மாஸ்கோவில் கிரெம்ளின் மாளிகைக்கு முன்னால் ஒரு விரிந்த மைதானம் உள்ளது. செஞ்சதுக்கம் என்று அதற்குப் பெயர். அந்தப் பெயருக்கு ஏற்ற விதத்தில் மே 1 அன்றும், நவம்பர் 7 அன்றும் அந்த மைதானம் ஒரு சிவப்புக் கடலாக மாறும். இராணுவ வீரர்களும் மக்க ளும் சின்னக் குழந்தைகளும் முதியவர்களும் எல்லாம் அணிவகுத்து நடந்து செல்கிற காட்சி உணர்ச்சிகர மானதாகவும் எழுச்சிமிக்கதாகவும் இருக்கும்.

இந்த (1990) நவம்பர் 7 அன்று தான் அந்த மைதானம் செந்நிறமாக மாறாமல் இருந்தது. கோர்பச் சேவின் ‘சீர்திருத்தங்கள்’ அமலாகத் துவங்கியபோது, நவம்பர் புரட்சி தின விழா கொண்டாடுவதில்லை என்று தீர்மானித்தார்கள். ஆனாலும் மாஸ்கோ மக்களில் ஒரு பகுதியினர் அன்று முடிந்த அளவு நவம்பர் புரட்சி தின விழா கொண்டாடினர். கொண்டாடாதவர்களுக்கு எதிராக ஒரு கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

1987-ஆம் ஆண்டு நவம்பர் புரட்சி தின 70-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக அழைப்பு விடுத்துக் கூட்டப்பட்ட உலக சம்மேளனத்தைத் தொடர்ந்து, புரட்சி தின விழா கொண்டாடப்பட்டது. இரண்டு நாள் கள் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. அந்த இரண்டு நாள்களும் ஆறேழு மணிநேரம் வரை நான் நின்று அதைக் கண்டேன்.

நவம்பர் முதலாவது வாரம் மாஸ்கோ மாநகரம் எவ்வாறு இருக்குமென்பதை இந்தியர்களாகிய நம்மால் யூகிக்கக்கூட முடியாது. “மரம் நடுங்கும் மஞ்சு” என்று மலையாளத்தில் சொல்லப்படுவதை மெய்ப்பிக்கும் விதத்திலான கொடும்பனியில், ஆறேழு மணிநேரம் வரை - அந்தத் திறந்த மைதானத்தில் நான் இருக்க வேண்டி வந்தது.

உள்ளாடைகள் உள்பட ஐந்தோ ஆறோ மேலாடைகளும் காலுறைகளும் - எல்லாம் கம்பளியி னால் தயாரிக்கப்பட்டவை - அந்தப் பனியில் பயன் படுத்த வேண்டிய கனத்த பூட்ஸூம் கம்பளியினாலான கையுறைகளும் அணிந்தபடி நின்றிருந்தேன்.

அப்போது எனக்கு வயது 78. இனிமேல் ஒரு போதும் என்னால் இங்கே நவம்பர் புரட்சிதின விழா வில் பங்கேற்க இயலாது என்று தோழர்களிடம் சொன் னேன். இது நான் உத்தேசித்த அர்த்தத்தில் அல்ல. அது எனது கடைசி நவம்பர் புரட்சிதின விழாவாக முடிந்தது என்பதை இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.

நவம்பர் புரட்சியைப் பற்றி எதிரிகள் கூறுகிறார்கள்: “இது ஒரு வரலாற்றுப் பிழை” என்று. நடக்கக் கூடாத சம்பவம் 1917 நவம்பர் 7-இல் மாஸ்கோவிலும் லெனின் கிராடிலும் நடந்ததென்பது அவர்களின் அபிப்பிராயம். அந்தப் ‘பிழையை’ வரலாறு இப்போது திருத்திவிட்டது என்றும் அவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள்.

சோவி யத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கோர்பச் சேவ் இந்தப் பல்லவியை ஏற்றுப் பாடினார் என்பதை இந்த ஆண்டின் (1990) நவம்பர் 7 காட்டியது.

ஆனால், கோர்பச்சேவும் அவரது கூட்டாளிகளும் எவ்வளவுதான் நவம்பர் புரட்சியை நிராகரித்தாலும் உலகம் முழுவதும் உள்ள முற்போக்காளர்களின் இதயங்களில் அந்தப் புரட்சி அகலாமல் நிலைத்திருக்கும்.

ஏனென்றால், அன்றுதான் ஒரு புதிய மானுட நாகரிகம் தழைத்து வளரத் துவங்கியது. வேலையில்லாத் திண்டாட்டம், அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்களின் விலை யேற்றம் முதலான முதலாளித்துவ சமுதாயத்தில் சர்வ சாதாரணமாக நிலவும் சாபங்கள் ஏதும் இல்லாததும், கல்வி, மருத்துவ உதவி, குடியிருப்பு முதலான வசதி களை மக்கள் அனைவருக்கும் வழங்குவதுமான ஒரு புதிய நாகரிகமாகும் அது.

நவம்பர் புரட்சி நடைபெறும் போது எனக்கு எட்டு வயது. அந்தப் புரட்சி பற்றிய கதைகளைக்கூடக் கேட்க எனக்கு வாய்ப்பில்லை. அடுத்து நாலைந்து வருடங் களுக்குப் பிறகுதான் ஒரு தேர்தல் சமயத்தில் ஓட்டுக் கேட்பதற்காகச் சிலர் எங்கள் வீட்டுக்குவந்தார்கள். அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து தான் ‘ரஷ்யா’வைப் பற்றி முதல் தடவையாகக் கேள்விப்பட்டேன்.

மலபார் பிரதேசத்தின் நிலப்பிரபுக்கள் மீது சில கட்டுப்பாடுகளை விதிக்கும் மசோதாவைத் தயாரித்த வரைத் தோல்வியடையச் செய்து நிலப்பிரபுக்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டுமென அவர்கள் முடிவு செய்திருந்தனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் ரஷ்யாவைக் குறித்த பேச்சுகள் வந்தன. நிலப்பிரபுக்களின் மீது கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலமாகவும், குத்தகை விவசாயிகளுக்கு அதிகார உரிமைகள் வழங்குவதன் மூலமாகவும் நமது நாட்டை “ஒரு ரஷ்யாவாக மாற்ற வே” எதிர்வேட்பாளர் முயற்சி செய்கிறார் என்பதாக அவர்களின் பேச்சுகள் இருந்தன.

இது முடிந்து சில வருடங்களுக்குப் பிறகு ஜவஹர் லால் நேரு எழுதிய “சோவியத் ரஷ்யா” என்ற ஒரு சிறு புத்தகத்தை வாசிப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தச் சின்ன நூல்தான் என்னை சோசலிசத்தை, கம்யூனிசத்தை நோக்கி இட்டுச் சென்றது.

இந்தியா சுதந்திரம் பெற்றால் அதன் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைப்பது என்கிற விஷயத்தில் மட்டு மல்ல-சுதந்தரம் பெறுவதற்கான மார்க்கம் என்ன என்பதிலும் அன்று ஒரு யுவ காங்கிரஸ்காரனாக இருந்த எனக்கு வழிகாட்டியது சோவியத் ரஷ்யாவின் உதாரணம் தான்.

நாளடைவில் நான் 1936-இல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு உறுப்பினரானேன்.

அன்று முதல் இன்றுவரை 55 ஆண்டுகளாக நான் ஒரு கம்யூனிஸ்டாகத் தொடர்கிறேன். ஆனால், நான் ஒரு கம்யூனிஸ்ட் உறுப்பினரான பிறகு 23 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் முதன்முறையாக சோவியத் நாட்டிற்குப் பயணம் சென்றேன்.

அதற்குப் பிறகு பலமுறை அங்குச் சென்றிருக்கிறேன். ஒவ் வொரு முறையும் அந்தச் செஞ்சதுக்கத்தினூடாகக் காரில் சென்றதுண்டு. ஒவ்வொரு பயணத்தின் போதும், அங்கு லெனினது சடலத்தைக் கெடாமல் பாதுகாத்து வைத்துள்ள இடத்திற்குச் சென்றிருக்கிறேன்.

ஒரு சமயம் என் மனைவியோடு இரண்டு மாதங்கள் நான் சோவியத் நாட்டில் இருந்திருக்கிறேன். நாடக அரங்கங்கள் முதலான காட்சி இடங்களில் பல நேரங்களைச் செலவழித்திருக்கிறேன்.

சோவியத் கட்சியின் தலை மையில் இருப்பவர்கள் உள்படப் பல தோழர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்திருக்கிறேன். இவ்வாறாக உருவான உணர்ச்சிபூர்வமான உறவு சோவியத் யூனியனோடு எனக்கு ஏற்பட்டிருந்தது.

இந்த நீண்டகால உறவுக்குப் பிறகு சோவியத் யூனியன் என்ற தேசமோ, அதன் புரட்சி தினவிழாவோ இல்லாத ஒருவருடம் கடந்து போகிறது. அதில் நான் ஏமாற்றமடையவில்லை.

ஏனெனில், 74 ஆண்டுகள் சோவியத் நாடு நிலைபெற்றிருந்தது என்பது தான் முற்றிலும் பெருமையடையத்தக்க ஓர் அனுபவமாகும்.

இந்த 74 ஆண்டுக்காலம் சோவியத் மக்கள் காட்டிய முன்னுதாரணம் என்றும் அழியாததாகும். இன்றில்லையென்றால் நாளை - அதுவுமில்லையென் றால் அதற்கு அடுத்த காலத்தில் உலகம் முழுவதும் பின்பற்றப் போகிற ஒரு முன்னுதாரணம் அது.

சீனாவிலும், மற்ற சில நாடுகளிலும் அந்த முன்னுதாரணம் இன்றும் தொடர்கிறது. இந்தியா உள்பட ஏராளமான நாடுகளிலும் அந்த முன்னுதாரணத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள இலட்சக்கணக்கான தோழர்கள் உள்ளனர்.

அவர்களில் நானும் ஒருவன் என்கிற நிலையில் நான் உரக்கப் பறைசாற்றுகிறேன் - “கோர்பச்சேவ் கைவிட்டாலும் சோவியத் யூனியனை நான் கைவிடப்போவதில்லை.

எதிர்காலத்தில் எனது தேசம் உள்பட உலகம் முழுவதும் வரப்போகிற சமுதாயம்தான் 74 ஆண்டுகள் சோவியத் யூனியனில் நிலைபெற்றிருந்தது.”

(“காலத்தின்டெ நேர்க்குப்பிடிச்ச கண்ணாடி” என்ற - இ.எம்.எஸ். எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூலில் உள்ள “சுவன்ன மைதானம்” - என்ற 1991 டிசம்பரில் எழுதப்பட்ட கட்டுரையின் பகுதிகள்).

(- தமிழாக்கம் : தி. வரதராசன், செம்மலர் / நவம்பர் 2006 / 9)

Pin It