அரும்பெரும் சாதனைகளைப் படைத்து சிலர் வரலாற்றில் இடம்பெறுகிறார்கள். அளப்பரியத் தொண் டின் வழியாகச் சிலர் தொடர்ந்து நினைவு கூரப்படுகி றார்கள். சிலர் தங்களின் வீரம் மிக்க செயல்களால் வரலாற்றையே படைக்கிறார்கள். சீரும், சிறப்பும் பெற்ற இந்த வெகு சிலரில் உலக வரலாற்றில் ஓரிரு வர்தான் மாபெரும் போராளிகளாகப் போற்றப்படு கிறார்கள். இவ்வரிசையில் விடுதலை வீரர் நேதாஜி சுபாசு முதலிடம் பெறுகிறார். அவர் மறைந்து 66 ஆண்டுகள் கடந்தாலும், நேதாஜியின் வீரச் செயல்கள் ஆண்டுதோறும் ஆகஸ்டு 18ஆம் நாள் நினைவு கூரப்படுகின்றன. ஒரு நாட்டின் ஆட்சித் தலைமைப் பொறுப்பில் இடம்பெற்று விடுவதால் அத்தலைவர்கள் ஊடகங்களால் உயர்த்தப்படுகிறார்கள். உலகில் பல நாடுகளில் இப்போக்குக் காணப்பட்டாலும், இந்தியாவில் மட்டும்தான் ஆளும்கட்சிப் பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் பெருமளவில் தங்களின் தகுதிகளுக்கு அப்பாலும் துதிப்பாடப்படுகிறார்கள்.

நடிகர்கள், நடிகைகள் ஊடகங்களிலும் முதன்மையான கதாநாயகர்களாக உலா வருகின்றனர். இவற்றையெல்லாம் முறியடித்து விடுதலைப் போரின் மக்கள் நாயகர்களாக காந்தியும் நேதாஜியும் பல கருத்து வேறுபாடுகளுக்கு இடையிலேயும் மதிக்கப்படுகிறார்கள். நாட்டில் வாழும் ஏழைகளின் இல்லங்களுக்கு ஒளி விளக்கை கூடத் தன் ஆட்சிக் காலத்தில் அளிக்காதவரை ‘ஆசியாவின் ஜோதி’ என்று குறிப்பிட்டார்கள். மக்கள் உரிமைகளை, நெருக்கடி காலத்தில் அடித்து நொறுக்கிப் போட்டப் பெண்மணியை “இந்தியாவே இந்திரா, இந்திராவே இந்தியா” என்ற வெற்று முழக்கத்தாலேயே ‘தேசியவாதிகள்’ உயர்த்திப் பிடித்தார்கள்.

இவர்கள் அடித்த கொட்டங்களை, பொய்யாக்கி ஆசிய நாடுகளில் தன் வீரத்தால் வலம் வந்து வரலாறு படைத்தவர் நேதாஜிதான், அவர்தான் ஆசியாவின் உண்மையான ஒளி என்பதை அண்மைக் காலங் களில் வெளிவந்துள்ள ஆய்வு நூல்கள் எடுத்துரைக் கின்றன. நேதாஜியின் வீரமிக்க ஆளுமையை, நேர்மை மிக்க அரசியலை விளக்கும் அருமையான நூல் 2011ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. இந்நூலை எழுதியவர் நேதாஜியின் பெயரன் பேராசிரியர் சுகதா போசு ஆவார். பெயரன்கள் தாத்தாக்களின் புகழை வணிகம் செய்து தாழ்த்துவதில் வல்லவர்கள் என்ற செய்திகள் வெளிவரும் இந்நாளில் இதற்கு விதிவிலக் காகச் செயல்பட்டு அறிவுத்தளத்திற்கும், ஆய்வுக் களத் திற்கும் பெயரன்கள் ஆழ்ந்த கருத்துகளை வழங்க முடியும் என்பதற்கு இந்நூல் சான்று பகர்கின்றது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் சுகதா போசு இந்நூலுக்குத் தந்துள்ள தலைப்பு “மேன்மைமிகு பேரரசின் எதிரி” என்பதாகும். தலைப்புக்கு ஏற்ற வாறு இந்நூல் முழுவதும் பல தரவுகள் அடிப்படையில் பல புதிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இங்கிலாந்து ஏகாதிபத்தியம் நேதாஜியைப் பற்றி பல காலக்கட்டங் களில் பொய்ப் பரப்புரைகளை மேற்கொண்டது. அவற் றில் ஒன்று, 1941ஆம் ஆண்டு போரில் போசு இறந்து விட்டார் என்பதாகும். இவ்வாறு அறிவித்த பிறகுதான் போசு 1943ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் இந்தியாவின் முதல் விடுதலை பெற்ற அரசை சிங்கப்பூரில் அறிவித்தார். 1944 சனவரித் திங்களில் புதிதாக அறிவிக்கப்பட்ட அரசின் தலைமைச் செயலகத்தைச் சிங்கப்பூரிலிருந்து ரங்கூன் தலை நகருக்கு மாற்றி அறிவித்தார். நேதாஜியின் இந்திய இராணுவப்படை பர்மாவின் எல்லைப் பகுதிகளைக் கடந்து இந்தியாவின் கிழக்குப் பகுதிகளான இம்பால், போகிமா எல்லைகளில் பிரிட்டிசு படைகளை எதிர்கொண்டது. இங்கிலாந்து அரசு கலக்கம் அடைந்தது. இக்காலக் கட்டத்தில்தான் நேதாஜி 1945 ஆகஸ்ட் 15ஆம் நாள் வானூர்திப் பயணம் மேற் கொண்ட போது விபத்தில் சிக்கி தைவான் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று 18ஆம் நாள் மறைந்தார். நேதாஜி பள்ளி, கல்லூரி பல்கலைக்கழகங்களில் பெற்றக் கல்வி, எதிர்கொண்ட அறைகூவல்கள் உட்பட அவர் வாழ்க்கையின் அனைத்துப் பரிமாணங்களையும் இந்நூல் படம்பிடித்துக் காட்டுகின்றது.

ஒரிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் 1887 சனவரி 23ஆம் நாள் 9ஆவது குழந்தையாகப் பெற்றோர்க்கு 6ஆவது மகனாகப் போசு பிறந்தார். பள்ளிக் கல்வி யைக் கட்டாக் நகரில் பெற்றார். சமத்துவ உணர்வும், புரட்சி எண்ணங்களும் இயல்பாகவே பள்ளி மாணவன் போசுவிடம் எதிரொலித்தன. “என் வீட்டின் அருகே எப்போதெல்லாம் பிச்சைக்காரர்கள், ஆண்டிகள், சாதுக்கள் காணப்பட்டாலும் அவர்களிடம் பெரும் மனதுடன் நடந்து கொள்வேன். என்னால் இயன்றதை அளிப்பேன். மற்றவர்களுக்குக் கொடுக்கும் செயலில் ஒரு தனித்த மனநிறைவைப் பெறுவேன்”. “எனது அம்மாவின் ஆணைகள் அநீதியானவை என்பதால், அவற்றை புறக்கணிப்பதில் ஒரு தனித்த இன்பத்தைக் கண்டேன். தாயின் பிணைப்பில் இருந்து குழந்தை விடுபட்டுப் பிறக்கும் போது எழும் முதல் அழுகையே ஒரு புரட்சிக் குரலாகும் என்ற விவேகானந்தரின் கருத்தில் எனக்குப் பெரும் ஈடுபாடு இருந்தது. எனவே, எனது பெற்றோரின் உணர்வுகளைப் புறந்தள்ளுவதில் எந்தவிதத் தயக்கமும் எனக்கு இருந்ததில்லை”.

இந்து சமயச் சடங்குகளை, மூடநம்பிக்கைகளைக் கொடுமைகளைக் கடைபிடிக்கும் ஹரித்துவார் போன்ற இடங்களுக்கு நேதாஜி மற்ற மாணவர்களுடன் பயணம் மேற்கொண்ட போது கண்ணுற்றார். “ஹரித்துவாரில் உள்ள விடுதிகளில் உணவு கூட வழங்கப்படவில்லை என்பதுதான் தனக்கு ஏற்பட்ட முதல் அதிர்ச்சி. கிறித்து வர்கள் போல் வங்காளிகளும் மீன் உணவை உண்ப தால் தூய்மையற்றவர்கள் என்று உயர்சாதியினர் குறிப் பிட்டனர்”. புத்த கயாவில் இதேபோன்ற மற்றொரு நிகழ்வும் நடைபெற்றது. “நாங்களெல்லாம் குளிக்கச் சென்றபோது, கிணற்றில் இருந்து தண்ணீரெடுக்கும் உரிமை சிலருக்குக் கிடையாது. ஏனென்றால் நாங்கள் எல்லாம் பார்ப்பனர் அல்லாதவர்கள் என்று குறிப் பிட்டார்கள். இந்த இரண்டு மாதப் பயணம் பல ‘புனித மனிதர்களையும்’ இந்து சமூக அமைப்பிற்கே உரித் தான குறைபாடுகளையும் எனக்கு உணர்த்தியது. முற்றும் துறந்த முனிவர்களிடமும் துறவிகளிடமும் நான் வைத்திருந்த மரியாதை பெருமளவில் குறைந்து வீட்டிற்கு ஒரு அறிவுள்ள மனிதனாகத் திரும்பினேன்”.

சொர்க்கத்தில் இருந்து பிறக்கும் பணி என்று அக்காலத்தில் போற்றப்பட்ட இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வை, தந்தையின் வலியுறுத்தலால் அரை மனதோடு போசு எழுதினார். 150 மதிப்பெண்களுக் குரிய வினாக்களுக்கு விடை தெரிந்தும் எழுதவில்லை. இருப்பினும் இங்கிலாந்து நாட்டில் வெளியிடப்பட்ட தகுதிப் பட்டியலில் நான்காவது இடத்தை போசு பெற் றார். அடிமை உணர்வின் உறைவிடமாக உள்ள இந்தப் பணியை என்னால் ஏற்க முடியாது என்று தனது அண்ணன் சரத் சந்திர போசுவிற்கு மடல் எழுதி அப்பணியை மறுத்தார். இதனால் தந்தையின் கடுங் கோபத்திற்கு உள்ளானார். 1921ஆம் ஆண்டு இப் பணியில் இருந்து விலகினார். இந்தியாவிற்கு வந்து காங்கிரஸ் இயக்கத்தில் பணியாற்றினார். மேற்குவங் கத்தின் காங்கிரஸ் தலைவரான சி.ஆர். தாசுவைத் தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டார். இருப்பினும், புரட்சி எண்ணங்களின் களமாக விளங்கிய போசு, அவரிடமும் விடுதலைப் போரை எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு கொண்டார். போசுவின் ஆளுமையைக்கண்டு இளைஞர்களும் புரட்சியாளர்களும் இவர் பின் அணிவகுத்தனர். 1938ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டார்.

காந்தி போசுவை எதிர்த்து ஆந்திர மாநிலத்தைத் சேர்ந்த பட்டாபி சீத்தாராமை யாவை வேட்பாளராக அறிவித்தார். நேதாஜி பெரும் வாக்குகள் பெற்று வென்றார். காந்திக்கும் போசுக்கும் கருத்து வேறுபாடு விரிவடைந்தது. போசு மீது வெள்ளை அரசு அடக்குமுறைகளை ஏவியது. உடல்நலம் பாதிக் கப்பட்டு ஐரோப்பாவில் வியென்னா நகரில் அரசியல் அடைக்கலம் புகுந்தார். அங்கிருந்து தனது பணிகளைப் போசு தொடங்கியபோது, அவருக்கு எழுத்தராக, உதவியாளராக ஐரோப்பிய பெண் எமிலி ஷெங்கல் பணியில் சேர்ந்தார். போசு - ஷெங்கல் காதல் 1937 இல் உற்ற நண்பர்கள் முன்னிலையில் இனிய திருமணமாக நிறைவேறியது. இந்திய விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள போசு உடனடி யாக நாடு திரும்பினார். அப்போது போசு ஷெங்கலுக்கு எழுதிய மடலில் “எனது நாடு என்னை அழைக்கிறது. கடமை என்னை அழைக்கிறது. நான் உன்னை விட்டு பிரிய வேண்டும். என்னுடைய முதல் காதலி யான என்னுடைய நாட்டுக்குத் திரும்ப வேண்டும்” என்று அழகுறக் குறிப்பிட்டு காதலா கடமையா என்ற கேள்விக்கு விடை கண்டார்.

1941இல் கல்கத்தா நகரில் வீட்டுக்காவலிலிருந்தும் பிரிட்டிசு காவல் துறையின் கண்காணிப்பிலிருந்தும் தப்பி மீண்டும் ஐரோப்பியப் பயணம் மேற்கொண்ட நிகழ்வு பரபரப்பு நிறைந்த வீரகாவியமாக இந்நூலில் வெளிப்படுகிறது. இரண்டாம் உலகப் போர் தொடங்கிய நிலையில் பிரிட்டிசு ஆட்சியை இந்தியாவில் இருந்து அகற்றுவதற்கு ஜெர்மானியத் தலைவர் இட்லர், இத்தாலி நாட்டு தலைவர் முசோலினி ஆகியோரைச் சந்தித்து இராணுவ உதவி பெற்றார். இக்காலகட்டத்தில் தான் ஷெங்கலுக்கு ஒரு பெண் பிறந்தது. அனிதா என்று பெயர் சூட்டினார். சில மாதங் களில் மீண்டும் ஜப்பான், சிங்கப்பூர், பர்மா ஆகிய நாடுகளுக்குச் சென்று இந்திய தேசிய இராணுவத்தை வலிமையான முறையில் கட்டமைத்தார். 1945ஆம் ஆண்டு சனவரி 23ம் நாள் போசுவின் 48வது பிறந்த நாள் விழாவைச் சிறப்புடன் அமைக்கச் சிங்கப்பூர் நண்பர்கள் முனைந்தனர். முதலில் விழாவில் பங்கு கொள்ள போசு மறுத்தார். இந்திய தேசிய இராணுவத் திற்கு நன்கொடை திரட்டுவதற்காக இந்த விழாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நண்பர்கள் வலியுறுத்தினர்.

விழாவில் பங்கேற்றபோது, போசு ஆற்றிய உரையில் “எனது பிறந்தநாளை விழாவாக எடுப் பதை நான் வெளிப்படையாக எதிர்க்கிறேன். தனிமனி தரைப் போற்றுவதைவிட கொள்கைகளையும் சிந்தனை களையும் பரப்புவதில் கவனம் செலுத்துங்கள்” என்று குறிப்பிட்டார். இறக்கும் தருவாயிலும் நேதாஜி பின் பற்றிய நெஞ்சுரமும், பொது நல நோக்கும் இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. 1945 ஆகஸ்டு மாதம் 15ஆம் நாள் நேதாஜி சென்ற வானூர்தி தைவானில் வீழ்ந்து விபத்துக்குள்ளானபோது மதியம் தலைநக ரான தைபேவில் உள்ள நான்மன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். படுகாயம் அடைந்த போசு உடல் முழுவதும் கட்டுப்போடப்பட்டிருந்தது. அவர் படுக்கை அருகில் வானூர்தியில் அவருடன் பயணம் செய்த தளபதி அபிபுர் ரகுமான் சிகிச்சைப் பெற்றார். மொழிப் பெயர்ப்பாளரும் போசுவை நன்கு அறிந்த வருமான நக்குமரா மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டார். “எனது நாட்டைச் சார்ந்தவர்கள் எனக்குப் பிறகும் இங்கு வருவார்கள். அவர்கள், தைவான் வரும்போதும் நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்” என்று அவரிடம் போசு கூறினார். அரைமணி நேரத் திற்குப் பிறகு இராணுவத்தளபதி ஷிட்டி எங்கே என்று கேட்டார். நேதாஜி தலையில் இரத்தக் காயம் இருந்தது. அப்போது மருத்துவமனையில் போரில் காயமுற்ற பல ஜப்பானியத் தளபதிகள், வீரர்கள், சிகிச்சை பெற்று வந்தனர். பலர் வலி தாங்க முடியாமல் கதறினார்கள். எங்களைக் கொன்று விடுங்கள் என்று கூக்குரலிட்டனர்.

நேதாஜி மட்டும் அமைதியாக இருந்தார். இந்நிகழ்வு எனக்குப் பெரும் திகைப்பை ஏற்படுத்தியது என்று மொழிப்பெயர்ப்பாளர் நக்குமரா குறிப்பிட்டுள்ளார். இரவு 9 மணியளவில் நான் தூங்கச் செல்லுகிறேன் என்று நேதாஜி இறுதியாகக் குறிப்பிட்டார். மீளாத் துயிலில் ஆழ்ந்தார். நேதாஜி பொது வாழ்விலும் தனி வாழ்விலும் பின்பற்றிய உயர் மரபுகளும், மாண்பு களும் இன்றளவும் பொதுவாழ்வில் ஈடுபடுவோர் பின்பற்றத்தக்க வழிகாட்டும் நெறிகளாக அமைகின்றன. விடுதலை பெற்ற இந்தியாவில் பொதுவுடைமை நெறி களைப் பின்பற்ற வேண்டும். வேளாண் தொழிலாளர்கள், உழைப்பவர்கள், சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த் தப்பட்டவர்கள் ஆகியோர் நலன்களுக்குச் சிறப்புத் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். இந்தியாவின் பன் முகத் தன்மைகள் போற்றப்பட வேண்டும். சிறுபான் மையினர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு உண்மையானக் கூட்டாட்சியியலைப் பின்பற்றுகிற நாடாக இந்தியா அமைய வேண்டும். அதிகாரங்களை மத்திய அரசில் குவிக்கக்கூடாது எனப் பல காலக்கட் டங்களில் நேதாஜி வலியுறுத்திய கருத்துகள் இந்நூலில் சான்றுகளுடன் சுட்டப்பட்டுள்ளன. இந்நூல் ஆசிரியர் தனது முடிவுரையாகச் சில புதிய கருத்துகளை ஆணித் தரமாகச் சுட்டியுள்ளார்.

“காந்தியுடைய அரசியல் தளபதிகளான நேருவும், பட்டேலும் பாகிஸ்தானுக்கு அதிகாரங்களைப் பிரித்துக் கொடுப்பதில் காந்தியினுடைய நல்லெண்ணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரசுக் கட்சியின் ‘இயந்திர அரசியல்வாதிகள்’ பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் உருவாக்கிய ஒற்றையாட்சி முறையைக் கைப்பற்றுவதிலேயே குறியாக இருந்தார்கள். அதற்காக பாகிஸ்தான் பிரிவினையை விலையாகக் கொடுக்கக்கூட முன்வந்தார்கள். இக்கூற் றைக் கவலையோடு குறிப்பிடும் போது என்னுடைய ‘ஆமாம் சாமிகள்’ எல்லாம் ‘இல்லை சாமிகள்’ ஆகி விட்டார்கள் என்று காந்தி கூறினார்.

மேலும் இந்நூலாசிரியர் நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்திற்குப் பாகிஸ்தான் அளித்த மரியா தையைக்கூட இந்தியா வழங்கவில்லை என்ற அதிர்ச் சியான தகவலையும் குறித்துள்ளார். திறமை வாய்ந்த நேதாஜியின் இராணுவ உயர் அலுவலர்கள் பல நாடுகளில் தூதுவர்களாக அமர்த்தப்பட்டனர். அவர் களும் மிக சிறப்பான முறையில் பணியாற்றினார்கள். இருப்பினும் நேரு, மவுண்ட்பேட்டன் தம்பதிகளின் செல்வாக்குப் பிடியில் இருந்ததால், இந்தியா விடுதலை பெற்றபின் நேதாஜியின் இராணுவத்தில் பணியாற்றிய வர்களை இந்திய இராணுவத்தில் பணியாற்ற அனு மதிக்கவில்லை. இந்திய விடுதலைக்குப்பின் ஏகாதி பத்திய எதிர்ப்புணர்வைப் பின்பற்றாமல் காலனி ஆதிக்க உணர்வையே இராணுவத்தைப் பொருத்த வரையில் நேரு தொடர்ந்தார். ஆனால், ஜின்னா நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றியவர்களைப் பாகிஸ்தான் இராணுவத்தில் இணைத்துக் கொண்டார். 1948இல் காஷ்மீர் போரின் போது பாகிஸ்தான் சார்பாகப் போரிட்டவர்களில் ஒருவர், வேறுயாரும் அல்லர்; நேதாஜியின் இறுதிப் பயணத்தில் நண்பனாக இருந்த அபிபுர் ரகுமான்தான் ஆவார். இந்தக் காலனி ஆதிக்க உணர்வுதான் நேருவின் அரசியலில் கலந்து, தொடர்ந்து இந்தியாவின் உண்மை யான அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்குத் தடைகளாக அமைந்துள்ளன. பாரத் ரத்னா விருதை நேதாஜிக்கு வழங்குவதில் காட்டிய காலதாமதம் கூட இதற்கு ஒரு அடையாளமாகும்.

பாரத் ரத்னா பட்டியலில் முதலில் இடம்பெற்றவர் 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்குபெறாமல் காங்கிரசிலிருந்து ஒதுங்கிய சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் பலருக்குத் தகுதியின் அடிப்படையிலும் அரசியல் பரிந்துரையாலும் பாரத் ரத்னா வாரி வழங்கப்பட்டது. 1987இல் எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பிறகு, அவரது கட்சியைப் பிளந்து, ஜானகி அணியை உருவாக்கி, திருமதி. ஜானகியை 24 நாட்கள் முதலமைச்சராக்கி, பின் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி நீக்கி, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவந்து 1988இல் எம்.ஜி.ஆரின் பாரத் ரத்னா விருதை ஜானகி கையில் கொடுத்தனர். சமூக நீதியின் ஏந்தல், இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான அறிஞர் அம்பேத்கருக்கு அவர் மறைந்து 36 ஆண்டுகளுக்குப்பின் 1990ஆம் ஆண்டு பாரத் ரத்னா விருதை வழங்கினார்கள். 1991இல் இராஜிவ் இறந்த அதே ஆண்டில் பாரத் ரத்னா வழங்கப்பட்டது. இந்தியாவின் முதல் துணைப் பிரதமர், உள்துறை அமைச்சர், விடுதலைப் போராட்ட வீரர், பட்டேலுக்கு அவர் இறந்து 41 ஆண்டுகளுக்குப் பிறகு பாரத் ரத்னா 1991இல் வழங்கப்பட்டது. நல்ல காலம் மொரார்ஜி தேசாய் 99 ஆண்டுகள் உயிராடு வாழ்ந்ததால் தப்பித்தார். அவருக்கு உயிரோடு இருக்கும்போது பாரத் ரத்னா 1991 வழங்கப்பட்டது.

1992இல் இந்தியாவின் புகழ்மிக்க விடுதலைப் போராட்ட வீரர், நேருவுக்கு இணையான தலைவர் அபுல்கலாம் ஆசாத்திற்கு அவர் இறந்த பின்பு வழங்கினார்கள். மேற்குவங்கத் திரைப்பட இயக்குநர் சத்தியஜித்ரேவுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்ட பிறகு, அவர் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் இறக்கும் தருவாயில் பாரத் ரத்னா 1992இல் வழங் கப்பட்டது. இத்தனைக் கூத்துகளுக்குப் பிறகுதான் மாவீரர் நேதாஜிக்கு 1992ஆம் ஆண்டு பாரத் ரத்னா வழங்க முடிவு செய்தார்கள். நேதாஜி உயிரோடு இருக்கி றாரா? என்பதை ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட ஆணையங்கள் உறுதியாகக் கருத்துத் தெரிவிக்காத காரணத்தினால் இதன் தொடர்பாக, ஒரு பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்ததால் 1992ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பாரத் ரத்னா விருதும் திரும்பப் பெறப்பட்டது. இவ்வகை காங்கிரசு அரசியல் சார்ந்த மத்திய அரசின் முடிவுகளைத்தான் காலனி ஆதிக்க உணர்வுத் தொடர்ச்சி என்று பேராசிரியர் சுகதா போசு குறிப்பிடுகிறார் போலும்! இதைத்தான் நேருவின் மரபுரிமை அரசியல் என்று காங்கிரசுக் கட்சியும் அதன் தலைவர் இத்தாலியரான சோனியாவும் குறிப்பிட் டாலும் வியப்பில்லை. இவ்வகை அரசியல் கூற்றை மீண்டும் மெய்ப்பிப்பதற்காகத்தான் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டதா?

Pin It