ஆரியத்தை வேரறுக்க ஆர்ப்பரித்த

            அடலேறு! அதன்பொய்ச் சூதைக்

கூரியவெஞ் சொற்களினால் குடைந்தெடுத்த

            குத்தீட்டி! கொடுஞ்சா திப்பேய்

நேரியஇச் சமூகத்தை நெடுவாளாய்ப்

            பிளந்ததனைக் கண்ட தன்மேல்

பாரியதோர் போர்தொடுத்த பகுத்தறிவுப்

            பெருவேங்கை பெரியார் அன்றோ!

காவிஇருள் நாடுமுற்றும் கவிந்திட்ட

            கேடான காலம்; துண்டுக்

கோவணத்தைக் கட்டியுள்ள கொலைகாரச்

            சாமிகளே நாட்டை ஆள்வோர்

தூவுகின்றார் இந்துவென்ற மதவெறியைத்

            தோதாக! துலுக்க ரோடு

பாவிஎனப் பறையரையும் பட்டியல்தான்

            இடுகின்றார் கொலையும் செய்வார்.

செத்துவிட்ட பசுமாடு தெய்வமெனத்

            தெரிகிறது இவர் களுக்கு

கொத்தாகப் பலகொலைகள் குசராத்தில்

            தாம்நடத்திப் பயிற்சி பெற்றார்.

எத்தனையோ வழிகளிலே காங்கிரசுக்

            கட்சியுடன் மாறு பட்டும்

செத்தமொழி சமஸ்கிருதம் தேசத்தை

            ஆளுதற்கு முயற்சி செய்வார்.

மாட்டிறைச்சி அரசியலும் “மாப்பெரிய

            இந்தியா” உணர்ச்சி தானும்

கேட்டினையே தந்துவிடும்; கீழான

            அடிமைகளாய் நம்மை மாற்றும்

நாட்டுணர்ச்சி என்பதுவே “நாம் தமிழர்”

            என்கின்ற உணர்ச்சி யாகும்.

மீட்டுணர்ச்சி கொண்டிடுவோம்; பெரியாரின்

            நெறிநின்றே மேன்மை காண்போம்.

Pin It