பாவேந்தர் வாழ்ந்த காலம் அரசியலில் அனற் காற்று வீசியகாலம். சமுதாயத் தளத்தில் சாதியச் சாக்கடையின் முடைநாற்றம் எல்லோருடைய மூக்கையும் துளைத்துக் கொண்டிருந்தது. ஓடப்பராய்க் கிடந்த ஏழையப்பர் எல்லா நிலைகளிலும் உரிமை மறுக்கப் பட்ட அடிமைத் தமிழராய் வாழ்ந்து கொண்டிருந்தனர். அறியாமை, பெண்ணடிமைத்தனம்,அயல்மொழி ஆதிக்கம், தமிழ்மொழிக்கான உரிமை மறுப்பு என ஒட்டுமொத்தத் தமிழகமே ஒளிகுன்றிக் கிடந்த இருண்ட காலத்தில் வானக்கதிர்போலச் சில வரலாற்றுத் தலை வர்களின் வருகை அமைந்தது.

பெரியார் :

பாவேந்தர் தம் வாழ்நாளெல்லாம் ஏத்திப் போற்றிய ஈடிணையற்ற தலைவர் பெரியார். அவர் வருகை பற்றிச் சொல்லும்போது பயிர்போன்றார் உழவர்க்கு, பால்போன்றார் குழந்தைகட்கு, பசுங்கட்டித் தயிர் போன்றோர் பசித்தவர்க்கு என மிக அழகாகக் குறிப்பிடுவார். செயிர் (துன்பம்) தீர்க்க வந்த தவம் போன்றார், செந்தமிழ்நாட்டு மக்கட்கெல்லாம் உயிர் போன்றார் பெரியார் என்றும் உரைப்பார். பெரியா ரைத் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தும் அவரு டைய புகழ்மிக்க வரிகளை யாரால் மறக்க முடியும்?

அவர்தாம் பெரியார் - பார்

அன்பு மக்கள் கடலின் மீதில்

அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்                                                                                                                 (அவர்தாம்)

மக்கள் நெஞ்சின் மலிவுப் பதிப்பு

வஞ்சகர்க்கோ கொடிய நெருப்பு

மிக்க பண்பின் குடியிருப்பு

விடுதலைப்பெரும்படையின்தொகுப்பு                                                                                                 (அவர்தாம்)

தொண்டு செய்து பழுத்த பழம்

தூய தாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகுதொழும்

மனக்குகையில் சிறுத்தை எழும்                                                                                                               (அவர்தாம்)

இப்படி எழுச்சியோடு பெரியாரை அறிமுகப்படுத்திய இனமானப் பாவலர்தாம் பாவேந்தர். பெரியார் தமிழர் தவம் கொடுத்த நன்கொடை; தன்மானம் பாயும் தலைமேடையாம் அந்த தனித்தலைவர் தமிழர்க்கு வாய்த்த வாட்படை. அவரின் வாய்மைப் போருக்கு நம்மையெல்லாம் ஒப்படைப்பதுதான் முறை என்பார் பாவேந்தர்.

பார்ப்பனிய மேலாண்மையால் பாழ்பட்டுக் கிடந்த தமிழினத்தை ஆர்ப்போடு மேலெழச் செய்த அரிமாத் தலைவர் பெரியார். கடவுளை வெறுத்தவர் சமயத் தைப் பழித்தவர் என்பதை மட்டும் சொல்லித் தப்பான கற்பிதங்களால் பெரியாரை ஊர்ப்புற மக்களோடு ஒண்டவிடாமல் செய்த சதியைத் தன்மான இயக்கம் உடைத்தெறிந்தது. அது பற்றியும் பாவேந்தர் பாடுவார் :

பார்ப்பனியம் மேலென்று சொல்லிச் சொல்லிப்

        பழையயுகப் பொய்க்கதைகள் காட்டிக் காட்டி

வேர்ப்புறத்தில் வெந்நீரை வார்த்து வார்த்து

        மிகப்பெரிய சமூகத்தை இந்நாள் மட்டும்

தீர்ப்பரிய கொடுமைக்குள் ஆக்கி வைத்த

        செயல்அறிந்து திடுக்கிட்ட தலைவா! உன்னை

ஊர்ப்புறத்து மாந்தரெலாம் உணருங் காலை

        உவக்கின்றாய் உன்பணியில் ஓய்ந்தாய் இல்லை

ஆர்ப்பரித்தே பணிசெய்த தன்மை கண்டோம்

        அப்பணிக்கே நாங்கள்உனை வணக்கம் செய்தோம்.

என்று பெரியாரின் தொண்டுக்குத் தலைவணக்கம் செய்த பெருங்கவிஞர் பாவேந்தர் ஆவார். மருண்டு வாழ்ந்த தமிழரை வீறுகொண்டு வெகுண்டு எழு வைத்த அருட்பெருக்கே பெரியார்தான் என்பது அவர் துணிபு.

காமராசர்:

பெரியாரை அடுத்துப் பாவேந்தரின் உள்ளங் கவர்ந்த இன்னொரு தலைவர் காமராசர் ஆவார். தமிழனின் கல்விக் கண்ணைப் பறிக்க, இருந்த பள்ளிகளையெல்லாம் மூடியது மட்டுமல்லாமல் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்து கொடுமை செய்த குல்லுகப் பட்டர் இராசகோபாலாச்சாரியைக் குடல் அறு மாறு ஓடச் செய்தவர் பெரியார். அந்தப் பெரியாருக்குப் பெருந்துணையாய் நின்று, நாடெங்கும் பள்ளிகளைத் திறந்து கல்வி நீரோடையைப் பெருக விட்டவர் காமராசர். அதனைப் பெருநன்றியோடு நெஞ்சில் எண்ணிப் பின்வருமாறு பாடுவார் பாவேந்தர் :

அறிவுடையார் மானமுள்ளார் காமராசர்

அன்புடையார் திராவிடநன் மக்கள் மீதில்

நெறியயிற்து செலத்தக்க ஆற்றல் உள்ளார்

நெஞ்சத்தில் தெளிவுடையார் தம்நலத்தைச்

சிறிதேனும் எண்ணாத பெரும்பண் பாளர்

திராவிடத்தைக் காத்திடுமோர் உறுதி யுள்ளார்

காமராசர் ஆட்சியில் கல்வி-வேலைவாய்ப்புகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் பலநிலைகளில் உயர்வு பெறத் தொடங்கினர். தகுதி திறமை என்ற மோசடிச் சொற்க ளைக் கூறிப் பார்ப்பனர்கள் காமராசர் ஆட்சியைப் பின் இழுக்கப் பார்த்தனர். ‘தாழ்த்தப்பட்டவன் பொறியாளராகிப் பாலங்கட்டினால், அது என்ன இடிந்து விழுமா? மருத்துவராகி ஊசி போட்டால் உயிர் போய் விடுமா?’ என்றெல்லாம் துணிந்து கேட்ட காமராசர் ஆட்சியை அரண்போல் காத்தவர் பெரியார். அது கருதியே பாவேந்தரும்,

“பெருநிலையில் இருக்கின்றீர் காமராசப்

பெருந்தகையீர் உம்பெருமை அவர்கள் கண்ணில்

கருவேலின் முள்போல உறுத்தும், நீவீர்

கடுகளவும் அஞ்சாதீர்...” என எச்சரித்தார்.

‘வேதக்கை காட்டி இது தணல் என்றாலும் வேகாது விருதுநகர் பருப்பாம்’ என்றும் ‘சேதி இனி ஒன்றுண்டு, காமராசர் திராவிடத்துத் திருமேனி’ என்றும் அவரை வாழ்த்தினார்.

அண்ணல் அம்பேத்கர் :

பெரியாரும் அம்பேத்கரும் பல கருத்துகளில் ஒத் திசைவாகப் பணியாற்றிய அரும்பெரும் தலைவர்கள் ஆவர். சாதியொழிப்பு, சனாதன எதிர்ப்பு, ஒடுக்கப் பட்டோர் விடுதலை ஆகியவற்றாக வாழ்நாள் முழுதும் பாடாற்றியவர்கள். அம்பேத்கர் கருத்துகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் பாவேந்தர்.

ஆரியர் என்ன தூய்மை யானவரா?

பூரித் துவக்கும் இந்திய ஆரியர்

அனைவரும் திராவிட அணைப்பில் பிறந்தவர்

தினையளவும் இதில் அய்யம் இல்லை

மாந்தநூல் இயலார் இதனையே ஒப்புவர்

என்று கூறும் பாவேந்தர் சாதியொழிப்பு மற்றும் தீண்டாமையொழிப்புப் பணியில் மற்ற யாவரினும் முன்நின்ற பெருமகன் அண்ணல் அம்பேத்கர் என்கிறார்.

  ‘பாரதியார் முதல் பாரத நாட்டின்

காந்தி அண்ணலார் பெரியார் வரையிலும்

தீண்டா மைநோய் தீண்டா வண்ணம்

பணியாய்க் கொண்டனர் - பணியில் எவர்க்கும்

அணியில் முன்நின்ற அம்பேத்கர்’

என்றும் பாவேந்தர் மேலும் கூறுகையில்,

ஆரியக் கொட்டம் அடியோ டழிய

வீரியங் கொண்ட வெஞ்சின வேங்கைமுன்

மதத்தமிர் அழிந்தது சமயம் மடிந்தது

என அம்பேத்கரின் சமூகப் பங்களிப்பைப் பலபடப் பாராட்டுகிறார்.

திரு.வி.க. :

‘தேனருவி - திரு.வி.க. செந்தமிழ்ப் பேச்சும் எழுத்தும் இன்பத் தேனருவி’ எனப் பாடிக் களித்தவர் பாவேந்தர். இந்திய விடுதலைப் போரின் தொடக்கக் காலங்களில் காங்கிரசு இயக்கத்தைத் தமிழ்நாட்டில் கட்டி வளர்த்த முன்னோடிகள் பெரியார், திரு.வி.க. வரதராசலு என்னும் மூவரே ஆவர்.

அந்நாள்களில் பொதுமேடைகளில் நல்ல தமிழ் பேசுவோர் எவரும் இலர். அயல்மொழியான ஆங்கிலமும் ‘அக்ராசனர் அவர்களே, மகா ஜனங்களே, நமஸ்காரம்’ என்கிற நரகல் நடை சமற்கிருதமுமே கோலோச்சின. தூய தமிழில் இனிக்க இனிக்க ஏடெழுதுவோர் இல்லாதிருந்த காலமது. அந்த நேரத்தில் தான் செந்தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் வரவு வாய்த்தது.

காய்ச்சிவைத்த பசும்பாலில் கழுநீரைக்

        கலந்ததுபோல் நன்றில் தீதைப்

பாய்ச்சிவைத்துப் பிழைப்பாரும், பாழ்பட்ட

        தமிழர்களும் வாழும் நாட்டில்

பேச்சுவைத்த தோடுகனி பிழிந்துவைத்துச்

        சுத்தவாய் பேச வைத்து

மூச்சுவைத்துத் தமிழர்களை முடுக்கியஇத்

தலைமுறையை வாழ்த்துகின்றேன்

என்று மேடைத்தமிழிலும் எழுத்துத் தமிழிலும் புதுப்பாதை தொடங்கி வைத்த திரு.வி.க.வின் தொண்டி னைப் பாவேந்தர் போற்றுகிறார்.

இத்துயர் தமிழ்நாட்டில் எனைமகிழச்

        செய்தளவாய் இருப்ப வற்றுள்

முத்தமிழ்வாய் உழைப்பாளிக் குழைக்குந்தோள்

        அன்புள்ளம், தமிழ் எழுத்தை

வித்தியுயர் விளைக்கும்விரல், தமிழருக்கோர்

        தீமைஎனில் விரைந்தோடுங்கால்

இத்தனைகொள் கலியாண சுந்தரனார் 

என்றபொதுச் சொத்தும் ஒன்றே என்று திரு.வி.க.வின் உடல்உறுப்புகள் அனைத்தையும் தமிழ்நாட்டின் பொதுச் சொத்தாக்கிய பெருமை பாவேந்தரையே சாரும்.

ம. சிங்காரவேலர் :

தந்தை பெரியாருடன் இணைந்து தமிழகத்தில் பொதுவுடைமைக் கருத்துகளைப் பரப்பிய தன்னி கரற்ற தலைவர் ம. சிங்காரவேலர் ஆவார். இவரும் பெரியாரும் இணைந்து உமதருமக் கருத்துகளைத் தமிழகம் முழுவதும் காட்டுத்தீயெனக் கொண்டு சென்றதைக்கண்டு அன்றைய ஆங்கிலேய அரசு அஞ்சியது. ‘குடிஅரசு’ ஏட்டில் சிங்காரவேலர் தீட்டிய கட்டுரைகள் ஒவ்வொன்றும் அவரைச் சிந்தனைச் சிற்பியாய்த் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்திற்று. அது கருதியே பாவேந்தரும் பின்வருமாறு பாடுவார் :

சிங்கார வேலனைப் போல் சிந்தனைச் சிற்பி

எங்கேனும் கண்டதுண்டோ?

சிங்கால வேலனைப் போல்!

பொங்கிய சீர்திருத்தம் பொலிந்ததும் அவனால்

பொய்புரட் டறியாமை பொசிந்ததும் அவனால்

சங்கம் தொழிலாளர்க் கமைந்ததும் அவனால்

தமிழர்க்குப் புத்தெண்ணம் புகுந்ததும் அவனால்

நாடு விடுதலை பெற்றதும் அவனால்

நாத்திகக் கருத்தனல் கனன்றதும்  அவனால்

பாடுபடுவார்க் குரிமை உயிர்த்ததும் அவனால்

பழமையில் புதுமை மலர்ந்ததும் அவனால்

வ.உ. சிதம்பரம் :

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பெயரைக் கேட்டாலே மயிர்க்கால்கள் எல்லாம் சில்லிடு கின்றன. தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக வீடு, நிலம், மனை, மக்கள், சுற்றம், உறவுகள் அனைத் தையும் இழந்த ஈடிணையில்லாத ஈகியே வ.உ.சி. அதனால் அவரை ‘மானவீரன் வ.உ. சிதம்பரன்’ என்று தலைப்பிட்டு அழைப்பார் பாவேந்தர். வ.உ.சி. யை நமக்கு அறிமுகப்படுத்தும் பாட்டிலேயே வீரம் கொப்பளிக்கும்.

கடல்பிறக் கோட்டிச் சென்ற

கால்வழி வந்த எங்கள்

அடல் மிகு விடுதலைப் போர்

அரிமாக்கள் ஆயிரத்தைத்

தடந்தோளில் நெஞ்சில் சேர்த்த

தமிழனை நினைக்கும் வெள்ளைக்

குடலெலாம் கலங்கும்! தூத்துக்

குடியதன் குடிமைகாத்தான்

என்று பாடி, தூத்துக்குடியின் பெருமையை மட்டுமல்ல, தன்னுடைய தன்னலமற்ற ஈகத்தால் தமிழ்நாட்டின் பெருமையையும் சேர்த்தே காத்த கடமை வீரன் வ.உ.சி. எனக் கண்ணீர் பொங்கப் பாடுவார்.

கல்லுடை என்றார் வெள்ளைக்

காரரின் அதிகா ரத்தின்

பல்லுடைப் பதனைப் போல

பாறைகள் உடைத்தார்! நெஞ்சின்

மல்லுடைத் திட்டதில்லை

மறத்தமிழ் நெஞ்சம் இன்பச்

சொல்லுடை படாத பாக்கள்

சொல்லிடும் துயர்து டைக்கும்

இப்படி உடல், பொருள், ஆவி எல்லாம் உற்ற நாட்டு உரிமைப் போர்க்கீந்த வ.உ.சி. சிறையி லிருந்து விடுதலையாகி வந்த போது அவனைச் சீந்துவார் இல்லாத அனாதை ஆனான் என நெஞ்சம் நோக எழுதுவார் பாவேந்தர்.

தேவநேயப் பாவாணர் :

மறைமலையடிகளுக்குப்பின் தனித்தமிழ் இயக் கத்தில் மாபெரும் பாய்ச்சலை உருவாக்கியவர் தேவ நேயப் பாவாணர் ஆவார். தலைதாழாத் தறுகண்வேழம். கொண்ட கொள்கையில் நெக்குவிடாக் குன்றம்.

பாவேந்தரின் தொடக்கக் காலப் பாடல்களில் ஆங்காங்கே சிற்சில இடங்களில் வடசொற்கள் விரவி நிற்பதைக் காணலாம். ஆனால் தனித்தமிழ் இயக்கம் வீச்சுடன் எழுந்ததன் விளைவாக அவர் பாக்களில் தேர்ந்த தனித்தமிழ்ச் சொற்கள் விரவித் தெவிட்டா இன்பம் தந்தன. அதற்கு உந்த விசையாய் நின்று உரம் சேர்த்தது பாவாணர் வளர்த்தெடுத்த தனித் தமிழ் இயக்க ஊட்டமே ஆகும். பன்மொழி அறிஞராய் விளங்கிய பாவாணர் உலகின் முதன்மொழி என்று தம் ஆய்வுகள் வழி உறுதிப்பட மொழிந்து வந்தார். அவர்தம் பன்மொழிப் புலமையைக் குயில் ஏட்டில் தாம் வரைந்த பாக்களில் பாவேந்தர் பின்வருமாறு விதந்தோதுவார்.

ஆதிமொழிஎன் அருமைத் தமிழ்என்றே

ஓதி உலகுக் குணர்த்திடவே - தீதின்றி

ஆவன செய்பே ரறிஞர்அண் யாமலையில்

தேவநேயப் பாவணர் தாம்.

வடமொழியும் இந்தியும் மற்றும் வடக்கிற்

படுமொழிகள் என்ற பலவும் - தடவியே

அந்தமிழே ஆதிஎன் னும்தேவ நேயர்தாம்

எந்தமிழர் எல்லோர்க்கும் வேந்து

உலகமொழிகட்கெல்லாம் உயர்மொழி செந்தமிழே தாய். வடமொழி உள்ளிட்ட தென்மொழிகள் யாவற்றி லும் தமிழே உயர்ந்தது என்ற பாவாணர்தம் முடிவுகளைத் தமிழ்ப்பகைவர் ஒப்பவில்லை. சொல்லொ ணாத் துன்பங்களை அவர்க்குத் தந்து இடையூறுகள் விளைத்தனர். இவையெலாம் கண்டு பாவேந்தர் உளம் நொந்தார்.

திக்கற்ற செந்தமிழ்த்தாய் வெல்கவே வெல்கென்று

மெய்க்குழைக்கும் தொண்டர்மனம் வேகவே வைக்கும்

தடிப்பயல் யாவனே தப்புவான்? அன்னோன்

நடுத்தெருவில் நாறும் பிணம்.

என்று சினந்தெழுதும் பாவேந்தர் செந்தமிழ்ச்சீர் பாப்பும் பாவாணரை செந்நெற் பயன்மழை என்று பாராட்டுவது பொருத்தமே ஆகும்.

எந்தமிழ் மேலென்று உண்மை எடுத்துரைப்போன்

செந்தமிழன் செந்நெற் பயன்மழை - நந்தமிழின்

கீழறுப்போன் கீழோனே! தேவநே யர்வாழ்க

வாழிய செந்தமிழ் மாண்பு!

கலைவாணர் :

திராவிட இயக்கத்தின் முற்போக்குக் கருத்துகளைத் திரைத்துறையின் வழியாக மக்கள் மனங்களில் பதியச் செய்த மாபெரும் நடிப்புக் கலைஞர் கலைவாணர் ஆவார். தியாகராய பாகவதரும், பி.யூ. சின்னப்பாவும் பக்தி வேடங்கள் தாங்கி, இறைவனை உருகிஉருகிப் பாடும் அடுத்த காட்சியிலே கலைவாணர் திரையில் தோன்றிக் கடவுளரையும், மதங்களையும், மக்களை மடையர்களாக்கும் பார்ப்பனர்களின் பம்மாத்து வேலை களையும் படம் பார்ப்பவர் விலா எலும்புகளைப் பதம்பார்க்கும் அளவிற்குத் தீவிர நகைச்சுவை கலந்து சொல்லுவார். கலைவாணரின் இந்த அரிய தொண்டி னைப் பாவேந்தர் மிகமிக அழகாகப் படம் பிடிப்பார் :

கோணலை மாணலைக் காட்டி - வெறும்

கூத்தடிக்காக் கலைவாணர்

காணக்கண் கூசும் கதைக்கும் - நகை

காட்டும் விருந்திசைக் கூட்டி -

வீணடா என்று சொலாமல் - சிறு

வேடத்திலும் வெற்றி பொறிப்பான்

நாணிட வைக்கும் வகையில் - கதை

நாயகனை விஞ்சும் நடிகன்.

ஆம்! பாவேந்தர் குறிப்பிடுவதைப் போல் கதையென்ன கதைநாயகன் யார் என்றெல்லாம் கவலைப்படாமல் கலைவாணரின் நகைச்சுவைக் காட்சிகளைக் கண்டு சுவைக்கவே மக்கள் திரைப்படக் கொட்டகைகளை நோக்கி அணிதிரண்டனர்.

நடிப்புத் துறையில் தாம் ஈட்டிய செல்வத்தின் பெரும் பகுதியை நலிந்தோர் வாழ்வுக்கீந்த வள்ளல் கலைவாணர் என்பதும் பெரும்பாலோர் அறிந்த செய்தியே. இந்த அருங்குணத்தையும் பாவேந்தர் பாட்டில் மறவாமல் குறிப்பிடுகிறார்.

வகைவகையாய்ச் சுவைகாணும் - வெறும்

வாய்ச்சுவை மாந்தருக் கெல்லாம்

பகைச்சுவை என்பதில் லாமல் - வாழப்

பண்ணும் சுவைநலம் காட்டி

நகைச்சுவை மட்டுமா தந்தான் - வள்ளல்

நாடக மாடியதில்லை

தொகைதொகையாகக் கொடுத்தான் - புகழ்த்

தோளுக்குயிரைக் கொடுத்தான்.

இவ்வாறு மேற்காண் பெருமக்களைப் பற்றி மட்டு மல்லாது அண்ணா, மறைமலையடிகள், காந்தியார், பாரதியார், கவுந்தரபாண்டியன், சர். ஏ.டி. பன்னீர் செல்வம், மாமேதை இலெனின் உள்ளிட்ட பல்லோரைப் பற்றியும் பாவேந்தர் எழுதியுள்ள பாடல்கள் ‘பாரதிதாசன் கவிதைகள் - உயர்ந்தோர்’ என்றும் நூலில் இடம் பெற்றுள்ளன. பூம்புகார் பதிப்பகத்தின் சார்பில் வெளி வந்துள்ள அந்நூலைத் தமிழுலகம் வாங்கிப் படித்துப் பயன் பெறுக!

 

Pin It