பொருளாதாரம் மற்றும் சமூகப் பிரச்சனைகளில் வல்லுநராக இல்லாத ஒருவர் சோசலிசம் பற்றிக் கருத்துக் கூறுவது ஏற்புடையது தானா? பல காரணங் களினால் அது சரிதான் என்று நான் நினைக்கின்றேன். சமூக அமைப்பை பாதிக்கும் பிரச்சனைகளுக்குக் கருத்துக்கூறும் உரிமை வல்லுநர்களுக்கு மட்டுமே உள்ளது என்று நாமாகவே நினைத்துக் கொள்ளக்கூடாது.

மனித சமுதாயம் ஒரு சிக்கலைக் கடந்து கொண்டி ருக்கிறது. அதன் ஸ்திரத்தன்மை கடுமையாகக் சிதைந்துள்ளது என்று பல குரல்களை நாம் சிறிது காலமாகக் கேட்டுக் வருகிறோம். தனிநபர்கள், தாங்கள் சார்ந்துள்ள குழுவை வெறுப்பது இச்சூழலின் தனித்துவ மான அடையாளம். இதை விளக்க எனது அனுபவம் ஒன்றைக் கூறுகிறேன்.

அண்மையில் ஒரு புத்திசாலியான மனிதரிடம் அடுத்தடுத்து வரக்கூடிய போர் ஆபத்துப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அத்தகைய போர் மனித இனத்தையே அழித்துவிடும்; இந்த ஆபத்திலிருந்து ஒரு அசாதாரண அமைப்புதான் நம்மைக் காக்க முடியும் என்றேன். அதற்கு எனது நண்பர் மிகச் சாதாரணமாக “மனித இனம் அழிவது பற்றி நீங்கள் ஏன் இத்தனை ஆழமாகக் கவலைப் படுகிறீர்கள்?” என்றார்.

ஒரு நூற்றாண்டுக்குமுன், இதுபோல் யாரும் இத்தனை எளிதாகச் சொல்லியிருக்கமாட்டார்கள் என்று நான் உறுதியாக நினைக்கிறேன். இவை, தன்னுள் ஒரு சமநிலையை உருவாக்க வீணாக முயன்று அதில் வெற்றி பெறும் நம்பிக்கையைக் கிட்டத்தட்ட இழந்து விட்ட ஒரு மனிதனின் வார்த்தைகள். இது வேதனை தரும் தனிமையின் வெளிப்பாடு. பல மனிதர்களும் இன்று அனுபவித்து வரும் தனிமை - இதன் காரணம் என்ன? தப்பிக்கும் வழி இருக்கிறதா?

மனிதன் ஒரே சமயத்தில் தனியனாகவும், சமூகத் தின் அங்கமாகவும் இருக்கிறான். ஒரு தனியனாகத் தனது இருப்பை, தனக்கு நெருக்கமானவர்களைப் பாதுகாக்கவும், தனது தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் முயற்சிக்கிறான். ஒரு சமூகத்தின் அங்கமாகத் தனது சக மனிதர்களின் அன்பை, அங்கீகாரத்தைப் பெற, அவர்களது இன்ப துன்பங்களில் பங்குபெற, அவர்களது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற முயல்கிறான்.

பல சமயங்களில் முரண்படும் இந்தப் பல்வேறு முயற்சிகள்தான் ஒரு மனிதனின் தனித்துவத்துக்குக் காரணம். அவற்றின் ஒரு குறிப்பிட்ட சேர்க்கைதான் ஒரு மனிதன் எந்த அளவு ஒரு உள் சமநிலையை அடைகிறான்-சமூகத் தின் நலவாழ்விற்கு எந்த அளவு பங்களிக்கிறான் என்பதை முடிவு செய்கின்றன.

இந்த இரு விளைவுகளின் ஒப்பீட்டளவிலான வலிமை, முக்கியமாக, மரபுரிமையாகத் தீர்மானிக்கப் பட வாய்ப்புள்ளது. ஆனால் இறுதியாக வெளிப்படும் ஆளுமை பெரும்பாலும் தனது வளர்ச்சிக் காலத்தில் ஒரு மனிதன் இருக்கும் சூழல், அவன் வளர்ந்த சமூக அமைப்பு, அச்சமூகத்தின் பழக்கவழக்கங்கள், ஒரு குறிப்பிட்ட நடத்தையை அது எடைபோடும் விதம் ஆகியவற்றைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுகிறது.

ஒரு தனிமனிதனுக்குச் ‘சமூகம்’ என்ற பொருண்மையான கருத்தியலுக்கு அவனது சமகால மனிதர்கள், முந்தைய தலைமுறையினரோடு அவனது நேரடி, மறைமுகத் தொடர்புகளின் மொத்த வடிவம் என்று பொருள்.

தனிமனிதன் தானாகச் சிந்திக்க, உணர, முயற்சிக்க, உழைக்க முடிந்தவனாக இருக்கலாம். ஆனால் தனது உடல், அறிவு, உணர்வுரீதியான இருப்பிற்கு அவன் சமூகத்தைச் சார்ந்துதான் இருக்க வேண்டும் என்ப தால், சமூகம் என்ற சட்டகத்தைத் தாண்டி அவனைப் பற்றி நினைக்கவோ, புரிந்து கொள்ளவோ முடியாது. மனிதனுக்கு உணவு, உடை, வீடு, தொழிற்கருவிகள், மொழி, சிந்தனை வடிவம், சிந்திப்பதற்கான விஷயம் அனைத்தையும் ‘சமூகம்’ தான் தருகிறது. ‘சமூகம்’ என்ற சிறு வார்த்தைக்குள் ஒளிந்துகொண்டுள்ள, முன்பும்-இன்றும் வாழ்ந்த - வாழ்கின்ற இலட்சக் கணக்கான மக்களின் உழைப்பு, சாதனையால்தான் அவனது வாழ்க்கை சாத்தியமாகியுள்ளது.

எனவே, எறும்பு, ஈக்கள் வாழ்வு போலவே, தனி மனிதன் சமூகத்தைச் சார்ந்திருக்கும் இயற்கையின் நியதியைப் புறந்தள்ள முடியாது என்பது தெளிவு. எனினும், எறும்பு, ஈக்களின் வாழ்க்கைச் சக்கரம், அதன் ஒவ்வொரு அசைவும் கடுமையான, மரபணு சார்ந்த உள்ளுணர்வுகளால் தீர்மானிக்கப்பட்டாலும், மனித வாழ்வில் சமூக அமைப்பும், உறவுகளும் பெரிதும் மாறக் கூடியவை. மாற்றங்களால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவை. நினைவாற்றல், புதிய தொடர்புகளை உருவாக்கும் திறன், பேச்சாற்றல் ஆகியவை உயிரியல் மரபுக் கூறுகளால் கட்டுப்படுத்தப்படாத பல முன்னேற்றங்களைச் சாத்தியமாக்கியுள்ளன.

இந்த முன்னேற்றங்கள் பழக்கவழக்கங்களில், நிறுவனங் களில், அமைப்புகளில், இலக்கியத்தில், விஞ்ஞான-தொழில்நுட்பச் சாதனைகளில், கலை வடிவங்களில் வெளிப்படுகின்றன. இது ஒருவகையில், மனிதன் தனது செயல்பாடுகளால் தனது வாழ்வில் எப்படித் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்; உணர்வுபூர்வமான சிந்தனை, தேவைகள் ஆகியன இதில் எப்படி ஒரு பங்கை ஆற்ற முடியும் என்பதை விளக்கிக் காட்டுகிறது.

மனித இனத்தின் தனி இயல்பான இயற்கை உந்துதல்கள் உள்ளிட்டவற்றை நாம் மாற்ற இயலாது என்று கருதும் ஒரு உயிரியல் ரீதியான அமைப்பை, மனிதன் தனது பிறப்பின் போது மரபணு ரீதியாகப் பெறுகிறான். கூடுதலாக, தனது வாழ்நாளில் பல்வேறு தாக்கங்கள், தொடர்புகள் மூலம் சமூகத்திலிருந்து ஒரு கலாச்சார அமைப்பையும் பெறுகிறான்.

காலப்போக்கில் மாற்றமடையும் இந்தக் கலாச்சார அமைப்புதான், தனிமனிதனுக்கும் சமூகத்திற்குமான உறவைப் பெரு மளவு தீர்மானிக்கிறது. பண்டைய கலாச்சாரங்கள் ஒப்பீட்டு ஆய்வு செய்த நவீன மனித இன வரை வியல், நிலவி வரும் கலாச்சார அமைப்பு, சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமைப்புகளின் வகைகள் ஆகியவற்றால் மனிதர்களின் சமூக நடத்தை பெரிதும் மாறுபடும் என்று கூறுகிறது.

மனித இனத்தை முன் னேற்றுவதற்காக உழைப்போர் இதில் நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். மனித இனம் தனது உடலியல் ரீதியான அமைப்பின் காரணமாக ஒன்றையொன்று அடித்து ஒழிக்கச் சபிக்கப்பட்டதல்ல.

மனிதர்கள் தம்மையறியாமல், தம் தன் முனைப்பின் கைதியாக உள்ளனர். அவர்கள் பாதுகாப்பற்றவர்களாக, தனியர்களாக, சூதுவாதற்ற எளிய வாழ் வின் மகிழ்ச்சியை இழந்தவர்களாக உணர்கிறார்கள்.

குறுகிய, இடர் நிறைந்த இந்த வாழ்வின் அர்த்தத்தை ஒருவன் சமூகத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதன் மூலம் அறிய முடியும். எனது கருத்தின் படி, இந்தத் தீங்கின் உண்மையான காரணம் இன்று நிலவி வரும் முதலாளித்துவ சமுதாயத்தின் அராஜகம் தான்.

உற்பத்திச் சாதனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியை வாங்கும் நிலையில் உள்ளனர். உற்பத்திச் சாதனங்களின் உதவியோடு தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் புதுப்பொருட்கள் முதலாளியின் சொத்தாகின்றன. இதில் முக்கியமானது என்னவென்றால், தொழிலாளர்கள் உற்பத்தி செய்வதற்கும், அதற்கு அவர்களுக்குத் தரப்படும் கூலிக்கும் இடையே உள்ள உறவுதான்.

இரண்டும் அவற்றின் உண்மை மதிப்பில் சமமாக இருக்க வேண்டும். எதார்த்தத்தில் தொழிலாளி உற்பத்தி செய்வதன் மதிப்பு அவர் பெறும் கூலியைவிட அதிகமாக இருக்கிறது. எனவே கூலி தரப்படாமல் தொழிலாளி வழங்கும் உழைப்பே ‘உபரி உழைப்பு’. உண்மையில் இந்த உழைப்பு ‘இலவசம்’ தான் - திருடப்பட்டதுதான். தொழிலாளி பெறுவது, அவர் உற்பத்தி செய்த பொருளின் உண்மையான மதிப்பால் தீர்மானிக்கப்படுவதில்லை.

மாறாக, அவரது குறைந்த பட்சத் தேவைகள், முதலாளிக்குத் தேவைப்படும் உழைப்புச் சக்திக்கும், அந்த வேலைக்குப் போட்டியிடும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கும் உள்ள உறவு ஆகியன தீர்மானிக்கின்றன. கருத்தியலாகக் கூட தொழிலாளி பெறுவது அவனது உற்பத்தியின் மதிப்பால் முடிவு செய்யப்படுவதில்லை.

முதலாளிகளுக்கிடையிலான போட்டி, தொழில் நுட்ப முன்னேற்றங்கள், உழைப்புப் பிரிவினை, சிறிய உற்பத்தி அலகுகளை நசுக்கிப் பெரிய உற்பத்தி அலகுகளை ஊக்குவித்தல் போன்ற காரணங்களால், தனிச்சொத்து ஒரு சிலர் கையில் குவிகிறது. இதன் காரணமாகச் சனநாயக ரீதியாக உருவாக்கப்பட்ட அரசியல் சமூகத்தாலும் கட்டுப்படுத்த முடியாத வகையில், ஒரு தனிச்சொத்து ஆளும் வர்க்கம் உருவாகிறது.

இது உண்மை. ஏனெனில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்களுக்கு முதலாளிகள் தான் செலவு செய்கிறார்கள். நடைமுறையில், இந்த முதலாளிகள் வாக்காளர்களை இதுபோன்ற மக்கள் மன்றங்களிலிருந்து பிரித்துவிடுகிறார்கள். இதன் விளைவாக, மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் எளிய மக்களின் பிரதிநிதிகளாக இருந்து அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதில்லை.

மேலும் இன்றைய சூழலில் கல்வி, பத்திரிகை, வானொலி, தொலைக் காட்சி, இணையதளம் முதலிய தகவல் தொடர்பின் முக்கியமான பகுதிகள் அனைத்தையும் முதலாளிகள் தான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தம் கையில் வைத்திருக்கிறார்கள். எனவே தனிப்பட்ட ஒரு குடி மகனால் சரியான முடிவுகள் எடுக்கவோ, தனது அரசியல் உரிமைகளைச் சரியானபடி பயன்படுத்தவோ முடிவதில்லை.

உற்பத்தி என்பது மக்களின் பயன்பாட்டிற்காக என்று இல்லாமல், இலாபம் சம்பாதிப்பதற்காகவே செய்யப்படுகிறது. உழைக்கும் விருப்பமும், சக்தியும் உள்ள அனைவருக்கும் வேலை கிடைக்க வழி யில்லை. ‘வேலையற்றவர் பட்டாளம்’ எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. தொழிலாளி எப்போது தன் வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறான்.

வேலையற்றவர் அல்லது குறைவாக ஊதியம் வாங்குபவர் நல்ல இலாபகரமான சந்தையை உருவாக்குவதில்லை. அதனால் நுகர்பொருள்களின் உற்பத்தி பாதிக்கிறது. இதன் விளைவாகப் பெரும் துன்பம் நேர்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி வேலை யைப் பெருக்குவதற்கும் எளிதாக்குவதற்கும் மாறாக வேலையின்மையை அதிகரிக்கிறது. இலாபவெறியும், அதிக இலாபம் சம்பாதிக்க வேண்டிய அளவுக்கு மேல் உற்பத்தி செய்து விற்பதில் முதலாளிகளுக்கு இடை யிலான போட்டியும் இணைந்து மூலதனம் சேர்க்கை மற்றும் பயன்பாட்டில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்குகிறது.

கட்டுப்பாடற்ற போட்டியால் உழைப்பு பெருமளவு வீணாகிறது. இதனால் நான் முன்பே கூறியதுபோல், தனி மனிதர்களின் சமூக நலன் நாடும் உணர்வு முடங்குகிறது.'

இப்படித் தனிமனிதன் முடங்கிப் போவதுதான் முதலாளித்துவத்தின் மோசமான தீங்கு என்று நான் கருதுகிறேன். நமது கல்வி முறை முழுவதும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மிகைப்படுத்தப்பட்ட போட்டி மனப்பான்மை மாணவர் மனதில் புகட்டப்படுகிறது. தன் வருங்காலத்திற்கான தயாரிப்பிற்காகப் பொருளீட்டும் வெற்றியை அடையவும் அதை வழிபடவும் மாணவன் பயிற்றுவிக்கப்படுகிறான்.

இக்கொடிய தீமைகளை ஒழிக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது என நான் உறுதியாக நம்புகிறேன். சோசலிசப் பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலமும், சோசலிசக் குறிக்கோள்களை நோக்கிய கல்வி அமைப்பை அதோடு சேர்த்துக்கொண்டு செல்வதன் மூலமும்தான் இத்தீமைகளை ஒழிக்க முடியும்.

சோசலிசப் பொருளாதாரத்தில், உற்பத்திச் சாதனங்கள் சமூகத்திற்குச் சொந்தமாக இருக்கும். திட்டமிட்ட வகையில் அவை பயன்படுத்தப்படும். சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் ஒரு திட்டமிட்ட பொருளாதாரம், உழைக்க முடிந்த அனைவருக்கும் வேலைகளைப் பகிர்ந்து தரும். ஒவ் வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் அது வாழ்க்கையை உறுதிப்படுத்தும்.

தனிமனிதனுக்கான கல்வி, அவனது உள்ளார்ந்த திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவுவதோடு, நமது இன்றைய சமூகத்தில் உள்ள பழக்கமான அதிகாரத்தையும் வெற்றி யையும் புகழ்தலை விடுத்து, தன் சக மனிதர் குறித்த பொறுப்பை அவனை உணரச் செய்யும்.

ஆனால் ஒரு திட்டமிட்ட பொருளாதாரம் மட்டுமே சோசலிசம் அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட திட்டமிட்ட ஒரு பொருளாதாரம் தனிமனிதனின் அடிமைப்படுத்தலோடு சேர்ந்து நடக்கலாம். சோசலிசத்தை அடைய சில கடுமையான சமூக, அரசியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டியதாக இருக்கும்.

அரசியல், பொருளாதார அதிகாரத்தின் அதீத முக்கியத்துவத்தை வைத்துப் பார்க்கும்போது, அதிகார வர்க்கம் அதிக சக்தி வாய்ந்ததாக மாறுவதை எப்படித் தடுப்பது? தனிமனிதனின் உரிமையை எப்படிப் பாதுகாப்பது? அதிகார வர்க்கத் தின் அதிகாரத்தை சரியீடு செய்யும் சனநாயகத்தை எப்படி உறுதி செய்வது?

வேகமாக மாறுதல் நிகழ்ந்துவரும் காலத்தில் சோசலிசத்தின் நோக்கங்கள், பிரச்சனைகள் பற்றிய தெளிவு மிக முக்கியமானது. இப்போது இன்றைய சூழலில் இப்பிரச்சனைகள் பற்றி தடையற்று, சுதந்திரமாக விவாதிப்பது என்பதை ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ள நேரத்தில், இப்பத்திரிகை தொடங்ப்பட்டுள்ளது மிக முக்கியமான சேவை என்று நான் கருதுகிறேன்.

குறிப்பு : 1849ஆம் ஆண்டு அமெரிக்காவில் மார்க்சியச் சிந்தனையாளர்களால் ‘மன்த்லி ரெவ்யூ’ (Monthly Review) என்கிற மார்க்சிய ஆய்வு மாத இதழ் தொடங்கப்பட்டது.

அதன் முதல் இதழுக்கு அறிவியல் அறிஞர் ஆல்பாட் ஐன்ஸ்டின் ‘சோசலிசம் எதற்கு?’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை, ‘நிகழ்ந்த போதே எழுதப்பட்ட வரலாறு - உலகப் புகழ்பெற்ற மன்த்லி ரெவ்யூ கட்டுரைகள் (1949-1998)’ என்ற பெயரில் பாரதி புத்தகாலயம் 2013 திசம்பரில் வெளியிட்டுள்ள நூலில் முதல் கட்டுரையாக ஐன்ஸ்டின் கட்டுரை இன்னும் விரிவான அளவில் இடம்பெற்றுள்ளது.

இந்நூலில் மொத்தம் 24 கட்டுரைகள் உள்ளன. மார்க்சியத் தேடலில் ஈடுபாடுள்ள தோழர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

விலை ரூ.150/-.

எண்.7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,

சென்னை-600 018.

தொலைப்பேசி : 044-24332424.

சுருக்க வடிவத் தொகுப்பு - தமிழில் : க. முகிலன்

Pin It