எது மாந்த நேயம்?
பேருந்திற்கு காத்திருக்கும் வேளையில்
கையேந்தும் பிச்சையருக்கு
தேடிப் பிடித்துப் போடும்
ஒரு உரூபாய் நாணயம்!
நேர்ச்சியில் வீழ்ந்தவரை
நேர்த்தியாகக் காப்பாற்ற
நேரம் தவறாது
செய்யும் முதலுதவி!
தாளாமல் நடக்கும் முதியோருக்கு
தளராமல் கொடுத்து உதவும்
நம்மின் இன்னொரு கை!
ஆருயிர் பிள்ளையை
அறுவை செய்து காப்பாற்ற
கதவைத் தட்டும் தாய்க்கு
உன் கொடுத்து
உதவும் கடன்!
குளிரில் நடுங்கும்
மயில் கண்டு
மனம் நடுங்கி
போர்வை அளித்த
பேகனின் பேரன்பு!
தான் பெற்ற பிள்ளையை
தகை சான்றோர் பாராட்ட
அவையத்து முந்தியிருக்கச் செய்யும்
பெற்றோரின் பெரும் வளர்ப்பு!
மெல்லக் கற்கும் மாணவரை
உதவாக்கரை என ஒதுக்காமல்
தாய் அரவணைப்போடு
வெல்லக் கற்றுக் கொடுக்கும்
ஆசிரியரின் அருந்தொண்டு!
எங்கோ பிறந்த வீரமாமுனிவர்
முதன் மொழியாம்
நம் மொழிக்கு
இங்கு வந்து செய்த
ஈடற்ற தமிழ்த் தொண்டு!
அடிமைப்பட்டுக் கிடக்கும்
தமிழை அரியணை ஏற்ற
ஆற்றிய பாவலரேறுவின்
விடுதலைத் தொண்டு!
ஆய்வுகள் கொண்டு
தமிழைத் தலைமையிடத்தில்
நிறுத்திய பாவாணரின்
முதன்மைத் தொண்டு!
பேராசான் திருவள்ளுவன்
பெருமையுடன் பயிற்றுவித்த
பிறப்பொக்கும் பாடத்தை
இறப்பொக்கும் வரையில்
சிறப்பொக்கும் வகையில்
செய்திட்ட பெரியாரின்
அறிவுத் தொண்டு!
பசித்த வயிற்றுக்குச்
சோறு படைத்த
வள்ளலாரின் அருட்தொண்டு!
பலர் உழைத்து
சிலர் உண்ணும்
கொடுமை அழிய
வழி கண்ட
கார்ல் மார்க்சின்
பொதுமைத் தொண்டு!
மாந்த நேயங்கள்
மாநிலத்தில் பல உண்டு!
துன்பப்படும் உயிர்களை
துன்பத்தினின்று விடுக்கும்
பெருந் தொண்டில்,
அடிமைத்தளை அறுக்கும்
அடிமைத் தொண்டொன்றே
அனைத்திற்கும் விடையளிக்கும்
அருமருந்து மாந்த நேயம்!
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- 4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்?
- நாடார் மகாநாடு
- பிதாவே மன்னிக்காதீர்
- அக்கினி சாட்சியாக அங்கத்தினர்!
- மோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா?
- குற்றமும் தண்டணையும்
- பொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்
- வெங்காயம்!
- தீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை
- புலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா
- விவரங்கள்
- எழுத்தாளர்: அறிவுக்கண்ணு
- பிரிவு: சிந்தனையாளன் - ஜனவரி 2014
மாந்த நேயம்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.