நல்லாய் தோழி! நான்சொல் வதைக்கேள்

பொல்லா நினைவில் புதைகின் றேன்நான்

சொல்லிப் புலம்பிட நீதா னுண்டு

ஆடியும் சுவரும் அறியா தென்வலி

எல்லா உயிர்க்கும் ஏதோ ஆசை

உள்ளே யிருந்து உருக்குலைத் திடுமோ?

எனக்கோர் ஆசை; எப்படிச் சொல்வேன்?

மனத்துள் திணித்து மலைப்புறு கின்றேன்

அன்னையும் தந்தையும் மணமகன் தேடி

அலைகின் றார்கள் ஜாதகத் தோடு

கண்ணுயிர் கலந்து வாழும் வாழ்வை

கைரே கைகளில் தேடுகின் றார்கள்

என்னுள் இருக்கும் விருப்பம் ஒன்றை

ஏனோ கேட்க மறுக்கின் றார்கள்

பெண்ணுள் தோன்றும் விருப்பம் யாவும்

மண்ணைத் தோண்டிப் புதைக்கத் தானா?

கண்ணெனப் போற்றும் நம்தமிழ் நாட்டுள்

இன்னல் எத்தனை எண்ணிப் பார்நீ

மண்ணை விற்றுத் தின்னும் ஒருவனை

மாப்பிளை யென்று காட்டு கிறார்கள்

ஈழம் காவிரி கூடங் குளமொடு

கதிரா மங்கல உரிமைப் போரில்

வேழம் போலும் ஒருவனை

நானும் மணப்பேன் நவில்வாய் தாய்க்கே!

Pin It