எரிமலையில் வெடித்துவரும் தீயின் ஊற்று
 எரிதழலில் வடித்தெடுத்த வாளின் கீற்று
குறிதவறா இலக்கடையும் குண்டு வீச்சு
 குத்திவிட்டுக் குடலுருவும் கொக்கி ஈட்டி
நரிகுணத்தோர் முதுகிற்கு நல்ல சாட்டை
 நற்றமிழர் வாழ்விற்கு எஃகுக் கோட்டை
வரிகளல்ல ஒவ்வொன்றும் வருங்கா லத்தில்
 வருவோர்க்குக் கட்டிவைத்த கத்தி மூட்டை
ஒப்புக்குப் பாட்டெழுதும் கவிஞர் உண்டு;
 ஒருபயனும் இல்லாமல் ஓடி எங்கும்
தப்புக்குத் துணைபோகும் திரைப்ப டத்தில்
 தரங்கெட்ட பாட்டெழுதும் கவிஞர் உண்டு;
எப்பொழுதோ படித்துவைத்த இலக்கி யத்தை
 எந்நேரம் வாந்தியாக எடுப்பா ருண்டு;
எப்போதும் இலட்சியத்தைப் பாடி நிற்கும்
 எரிகவிஞர் தமிழேந்தி போன்று உண்டா?
ஆர்க்கட்டும் போர்முரசம்; ஆளா ளுக்கும்
 அவரவரே தூக்கட்டும் ஆயுத த்தை;
தூர்க்கட்டும் எதிரிகளின் கோட்டை தம்மை;
 துடிப்புடனே பார்க்கின்ற வழிநெ ருப்பில்
பூக்கட்டும் பொதுவுடைமைக் சமுதா யந்தான்;
 பொலியட்டும் புதுமையுடன் தமிழர் தேசம்;
தாக்கட்டும் நம்கருத்து இந்தி யத்தை;
 தலைநிமிர்வோம் தமிழரென தமிழர் நாட்டில்!

Pin It