கடந்த ஏப்பிரல் மாத இறுதியில் திடுமெனக் கோடை மழை கொட்டியது. வெட்டித் தெறிக்கும் மின்னல். அச்சமூட்டும் பேரடி. அடுத்த ஒரு கிழமையில் இது அடங்கியது. அதுபோலவே அரசியல் வானத்திலும் ஒரு திடீர்க்காட்சி. மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த அன்னா அசாரே என்கிற காந்தியவாதி கடந்த 05.04.2011 அன்று புதுதில்லியில் உள்ள ஜந்தர் மந்திர் அருகில் ஊழல் தடுப்புக்கான ஓர் ஒழுங்கான சட்டத்தை நடுவண் அரசு இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தித் திடுமென ஓர் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார். தொடக்கத்தில் 150 பேருடன் தொடங்கிய போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்தது.

கைப்பேசி, இணையதளம், பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் என்று பலவழிகளில் சென்ற பரப்புரை தீயாய்ப் பற்றிக் கொண்டது. என்.டி.டி.வி., டைம்சுநௌ போன்ற ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்கள் இப்போராட்டத்தை நேரடி யாய் ஒளிபரப்புச் செய்தன. தில்லியில் மட்டுமல்லாமல் அன்னாவிக்கு ஆதர வாய் நாடெங்கிலும் பல இடங்களில் போராட்டங்கள், மெழுகுவர்த்தி ஊர் வலங்கள் நடந்தபடி இருந்தன.

நாட்டில் உயர்பதவி வகிக்கும் பிரதமர், நடுவண் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது உரிய திருத்தங்களுடன் ஊழல் தடுப்புச் சட்ட (லோக்பால்) குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனப் பலமுறை வற்புறுத்தியும், நடுவண் அரசிற்குக் கடிதங்கள் எழுதியும் தில்லி அரசு அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இந்த வரைவுக் குழுவில் மக்களின் நம்பகத் தன்மையைப் பெற்ற வெளியாட்களையும் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என்பது அசாரேயின் கோரிக்கை.

ஆனால் நடுவண் அமைச்சர் கபில்சிபல் ‘அப்படி யெல்லாம் வெளியாட்களை இக்குழுவில் இடம்பெறச் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் இந்திய நாடாளுமன்றத்தின் இறையாண்மை கேள்விக்குள்ளாக்கப்படும்’ என்று சவடால் அடித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூடத் தெரியாமல் அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்து கொண்டோம் என்பதை நாட்டு மக்கள் வசதியாக மறந்து விடுவார்கள் என்பது கபில்சிபல் போன் றோரின் நம்பிக்கை.

ஆனால் நாளுக்குநாள் போராட்ட வீச்சு வலுத்தது. பாராளுமன்ற சனநாயகத்தின் மீதும், இந்த ஓட்டைச் சமூகத்தில் ஊழலற்ற சட்ட அமைப்பு சாத்தியமே என்கிற பொய் நம்பிக்கையின் மீதும் நடுத்தர வகுப்பு மக்களை மூளைச்சலவை செய்து வைத்துள்ள ஊடகங்கள் எல்லாவற்றையும் ஊதிப்பெருக்கின.

தமிழ்நாடு, மேற்குவங்காளம், புதுவை, அசாம் போன்ற மாநிலங்களில் நடந்துவரும் தேர்தல்களில் இப்போராட்ட அலையால் காங்கிரசு மண்கவ்வ நேருமோ என்கிற அச்சம், 71 வயதாகும் அசாரேவுக்கு எதிர்பாராமல் ஏதேனும் விளைந்துவிடுமோ என்ற பதற்றம் ஆகியன நடுவண் அரசை இறங்கிவரச் செய்தன. வெளியாட்கள் ஐந்து பேரை உள்ளடக் கிய பதின்மர் கொண்ட புதிய குழு அமைக்கப்படும் என்கிற அரசின் அறி விப்பைத் தொடர்ந்து 9.4.2011 அன்று அசாரேயின் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

பத்துப்பேர் அடங்கிய குழுவிற்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைவர். ப. சிதம்பரம், வீரப்பமொய்லி, கபில்சிபல், சல்மான் குர்ஷித் ஆகியோருடன் வெளி உறுப்பினர்களாக அன்னா அசாரே, புகழ்பெற்ற வழக்கறிஞர் சாந்திபூஷண், அவர் மகனும் மனித உரிமை ஆர்வலரு மான பிரசாந்த் பூஷண், கர்நாடக லோகாயுத் நீதிபதி சந்தோஷ் எக்டே, தகவல் அறியும் உரிமைச் சட்டப் பரப்புரைத் தூதுவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் குழுவின் மற்ற உறுப்பினர்கள். குழு சூன் 30க்குள் இறுதி அறிக்கை தரவேண்டும் என்பது ஏற்பாடு.

இதுபோன்ற தன்மையிலான ஒரு சட்டத்தைக் கொண்டுவரும் முயற்சி 1968 முதல் மேற்கொள் ளப்பட்டும் எட்டுமுறை அது தோல்வியில் முடிந்துள்ளது. 1971, 1977, 1985, 1959, 1996, 1998, 2001 ஆகிய ஆண்டுகளில் தோற்ற முயற்சிக்கு இப்போது உயிர்கொடுக் கப்பட்டுள்ளது போன்றதோர் தோற்றம் உருவாக்கப் பட்டுள்ளது.

இப்போதுங்கூட பல்வேறு உள் முரண்பாடுகளும் கருத்து மோதல்களும் அவர்களுக்குள் வெடித்து வருகின்றன. இக்குழுவின் நடவடிக்கைகள் முழுவதையும் வீடியோவாகப் பதிவு செய்வது மக்களின் நம்பகத் தன்மையை அதிகரிக்கும் என்னும் அசாரேயின் கருத்து நடைமுறை சாத்தியமற்றது என்று கபில்சிபல் சாற்றுகிறார்.

காங்கிரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரும் மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வருமான திக் விஜய்சிங் பதின்மர் குழுவில் இடம்பெற்றுள்ள சந்தோஷ் எக்டே, கர்நாடக மாநில முதல்வர் எடயூரப்பாவை ஊழல் வழக்கிலி ருந்து காப்பாற்றியவர் என்று குற்றம் சாட்டுகிறார்.

1977இல் அமைந்த ஜனதா ஆட்சியில் நடுவண் சட்ட அமைச்சராய் இருந்தவரும் மூத்த வழக்கறிஞருமான சாந்திபூஷண் மீதும் அவரின் இரண்டு மகன்கள் மற்றும் மகள் மீதும் முத்திரைத்தாள் கட்டணத்தில் மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சாந்திபூஷண் அலகாபாத் நகரின் நடுவமான பகுதியில் 7800 சதுடி மீட்டரில் நிலமும் பெரிய வீடும் வாங்கியுள்ளதாயும், இந்தச் சொத்தை வாங்கியதில் அரசுக்கு வரவேண்டிய முத்திரைத் தாள் கட்டணம் ரூ.1.33 கோடி ஏமாற்றப்பட்டுள்ளதாயும் வழக்கு உள்ளது. மேலும் சாந்திபூஷண் வாங்கியுள்ள இந்த நிலத்தில் ஏராளமான ஏழை மக்கள் வசித்து வருவதாயும் அவர்கள் எந்த நேரத்திலும் தாம் வெளியேற்றப்படக்கூடும் என்ற அச்சத்தில் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு அன்னா அசாரேவுக்கே கோரிக்கை வைத்துள்ளார்களாம். ஊழல் ஒழிப்பைப் பற்றிப் பேசும் சாந்திபூஷணும் அவர் மகன் பிரசாந்த் பூஷணும் பலகோடி ரூபய் சொத்துகளுக்கு அதிபதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் குழுவின் தலைவராய்ப் பொறுப்பேற்றுள்ள பிரணாப் முகர்ஜி பற்றி நம் நாட்டு மக்கள் நன்கிறவார்கள். வரவு-செலவுத் திட்டம் என்னும் பேரால் உள்நாட்டுப் பண முதலைகளுக்கும், வெளிநாட்டுப் பன்னாட்டு நிறுவனங் களுக்கும் நாட்டின் செல்வங்களை விலைபேசி விற்கின்ற நல்ல அடிமை ஆவார். ப. சிதம்பரத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். உள்துறை அமைச்சர் என்ற பொறுப்பைவிட வேதாந்தா போன்ற ஊரை அடித்து உலையில் போடும் நிறுவனங்களுக்காக உழைப்பதில் அதிக அக்கறை காட்டுபவர். கபில்சிபலுக்கும் நாட்டின் கடைக்கோடி மனிதனுக்கும் எள்முனையளவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவர்கள் எல்nhரும் சேர்ந்து கொண்டு ஊழலை ஒழித்துவிடுவார்கள் என்று நம்புவது ஓநாய்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து ஆடு, கோழி உள்ளிட்ட அப்பாவி உயிர்களை ஆபத்திலிருந்து மீட்டுவரும் என்று நம்புவதுபோன்ற கதைதான்.

காந்தியவாதி என்று சொல்லப்படும் அன்னா அசாரேயின் போராட்டத்தை வாழும் கலை இரவிசங்கர், இராம்தேவ் முகமது மதானி, இந்தியப் பேராயர் போன்ற எல்லா மதத் தலைவர்களும் ஆதரிப்பதன் மூலம் அசாரே உண்மையான மதச்சார்பற்றவர் என்ற தோற்றம் காட்டப்படுகிறது. ஆனால் அவர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய மேடை முழுவதும் இந்துத்தவ அடையாளங்கள் பளிச்சிட்டன. அந்த மேடையில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஏறத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் வடஇந்தியத் திரைத்துறை யினர், வணிகத் திமிங்கலங்கள், வல்லாதிக்கக் கழுகுகளுக்கு வால்பிடிக்கும் பணமுதலைகள் அந்த மேடையை வலம் வந்தன.

காந்தியின் அறவழியைப் போற்றுவதாய்ச் சொல்லும் அன்னா அசாரே ஆயிரக்கணக்கான இசுலாமியர்களைக் கொன்றுகுவித்த, பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்யத் துணைபுரிந்த குசராத் முதல்வர் நரேந்திர மோடிக்குப் புகழாரம் சூட்டினார். சொந்த மாநிலம் தொழில் வளர்ச்சியில் முன்னேறிய மாநிலமாக உள்ளதாக உச்சி குளிர்ந்தார்.

புரையோடிப் புழுத்துப்போன இந்த அழுகல் அரசியல் அமைப்பில் ஊழலை ஒழிக்கப்போவதாக வாய் வீரம் பேசுவதும் போலித்தனமாய்ப் போராட்டம் நடத்துவதும் மக்களை ஏமாற்றும் மாபெரும் மோசடியாகும். ஆளும் அதிகார வர்க்கக் கும்பல் இதனை ஆழமாகப் புரிந்து வைத் துள்ளது. அதனால்தான் அசாரேயின் எளிதில் அடக்கிவிடக் கூடிய போராட்டங்களை அனுமதிக்கிறது. ஆனால் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பட்டினிப் போராட்டம் நடத்தி வரும் மணிப்பூர் வீராங்கனை ஐரோம் சர்மிளாவை வலியக் கைது செய்து அடக்குமுறையால் அச்சுறுத்துகிறது. அந்த நாட்டு தேசிய இன மக்களைக் கொல்லும் இராணுவப் படையின் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற மறுக்கிறது.

நடுவண் அரசு அன்னா அசாரே போன்றோரால் ஆர்ப்பாட்டத்தோடு தொடங்கப்பட்ட போராட்டங்களை வழக்கம் போல் குழு அமைத்து நீர்த்துப் போகச் செய்கிறது. வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பெருந்தொகை களையும், நாட்டில் நடமாடும் கறுப்புப்பண முதலைகளின் பட்டியலையும் வெளியிடச் சொல்லி உச்சநீதிமன்றம் ஒருபக்கம் நாடகமாடுகிறது. ஆளும் கும்பல் அதன் அசைவுகளுக்கு ஏற்ப தாளம் தட்டாமல் ஆட்டம் போடுகிறது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு ஓடப்பர் உதையப்பர் ஆகும் காலந்தான்!

Pin It