தந்தை பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்களின் பள்ளிப் படிப்பு, வெறும் நான்காம் வகுப்பு மட்டுமே.

அவர் 1912இல் பொது வாழ்வில் ஈடுபட்டார். 1907இல் காங்கிரசில் நாட்டங்கொண்ட அவர் உண்மையான காந்தியவாதியாக 1925 நவம்பர் வரை விளங்கினார்.

1924 மார்ச்சில், கேரளத்தில் தீண்டாமை ஒழிப்புப் போரில் ஈடுபட்ட அவர், தம் துணைவியார், உறவினர்கள் ஆகியோருடன் ஓராண்டுக்குமேல் போராடினார்.

அப்போது, சென்னை மாகாணத்தை 17.12.1920 முதல் நீதிக்கட்சி என்னும், “பார்ப்பனர் அல்லாதார் கட்சி” ஆண்டது. அக்கட்சி சட்டமன்றப் பதவிகளையும், அரசு நிருவாகப் பதவிகளையும் கைப்பற்றுவதிலேயே நாட்டம் கொண்டது. இத்துறைகளில் பார்ப்பன ஆதிக்கத்தைக் குலைத்திட, டாக்டர் சி. நடேசனாரும், டாக்டர் டி.எம். நாயரும், பிட்டி. தியாகராயரும் வழிகண்டனர்.

மாகாண சட்டப்பேரவையில் “பார்ப்பனர் அல்லாதாருக்கான தனித் தொகுதிகளை” 1919இல் டாக்டர் நாயர் பெற்றார்.

அரசு வேலைகளில் 100 விழுக்காடு இடங்களையும் 5 வகுப்புகளுக்கும் பங்கிடும் கொள்கையை உருவாக்கி, பார்ப்பனரல்லாதாருக்கும், தீண்டப்படா தாருக்கும் இந்தியாவிலேயே முதன்முதலாக இடஒதுக்கீடு ஆணையை, பனகல் அரசர் அரசு 1921இல் பிறப்பித்தது. அது 1926 வரை நடப்புக்கு வரவில்லை.

1926 சென்னை மாகாண சட்டப் பேரவைத் தேர்தலில் நீதிக்கட்சி தோற்றது ஏன்?

பார்ப்பனர் சட்டமன்றத்திலும் அரசு வேலையிலும் ஆதிக்கம் பெற்றிருந்த தோடு, இந்துச் சமுதாயத்தில் மதகுருவாகவும், புரோகிதராகவும், அர்ச்சகராகவும் ஏகபோக ஆதிக்கம் பெற்றிருந்தனர். பிறவியில் பார்ப்பனர் உயர்ந்தவர் - பிறவியில் பார்ப்பனர் அல்லாதார் எல்லோரும் தாழ்ந்தவர் என்கிற பேராதிக்கத்தை, கி.பி.8ஆம் நூற்றாண்டு முதல் பெற்றிருந்தனர். இதை அரசர்களின் ஆட்சிகள் காப்பாற்றின. இந்தியா முழுவதிலும் இந்து மதத்தில் இப்படிப்பட்ட பார்ப்பனர் ஆதிக்கம் நிலை கொண்டிருந்தது.

அத்துடன் பார்ப்பனரல்லாத பெருந் தலைவர்களுள், டாக்டர் நாயரைத் தவிர்த்த மற்றெல்லோரும், பார்ப்பானை மதகுருவாக, வீட்டுப் புரோகிதராக அடக்கத்தோடு ஏற்றவர்கள்.

இந்தப் பிறவி உயர்வு - தாழ்வைக் காப்பாற்றுபவை, மனுநீதியும், இராமாய ணமும் ஆகும் என்ற கருத்தை, முதன்முதலாக 21.12.1922இல் திருப்பூரில், காங்கிரசுப் பொதுக் கூட்டத்தில் ஈ.வெ.ரா. பேசினார்.

இப்போது, “பார்ப்பனரல்லாதார் சுயமரியாதையைக் காப்பாற்ற ஓர் தனி இயக்கம் தேவை” என்பதை, 1926 நவம்பரில் தேர்தலில் தோற்றுப்போன பார்ப்பனரல்லாத தலைவர்களிடம் 1926 நவம்பரில், திசம்பரில் ஈ.வெ.ரா. புகட்டினார். எல்லாத் தலைவர்களின் ஆதரவுடன், மதுரையில், ஏ. பரசுராம் பாத்ரோ தலைமையில், 26.12.1926இல் பத்தாவது பார்ப்பனரல்லாதார் மாகாண மாநாட்டில், சென்னை மாகாணப் “பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைச் சங்கம்” நிறுவப்பட்டது.

அதன் தலையான கொள்கைகள் : (1) பிறவியில் உயர்வு-தாழ்வு ஒழிப்பு, பிறவியில் பார்ப்பான் மட்டும் மதகுருவாக-புரோகிதனாக-கோவிலில் அர்ச்சகனாக - இந்துவின் வீடுதோறும் இறப்பு, பிறப்பு, நன்மை, தீமை பற்றிய சடங்குகளைச் செய்பவனாக-தீ வளர்த்து, சடங்கு செய்பவனாக இருப்பதை ஒழிக்க வேண்டும்; (2) தீண்டாமையை ஒழிக்க வேண்டும்; (3) பெண் தாழ்ந் தவள் என்பதை ஒழிக்க வேண்டும் என்பவையாகும்.

1) சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சி 1920 திசம்பர் முதல் 1937 வரை நடந்தது; 2) காங்கிரசுக் கட்சி ஆட்சி 1937 முதல், விட்டு விட்டு, 1967 வரை நடந்தது; 6.3.1967 முதல் 31.12.2017 முடிய 50 ஆண்டுக்காலம் தி.மு.க., அ.தி.மு.க. என்கிற திராவிடக் கட்சி ஆட்சி மாறி மாறி நடந்தது. தொடர்ந்து நடக்கிறது.

இவ்வளவு நெடியகால ஆட்சிகளில், சென்னை மாகா ணத்தில்-தமிழ்நாட்டில் மேலே கண்ட சுயமரியாதைக் கொள்கைகளை வென்றெடுத்துவிட்டோமா? இல்லை; இல்லை; இல்லை. ஏன்?

இச்செய்திகள் பற்றிப் பின்வரும் கருத்துகளை, தந்தை பெரியார், 26.11.1928இல் சென்னையில் நடை பெற்ற, “தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டுத்” தலைமை முடிவுரையில் கூறியவை கோடி பொன் பெறும் கருத்துக்களாகும்.

இதோ, படியுங்கள் :

“தீவிர சீர்திருத்தங்களைப் பற்றிப் பிரச்சாரம் செய்வதன் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி முழுவதையும் சரிப்படுத்திவிடலாம் என்று எண்ணுவதும் மிகுதியும் பைத்தியக்காரத்தனமாகும்.

ஏனெனில், நமது பிரச்சாரத்தைச் செய்வதற்கு நமக்குள்ள சந்தர்ப்பத்தைக் காட்டிலும் - நமது சீர்திருத் தத்திற்கு எதிரிகளான வைதிகர்கள், பண்டிதர்கள், சுயநலப் பார்ப்பனர்கள், அவர்களது கூலிகள் ஆகிய வர்களுக்கே மிகுதியும் சந்தர்ப்பங்களும் சவுகரியங்களும் அதிகமாய் இருக்கின்றன. எப்படியெனில், கோயில்கள், புராணங்கள், சித்திரப்படங்கள் ஆகியவைகளும்; அவைகளின் உற்சவம், காலட்சேபம், பஜனை, சம்பிரதாயம் ஆகியவைகளும்; பள்ளிக்கூடப் படிப்பு, பாடப் புத்தகம் முதலியவைகளும் யாருடைய பிரயத் தனமும் இல்லாமல் மக்களுக்குள் சீர்திருத்தத்திற்கு விரோதமான விஷயத்தைப் புகுத்தி விடுகின்றன. இதுதவிர, கோடிக்கணக்கான ரூபாய்கள் வருவாய் கொண்ட மக்களும் மடாதிபதிகளும் ஸ்தாபனங் களும் வெட்டி ஆள்களும் இருக்கின்றனர்.

அன்றியும், ஜனப்பிரதிநிதித்துவமான ஓட்டுகள் பெற்று அதன்மூலம் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களால் சட்டங்கள் செய்யப்பட்டு, முழு சீர்திருத் தங்களையும் செய்துவிடலாம் என்று எண்ணுவதும் அறியாமையே ஆகும். ஏனெனில், ஜனப்பிரதிநிதித் துவமான ஓட்டுகள் என்பன பெரிதும் பாமர மக்களி டையே இருக்கின்றன. பிரதிநிதிகளாக வருபவர்களும் பெரிதும் சீர்திருத்த விரோதிகளுக்குப் பயந்தவர்களா கவும், சரியான சீர்திருத்த அறிவு இல்லாதவர்களா கவுமே இருக்கிறார்கள்.

சர்க்காரும் நம்முடைய கேவல நிலையினால் வாழ வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். அதனால், உண்மையானதும் முடிவானதுமான சீர்திருத்தம் ஒரு நாட்டிற்கு வரவேண்டுமானால், ஏகச் சக்ராதிபத்தியத் தன்மை கொண்ட ஒரு வீரனின் ஆட்சியில்தான் முடியும்.

அதாவது, ‘இந்தப் பொதுக் கோயிலுக்குள் செல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு’ என்று விளம்பரம் செய்ய வேண்டும். யாராவது ஆட்சேபித்தால் அவர் களைச் சிறையிலிட வேண்டும். இதைப் பொது ஜனங் கள் கூட்டம் போட்டுக் கண்டிக்க ஆரம்பித்தார்களா னால் உடனே இடித்தெறிந்து விடவேண்டும்.

சாதி வித்தியாசமோ உயர்வு தாழ்வோ கற்பிக் கின்ற புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று சொல்லிவிட வேண்டும்; மீறிப் படிக்க ஆரம்பித்தால் அவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும். உயர்வு-தாழ்வு வித்தியாசம் முதலியவை கொண்ட மடாதி பதிகளை எல்லாம் சிறையில் அடைத்துவிட வேண்டும். பொது ஜனங்கள் கிளர்ச்சி செய்தால் மடாதிபதி களைத் தீவாந்தரத்திற்கு அனுப்பிவிட வேண்டும். சாமிகளுக்கு உள்ள நகைகள், வாகனங்கள், பூமிகள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்து, அவை களை விற்றுப் படிப்பில்லாதவர்களுக்குப் படிப்பும், தொழில் இல்லாதவர்களுக்குத் தொழிலும் ஜீவனமும் ஏற்படுத்த உபயோகப்படுத்திவிட வேண்டும்.

இதுபோன்ற காரியங்கள் செய்யத்தக்க உரம் கொண்ட வீர ஆட்சிக்கு நாட்டைக் கொண்டுவர வேண்டும். அப்பேர்ப்பட்ட வீரர்களின் ஆட்சிக்குட்பட்ட நாடுகள்தான் இன்று சுயமரியாதையும் சீர்திருத்த மும் பொலிந்து விளங்குகின்றன.

அப்பேர்ப்பட்ட வீர ஆட்சிக்கு நாட்டைக் கொண்டு வரவேண்டுமானால், அநேக சீர்திருத்தக்காரர்கள் உயிர் துறக்கத் தயாராயிருந்து கொண்டு பாமர மக் களிடையில் உண்மையைப் பரப்ப முன்வர வேண்டும்.”

இக்கருத்துகளை, நாம் எல்லோரும் ஆய்வுசெய்து, செயல்படுத்த வேண்டும்.

இந்தியாவிலுள்ள பல மதங்களைச் சார்ந்த 130 கோடி மக்களுக்கும் உரிய அரசு, இந்திய அரசே.

இவர்களுக்கான உரிமை இயல் சட்டங்களை இயற்றும் அதிகாரம் படைத்தது, இந்திய அரசே.

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கமோ, “திராவிடர்” என்ற பேரால் உள்ள இயக்கங்களோ இன்று வரையில் இந்தியா முழுவதையும் செயல்படு களமாகக் கொள்ளவில்லை; எல்லா மாநிலங்களிலும் பரப்புரை செய்யவில்லை; பல் மொழிகளிலும் ஏடு களையும் நூல்களையும் வெளியிட முன்வரவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, எல்லா உயர் அதி காரங்களையும் கொண்ட இந்திய அரசைக் கைப் பற்ற வேண்டும்; இந்திய அரசமைப்புச் சட்டத்தை  அடியோடு மாற்றினால்தான், சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் பரவுவதற்கு உள்ள சட்டத் தடைகளை நீக்க முடியும் என்கிற புரிதல் இவர்களுக்கு அறவே இல்லை.

இந்நிலையில், இப்போது உள்ள அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிற பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக் கீட்டை எல்லா வடமாநிலங்களிலும், மற்றும் இந்திய மய்ய அரசிலும் நடப்புக்குக் கொண்டுவரவே, 29.4.1978 முதல் 30.6.2016 வரையில், 38 ஆண்டுகளாக, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியும், அதன் கிளை அமைப்பான ஒடுக்கப்பட்டோர் பேரவை யும் மட்டுமே தில்லியில் தங்கிச் செயல்படுகிறோம்; எல்லா மாநிலங்களுக்கும் பயணம் போகிறோம் என் பதை எல்லோரும் அறியவேண்டும்.

இக்கட்சியின் அரசியல் குறிக்கோள், “இந்தியாவில் மதச்சார்பற்ற சமதர்மக் குடிஅரசுகள் ஒருங்கிணைந்த உண்மையான கூட்டாட்சியை அமைப்பது” ஆகும்.

19.10.1991 முதல், கடந்த 27 ஆண்டுகளாக இக்குறிக்கோளை அடைய மனமார முயற்சிக்கிறோம்.

“நம்மால் இதெல்லாம் முடியுமா?” என்று ஒருவரும் மலைக்காதீர்கள்.

முயன்றால், முடியாதது ஒன்றுமில்லை.

எனவே, இந்தியாவை ஒரு உண்மையான கூட்டாட்சியாக அமைத்திட ஆவன செய்ய, 7.1.2018 சென்னை மாநாட்டுக்கு வாருங்கள்! வாருங்கள்! என அன்புடன் அழைக்கிறோம்.

Pin It