மானியம் என்பது அரசு வருவாயிலிருந்து நடுத்தர மற்றும் எளிய மக்களுக்கு வழங்கப்படும் தொகை. ஆனால் இந்த மானியம் உரிய மக்களுக்குச் சென்றடைவதில்லை. மேல்தட்டு மக்களை அடையாளம் கண்டு அவர்களை நீக்கிவிட்டாலே, மற்றவர்களுக்கு உரிய பயன் கிடைக்கும்.

இப்பொழுது வீட்டுச் சமையலுக்கான எரிவாயுக்கு உள்ள மானியம் அனைவர்க்கும் கிடைத்து வருகிறது. இந்த மானியம் மேல் தட்டு மக்களுக்கு கிடைக்காமலிருக்க ஆண்டு வருவாய் கணக்கில் வரையறுத்துக் கொடுத்தால் மானியம் உரியவர்களுக்குக் கிடைக்கும். தற்போது அறிவித்துள்ள புதிய திட்டத்தில் எளிய மக்களும் முழு கட்டணம் கட்டி எரிவாயு உருளையை வாங்க வேண்டும் என்று அரசு கூறுகிறது. அந்தக் கட்டணத்தில் அரசு விரும்பினால் ஒரு தொகையைக் கொடுக்கலாம் அல்லது நிதி நிலை சரி இல்லை என்று கூறி எரிவாயு மானியத்தை எளிதில் இரத்துச் செய்யலாம். மானிய விலைக்கே வாங்க வழியில்லாத எளிய மக்கள் எப்படி முழுத் தொகையைக் கட்டி வாங்கமுடியும். மேலும் எவ்வளவு தொகை மானியமாக வழங்கப்படும் என்று இதுநாள்வரை நடுவண் அரசு வரையறுத்துக் கூறவில்லை. அதனால் இது ஒரு ஏமாற்றுதிட்டமாகவே முடியும்.

எளிய மக்களுக்கு தொகுப்பு வீடு கட்ட வழங்கும் தொகையில் அய்ம்பது சதவீதத்திற்குமேல் கொள்ளையடிக்கின்றனர். தொகை வழங்கும் துறையினர் குறிப்பிடும் கடையில் தான் பொருட்கள் வாங்கவேண்டும் அந்தப் பொருட்களை அரசே வாங்கி கொடுக்கலாம் (அ) தொகை கொடுத்து வாங்கிக் கொள்ளுமாறு சொல்லலாம். இதன் மூலம் அதிகாரிகளுக்கும் வணிகர்களுக்கும் கிடைக்கும் முறைகேடான பணம் பயணாளிகளுக்குக் கிடைக்கும். இதைத் தடுப்பதற்காகவே திட்டமிட்டு இத்தொகையில் பாதிக்குமேல் திருடுகின்றனர். அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் இதே நிலைதான்.

- விவசாயி மகன் ப.வ.

Pin It