இந்திய மக்கள் தொகையில் 7 சதவீதம் மக்களைக் கொண்டது தமிழ்நாடு. ஆனால், இந்திய நீர்வளத்தில் தமிழ்நாடு பெறுவது வெறும் 3 சதவீதம் மட்டுமே. இதுவே நாம் நீர் பற்றாக்குறையில் இருக்கிறோம் என்பதற்கான எடுத்துக்காட்டு. அதோடு, தமிழ்நாட்டின் மொத்த நீர்வளமும் மழையை நம்பியே இருக்கிறது. தமிழகத்தின் உட்பகுதியில் ஆண்டுக்கு சராசரியாக 848 மி.மீ. முதல் 946 மி.மீ. வரை மழை பொழிகிறது. மலைப் பிரதேசங்களிலும், கடற்கரை சமவெளியிலும் 1,666 மி.மீ. வரை மழை பெய்கிறது. இந்த மழைகளையும் கொண்டு வந்து சேர்ப்பது இரண்டு பருவமழைகள் தான்.

வடகிழக்குப் பருவமழை

இவைகள்தான் தமிழகத்திற்குப் பெரும்பங்கு நீரைக் கொண்டுவந்து சேர்க்கின்றன. சூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்குப் பருவமழையின் புண்ணியத்தாலும், அக்டோபர் முதல் திசம்பர் வரை பெய்யும் வடகிழக்குப் பருவ மழையின் கருணையாலும் தான் தமிழகத்திற்குத் தண்ணீர் கிடைக்கிறது.

இதிலும் அதிக நீரைத் தருவது வடகிழக்குப் பருவமழைதான். அதாவது, 46 சதவீதம். அதற்கு அடுத்தபடியாக தென்மேற்குப் பருவமழை 35 சதவீதத்தையும், கோடை மழை 14 சதவீதத்தையும், குளிர்கால மழை 5 சதவீதத்தையும் கொடுக்கிறது.

நிலமேற்பரப்பு நீர்

இப்படி மழை மூலமும், மற்ற மாநிலங்கள் மூலமும் நமக்குக் கிடைக்கும் நீரை ‘நிலமேற்பரப்பு நீர்’ என்கிறோம். இது நம்மிடம் 24,160 மில்லியன் கன மீட்டர் இருக்கிறது. இதோடு நமது நிலத்தடி நீரையும் சேர்த்தால், தமிழகத்தின் மொத்த நீர் வளம் 46,540 மில்லியன் கன மீட்டராகும். இதுதான் நமது நீர்ச்செல்வம். இதைக் கொண்டுதான் நமது அனைத்து நீர்த்தேவைகளையும் பூர்த்தி செய்தாக வேண்டும். நமக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால், நிலமேற்பரப்பு நீரைச் சேமிப்பதுதான். இந்த நீரைச் சேமித்து ஒரு இடத்தில் தேக்கினால்தான் நிலத்தடி நீரை உயர்த்த முடியும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக 1960களிலேயே நிலமேற்பரப்பு நீரில் 95 சதவீதத்தைப் பயன்படுத்திப் பழகிவிட்டோம். அதனால் நம்மால் நீரை சேமிக்க முடியவில்லை.

கிராமங்களிலும் ஆழ்துளைக் கிணறு

அதற்கு மேல் நீர்த்தேவை என்ற நிலை வந்தபோது, பூமியைத் துளையிடத் துவங்கினோம். ‘ஆழ்துளைக் கிணறு’ என்ற புதிய தொழில்நுட்பத்தில் நிலத்தடி நீரை முடிந்தவரை மொத்தமாக உறிஞ்சி னோம். இதிலும் இயற்கை நமக்குத் துணை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டின் நிலத்தடி பரப்பை எடுத்துக் கொண்டால் அதில் 73.4 சதவீதம் கடினமான பாறைகள் கொண்டது.

அதனால் நிலமேற்பரப்பு நீர் பூமிக்குள் ஊடுருவி நிலத்தடி நீராக மாறுவது அத்தனைச் சுலபமில்லை. ஆயிரம் வருடங்களுக்கு மேலாகப் பூமித்தாய் கொஞ்சம் கொஞ்சமாகச் சேகரித்து வைத்திருந்த நீரைத்தான் இப்போது மொத்தமாக உறிஞ்சிக் கொண்டிருக் கிறோம். இதுவும் கொஞ்ச நாளைக்குத்தான். அதன் பிறகு நாம் தண்ணீருக்குத் தவிக்க நேரிடும் அபாயம் உள்ளது.

(“தினத்தந்தி”, 16-12-2015)

Pin It