கியூபா, அவானாவில் உள்ள தேசிய மீன் கண்காட்சியினை முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பார்வையிட்டார். அவருடன் அமெரிக்கப் இதழாளர் ஜெப்ரி கோல்ட் பெர்க் மற்றும் பலர் இருந்தனர். இறப்பின் விளிம்புக்கே சென்று தான் மீண்டு வந்துள்ளதாகக் கியூபாவின் முன்னாள் அதிபரும், முதுபெரும் கம்யூனிசத் தலைவருமான பிடல் காஸ்ட்ரோ (84) உருக்கமாகத் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நான், மீண்டும் பிழைப்பேனா என்று நினைத்தேன். ஆனால் நான் சாவை வென்றுவிட்டேன் என்றும் மெக்சிகோ நாட்டின் இதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பிடல் காஸ்ட்ரோ கூறியுள்ளார்.

இதழுக்கு அளித்த செவ்வியில் அவர் மேலும் கூறியது: உடல் நலம் பாதித்த போது நான் பிழைத்திடுவேனா, இல்லை இறந்திடுவேனா, மருத்துவர்கள், என்னைக் காப்பாற்றிவிடுவார்களா, இல்லை முடியாது என்று கையை விரித்திடுவார்களா என்றெல்லாம் அடுக்கடுக்கான வினாக்கள் என்னுள் எழுந்தன. ஆனால் உடல் மிகவும் மோசமடைந்த நிலையில் இருந்து மீண்டுவிட்டேன். உடல்நிலை தேறி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பிய நான் மீண்டும் வழக்கமான நிலைக்குத் திரும்பக் கடுமையாகப் போராடினேன்.

உடல்நலப் பாதிப்பால் என் கால்களும், கைகளும் செயலிழந்து காணப்பட்டன. இதனால் கால்களையும், கைகளையும் பழைய நிலைக்கு கொண்டுவர முயன்றேன். எழுந்து நிற்பதே கடினமாக இருந்தது. எனினும் மனஉறுதியுடன், துன்பப்பட்டு எழுந்து நடந்தேன். தூவலை (பேனாவை) எடுத்து எழுதிக் கைக்கு வேலை கொடுத்தேன். உள்ளத்தையும், உடலையும் மீண்டும் புத்துணர்வாக வைத்துக் கொண்டேன். இதனால் என்னால் ஓரளவுக்கு வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்ப முடிந்தது. இழந்த உடல் எடையையும் மீட்டுள்ளேன். இப்போது 85 கிலோ எடை உள்ளேன். எனினும் உணவு, மருந்து உண்ணுவதில் மருத்துவர் அறிவுரையைத் தீவிரமாகக் கடைப்பிடித்து வருகிறேன்.

எனது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கலந்துரையாடி அவர்களிடம் அய்யத்தையும், வினாக்களையும் எழுப்பி மருத்துவம் தொடர்பான நிறைய செய்திகளை நான் தெரிந்து கொண்டேன். சரியாகச் சொல்வதென்றால் நான் பட்டம் பெறாத மருத்துவராகிவிட்டேன் என்றார். இந்தச் செவ்வியின்போது பிடல் காஸ்ட்ரோ ஊக்கமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார்.

Pin It