உலகத் தமிழர் பேரவையின் சார்பில் ஜெனிவா நகரில் சென்ற மார்ச் 2 முதல் 5 வரை கொடுங் கோலன் இராசபக்சே நடத்திவரும் தமிழினப் படு கொலைக்கு எதிராகப் பன்னாட்டு மாநாடும், கருத் தரங்கமும் நடைபெற்றன. இம்மாநாட்டில் அய்ரோப் பிய, ஆசிய, ஆப்பிரிக்க, வடஅமெரிக்க நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமைப் போராளிகள், சட்ட இயல் அறிஞர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். பன்னாட்டுக் கருத்தரங்குகளில் அய்க்கிய நாடுகள் மன்றத்தின் அருகில் அமைந்த கருத்தரங்க அரங்கில் இம்மாநாடு சிறப்புற நடை பெற்றது. “இனப்படுகொலை-போர்க்குற்றங்கள், ஈழத் தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வும், அமைதியும்” என்ற தலைப்புகளில் மூன்று அமர்வுகள் நடை பெற்றுப் பல்வேறு கருத்துகள் முன்மொழியப்பட்டன. இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தோழர் தா. பாண்டியன், ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, புதிய தமிழகம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கிருஷ்ணசாமி, புதிய பார்வை ஏட்டின் ஆசிரியர் ம. நடராசன், கூட்டாட்சி இயல் இன உரிமைப் பண்பாட்டு உறவுகள் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் மு. நாகநாதன், தமிழ் எழுத்தாளர் ஆ. சந்திரசேகர் ஆகியோர் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் இலங்கை யில் திட்டமிட்டு நடைபெற்றுவரும் இனப்படுகொலைக்கு (Structured Genocide)உலக நாடுகள் தீர்வுகாண முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினர். பேராசி ரியர் மு. நாகநாதன் உரையின் ஆங்கிலப் படிகளை நார்வே நாட்டின் தமிழ் அமைப்பின் தேர்ந்தெடுக் கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. விஜய் அயல்நாட்டு அறிஞர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் வழங்கினார். வழங்கப்பட்ட 10 மணித்துளிகளில் பேராசிரியர் மு. நாகநாதன் தனது உரையின் கருத்துகளைச் சுருக்க மாக எடுத்துவைத்தார். கடந்த 4000 ஆண்டுகளாகத் தமிழர்கள் ஈழம் (இன்றைய இலங்கை), தமிழ்நாடு (இன்றைய இந்தியா) ஆகிய பகுதிகளில் வாழ்ந்த, வாழ்ந்து வருகிற தொன்மைமிக்க பூர்வீகக் குடிகள் ஆவர். கடந்த 2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றி தமிழ் பகுதிகளுக்குள் நுழைந்த சமணம், பௌத்தம், கிறித்துவம் ஆகிய நெறிகளைத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டனர். பின்பு, சைவம், வைணவம், இசுலாம் ஆகிய நெறிகளையும் ஏற்றுக்கொண்டனர். இந்நெறி களுக்குக் காவியம், காப்பியங்களையும் தமிழர்கள் இயற்றினர். இருப்பினும் மொழியால், இனத்தால் தமிழர் கள் என்ற சிறப்பு அடையாளத்தை இழக்காமல் பாது காத்து வருகின்றனர். இன்று உலகளவில் வலியுறுத் தப்படுகிற இயைந்த வளர்ச்சி  என்ற கருத்துருவைத் தமிழர்கள் தங்களின் வாழ்வியலில் போற்றி உலகிலேயே முதன்முதலாக இணைந்த சமூகமாக  வாழ்ந்து வருகின்றனர். ஆனால் வந்தேறிகளான சிங்கள இனத்தவர்கள் தமிழர்கள் பின்பற்றிய பரந்த, பெருந்தன்மையான, இணைந்த சமூக அமைப்பிற்கு எதிராக ஒரே இன, மொழி, மதக் கோட்பாட்டினைப் பின்பற்றி இனவாத அரசை இலங்கையில் உருவாக்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாகத்தான் 1948ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசமைப்புச் சட்டத்தின் வழியாகவே இனவாதக் கொள்கையைப் பின்பற்றி அரசே தமிழினப் படுகொலை களைத் திட்டமிட்டு நிறைவேற்றி வருகிறது.

அய்க்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைக் குழுவில் கொண்டுவரப்பட்ட தீர்மானமும், 2013 மார்ச்சுத் திங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் தமிழினப் பிரச்சினைக்கு உரிய தீர்வாக அமையாது. இனப்படுகொலையை அரங்கேற்றிய இராசபக்சே அரசிடமிருந்து நியாயமான விசாரணையையோ, தமிழர்களுக்கு நல்லிணக்கமான தீர்வையோ எதிர் பார்க்க முடியாது. குறிப்பாக, 2009 மே திங்களில் நடை பெற்ற இனப்படுகொலைக்குப் பிறகு தமிழர்களுக்கு எவ்விதமான நன்மையளிக்கிற தீர்வும் கிட்டவில்லை. அய்க்கிய நாடுகள் மன்றத்தால் வலியுறுத்தப்படுகிற எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் இராசபக்சே அரசு மேற்கொள்ளவில்லை என்பதை அண்மையில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகளும், புள்ளிவிவரங்களும் பறைச்சாற்றுகின்றன.

மும்பையில் இருந்து வெளிவருகிற அரசியல், பொருளாதார வார ஏட்டில் (Economic and Political Weekly,Feb.16, 2013) வெளிவந்துள்ள கட்டுரைகள் இராசபக்சே அரசு இலங்கை விடுதலைக்குப் பிறகு (1948) வரலாறு காணாத வகையில் ஒரு சர்வாதிகார அரசைத் திட்டமிட்டு கட்டமைக்கிறது (There have been occasions in Srilanka's post - independence history when the terms authoritarian and dictatorship were used , but it was episodic,not sustained and systematic.This time is different as never before seen phenomena mark an altered landscape.For thr first time the land faces a premeditated plan to usher in an autocratic state.p.4 ) என்று கட்டுரை யாளர் குமார் டேவிட் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் போர் முடிவுற்றப் பிறகு 2013ஆம் ஆண்டில் மட்டும் ரூ.290 பில்லியன் அதாவது ரூ.29000 கோடி நிதி இராணுவச் செலவிற்காகவும் நகர்ப்புற மேம்பாட்டிற்காகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஈழப் போர் முடிவுற்ற 42 மாதங்களுக்குப் பிறகு எங்கெங்கும் இராணுவம்தான் உள்ளது. பூங்கா சீரமைப் பிலிருந்து, பள்ளிக்கூடத்தை மேலாண்மை செய்யும் பணிவரை இராணுவமே மேற்கொண்டு வருகிறது. அரசு சாரா தொண்டு அமைப்புகள்கூட இராணுவத் தலைமை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.  இச்சூழலில் இராசபக்சேவிடமிருந்து தமிழர் களுக்கு நீதி கிட்டுமா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இலங்கை அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் புள்ளிவிவரங்களின்படி (2010), தமிழர்கள், வாழும் மட்டக்களப்பு, திரிகோணமலை, அம்பாறை ஆகிய கிழக்குப் பகுதிகளில் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறை பாடு 53,45,44 என்ற முறையில் அமைந்துள்ளது கொடுமையிலும் கொடுமையாகும். இத்தகைய வன் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் அய்க்கிய நாடுகள் மன்றத்தின் பன்னாட்டு அமைதிப் படையைத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் நிறுத்த வேண்டும். ஈழத்தமிழர்கள் தங்களின் அரசுரி மையை அமைத்துக் கொள்வதற்குப் பன்னாட்டு அமைப்பின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும். 20ஆம், 21ஆம் நூற்றாண்டு களில் தொடர் மக்கள் போராட்டத்தின் வழியாகத்தான் பல நாடுகள் விடுதலைப் பெற்றுள்ளன. எனவே, உலகில் வாழும் ஒன்பது கோடித் தமிழர்களும் இணைந்து ஒரு களம் அமைக்க வேண்டும் என்று பேராசிரியர் மு. நாகநாதன் குறிப்பிட்டார்.

மூன்று அமர்வுகளில் உரையாற்றிய பல நாடுகளின் அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பேராசிரியர்களின் கருத்துகளைத் தொகுத்து அவர்களின் ஒப்புதலோடு கீழ்க்காணும் கருத்துகளும், தீர்மானங்களும் முன்மொழியப்பட்டு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவை :

1. “எல்லா மக்களும் சுயநிர்ணய உரிமையைப் பெற்றுள்ளனர். அத்தகைய உரிமை நெறிகளின் படி சுதந்திரமாகத் தங்களின் அரசியல் நிலை யைப் பெறுவதற்கான தகுதியைப் பெறுகிறார்கள். பண்பாட்டு, சமூக, பொருளாதார முன்னேற்றத்தை மேற்கொள்வதற்கு உரிமைகளைப் பெற்றவர்கள் ஆவர்” - அய்க்கிய நாடுகள் அவையின் பொருளா தார, சமூக பண்பாட்டு உரிமைகளுக்கான பன் னாட்டு சாசனம் (பிரிவு 1).

2.  ஈழத்தில் தமிழ் மக்களுக்குக் குறிப்பிடத்தக்க தேசிய அடையாளம் வரலாற்றின் அடிப்படையில் ஆழ மாகப் பதிந்துள்ளது. தனிநாட்டிற்கு என்ற வரை யறுக்கப்பட்ட புவிசார் நில அமைப்போடு தனித்த மொழியும் பண்பாடும், கூட்டுணர்வும் அமைந் துள்ளன.

3. அய்ரோப்பிய காலனிகள் இந்நாட்டைக் கைப்பற்றிய தால், தமிழர்கள் தங்களின் அரசுரிமையை இழந் தார்கள். முதலில் போர்ச்சுக்கீசியர்கள் குழுமம், அதன் பிறகு டச்சுக் குழுமம், இறுதியாக இங்கிலாந்து அரசு ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு ஒர் ஒற்றை யாட்சி முறையைத் திணித்து எண்ணிக்கையில் பெரும்பான்மையான சிங்கள இனம் ஈழத்தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலையை உருவாக்கி யதால் அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டன.

4. பிரிட்டிஷ் அரசு இலங்கைக்கு அரசியல் சுதந்திரம் வழங்கி, அதிகாரத்தை ஒற்றையாட்சி அரசின் வழியாகச் சிங்களவர்களுக்கு வழங்கிய பிறகு, பொறுமையைக் கடைபிடித்து, அறவழிப் போராட் டங்கள் வழியாகத் தங்களின் எதிர்ப்பினைத் தெரிவித்த போது தமிழர்கள் தொடர் இனவெறித் தாக்குதல்களையும் அரசு கட்டவிழ்த்த அடக்கு முறைகளையும், இன வேறுபாட்டினையும் சந்திக்க வேண்டியதாயிற்று.

5. முப்பது ஆண்டுகால அறவழிப் போராட்டத்திற்குப் பிறகு, 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர் மானம் வழியாகத் தமிழர்களுக்குத் தனிநாடு அமைய வேண்டும் என்ற கோரிக்கை அறிவிக்கப் பட்டது. 1977ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர் தலில் வடக்கு, கிழக்கு தமிழர் பகுதியில் பெரும் பான்மையான வெற்றியின் வழியாக மக்களின் ஒருமித்த ஆதரவினைப் பெற்றது.

6. 1977 நாடாளுமன்றத் தேர்தலின் வாயிலாக ஈழத் தமிழ் மக்கள் தனிநாட்டிற்காக அளித்த ஆதர வினைச் சிங்களம இனவாத அரசு புறந்தள்ளிய பிறகு 30 ஆண்டுகள் நடந்த ஆயுதப் போராட்டம் வழியாக ஈழத்திற்கு என்ற ஒரு அரசு உருவானது. 2002ஆம் ஆண்டு பன்னாட்டு  அளவில் நடந்த அமைதிப் பேச்சின் வழியாக ஈழத்தில் அமைந்த அரசிற்கு ஒருவிதமான அங்கீகாரம் அளிக்கப் பட்டது.

7.  2004ஆம் ஆண்டு தேர்தலில் வன்னியில் அமைந்த தமிழ்த்தேசிய அரசிற்குத் தமிழ் மக்கள் அளித்த அளப்பரிய ஆதரவானது, ஈழத்தமிழர் களின் உரிமைகளுக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கும், தமிழர்களுக்கான தனி அரசிற் கான தெளிவான அங்கீகாரமாக அமைந்தது.

8.  இரண்டு இனங்களுக்கு இடையே சமமான முறையில் அரசுகள் அமைவதற்கான அமைதிச் சுற்று பேச்சுக்குப் பன்னாட்டு அளவில் ஆதரவு பெருகிய போது, அமைதியை முறியடித்துப் போர் களைத் தொடங்கும் போக்கு காணப்பட்டது. தமிழர் களைக் கட்டுப்படுத்துவதும், உரிமைகளைத் தடை செய்வதும், சிங்களர்களுக்கு இராணுவ ரீதியாக ஆதரவு அளிக்கும் நிலை உருவாக்கப்பட்டது.

9.  பன்னாட்டு அளவில் எதிர்மறைப் போக்குகள் வளர்ந்து போர் வெறி கொண்ட சிங்கள இனவாதி கள் செல்வாக்கினைப் பெற்று அமைதிப் பேச்சி னையும் உருவாகியிருந்த தமிழ் அரசையும் முறியடித்து இன அழிப்பினை மேற்கொண்டதை அய்க்கிய நாடுகள் மன்றத்தின் ஆய்வறிக்கையும், நார்வே நாட்டின் அமைதி ஆய்வறிக்கையும் தெளிவுபடுத்துகின்றன.

10. போருக்குப்பின் இராணுவத்தால் சூழப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு பகுதிகளில் வெளிப்படையான, தீவிரமான திட்டமிட்ட இன அழிப்பு மேற்கொள்ளப் பட்டு வருகின்றது என்பதுதான் உண்மையாகும்.

11. தமிழரின் தாயகத்தில் இராணுவமயமாக்கலும், சிங்களக் குடியமர்த்தலும், தமிழர்கள் மீது திட்ட மிட்ட பாலியல் வன்கொடுமைகளும், இன ஒடுக் கல்களும் மேற்கொள்ளப்பட்டுத் தமிழ்த் தாயகத் தின் தொடர்ச்சியான நில அமைப்புகளையும் அழித்து வருகிறார்கள்.

தீர்மானங்கள் :

1.   இலங்கை அரசின் முழுமையான இராணுவப் பாதுகாப்பு படையினரைத் தமிழரின் தாயகப் பகுதியில் இருந்து முழுவதும் திரும்பப் பெற வேண்டும். காவல் துணைப் படையின் ஆயுதங் களை அகற்ற வேண்டும்.

2. வடக்கு, கிழக்கு பகுதிளை ஈழத் தமிழரின் தாய கமாக ஏற்றுக்கொண்டு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள், தமிழ்நாட்டில் உள்ள ஏதிலிகள் தங்கள் தாயகத்திற்குப் பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள் வதற்கு உரிய நடவடிக்கைளை எடுக்க வேண்டும்.

3. கொலைக் குற்றங்களை இழைத்தவர்களே அதற் கானத்தீர்வை மேற்கொள்ளும் LLRC போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது அடிப்படையி லேயே தவறானதாகும்.

4. இனப்படுகொலை, மானுடத்திற்கு எதிரானக் குற்றங்கள் ஆகியவற்றைப் பற்றி விசாரணை மேற்கொள்வதற்கு 2010 (டப்ளின்) மக்களின் தீர்ப்பாய நெறிகளை ஒட்டிய சுயேட்சையான பன்னாட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

5. இலங்கை அரசமைப்புச் சட்டம் குறிப்பாக, 6ஆவது சட்டத்திருத்தம் தமிழ் ஈழ மக்களின் அரசியல் கோரிக்கைகளை எடுத்தியம்புவதைத் தடுக்கிறது. இதை மாற்றியமைக்க வேண்டும்.

6.ஈழப்பிரச்சினைக்கான எவ்விதத் தீர்வும் தற்போதுள்ள அரசமைப்புச் சட்டத்தின் வழியாக மேற் கொள்ளக் கூடாது.

7. சிறுபான்மை இசுலாமியரின் கோரிக்கைகளைத் தங்கள் பிரதிநிதிகள் வழியாகத் தமிழ்த் தாயகத் திற்குள் நுழைக்கக் கூடாது. ஈழத் தமிழர்களுக்கு வழங்கப்படும் தாயகத்தில் சமமான, நீதியான முறையில் இசுலாமியருக்கு நீதி எட்டப்படும்.

8.1977ஆம் ஆண்டிலும், 2004ஆம் ஆண்டிலும் ஈழத்தமிழர் அரசியல் கோரிக்கைகளை இலங்கை அரசு குருதியில் மூழ்கடித்தது. எனவே, அய்க்கிய நாடுகள் மன்றம் போன்ற ஒரு அமைப்பின் வழி யாகத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பை நடத்த வும், மேற்பார்வையிடவும், பன்னாட்டு அளவில் முடிவெடுத்து நடவடிக்கை மேற்கொண்டால்தான் தற்போது காணப்படுகிற பேரச்சம் மற்றும் ஒடுக்கு முறை அற்ற சூழலில் மக்கள் வாக்கெடுப்பில் பங்குகொள்ள முடியும்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களோடு மார்ச்சு 5ஆம் நாள் அய்க்கிய நாடுகள் மன்றத்தின் முன் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் குடும்பம் குடும்ப மாக இணைந்து ஈழம் வேண்டி முழக்கமிட்டனர். ஊர்வலத்தின் இறுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத் தில் பன்னாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஈழ ஆதரவு இயக்கத்தினரும் கலந்து கொண்டு அரிய உரைகளை நிகழ்த்தினர்.

மேற்கூறிய கருத்துகளையும், தீர்மானங்களையும் கருத்தில் கொண்டு ஈழ மக்களின் விடியலைக் காண முடியும் என்ற கருத்தே மாநாட்டில் பங்கேற்ற ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பமாகவும், கூட்டுணர் வாகவும் வெளிப்பட்டதைக் காண முடிந்தது. 

Pin It