எதற்கும் கலங்காத ஆனைமுத்து அய்யா
தமிழேந்தி மறைவுச் செய்தியைத்
தாங்க முடியாமல் "அடி மேல் அடி
விழந்தால் எப்படித் தாங்குவது" என்று
அழுதபடியே கூறினார்.
'சிந்தனையாளன்' இதழைப் பார்த்தவுடன்
அதன் இறுதிப்பக்கத்தை ஆவலுடன்
தேடுவோர் ஏராளம். இதழ்தோறும்
இறுதிப்பக்கத்தில் இடம்பெற்றிருப்பது
பாவலர் தமிழேந்தியின் பாடல்.
"நடப்பு அரசியலை வெளிப்படையாகப்
பாடுவோர் அருகிவிட்ட தமிழ் இலக்
கியச் சூழலில், தமிழேந்தி மட்டுமே
அந்தத் தனித்தன்மையை அச்சமின்றிக்
காப்பாற்றி வருகிறார் "- என்று
பாவலர் அறிவுமதி வியப்பது வழக்கம்.
சிந்தனையாளன் இறுதிப்பக்கக் கவிதையாக
இனி தமிழேந்தி வரமாட்டார்.
அரசியல் கவிதை அற்றுப்போகாமல்
காப்பாற்றிய பாவலர் தமிழேந்தியின்
பயணம் நின்றுவிட்டது.
தமிழின விடியலுக்கான எல்லாப்
போராட்டங்களிலும் மார்க்சியப் பெரியாரியப்
பொதுவுடைமைக் கட்சி சார்பில் எழுச்சி
முழக்கமிடும் போராளித் தமிழேந்தி
குரலை இனி கேட்க வாய்ப்பில்லை.