வில்காட்டி வீரத்தை விளைவித்த தமிழ்மறவர்

       வீறுகொண்டு ஏர்நடத்தி வையத்தின் பசிதீர்க்க

நெல்காட்டி சோறளித்த நல்லுழவர்; உழைப்பாளர்;

       நேர்மைவழிப் பெரும்புலவர்; பொதுமக்கள் யாவர்க்கும்

கல்காட்டி கடவுளெனப் பல்வேறு கதைகாட்டிக்

       கால்மேல்கால் போட்டபடி காலமெலாம் தின்பதற்குப்

புல்காட்டி முப்புரிப்பூ ணூல்காட்டி மணியாட்டிப்

       பூவுலகை ஏமாற்றப் புரோகிதமும் காட்டிவைத்தார்.

பல்காட்டி வாயிளித்துப் பச்சைப்பொய் பலகூறிப்

       பாராளும் வேந்தரையும் செத்தமொழிச் சமற்கிருதச்

சொல்காட்டிப் பல்யாக வழிகாட்டிச் சோறுதின்னும்

       சோம்பேறித் தலையாட்டிப் பொம்மைகளாய் ஆக்கி வைத்தார்.

தொல்காப்பி யம்காட்டி குறள்காட்டி நம்முன்னோர்

       தோற்றுவித்த பண்பாட்டைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டார்

கொல்ஈட்டிக் கூர்மதியார் கீழுக்கும் மேலுக்கும்

       கோள்மூட்டி வாழ்பவர்தம் வழிநடந்தோம்! அறிவிழந்தோம்!

ஆள்காட்டித் தொழில்செய்து அரசுக்கும் மக்களுக்கும்

       அருங்கேடு பலசெய்து அனைத்துவகைச் செயலுக்கும்

நாள்காட்டி மணிகாட்டி நம்மிடமே பணம்பறித்து

       நறுநெய்யும் பால்பழமும் நாலுவேளை தின்பதுடன்

தாள்காட்டி அவன்நிற்பான்; தலைவணங்கித் தொழுவோம்நாம்!

       தோல்காட்டி நிறங்காட்டி நம்வாழ்வைப் பறித்தவனை

வாள்காட்டி விரட்டாமல் வாராது நம்முரிமை!

       வடக்கை எதிர்த்திடுவோம் வாருங்கள் தோழர்களே!

 - வையவன்

Pin It