காஷ்மீர்
பனிமலை இமயத்தின்
அழகோவியம்
முகில்கள் தாலாட்டும்
இயற்கையின் தாய்மடி
இன்றோ
குருதிச் சேற்றில்
கொந்தளிக்கிறது.
மோடியின் கொலைப்படைகள்
காஷ்மீர் இளைஞர்களின்
உடல்களைப்
பெல்லட் குண்டுகளால்
சல்லடையாய்த் துளைத்துச்
சாகடிக்கின்றன
இந்தியப் படையால்
அநாதையாக்கப்பட்டோர்
அய்ம்பதாயிரம் பேர்.
ஹிஸ்புல் முஜாஹீதீன் அமைப்பின்
போராளித் தலைவன்
புர்கான்வானி
ரம்ஜான் முடிந்த மறுநாளே
ஈவிரக்கமின்றி
இந்தியப் படையால் கொல்லப்பட்டார்
புர்கானின்
இறுதிச் சடங்கில் பங்கேற்றோர்
இரண்டு இலட்சம்பேர்
இரு மாதங்களுக்கு முன்இறந்த
முன்னாள் முதல்வர்
முக்தி முகமது சையித்
இறப்பில் பங்கேற்றோர்
வெறும் அய்யாயிரம் பேர்தான்.
மடிந்தவர்கள்
மண்ணை ஒருவேளை ஆளலாம்
மக்கள் மனங்களை
ஆளமுடியாது.
காஷ்மீர் போரில்
மோடி அரசுப் படைகளின் மீது
மக்கள் கல் எறிந்தே விரட்டுகிறார்கள்
வியத்நாம் போரில்
அமெரிக்கப் போர் விமானங்களை
வெறுங் கற்களை வீசி
விரட்டியடித்த வீரவரலாறு
மீண்டும் திரும்புகிறது
கடைசி இந்தியச் சிப்பாய்
வெளியேறும் வரை
காஷ்மீர் இளைஞர்கள்
ஓயப்போவதில்லை.
இரக்கமற்ற பெல்லட் குண்டுகளைப்
பயன்படுத்தும்
இரண்டே நாடுகள்
இஸ்ரேலும், இந்தியாவும்!
இஸ்ரேல்
பகைநாடான
பாலஸ்தீனத்தின் மீது
பொழிந்தால்
இந்தியா
சொந்த நாட்டு மக்களையே
சுடுகாடாக்குகிறது.
காஷ்மீரில்
பொது வாக்கெடுப்பு நடத்துதல்
அம்மாநிலத்தில்
சிறப்பதிகாரம் வழங்கும்
370-ஆவது பிரிவை நீட்டித்தல்
ஆகியவற்றை
அகற்றச் சொல்கின்றன
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி!
மாறாய்க்
காஷ்மீர் பார்ப்பனப் பண்டிதர்களுக்குக்
கருணையோடு
தனிக் குடியிருப்புகளைத்
தரச் சொல்கின்றன
அமர்நாத் கோயிலுக்கு
நிலம் வழங்கச் சொல்லி
இந்து வாக்குகளை
அள்ளுகின்றன.
என்றாலும்
வீழ்த்த முடியாது
விடுதலைக் கனவை
அது வெல்லும்!