இதுவரை ஏழையின் வாழ்வினி லிங்கே
பொங்கியதா பொங்கல்? - நாட்டில்
அரசியல் வாதியின் வீட்டினில் தானே
பொங்குது பெரும் பொங்கல்!
மனைவியும் மக்களும் கூடி உழைத்தும்
உழவனுக்கா பொங்கல்? - மண்ணை
மனைகள் போட்டு விற்றவன் வீட்டில்
பொங்கலோ (பெரும்) பொங்கல்!

நூறு நாளுக்கு வேலை பாரென
வந்தது ஒருதிட்டம் - அய்யோ
கூறு கூறாய் விவசா யத்தைக்
கொன்றது அத்திட்டம்!
வாக்குப் பொறுக்க இலவசம் ஆயிரம்
வாரி அளப்பார்கள் - எல்லா
திட்டங்களிலும் ‘கமிஷன்’ தின்ன
வாயைப் பிளப்பார்கள்.

வாழும் வரைக்கும் லாபம் என்றே
மக்கள் வாழ்கின்றனர் - வாழும்
வழியது கெட்டுப் போனால் தற்கொலை
செய்யவும் துணிகின்றார்!
அறநெறி பிறழ்ந்த காலம் இதனை
‘கலியுகம்’ என்கின்றார் - உண்மையில்
அரசியல் வாதியின் கையில் மக்களின்
‘பலியுகம்’ என்பேன் நான்!

சாதி அரிசியை மதங்களின் பானையில்
ஏற்ற மறுத்திடுவோம் - சம
நீதி கிடைத்திட மக்கள் நெஞ்சினில்
உணர்ச்சியைப் பெருக்கிடுவோம்!
உழைக்கும் மக்களின் விடுதலைக் கிங்கே
ஒருகை சேர்த்திடுவோம் - ஏய்த்துப்
பிழைப்போர் தமக்குப் பாடம் புகட்டி
ஒரு கை பார்த்திடுவோம்!

- பாவலர் வையவன்

Pin It