர்வழிகள் புடைசூழ, தலித் மக்கள் குடி யிருப்பான சேரிப் பகுதியினுள் செல்ல வேண்டும். ஒட்டிய வயிற்றுடன் கந்தலாடை அணிந்துகொண்டு அரச மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் தலித் மனிதர் களின் தோளில் கைப்போட்டு அன்பொழுகப் பேச வேண்டும். ஏழை தலித் பெண் மண்கூடை சுமந்து கொண்டு ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போது நீங்கள் உங்கள் பங்குக்குப் பளபளப்பான ஒரு கூடை ஏற்பாடு செய்து, அதில் கொஞ்சமாக மண்ணை நிரப்பி ரொம்ப சிரமப்பட்டு அப்பெண்ணுடன் நடக்க வேண்டும். நிர்வாணக் கோலத்திலிருக்கும் அவர்கள் வீட்டுப் பிள்ளைகளில் ஏதாவது ஒரு குழந்தையைத் தேர்ந்தெடுத்துத் தூக்கிக் கொஞ்ச வேண்டும். அப் பகுதிகளில் இருக்கும் தொடக்கப் பள்ளிகளில் நுழைந்து ஒரு பிள்ளையுடன் அமர்ந்து அவர்களுடன் நீங்களும் எழுதுவது போல் பாவனை செய்ய வேண்டும். பின் இரவு நேரம் ஆனவுடன் தேர்வு செய்யப்பட்ட ஒரு குடிசைக்குள் நுழைந்து அவ்வீட்டு மக்களுடன் அமர்ந்து ஒன்றாகச் சாப்பிட வேண்டும். இரவு, நடுநேரம் வரை அவர்களுடன் பேசிக்கொண்டிருக்க வேண்டும்.

இவை எல்லாவற்றையும்விட முக்கியமான ஒன்று இருக்கிறது. அதுதான் படம் (பிலிம்). போகும்போது யாரைக் கூட்டிக்கொண்டு போவீர்களோ, இல்லையோ புகைப்படக் கலைஞரைக் கண்டிப்பாகக் கூட்டிச் செல்ல வேண்டும். நீங்கள் மிகவும் சிரமப்பட்டு செய்த ஏற் பாடுகள் போட்டோ (யீhடிவடி)வாக எடுக்கப்பட வேண்டும். எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பின் செய்தித்தாள்களில் வருமாறு முயற்சிக்க வேண்டும். கண்டிப்பாக உங்கள் பிறந்த நாள்களில் இவைகளெல்லாம் போஸ்டர்களாக மாறி ஊரெங்கும் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். பிற கென்ன? உங்கள் தலையைச் சுற்றி ஒளிவட்டம் உரு வாகும். நீங்களும் முதல்வராகலாம், பிரதமராகலாம்...

இதெல்லாம் சினிமாக்காரர்களுக்குத்தான் சரிப்பட்டு வரும் என்று தயவுசெய்து தப்புக் கணக்கு போட்டுவிட வேண்டாம். நீங்கள் எவ்வளவு போக்கிரியாக, அய்யோக்கியனாக, பைத்தியக்காரனாக இருந்தாலும் ஓட்டு அரசியல் இருக்கும் வரை, போலித்தனமான பாராளுமன்ற ஜனநாயகம் இருக்கும் வரை நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதில் கூடுதலாகக் கொஞ்சம் குடும்பப் பின்னணி இருந்துவிட்டால் போதும். உங் களுக்குப் படிப்பு, பண்பு, அறிவு, திறமை ஒன்றுமே வேண்டாம். உங்களிடம் இருக்கும் பலகீனங்கள் தன்னால் மறைந்துவிடும். பின் அவையெல்லாம் பலமாக மாறும். மேற்குறிப்பிட்டவைகள் எல்லாம் உலகத்தில் மற்ற நாட்டவர்க்குப் பொருந்திவராமல் போகலாம். ஆனால் இந்தியச் சூழல் நிச்சயம் உங் களுக்கு கைகொடுக்கும். உங்களுக்குச் சந்தேகம் இருந் தால் நம் இந்திய அரசியல் கட்சித் தலைவர்களைக் கவனியுங்கள். அவர்கள் உங்களுக்குப் பாடம் எடுப் பார்கள். எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் அப்படித்தான் இருப்பார்களா? என்று நீங்கள் கேட்டால், அதற்கு ‘ஆமாம்’ என்பதுதான் ஒரே பதில்.

எடுத்துக்காட்டுக்கு எவ்வளவோ பேர் இருந்தாலும், ஏன்? தலித் தலைவர்களிலே கூட ஒரு சில பேர் இருந்தாலும் ஊரறிந்த, உலகறிந்த ஆளத்தெரியாமல், வாழத் தெரியாமல், வளர்வதற்கு வழியும் தெரியாமல் நாட்டையே ஆள்வதற்குத் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு முதிர் இளைஞனை எடுத்துக் கொள்வோம். அந்த ‘பிரம்மாச்சாரி’ வேறு யாருமல்ல, நமது அன்னை சோனியாகாந்தியின் ஒரே மகன் இளவரசர் ராகுல் காந்திதான்.

கனவுப் பிரதமர் ராகுல் காந்திக்கு வளர்வதற்கு வழி தெரியாமல் இருக்கிறதா? அல்லது ஆலோசனை சொல்வதற்கு ஆள் இல்லாமல் இருக்கிறாரா? இரண் டுக்குமே பிரச்சனை இல்லை. அழகான முகவெட்டு, எடுப்பான தோற்றம், சிறப்பான கல்வி, நல்ல குடும்பப் பின்னணி இவ்வளவு வாய்க்கப் பெற்றும், இளவர சர்க்கு ‘இமேஜ்’ இடித்துக் கொண்டிருக்கிறது. உடனடியாக ஏழை பாங்காளன் பட்டம் வேண்டும். என்ன செய்ய லாம்? எங்கிருந்து தொடங்கலாம்? என்று கணக்குப் போடுகிறார். உடனடியாக ஒரு தலித் குடிசை தேவை. அவர்கள் குடும்பத்திற்கென்றே ‘பட்டா’ போட்டுத் தந்த ஒரு மாநிலம் அவர் கவனத்திற்கு வருகிறது. வறுமைக் கோடு - தலித் குடியிருப்பு - இமேஜ் - பிரதமர் பதவி. பலே! பலே! சரியான இடம் உத்தரப்பிரதேசம். அன் றையிலிருந்து அவர் சிந்தனையில் ஒட்டிக்கொண்டது தான் தலித் பாசம்.

தனது கையாட்களுக்குக் குறிப்புகள் கொடுக்கிறார். அவர்கள் அதற்கு ஏற்றாற்போல் இடம், சூழல், ஆட்கள் எல்லாம் ஏற்பாடு செய்கிறார்கள். கையாட்கள் என்றால் திரைப்படங்களில் வரும் அடியாட்கள் போலக் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தான். இதைவிட என்ன பெரிய வேலை அவர்களுக்கு? நாடகம் அரங்கேறியது. ஒளிப்பதிவாளர் படம்பிடிக்கிறார். ஏதுமறியாத அப்பாவிகளான அந்த தலித் மக்கள் தங்களது பிரச்சனைகளை இளவரசர் ராகுல்காந்தி யிடம் முறையிடுகிறார்கள். தனக்கே உரிய பாவனை யுடன் அம்மக்களிடம் நெருக்கமாகப் பேசுகிறார். தோளில் கை போடுகிறார். அங்கிருக்கும் ஆரம்பப் பள்ளிக்கூடங்களுக்குச் சென்று அங்குப் படிக்கும் மாணவிகளுடன் ஒன்றாக அமர்ந்து அவர்கள் எழுது வதற்கு கற்றுக்கொடுக்கிறார். அங்கிருக்கும் பெரியவர் களிடம் உட்கார்ந்து பேசுகிறார். இரவு நேரம் அங்கிருக்கும் பெண்களின் வேண்டுகோளுக்கிணங்க இரவு உணவுக்குத் தயாராகிறார். குனிந்தபடி குடிசைக்குள் சென்று வெகு இயல்பாக அம்மக்களுடன் தரையில் அமர்ந்தபடி உணவு உண்கிறார். நடுஇரவு வரை அம்மக்களுடன் பேசிவிட்டு விடைபெற்றுச் செல்கிறார். மேலோட்டமாகப் பார்க்கும் போது நெஞ்சம் நெகிழத் தோன்றும். எம்.ஜி.ஆர். படங்கள் பார்த்து பழகிய நமக்குக் கொஞ்சம் கூடுதலாகவே நெகிழத் தோன்றும். பெரியார், அம்பேத்கர் பார்வையில் பார்க்கும் போது தான் ராகுல்காந்தி போன்ற தலைவர்களின் நோக்கங் களை நாம் புரிந்துகொள்ள முடியும்.

பொதுவாக நம்மைப் போன்றவர்களைப் பார்த்து நீங்கள் யார்? என்ன வேலை செய்கிறீர்கள்? என்றால் அதிகபட்சமாக டாக்டர், வழக்கறிஞர், பொறியாளர், தொழிலதிபர் என்போம். நமது தந்தைமார்களைப் பற்றிக் கேட்டால், ஒன்று விவசாயத் தொழிலாளி என்போம். இல்லையேல், ‘கூலித் தொழிலாளி’ என்போம். நமது பாட்டன்மார்களைப் பற்றிக் கேட்டால் ஒரே பதில் ‘தெரியாது’ என்பதுதான். கண்டிப்பாக அவரும் ஒரு கூலியாகத்தான் இருந்திருப்பார். சிலர் கொஞ்சம் இதைவிட மேலே இருந்திருக்கலாம். ஆனால் இதே போன்ற கேள்விகளை ராகுல்காந்தியிடம் பொருத்திப் பார்ப்போம். யார் ராகுல் காந்தி? எல்லோருக்கும், அவரை தெரிந்திருந்தாலும் இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே....

ராகுல் காந்தி - இந்திய தேசிய காங்கிரசின் துணைத் தலைவர். 42 வயதாகியும் திருமணம் செய்து கொள் ளாதவர். புதுதில்லி மாடர்ன், குன் பள்ளிகளில் ஆரம்பக் கல்வி. அமெரிக்காவில் பி.ஏ., பட்டப்படிப்பு. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் படித்ததாகத் தகவல். பின் லண்டனிலுள்ள மைக்கேல் போர்டேர்ஸ் நிர்வாக ஆலோசனை நிறுவனம் மற்றும் கண்காணிப்புக் குழுமத்தில் மூன்று ஆண்டுகள் பணி. 2002ஆம் ஆண்டு இந்தியா திரும்பி மும்பையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிறுவனம் நடத்தினார். 2004ஆம் ஆண்டு முதல் தனது தந்தையின் தொகுதி யான உத்தரப்பிரதேசம் அமேதி தொகுதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர். மற்றபடி அமைச்சரவையில் எந்தவித பொறுப்புகளிலும் இல்லாமலேயே நேரடி யாகப் பிரதமர் பதவியின் காத்திருப்புப் பட்டியலில் இருப்பவர்.

இவரது தாய் எட்விகி அண்டோனியா அல்பினா மையினோ என்ற இயற்பெயர் கொண்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்த சோனியாகாந்தி. ராஜீவ்காந்தி என்கிற முன்னாள் இந்திய பிரதமரின் மனைவி. இந்திய தேசிய காங்கிரசின் தலைவர். தற்போது இந்தியாவை ஆண்டுக்கொண்டிருக்கின்ற அய்க்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர். அதாவது இந்திய நாட்டின் உயர் அதிகாரம் படைத்த பிரதமரையே வழி நடத்துபவர்.

இவரது தந்தை ராஜீவ்காந்தி. முன்னாள் இந்தியப் பிரதமர். அரசியலில் சற்றும் ஆர்வமில்லாது விமான ஓட்டியாக இருந்து மேல்மட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவர்.

இவரது பாட்டி இந்திரா பிரியதர்சினி என்கிற இந்திராகாந்தி இந்தியாவின் உயர்ந்த பதவியான பிரதமர் பதவியில் 15 ஆண்டுகாலம் இருந்தவர்.

இவரது கொள்ளுத்தாத்தா பண்டிட் ஜவகர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமர். இந்தியா விடுதலை பெற்ற நாளான 1947 ஆகஸ்டு 15லிருந்து தாம் இறக்கின்ற 1964 வரை இந்தியப் பிரதமராகப் பதவி வகித்தவர். பள்ளிக்கல்வி, சட்டக்கல்வியை இங்கிலாந்தி லேயே படித்தவர்.

இவரது கொள்ளுத் தாத்தாவின் தந்தை மோதிலால் நேரு 1861-1931 வரை வாழ்ந்தவர். காஷ்மீர் பண்டிட் சாதியைச் சேர்ந்தவர். வழக்கறிஞர். 1919-1920, 1928-1929 ஆகிய காலங்களில் இரண்டு முறை இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியின் தலைவராக இருந்தவர். இவரது அப்பாவும் வழக்கறிஞர். இவரது தாத்தா பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் முகலாயப் பேரரசு நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தவர்.

இதைவிட இந்தியாவில் யாராவது மேல்மட்ட வாழ்க்கை வாழ்ந்திருப்பார்களா? இதுபோன்ற குடும்பப் பின்னணியில் வந்தவன் எவனாவது அடிமட்ட மக்க ளுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொள்வானா? அடித்தட்டு மக்களுக்காக அல்லும் பகலும் உழைப்பதா கவும், அதுதான் தனது முழு நேரச் சிந்தனை என் றால், அதில் உண்மை இருக்குமா? நடுநிலையோடு சிந்தித்துப் பார்ப்போம். தலித் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக உழைப்பதாக தன்னைப் பறைசாற்றிக் கொள்ளும் ராகுல், வறுமையில் உழன்றவரா? சேரிக் குடிசையில் பிறந்தவரா? சமூகத்தாக்கம் கொண்டவரா? குறைந்தபட்சம் அம்பேத்கரையாவது படித்தவரா? எதுவுமில்லாத இவர் தலித் மக்களுக்காக உருகுகிறார் என்றால், அந்த உருக்கத்தை நாம் உன்னிப்பாகக் கவனித்தே ஆகவேண்டும். பெரியார் சொன்னதுபோல், “நாவில் குற்றமில்லாமல் வேம்பு இனிக்காது”.

அண்மையில் ‘தலித்துகளுக்கான தேசிய ஆணை யம்’ சார்பில் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பேசியது : “விரைவில் காங்கிரசுக் கட்சி யின் முதுகெலும்பாகத் தலித் மக்கள் இருப்பார்கள்; தேர்தலின்போது காங்கிரசுக் கட்சியில் தலித் வேட் பாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முயற்சி மேற்கொள்வேன்.

அவர்களுக்கு அடைக்கப்பட்ட கதவுகள் அனைத்தும் திறக்கப்படும். காங்கிரசுக் கட்சி மீது தலித் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

தலித் மக்களை மேம்படுத்துவதற்காகக் கன்ஷிராம் ஒரு கட்சியை உருவாக்கினார். ஆனால் அவரது மறைவுக்குப்பின் தலித் மக்களின் மேம்பாட்டுக்காக அக்கட்சி எதையும் செய்யவில்லை.

உத்தரப்பிரதேசத்தில் பிரபலமான 5 தலித் தலைவர்களின் பெயரைக் கூறுங்கள் என்றால், மாயாவதி தவிர வேறு யாரையும் கூற முடியவில்லை. அவருக்கு அடுத்த நிலையில் கட்சியில் தலித் தலைவர்கள் இல்லாதது ஏன்? உத்தரப்பிரதேசம், தில்லி மட்டுமல்லாது வட்டார அளவிலும் கிராம அளவிலும் மாயாவதி தன்னை மட்டுமே ஒரே தலித் பிரதிநிதியாக முன்னி லைப்படுத்திக் கொள்கிறார்.

எந்த அரசியல் கட்சியும் தலித் மக்களுக்குச் சம உரிமை அளிக்கவில்லை. இதற்கு எதிராகப் போராட வேண்டும். தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதைப் பல கட்சிகளில் ஒரு சிலர் மட்டுமே முடிவு செய்கின்றனர்.”

இப்படித் தன்னை ஒரு தேவதூர் போல் தலித் மக்களிடம் படம் காட்டும் ராகுல் காந்தி இந்திய அரசியல் கட்சிகளுடன் தமது கட்சியான காங்கிரசுக் கட்சிக்கும் சேர்த்து தன்னிலை விளக்கம் தர முயற்சித்திருக் கிறார். அவர் பேசியது எதுவுமே மறுப்பதற்கில்லை. மாயாவதியைப் பற்றி குறிப்பிட்ட எதுவுமே பொய் யில்லை. இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லோருமே மாயாவதிகள்தான். ஆனால் மாயா வதிக்கு மட்டும் ராகுல் குறிவைப்பது ஏன்?

தலித் மக்களுக்கு விடுதலை வந்துவிடக்கூடாது அல்லது உரிமைகளைப் பெற்றுத்தர தலித் சமூகத்திலி ருந்தே எந்தத் தலைவரும் உருவாகிவிடக் கூடாது என்பது ஒரு காரணம். இச்சிந்தனை எல்லாத் தலைவர் களிடையேயும் நீக்கமற நிறைந்திருக்கிறது. ராகுல் காந்திக்குக் கூடுதலாக இன்னொரு பெரிய காரணம் இருக்கிறது. அதுதான் பிரதமர் கனவு. இந்தியாவில் பிரதமர்கள் தயாரிக்கப்படும் இடம் உத்தரப்பிரதேசம். தலித்துகள் அதிகம் வாழும் மாநிலமும் உத்தரப் பிரதேசம். அவரது பரம்பரைக்குத் தேர்தல்களில் நிற்கும் தொகுதி இருப்பதும் உத்தரப்பிரதேசம். அப்பாவிகள் அதிகம் வாழ்வதும் உத்தரப்பிரதேசம். கணக்குப் போடுகிறார் கனவுப் பிரதமர். அவருக்குப் பேசுபொருள் தலித் மக்களாகிறார்கள். விமர்சிக்கும் தலைவர் மாயாவதியாகிறார். “பூனைக்குட்டி வெளிவந்து விடுகிறது.”

சுதந்திர இந்தியாவை ஏறக்குறைய 60 ஆண்டு கள் ஆண்டவர்கள் காங்கிரசார்தானே; அதில் இதே ராகுல் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்தானே பிரதமர் பதவியில் இருந்தவர்கள். தலித் மக்களுக்கு என்ன செய்து கிழித்தீர்கள்? இப்போது மட்டும் ஏன் திடீர்ப் பாசம் பொங்குகிறது? என்று ராகுலைப் பார்த்து தலித் மக்கள் கேட்டால், அவரது முகத்தை எங்கே வைத்துக் கொள்வார்? மரியாதைக்குரிய ராகுல்காந்தியின் அறி வின் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. அதை அவர் இந்த நாட்டு மக்களுக்கு இன்றும் நிரூபிக்க வில்லை. அதேபோல் அவரது ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அக்கறையிலும் யாருக்கும் நம்பிக்கை இருக் காது. அதையும் அவரால் நிரூபிக்க முடியாது. அவர் கண்டிப்பாக மார்க்சையோ, அம்பேத்கரையோ படித் திருக்கமாட்டார். அதற்கான வாய்ப்பும் அவருக்கு ஏற்பட்டிருக்காது. ஆனால் அவர் தலித் மக்கள் மீது பாசம் பொழிகிறார். ஏழைகள் மீது கசிந்துருகுகிறார்.

தலித் மக்களின் இரட்சகராகத் தன்னை மாற்றிக் கொண்டிருக்கும் அன்னை சோனியாவின் அன்பு மகன் பேசுவது ஒருபுறம் இருக்கட்டும். தனது கல்வி, உழைப்பு, வாழ்க்கை அனைத்தையும் தலித் மக் களின் விடுதலைக்காக அர்ப்பணித்த தலைவர் மேதை அம்பேத்கர் பேசுவதைக் கொஞ்சம் கவனிப்போம். முடிந்தால் ராகுல் காந்தியும் தெரிந்து கொள்ளட்டும்.

“நீங்கள் எதை இழந்தீர்களோ அதை மற்றவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். நீங்கள் தாங்கிக் கொண்டிருக்கும் இழிவுகளின் மீதுதான் மற்றவர்களின் பெருமை நிலைகொண்டிருக்கிறது. வருவாய்க்கு வழியின்றிப் பசியிலும், கொல்லும் வறுமையிலும், இழிவுகளிலும் நீங்கள் துன்புறுவது உங்களுடைய முற்பிறவியில் நீங்கள் செய்த பாவங்களின் விளை வாக விதிக்கப்பட்ட தண்டனைகள் அல்ல. உங்களுக்கு மேலே இருப்பவர்களின் துரோகமும், அடக்கி ஆளும் கொடுமையுமே இவற்றுக்குக் காரணங்களாகும். உங்களிடம் நிலம் இல்லை - ஏனெனில் மற்றவர்கள் உங்களிடமிருந்து அதைப் பறித்துக் கொண்டார்கள். நீங்கள் பதவிகளில் இல்லை. ஏனெனில் அவற்றை மற்றவர்கள் ஏகபோகமாக ஆக்கிக் கொண்டார்கள். எனவே விதியை நம்பாதீர்கள். உங்களுடைய வலி மையில் நம்பிக்கை வையுங்கள்” தலித் மக்களிடம் அம்பேத்கர் பேசிய இப்பேச்சிலிருந்து என்ன தெரிகிறது?

மாயாவதி போன்றவர்கள் தலித் மக்களின் துரோகி கள் என்றால் ராகுல்காந்தியின் கூட்டத்திற்கு என்ன பெயர் சூட்டலாம்? “ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்படும்” கதைதான் கனவுப் பிரதமர் இராகுல் காந்தியின் பேச்சும், செயலும். தலித் மக்களின் ஓட்டுக்களை அபகரிப்பதற்கு அழகான இதுபோன்ற ராகுல்காந்திகள் இந்தியாவில் எல்லாத் தெருக்களிலும் உண்டு. இவர்களால் எந்தத் தலித்தும் எந்த உரிமை யும் பெற முடியாது. “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” என்ற பெரியாரையும், “கற்பி! புரட்சிசெய்! ஒன்றுசேர்!“ என்ற அம்பேத்கரையும் பின்பற்றுவது தான் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே தீர்வு.

Pin It