இன்றைய நடுவண் அரசு மக்களாட்சி மாண்பினையும், மனித உரிமைகளையும், கூட்டாட்சியியலையும் குழிதோண்டிப் புதைப்பதில் முனைப்போடு செயல்படுகிறது. வளர்ந்துவரும் டில்லியின் சர்வாதி காரப் போக்கிற்குத் தேசியப் பயங்கரவாதத் தடுப்பு மையத்தின் அறிவிப்பு மற்றொரு அடையாளமாகும். நினைத்ததை முடிப்பவன் நான், நான் - மாநில உரிமைகளைப் பறிப்பவன் நான், நான் என்றுதான் மன்மோகன் சிங் பாடாததுதான் குறையாகும். இவ் வரிகளுக்கேற்ப மத்திய அரசின் உயர் அலுவலர்களும், பாதுகாப்பு ஆலோசகர்களும் மக்கள் விரோதச் சட்டங்களைப் போட்டிப் போட்டுக் கொண்டு முன்மொழி கிறார்கள். நீண்டகால எதிர்மறை விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் மத்திய அமைச்சர்களும், ஒப்புதல் அளிக்கிறார்கள்.

ஏற்கெனவே மத்திய அரசில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரக் குவியல் இந்தியாவில் கூட்டாட்சியியலைச் சிதைத்து வருகிறது. பல்வேறு தேசிய இன மக்களின் கூட்டுறவுதான் இந்தியா என்பதை வரலாறு நமக்குச் சுட்டுகிறது. தனித்தனி இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களை உடைய மக்களின் தனித்த கூறுகளை அடக்கி, ஒடுக்கி ஒற்றையாட்சி முறையை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ் வகைச் சட்டங்களை இயற்றுவதன் வழியாக இந்திய மக்களாட்சி முறைக்கும், இந்திய ஒற்றுமைக்கும் ஆட்சியாளர்கள் உலை வைக்கிறார்கள்.

விடுதலைப் போராட்ட காலத்தில், பிரிட்டிஷ் ஏகாதி பத்திய அரசால் 1919இல் நிறைவேற்றப்பட்ட ரௌலட் சட்டமும் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காகத்தான் கொண்டு வரப்பட்டதாக அன்றைய டெல்லியின் வெள்ளைப் பேராதிக்கத்தினர் குறிப்பிட்டனர். நாட்டுக்கு எதிராகச் சதி செய்கிறார்கள். ஆட்சியைக் கவிழ்க்க முற்படுகிறார்கள் என்று கூறி சிறையில் எந்தத் தனிநபரையும் பல ஆண்டுகள் விசாரணை இன்றி வைத்திருப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட அன்றைய ரௌலட் சட்டத்தின் சாயலாகவே இந்தப் பயங்கர வாதத் தடுப்பு மையத்தின் சட்டப்பிரிவுகள் அமைந் துள்ளன. மக்களின் உரிமைகளையும், தனிநபர் சுதந்திரத்தையும் அறவே தட்டிப் பறிக்கிறது என்று குறிப்பிட்டு அன்றையப் பேராயக் கட்சியினரும் அதன் மாபெரும் தலைவர் காந்தியாரும் ரௌலட் சட்டத்திற்கு எதிராகக் களம் அமைத்தனர். பஞ்சாப் மாநிலத்தின் ஜாலியன் வாலாபாக்கில் ரௌலட் சட்டத்தை எதிர்ப் பதற்காக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்தான் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தேறியது. இந்தியா விடு தலைப் பெறுவதற்கும், காங்கிரசுக் கட்சி வலிமைப் பெறுவதற்கும் ஜாலியன் வாலாபாக் படுகொலையும் காரணமாக அமைந்தது என்பதை பல அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இன்றைய காங்கிரசு தலைமைக்கு இந்த வரலாற்று நிகழ்வுகளை எண்ணிப் பார்க்க நேரமில்லை. அவர்கள் எண்ணுவதெல்லாம் பணத்தைத்தான் என்பதை மத்திய அரசில் நடைபெற்று வருகிற மாபெரும் ஊழல்கள் பறைச்சாற்றுகின்றன. பன்னாட்டு-உள்நாட்டு நிறுவனங்கள் கனிம வளம் நிறைந்த வனப் பகுதிகளைச் சூறையாடுவதைத் தடுக்கும் மக்கள் இயக்கங்களை, தொண்டு நிறுவனங்களை, முற்போக்குச் சிந்தனையாளர்களை, சுற்றுச்சூழல் ஆர்வலர்களைத் தீவிரவாதி என்ற முத்திரையைப் பதித்து, மிரட்டியும் வருகின்றனர்.

1972ஆம் ஆண்டில் ‘மிசா’ சட்டம் (Maintenance of Internal Security Act - MISA) கொண்டு வரப் பட்டபோது, எக்காரணத்தைக் கொண்டும் அரசியல் தலைவர்கள் மீது இச்சட்ட விதிகளைப் பயன்படுத்த மத்திய அரசு முனையாது என்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் வாக்குறுதி அளித் தார். ஆனால், 1975ஆம் ஆண்டு விடுதலைப் போராட்ட வீரரும், மாபெரும் தலைவருமான ஜெயபிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய் உட்பட நூற்றுக்கணக்கான தலைவர்கள் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். எனவே, பயங்கரவாதத் தடுப்பு மையத்தின் வழியாக அரசியல் எதிரிகளையும், மக்களுக்காகப் போராடுபவர்களையும் அடக்குவதற்கும், தடுப்பதற்கும், ஒடுக்குவதற்கும் வாய்ப்புகள் நிரம்ப உள்ளன.

2004இல் காங்கிரசு தலைமையில் ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற போது மாநிலக் கட்சிகளும் இடதுசாரிகளும் இணைந்து குறைந்தபட்ச பொது வேலைத் திட்டத்தை உருவாக்கினார்கள். அத்திட்டத் தில் உள்ள முக்கிய அறிவிப்புகளைக் கூட்டணி ஆட்சி நிறைவேற்றும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கும், சோனியா காந்தியும் உறுதியளித்தனர். குறிப்பாக, பழங்குடியின மக்களின் உரிமைகளும், அவர்களு டைய வாழ்வாதாரங்களும் காப்பாற்றப்படுவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று குறைந்தபட்சப் பொது வேலைத்திட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது.

இதேபோன்று மாநிலங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நோக்கோடு மத்திய-மாநில உறவு களை மறுஆய்வு செய்வதற்கு ஒரு வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. மேற்கூறிய இரண்டு கொள்கைகளையும் தற்போது அமைக்கின்ற பயங்கரவாதத் தடுப்பு மையம் புதைக்குழிக்கு அனுப்புகிறது. பயங்கரவாதத் தைத் தடுப்பதற்கு மத்திய அரசிடம் ஏற்கெனவே ஏராளமான சட்டங்கள் உள்ளன. மத்திய அரசு பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும், மாநில அரசுகள் மத்திய அரசிற்குப் பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதற்குத் தங்களின் முழு ஒத்துழைப்பினை நல்கியும் வருகின்றன. இச்சூழலில் மத்திய அரசே ‘பயங்கரவாத அரசாக’ ஏன் மாறுகிறது என்பதுதான் எல்லோரையும் சிந்திக்கத் தூண்டியுள்ளது.

மக்கள் உரிமைகளைக் கோருகின்ற இயக்கங்கள் மீதும், அவ்வியக்கங்கள் சார்பாகத் துண்டறிக்கைகளை வெளியிடுவோர் மீதும் பயங்கரவாதம் என்ற பழி சுமத்தி, வன்முறையைத் தூண்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டினைக் குறிப்பிட்டு யாரையும் கைது செய்ய முடியும். மாநில அரசுகளுக்குத் தெரிவிக்காமலேயே அந்த மாநில எல்லைக்குள் இயங்குகிற கட்சிகள், இயக்கத்தினர் உட்பட அனைவர் மீதும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும். மாநில அரசுகளின் நிர்வாக உரிமைகளில் மத்திய அரசு, மாநில முதல்வர்களைக் கலந்து ஆலோசிக்காமல் நேரடியாகத் தலையிடுகின்ற வாய்ப்பை இம்மையம் உருவாக்குகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல், காவல் துறையை அமைத்துக் கண் காணித்தல் ஆகியன மாநில அரசுகளின் முழு அதி காரங்களாகச் சுட்டப்படுகின்றன. குறிப்பாக, தொடர் வண்டித் துறைத் தொடர்பாகச் சட்டம் இயற்றுவதற்கு அரசமைப்புச் சட்டத்தின் பட்டியல் ஒன்றில் பிரிவு-22இல் மத்திய அரசிற்கு அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது. இருப்பினும் மாநிலப் பட்டியலில் இரண்டாம் பிரிவில் தொடர்வண்டித் துறையில் பாதுகாப்பு அளிப்பது மாநில காவல் துறையின் வரையறைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக, காவல் துறையின் அதிகாரத்தை மாநிலங்களுக்கு முழுமையாக வழங்குவதற்காகத்தான் அரசமைப்புச் சட்டத்தின் இவ்விதிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 60 ஆண்டுகளாக மத்திய அரசு, படிப்படியாகக் காவல் துறையின் அதிகாரங்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

வெள்ளை ஏகாதிபத்தியம் ஆட்சி செய்தபோது, மாநிலங்களை மதிக்காமல் சுதந்திரப் போராட்ட வீரர்களை அடக்குவதற்காகவே மத்தியக் காவல் படை உருவாக்கப்பட்டது. காங்கிரசுக் கட்சியின் முதன்மையான தலைவர்களில் ஒருவரான லாலா லஜபதிராய் ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கிச் சென்ற போது, இதே காவல் துறைதான் அவரைத் தலையில் அடித்து வீழ்த்தியது. மருத்துவமனையில் லாலா லஜபதிராய் மரணம் அடைந்தார். இந்நிகழ்விற்குப் பின்புதான் புரட்சியாளர் பகத்சிங்கும், அவர்தம் நண்பர்களும் கொடுமையான அத்தாக்குதலை நடத்திய வெள்ளைக்காரக் காவல் துறை அதிகாரியைச் சுட்டுக் கொன்றனர்.

இந்தியா விடுதலை அடைந்த பிறகு மத்திய காவல் படையை 1949ஆம் ஆண்டு சட்டத் திருத் தத்தின் வழியாக மத்திய அரசே வைத்துக் கொண்டது. இக்காவல் பிரிவில் 2 இலட்சத்து 52 ஆயிரம் காவலர் கள் 210 படைப்பிரிவுகளில் தற்போது பணிபுரிகின்றனர்.

1965இல் எல்லைப் பாதுகாப்புப் படையை மத்திய அரசு உருவாக்கியது. எல்லையோரத்தில் நடக்கின்ற பயங்கரவாதச் செயல் களைத் தடுப்பதற்கும், இந்திய நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கின்ற சக்திகள் இந்தியாவில் நுழையாமல் இருப்பதற்கும் இப்படை உருவாக்கப்பட்டதாக அறிவிக்கப் பட்டது. இப்படையில் தற்போது 2 இலட்சத்து 42 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். மேற்கூறிய இரண்டு படைப் பிரிவுகளும் உலகிலேயே மிகப் பெரிய காவல் படைப் பிரிவுகளாகக் கருதப்படுகின்றன

1969இல் மத்திய தொழில் பாதுகாப்புக் காவல் படை என்ற மற்றொரு காவல் துறை பிரிவு மத்திய அரசால் உரு வாக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள 300 பெரிய பொதுத் துறை தொழிற்கூடங்களைப் பாதுகாக்கும் பணி இப் படைக்கு வழங்கப்பட்டது. இப்படையின் எண்ணிக்கை 1 இலட்சத்து 12 ஆயிரம் ஆகும். இந்தப் படைகளோடு பல்வேறு உயர் கண்காணிப்பு ஆய்வு காவல் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. தேசியப் புலனாய்வு முகமை, வெளிநாட்டுப் பகை வர்களை, பயங்கரவாதிகளைக் கண்காணிக்க காவல் துறை உயர் அதிகாரிகளைக் கொண்ட ‘ரா’ என்று அழைக்கப்படுகிற ஆய்வு கண்காணிப்பு மையம், புலனாய்வு நிறுவனம், இராணுவப் புலனாய்வு மையம், மத்தியப் புலனாய்வு நிறுவனம் எனப் பல காவல் துறை அமைப்புகள் டெல்லியின் நேரடி அதிகாரத்தில் இயங்கி வருகின்றன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள உணர்வுகளுக்கு எதிராகத்தான் மத்திய அரசு தனது காவல் துறையின் அதிகாரங்களைப் பெருக்கிக் கொண்டே வருகிறது. இந்த அமைப்புகள் எல்லாம் சீரான முறையில் இயங்கினால் இந்தியாவில் எல்லாவித சமூக விரோத, நாட்டு விரோத நடவடிக் கைகளையும், பயங்கரவாத நடவடிக்கைகளையும் எளிதாகக் கட்டுப் படுத்திவிடலாம். மத்திய அரசால் அமைக்கப்பட்ட பல வல்லுநனர் குழுக்கள் உள்நாட்டுப் பாதுகாப்பினைச் சிறப்புற மேலாண்மை செய்வதற்குப் பல பரிந்துரை களை அளித்துள்ளனர்.

CRPF என்றால் ‘ஊழல் மலிந்த காவல் படை’ என்றும், எல்லைப் பாதுகாப்புப் படையை என்றால் ‘எல்லையில் கள்ளப் பொருட்களைக் கடத்துவோர் படை’ என்றும் ஒரு எழுத்தாளர் வட நாட்டில் இருந்துவரும் வார ஏட்டில் குறிப்பிட்டிருந்தார். இத்தகவல் உண்மையானதா? என்பதை அறுதி யிட்டுக் கூற முடியாது. ஆனால், உயர் புலனாய்வு மையங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ரா உளவு அமைப்பில் உயர் அலுவலராகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் வி.கே.சிங் விளக்கியுள்ளார். ‘இந்தியா வின் உளவு அமைப்பு - ராவின் இரகசியங்கள்’ என்ற தனது நூலில் பல பக்கங் களில் உளவு நிறுவனங்கள் நாட்டிற்குப் பணியாற்று கின்றனவா? பாதிப்பை ஏற்படுத்துகின்றனவா? என்ற வினாக்களுக்கு நூலாசிரியர் விடை காண முற்பட் டுள்ளார்.

ஏறக்குறைய ஆண்டிற்கு இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 250 அலுவலர்களுடன் 1970ஆம் ஆண்டுகளில் பணியைத் தொடங்கிய ரா அமைப்பு இன்றைக்குப் பல ஆயிரம் அலுவலகர்களுடன் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களைச் செலவு செய்கிறது. 1980, 1990களில் அதனுடைய செலவும், அளவும், எண்ணிக்கையும் மேலும் பெருகிக் கொண்டே சென்றது. இந்தியா, பாகிஸ்தான் போரின் போது, குறிப்பாக வங்கதேசப் போரின்போது இவ்வமைப்பின் பணியும் வெற்றியும் வணக்கத்திற் குரியதாக இருந்தது. புலிகள் அமைப்பை ஊக்கப் படுத்தியது, அதன்பின் இந்திய இராணுவம் இலங்கைக்குச் சென்றது, அதன் பின் விளைவுகள் ஆகியன கடும் விமர்சனத்திற்கு உள்ளாயின.

1999ஆம் ஆண்டு கார்கில் பகுதியில் பாகிஸ்தான் படையின் ஊடுருவலை முன்கூட்டியே கண்டுபிடிக் காமல் விட்டது, அதன் காரணமாகக் கார்கில் சண்டை நடந்து இந்திய இராணுவத்திற்குப் பெரும் உயிரிழப் புகள் ஏற்பட்டன. கார்கில் போர் பின்னடைவுகளையும், ரா அமைப்பின் தோல்வியையும் ஆய்வதற்குப் பல வல்லுநர்களைக் கொண்ட கார்கில் மறுஆய்வுக் குழு ஒன்றை மத்திய அரசு நியமித்தது. வெளியுறவுத் துறைச் சார்ந்த புலனாய்வுக் கண்காணிப்பில் ரா அமைப்பிற்கு முற்றுரிமை அளிப்பது சரியல்ல என்று இக்குழு அறிக்கை அளித்தது.

ரா அமைப்பில் பணியாற்றிய பல உயர் அலு வலர்கள் இரகசியத் தகவல்களை அமெரிக்காவின் சி.ஐ.ஏ. போன்ற நிறுவனங்களுக்குப் பணத்திற்காக வும், மற்ற களியாட்டங்களுக்காகவும் அளித்துள்ளனர். குறிப்பாக, இணைச் செயலர் தகுதியில் உயர் அலு வலராகப் பணியாற்றிய ரபீந்தர் சிங், உன்னி கிருஷ்ணன், திரு. சேகல் ஆகியோர் அமெரிக்காவின் தேன்கூடு வலையில் (honey-trap) விழுந்தார்கள். மற்ற நாட்டு இரகசியங்களைப் பெறுவதற்கு அமெரிக்கா கடைபிடிக்கும் அணுகுமுறையே தேன்கூடு வலை என்று கூறப்படுகிறது. தேன்கூட்டு வலை போன்று இந்தியாவிற்கு எதிரான சக்திகளுக்கு சைனி, பால், தாஸ்குப்தா போன்ற உயர் அலுவலர்கள் விலை போயினர்.

நாட்டினுடைய முதன்மையான உளவு அமைப்பு களான ரா, ஐ.பி., எம்.ஐ. (Military Intelligence) ஆகியவற்றுக்கு இடையே நடக்கும் பனிப்போர்கள் காரணமாக அளவிட முடியாத அளவிற்குப் பாதிப்பு இந்த அமைப்புகளுக்கு மட்டும் அல்லாமல் நாட்டிற்கே ஏற்பட்டுள்ளது. உயரளவிலான நிர்வாக மேலாண்மையில்லாமல் ராவும், ஐ.பி.யும் தன்னிச்சையாக எந்தவிதத் தடையின்றியும் செயல் படுகின்றன. இராணுவமே மத்திய அரசின் தலைமை நிர்வாகத்திற்கு உட்பட்டு செயல்படும் போது, இவ் வமைப்புகளுக்குக் கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்கலாமா? என வி.கே. சிங் எழுப்பும் சந்தேகங்கள் டெல்லி அதிகாரக் குவிப்பின் எதிர்மறை விளைவு களை அம்பலப்படுத்துகின்றன.

ஏற்கெனவே உள்ள இந்த அமைப்புகளைச் சீர் செய்து ஒரு மத்திய அமைச்சரின் நேரடிப் பார்வை யிலோ அல்லது பிரதமரின் நேரடிப் பார்வையிலோ நிர்வாகத்தைக் கொண்டு வரலாம்.

ஆனால், தற்போது அமைக்கப்படுகிற தேசியப் பயங்கரவாதத் தடுப்பு அமைப்பிற்கு டெல்லியைச் சார்ந்த உயர் அலுவலர்கள்தான் தலைமை ஏற் பார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேசியப் பயங்கர வாதத் தடுப்பு மையத்தைக் கொண்டு வருவதன் காரணத்தை எகானமிக் டைம்ஸ் நாளேடு மே 23, 2009 ஆண்டு வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு ஆலோச கராகப் பணியாற்றிய எம்.கே. நாராயணன் தலை மையில் அமைந்த செயல்பாட்டுக் குழு நகர்ப்பறத்தில் தீவிரவாதத்தைத் தடுக்கவும், ஊர்ப் புறங்களில், காட்டுப் பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் அறைகூவலை எதிர்கொள்ளவும் இவ்வித அமைப்பு தேவை என்று பரிந்துரை செய்தார்.

2009இல்தான் இராஜபக்சே முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தார் என்பதும், அக்காலக்கட்டத்தில் எம்.கே. நாராயணன்தான் இந்தியா சார்பாகப் பல முறை கொடுங்கோலன் இராஜபக்சேவைச் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஒரு வேளை இலங்கையில் போராளிகளை, அப்பாவி மக்களை அழித்தது போன்று இந்தியாவிலும் அழிக்கலாம் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியிருக்குமோ? நமக்குத் தெரியாது. ஆனால், நாராயணன் பரிந்துரைதான் இந்த மையம் உருவா வதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

நல்ல வேளை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், குஜராத் முதல்வர் நரேந்திரமோடி உட்பட 10 முதல்வர்கள் இந்த மையம் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கிறது என்று கடுமையான முறையில் எதிர்த்துள்ளனர். சாவி கொடுத்தால் இயங்கும் பொம்மை போலதான் பிரதமர் இந்த மையத்தை அமைப்பதிலும் செயல்பட்டுள்ளார். மாநில முதல்வர் களைக் கலந்துதான் இந்த மையம் உருவாக்கப்படும் என்று மாநில முதல்வர்களின் எதிர்பிற்குபின் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற இரு அவைகளிலும் இதன் தொடர்பான விவாதங்கள் எழுந்த போது பா.ஜ.க., இடதுசாரிக் கட்சிகள், அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் கடுமையான முறையில் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளன. எனவே, இந்த மையம் உருவானால் தான் பயங்கரவாதம் குறையும் என்பது கேலிக்குரிய தாகும்.

ஏற்கெனவே குவித்துள்ள மத்திய அரசின் அதிகாரங்களை மேலும் உறுதிப்படுத்தி, மாநில அரசுகளின் குறைந்து வருகிற அதிகாரங்களை மேலும் குறைத்து விடும். டெல்லியில் ஒரு சர்வாதிகார ஆட்சி அமைய வழி வகுத்துவிடும். இந்த மையத்தின் அதிகார எல்லையைப் பற்றி குறிப்பிடும் போது, மம்தா பானர்ஜி, தடா, பொடா சட்டங்களைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், மனித உரிமைகளைப் பறித்துவிடும் என்றும் குறித்துள்ளார். இருப்பினும் மம்தா பானர்ஜியோ நாடாளுமன்ற மக்களவையில் ஒரு நிலையையும், நாடாளுமன்ற மாநிலங்களவை யில் அதற்கு நேர்மாறான நிலைப்பாட்டினையும் எடுத்துள்ளது வியப்பினையும் வேதனையையும் அளிக்கிறது.

இனிமேலாவது மாநில முதல்வர்களும், மாநில உரிமைகளுக்காகப் பாடுபடுவதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகளும் ஒன்று இணைந்து இந்த மையம் உருவாவதைத் தடுக்க வேண்டும். உத்தரப்பிரதேசம் உட்பட மற்ற மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இந்தியாவில் அதிகாரக் குவிப்புகளுக்கு எதிராகத்தான் தேசியக் கட்சிகளைப் புறக்கணித்து மாநிலக் கட்சிகளை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை மாநிலக் கட்சிகளின் தலைமை உணர்ந்து செயல்பட வேண்டும்.

பொதுநிலையில் மத்திய அரசின் அதிகாரக் குவியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாநில மனித உரிமைகளை மிதித்துப் போடும் இம்மையத்தை முளையிலேயே கிள்ளிப் போட வேண்டும். உண்மையான ஜனநாயக நெறிகளும், கூட்டாட்சியியலும் இந்தியத் துணைக் கண்டத்தில் வெற்றி பெறுவதற்குக் கட்சி அரசியலை ஒதுக்கி வைத்து மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து களம் அமைக்க வேண்டும்.

Pin It