அடிதடி எனப்பல கெடுபிடி செய்தவர்
ஆட்டம் முடிகிறது!
பிடிபிடி எனப்பணம் கொடுத்தும் தேர்தல்
ஆட்சியைக் கவிழ்க்கிறது!
அடிமுடி வரைபல ஊழல் புரிந்தது
அம்பல மாகிறது!
விடிந்தது பொழுதென மக்கள் ஊதிய
சங்கொலி கேட்கிறது!
அடிப்பொடித் தொண்டர் பசனை மடங்களின்
ஆசைகள் சிலிர்க்கிறது!
வெடிப்புறச் சிரிக்கும் குடுமிகள் கூட்டம்
குதித்தே மகிழ்கிறது!
நடிநடி நடியென நடித்தவ ருக்கே
நாடும் கிடைக்கிறது!
குடிகுடி குடியெனக் குடித்துக் களிக்க
‘டாஸ்மாக்’ தொடர்கிறது!
படிபடி என்ற சமச்சீர் படிப்பா
ஆட்சியைத் தடுக்கிறது?
கொடுகொடு எனப்பணம் சுரண்டும் தனியார்
பள்ளிகள் கொழுக்கிறது!
எதுமுதற் பணியென மறந்தவர் தமக்கு
ஏழே பிடிக்கிறது!
எவரின் ஆட்சி வரினும் மக்கள்
இடுப்பை ஒடிக்கிறது.

- பாவலர் வையவன்

Pin It