குயில் கருப்பு
உன் கொள்கையும் கருப்பு
கவிதை மட்டும் நெருப்பு
‘அழகின் சிரிப்பில்’
தென்றல்
ஆலங்கிளியின்
இறகுகள் கோதும்!
‘புரட்சிக் கவி’யை
எடுத்துப் புரட்டினால்
பக்கந்தோறும்
எரிமலை மோதும்!
எரிக்கும் தழல்
இசைக்கும் புல்லாங்குழல்
இரண்டிலும்
நறுக்கி வைத்த
பழக்கூட்டால்
நடைசெய்த பாவலனே!
படைசெய்த பெருவீரப்
பாமரபில் வந்தவனே!
‘ஏடெடுத்தேன் - கவி
ஒன்று எழுதிட’
என்று எழுதினை நீயே!
அடடா...
எல்லாமே
அழகின் மொத்தம்!
நீ எமக்குக் கிடைத்த
‘எதிர்பாராத முத்தம்’!
‘தமிழியக்கம்’ கண்டாய் நீ
‘டமில் மயக்கம்’
கொண்டோம் யாம்!
‘சாதி இருக்கின்ற தென்பானும்
இருக்கின்றானே’ என்றாய்
இங்கே
இருக்கின்றவனெல்லாம்
அவனாயே இருக்கின்றான்!
தேர்தல் நேரம்
சாதிகளுக்கு நல்ல
சாராய வேட்டை
பொறுக்க வில்லையா?
சிலையாகவே இரு!
மறுபடி வந்தால்
மரியாதை இருக்காது!

- தமிழேந்தி

Pin It