ஆன்ற மக்காள்! அரசியல் மக்காள்!

மாமழை போற்றும் மாத்தமிழ் மக்காள்!

வேண்டி வந்துயிர் காக்கும் மனமுட

மாண்ட மழையின் மடலிது கேளீர்!

நீள்நெடுங் காலமாய் மண்ணும் நானும்

நேரிடர் இன்றி நெருங்கி இருந்தோம்

ஊழி ஊழியாய் உறவில் கலந்த

மாளாக் காதலில் மயங்கிக் கிடந்தோம்

எனக்கென எங்கும் ஏரி குளங்கள்

இருந்தன குட்டைகள் கால்வா யோடைகள்

வானி லிருந்து நான் வரும்போ தெல்லாம்

மண்மகள் எனக்கு மடியை விரிப்பாள்!

புல்முதல் மரம்வரை புவியில் யாவும் என்னின் உறவால் மண்மகள் ஈன்றவை

ஓரறி வுள்ள உயிர்கள் முதலாய்

ஆறறி வுள்ள அனைத்துமென் பிள்ளைகள்

மண்ணவள் மடியில் தாங்கிக் காத்தாள்

வானமு தூட்டி நானும் வளர்த்தேன்

ஆயினும் இன்றென் நிலைமை என்ன?

ஆரத் தழுவிய இடங்கள் எங்கே?

எனெக்கென இருந்த எல்லா இடத்தையும்

தனக்கென வாழும் தன்னல மாக்கள்

மனைகள் போட்டு விற்றுத் தின்றார்!

மாடிகள் சமைத்தார்! மடக்கி வளைத்தார்!

ஓடும் எங்கள் வழியை மறித்தார்

தேங்கும் எங்கள் நிலையைத் தூர்த்தார்

திராவிட ஆட்சிகள் தொடங்கிய முதலாய்

தொடங்கிய தெமக்கு அழிவுக் காலம்!

எத்தனை நாள்தான் அமைதி காப்பது

எதற்கிவர் தொடர்பென வாரா திருப்பது

எந்தன் துணைவி மண்ணவள் கொதித்து

எத்தனை நாள்தான் காய்ந்து கிடப்பது?

இயற்கைக் கெதிராய் நடத்தும் போரை

இத்துடன் நீங்கள் நிறுத்திட வேண்டும்

மழைக்கென இருந்த இடங்களை யெல்லாம்

மறுபடி திருப்பித் தந்திட வேண்டும்

மண்ணில் வாழும் எல்லா உயிர்க்காய்

விண்ணில் இருந்து வருகின் றேன்நான்

மரம்செடி கொடிகள் பல்லுயிர் அழித்த

சுயநலம் தேடும் மக்களை வெறுத்தேன்!

என்னை அழித்து வாழ நினைத்தால்

எதிர்த்து அழிப்பேன்! திருப்பி அடிப்பேன்!

என்பதை உணர்த்த சென்னையைக் கொஞ்சம்

புரட்டி எடுத்தேன்! பொருத்தருள் வீரே!

Pin It