தோழர் மருதூர் சி.பெரியசாமியின் அறிமுகத்துடன், நான் 1975-ஆம் ஆண்டு தொடங்கி சிந்தனையாளன் படித்து வருகிறேன். பிறகு 1977ஆம் ஆண்டில் தோழர் வே. ஆனைமுத்து அவர்களுடன் நேரடித் தொடர்பும் பழக்கமும் ஏற்பட்டது. எந்த நாளில் நான் தோழர் வே. ஆனைமுத்து அவர்களைச் சந்தித்தேன் என்கின்ற நினைவு இல்லை. அப்போது அவர் திருச்சியில் வசித்து வந்தார். அவர் சென்னை வந்தபோது எழும்பூர் பீப்பிள்ஸ் லாட்ஜில் அவரைச் சந்தித்து, “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” முதல் பதிப்பின் மூன்று தொகுதிகளையும் பெற்றது நினைவில் உள்ளது. அவற்றைப் படித்த போது பெரியாரின் கொள்கைகளை வருங்காலத் தலைமுறையினர் அறியும் வகையில் செயற்கரிய செய்து பெரியாருடைய சிந்தனைகளை நூல் வடிவில் நிலைபெறச் செய்த தோழர் வே. ஆனைமுத்து அவர்களுக்கு, அவருடைய பணிகளில் உற்ற துணையாக விளங்குவது என்ற எண்ணங்கொண்டேன். அதன்படி அவர் சென்னை வந்தபோதெல்லாம் அவரைச் சந்தித்தும்; சென்னைக்கு வந்தபிறகும் அவருடைய பணிகளுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கி வந்தேன்; வருகின்றேன்.

தோழர் வே.ஆனைமுத்து 1982-ஆம் ஆண்டில் தம் பணிகளைச் சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட முடிவு செய்தார். அவ்வேளையில் நான் அவரிடம் திருவல்லிக்கேணியில் தங்கிப் பணியாற்றுங்கள் என்று கருத்துத் தெரிவித்தேன். விரும்பி அவர் அதை ஏற்றுக் கொண்டார். திருவல்லிக்கேணியில் லால்பேகம் தெருவில், 5-ஆம் எண் கொண்ட வீட்டை ரூ.1500/- வாடகையில் அவருக்குப் பெற்றுக் கொடுத்தேன். அந்த முகவரியில் சிந்தனையாளன் அலுவலகமும் அச்சகமும் செயல்படத் தொடங்கியது. தமிழக அரசின் அன்றைய அமைச்சர் கா.காளிமுத்து திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நான் அப்போது அதற்கு அடுத்த பெரிய தெருவில் குடியிருந்தேன். தினமும் காலை, மாலை, இரவு வேளைகளில் சிந்தனையாளன் அலுவலகத்தில் அச்சுப்பணி தவிர்த்த எல்லாப்பணிகளையும் கவனித்தும் செய்தும் வந்தேன்.

தொழிலாளிகளுக்கு வாரந்தோறும் கூலிகொடுப்பது, கட்டடத் துக்கு மாத வாடகை, மின்கட்டணம், தொலைபேசிக் கட்டணம், சிந்தனையாளனுக்குத் தாள் வாங்கிய வகையில் கடன் எனப் பெரும் செலவினங்கள். அப்போது சிந்தனையாளன் வார ஏடாக வெளிவந்து கொண்டிருந்தது. கட்சிக்கான நன்கொடை வரவும் சிந்தனை யாளன் சந்தாத் தொகையும் மட்டுமே வரவினங்கள். அதிகப்படியான செலவினங்களுக்குத் தோழர் ஆனைமுத்து சொந்தப் பொறுப்பில் கடன் வாங்கியும் சொந்தப் பணத்தைச் செலவு செய்தும் செலவுகளைச் சமாளித்து வந்தார். அவர் வெளியூர்ப் பயணங்கள் மேற்கொண்ட நாள்களில் பணம் தேவைப்பட்டபோது நண்பர்களிடம் கை மாற்று வாங்கிச் செலவுகளைச் சமாளித்து வந்தேன்.

அந்தப் பணச்சுமை, நெருக்கடி ஆகியவற்றை எதிர்கொண்ட வேளையில்தான் சிந்தனையாளனுக்குத் தேவைப்படும் வருவாய்க்கு ஏதேனும் வழி காண வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அதன்பொருட்டுத் தொடர்ந்து சிந்தித்தவாறு இருந்தேன். ஒருநாள் நான் அவரிடம் ‘30 ஆயிரம் ரூபாய் அளவுக்கு செலவினமும் கடன் நெருக்கடியும் இருக்கிறது. என்ன செய்யப் போகிறீர்கள்’ என்று கேட்டேன். ‘என்னிடம் எதுவும் கேட்காதே. நாளை பொதுக்குழுவில் பேசு’ என்று சொல்லிவிட்டார்.

மறுநாள் விழுப்புரம் நகராட்சிப் பயணியர் விடுதியில் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. ‘கடன் சுமை’ நெருக்கடி ரூ.30 ஆயிரம் பற்றிய, வரலாற்றை விவரமாகக் கூறினேன். கடன் சுமையை எதிர்கொள்ளத் தோழர்கள் முன்வந்தார்கள். அப்போதே தோழர்கள் மனமுவந்து ரூ.15 ஆயிரம் கொடுத்தார்கள். மீதித்தொகையை அனுப்பி வைப்பதாகத் தோழர்கள் உறுதி கூறினார் கள். கூறியபடியே அனுப்பி வைத்தார்கள். நெருக்கடி சமாளிக்கப்பட்டது என்றாலும் தொடர்ந்து வருவாய்ப் பற்றாக் குறையுட னேயே சிந்தனையாளன் நடத்தப்பட்டு வந்தது.

சிந்தனையாளன் இதழுக்கான நிதி வருவாயை வலுப்படுத்த “சிந்தனையாளன் பெரியார் பிறந்தநாள் மலர்” வெளியிடுவது சிறந்தது என்று எனக்குத் தோன்றியது. அதில் கிடைக்கும் உபரியை சிந்தனை யாளனுக்குச் செலவிட வேண்டும். உடனே அதன்பொருட்டு 5.3.1988-ஆம் நாள் வரவு செலவுத் திட்ட அறிக்கை தயாரித்தேன். அந்த அறிக்கையை அப்போது நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்க அளித்தேன். பொதுக்குழு அரியலூரில் நடைபெற்றதாக நினைவு. ‘மலர் வெளியிடுவது கட்சியின் வேலை அல்ல; அது முதலாளித்துவ அணுகுமுறை; வெளியிடக்கூடாது’ என்று பொதுக்குழு மறுத்துவிட்டது. ஆனால் பொதுச் செயலாளர் வே. ஆனைமுத்து தம் நிறைவுரையில் பெரியார் காலத்தில் விடுதலை பெரியார் பிறந்த நாள் மலர் வெளியிடப்பட்டதைச் சுட்டிக்காட்டி மலர் வெளியிடுவது கட்சிப் பணிதான் என்றும் மக்களிடமும் வணிகர்களிடமும் தொழிலதிபர்களிடமும் மலருக்கு விளம்பரம் பெறுவது கொள்கைக்கு எதிரானது ஆகாது என்றும், ஆனால் நம்மால் இப்போது மலர் வெளியிட இயலாது என்றும் குறிப்பிட்டார். பின்னர் 1989-ஆம் ஆண்டில் சிந்தனையாளனுக்குக் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. ஏற்கெனவே நான் அளித்திருந்த மலர் பற்றிய திட்ட அறிக்கை யைக் கட்சி ஆலோசனைக்கு எடுத்துக் கொண்டது. 1989-ஆம் ஆண்டில் சென்னை யில் சிந்தனையாளன் அலுவலகத்தில் நடை பெற்ற பொதுக்குழுவில் “சிந்தனையாளன் பெரியார் பிறந்தநாள் மலர்” வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. முதலாவது மலர் 1989-ஆம் ஆண்டில் வேலூர் மாநாட் டில் வெளியிடப்பட்டது. அதுவே பின்னர் பொங்கல் மலராகப் பெயர் மாற்றம் பெற்று இன்றளவும் தொடர்ந்து வெளியிடப் பட்டு ஆண்டுதோறும் தொடர் வருவாயை அளித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு என்னுடைய திட்ட அறிக்கை அடிப்படையாக அமைந்தது.

அந்தத் திட்ட அறிக்கையில் நான் மலரின் தேவை பற்றியும் மலரில் விளம்பரங்கள் மற்றும் கட்டுரைகள் ஆகியவற்றுக்கான பக்கங்களின் எண்ணிக்கையும், பதிப்புச் செலவு, கிடைக்கும் வருவாய், கிடைக்கும் உபரி ஆகியவற்றை உத்தேச வரவு-செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

மலரின் தேவை பற்றி நான் நான்கு காரணங்களைக் குறிப்பிட்டிருந்தேன். அவை வருமாறு :

  1. கடந்த 11 ஆண்டுகளில் பெரியார் சம உரிமைக்கழகம் (பின்னர் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி எனப் பெயர் மாற்றம் பெற்றது) ஆற்றி வரும் பல பணிகளையும் தொகுத்து மக்கள் அறியச் செய்தல்.
  2. பெரியார் சமஉரிமைக் கழகத் தோழர் களை அறிமுகம் செய்தல்.
  3. பெரியார் சமஉரிமைக் கழகத்தின் கொள்கைகள் - பணிகள் ஆகியவற்றை விரித்துரைக்கும் கட்டுரைகளை வெளியிடுதல்.
  4. மலரின் வரவு-செலவில் கணிசமான அளவுக்கு உபரியை ஏற்படுத்தி அதைச் சிந்தனையாளன் வளர்ச்சிக்குத் துணைப் படுத்துதல்.

மலர் பற்றிய விவரங்கள்

மொத்த பக்கங்கள் 160. அதில் விளம்பரம் 30 பக்கம்; படங்கள் 24 பக்கம்; சிறப்புக் கட்டுரைகள் 70 பக்கம்; பிறகட்டுரைகள் 36 பக்கம்.

படிகளின் எண்ணிக்கை

3 ஆயிரம் படிகள் அச்சிட வேண்டும். அதில் விளம்பரக்காரர்களுக்கு மற்றும் இலவசங்களின் எண்ணிக்கை 500 படிகள். விற்பனைக்குரியவை 2500 படிகள்.

பதிப்புச் செலவும் விலையும்

மொத்தச் செலவு ரூ.27,000/- அதில் அச்சிடுதல் செலவு ரூ.8000/- கட்டடச் செலவு ரூ.1800/- தாள் மற்றும் அட்டைச் செலவு ரூ.14,200/- விலை ஏற்றத்துக்கும் நிர்வாகச் செலவுக்கும் ரூ.3,000/- ஒரு படியின் அடக்கவிலை ரூ.9/- விற்பனை விலை ரூ.20/- முன்பதிவு விலை ரூ.10/- பத்துப் படிகளின் முன்பதிவுத் தொகை ரூ.100/-

விளம்பரக் கட்டணம் வருவாய்

அட்டை 4-ஆம் பக்கம் ரூ.3,000/-

3-ஆம் பக்கம் ரூ.2,000/- 2-ஆம் பக்கம் ரூ.1,500/- உள்பக்கம் முழுப்பக்கம் ரூ.1000/- பக்கம் ரூ.500/- பக்கம் ரூ.250/- உள்பக்க விளம்பரம் 30 பக்கங்கள் பெறவேண்டும். அப்போது விளம்பர வருவாய் ரூ.36,500/- அதில் விளம்பரம் பெறும் வகையில் நேரிடும் பயணம் மற்றும் இதர செலவினங்களுக்கான கழிவுத் தொகை 30 விழுக்காடு அதாவது ரூ.10,950/- போக எஞ்சிய விளம்பர வருவாய் (ரூ.36,500 (-) ரூ.10,950/-) ரூ.25,550/-

விற்பனை வருவாய்

விற்பனைக்குரியது 2500 படிகள். விலை ரூ.20/-. கிடைக்கும் விற்பனைத் தொகை ரூ.50,000/- அதில் விற்பனை தொடர்பான பயணம் மற்றும் இதர செலவுகளுக்கான கழிவுத் தொகை 25 விழுக்காடு அளவில் ரூ.12,500/- போக எஞ்சிய விற்பனைத் தொகை (ரூ.50,000 (-) ரூ.12,500) ரூ.37,500/-

உபரி

விளம்பரம் வகையில் செலவு போக நிகர வருவாய் ரூ.25,550/- விற்பனை வகையில் செலவு போக நிகர வருவாய் ரூ.37,500/- இரண்டும் சேர்த்து மொத்த நிகர வருவாய் ரூ.63,050/-. இதில் பதிப்புச் செலவு ரூ.27,000/- போக எஞ்சிய தொகை (ரூ.63050 - ரூ.27000) ரூ.36,050/- உபரித் தொகையாகும்.

இந்தத் திட்ட அறிக்கையைப் பொதுக் குழு நம்பிக்கை வைத்து ஏற்றுக்கொண்டு பெரியார் பிறந்தநாள் மலரினை 1989-இல் வெளியிட முடிவு செய்தது. அந்தப் பொதுக் குழுவில் அப்போது பொதுச்செயலாளர் தோழர் வே.ஆனைமுத்து, ‘திட்டத்தைக் கொடுத்த கலசம், விளம்பரம் 30 பக்கம் வாங்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். அவர் 10 பக்கத்துக்கு விளம்பரம் பெற்றுத் தருவதானால் மலர் வெளியிடும் பணியை எடுத்துக் கொள்ளலாம்’ என்று கூறினார். நானும் சரி என்று சொன்னேன். அவ்வாறே 10 பக்கம் விளம்பரம் மற்றும் நன்கொடை யினை நானும் தோழர் சி. பெரியசாமியும் பெற்றுக் கொடுத்தோம். மலரும் வேலூர் மாநாட்டில் வெளியிடப்பட்டது. இப்போது பொங்கல் மலர் என்கிற பெயரில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

சிந்தனையாளன் தொய்வின்றித் தொடர்ந்து வெளிவரவேண்டும் என்று சிந்தித்து அளிக்கப்பட்ட என்னுடைய 5.3.1988-ஆம் நாளிட்ட திட்ட அறிக்கையை 1989-ஆம் ஆண்டின் பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் வே. ஆனைமுத்து முன்மொழிய பொதுக்குழு நம்பிக்கை வைத்து ஏற்றுக்கொண்டு சிந்தனையாளன் பெரியார் பிறந்தநாள் மலரை வெளியிட்டதையும் பின்னர் அதையே பெயர் மாற்றம் செய்து சிந்தனையாளன் பொங்கல் மலர் என்னும் பெயரில் தொடர்ந்து வெளியிட்டு அதன் உபரியைக் கொண்டு சிந்தனையாளன் ஏட்டையும் தொடர்ந்து வெளியிட்டு வருவதையும் மலர் வரலாற்றின் 30-ஆம் ஆண்டில் எண்ணிப் பார்க்கிறேன். மலர் தரும் பொருளில் சிந்தனையாளன் ஏடு தவழ்கிறது.

“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக் கேட்டதாய்”

என்னும் குறள் தரும் பொருளில் என் மனம் தவழ்கிறது.

வளர்க சிந்தனையாளன்!

Pin It