பிற்போக்கான - சமத்துவத்துக்கும் சமூகநீதிக் கும் எதிரான பழைமைவாத இந்துமதக் கருத்துகளை - நம்பிக்கைகளை மீட்டுரு வாக்கம் செய்து நிலைநாட்டிட நரேந்திர மோடியின் தலைமையிலான இந்துத்துவ அரசு, அதற்கான செயலில் தீவிரமாக இறங்கியுள்ளது.

வாஜ்பாயின் ஆட்சிக் காலத்திலேயே (1999-2004) இந்துத்துவப் பழைமைவாத மீட்டுருவாக்கச் செயற் பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி, சிந்துசமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமல்ல; ஆரியர் நாகரிகமே என்றும், வேதங்கள் அறிவுக்கருவூலங்கள் என்றும் மெய்பிக்க முயன்றார். பாடத் திட்டத்தில் பச்சையான பார்ப்பனியத்தைப் புகுத்தி னர். இதற்குக் கடும் எதிர்ப்பு வரலாற்று அறிஞர்கள், கல்வியாளர்கள், இடதுசாரி அரசியல் கட்சிகளிடையே எழுந்தது. மேலும் தி.மு.க. போன்ற பல கட்சிகளைக் கொண்ட கூட்டணி ஆட்சியாக இருந்ததால் இந்துத்துவ மயமாக்கும் முயற்சிகளை வலிமையாக முன்னெடுக்க முடியாமல் போயிற்று.

deenath badraஆனால் 2014 நாடாளுமன்றத் தேர்தலில், முன் னெப்போதும் இல்லாத வகையில், இராஷ்டிரிய சுயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பு, தேர்தல் பணியில் தலைமையேற்றுக் கடுமையாக உழைத்து, ஆர்.எஸ்.எஸ். இல் ‘முழு நேரப் பிரச்சாரகராக’ 2000 ஆண்டு வரை யில் செயல்பட்டுவந்த மோடியைத் தனிப்பெரும்பான் மையுடன் இந்தியாவின் தலைமை அமைச்சராக் கியது. மோடி 2002இல் குசராத் முதலமைச்சராக இருந்த போது “(முசுலீம்களின்) ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி” என்பதைச் செயலில் காட்டினார்.

நரேந்திர மோடி தலைமை அமைச்சராக இருக்கும்போதே, “இந்தியா என்பது இந்துக் களின் தேசம், இந்தியத் தேசியம் என்பது இந்துத் தேசியமே, இந்துக் கலாச்சாரமே இந்தியாவின் கலாச்சாரம் இந்துத்துவமே இந்தியாவின் அடை யாளம்” என்கிற இந்துத்துவக் கோட்பாட்டை நிலைநாட்டிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.-ம் அதன் கிளை அமைப்புகளும் தீவிரமாகச் செயல் பட்டு வருகின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது ‘வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி’ என்று மட்டுமே முழங்கி - இந்துத்துவக் கொள்கையைப் பற்றி வாய்தவறியும் எங்கும் பேசாமல் தவிர்த்தார் நரேந்திர மோடி. ஆனால் தலைமை அமைச்சரான பின் நாடாளுமன்றத்தில் ஆற்றிய தன் முதல் பேச்சிலேயே தான் ஒரு சுயம் சேவக் சங் என்பதைக் காட்டிவிட்டார். அப்போது ‘இந்தியா வில் 1200 ஆண்டுகளாக இருந்துவந்த அந்நியர் ஆட்சியை அகற்றினோம்’ என்று கூறினார். அந்நிய ரான ஆங்கிலேயரின் ஆட்சி 200 ஆண்டுகள் இந்தியா வில் இருந்ததாக மட்டுமே பாடநூல்களில் படித்திருக் கிறோம். 1200 ஆண்டுகால அந்நியர் ஆட்சி என்று மோடி எதைக் குறிப்பிடுகிறார்?

ஆர்.எஸ்.எஸ்.-ன் தத்துவத் தந்தை என்று போற்றப்படுகின்ற ‘குருஜி’ கோல்வால்கர் 1971 சனவரி 10 அன்று விதர்பாவில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமில் பேசினார். அப்போது, “அந்நியரின் படை யெடுப்பால் கடந்த 1200 ஆண்டுகளில் இசுலாமியர் கள் இந்துக்களில் கணிசமான எண்ணிக்கையினரை இசுலாமிய மதத்திற்குக் கட்டாயத்தின் மூலமோ, ஆசை காட்டியோ மதம் மாற்றினர்” என்று குறிப்பிட் டார். கி.பி.8ஆம் நூற்றாண்டில் அராபியர் பஞ்சாப் பகுதியைக் கைப்பற்றினர். 1200இல் தில்லியில் சுல் தான்கள் ஆட்சி தொடங்கியது முதல் 1757 வரை தில்லி இசுலாமியர் ஆட்சியின்கீழ் இருந்தது. 1757 முதல் 1947 ஆகத்து 14 வரை ஆங்கிலேயர் ஆட்சி இருந்தது. இவ்வாறு கணக்கிட்டுத்தான், 1200 ஆண்டுகால அந்நியர் ஆட்சி என்று ஆர்.எஸ்.எஸ்.-ம் மோடியும் ஒரே குரலில் பேசுகின்றனர். எனவே இந்த 1200 ஆண்டுகால அந்நியரின் ஆட்சியில் இந்து மதத்துக்கும் இந்தியக் கலாச்சாரத்திற்கும், ‘பாரத தேசத்தின்’ பெருமைக்கும் ஏற்பட்ட களங்கங்களைப் போக்கி, பாரத தேசத்தின் பண்டைய பெருமையை மீண்டும் நிலைநாட்ட வேண் டும் என்பதே சங் பரிவாரங்களின் குறிக்கோள்.

கோயில் கட்டுவதைவிட, கழிப்பறைக் கட்டுவதே முதன்மை, ‘தூய்மை இந்தியா’, ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’, செவ்வாய்க்கோளை மங்கள்யான் சுற்றுவது இந்திய அறிவியலின் ஒப்பரிய வளர்ச்சி என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் மோடி, அவ்வப் போது இந்துத்துவப் பாசிச கருத்துக்களையும் திருவாய் மலரத் தவறுவதில்லை.

25.10.2014 அன்று மும்பையில் எச்.என். ரிலை யன்ஸ் அறக்கட்டளையின் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யத்தைத் திறந்து வைத்து மோடி பேசி னார். அப்போது, “மகாபாரதத்தில் கர்ணன் தன் தாயாகிய குந்தியின் கருப்பையிலிருந்து பிறக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டியுள்ளதெனில், மகாபாரதம் எழுதப்பட்ட காலத்திலேயே மரபியல் அறிவியல் (ழுநநேவiஉ ளுஉநைnஉந) வளர்ச்சி பெற்றிருந்தது என்பதாகும். நாம் எல்லோரும் கணேசனை (விநாயகன்) வழிபடு கிறோம். யானையின் தலையை மனிதனின் உடலில் பொருத்தக்கூடிய அளவுக்கு அப்போது ‘பிளாஸ்டிக்’ அறுவை செய்யக்கூடிய ஒருவர் இருந்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது” என்று மருத்துவர்கள் முன்னிலையில் மோடி கூறினார். அந்த மருத்துவர்கள் வாயையும் இன்னொன்றையும் பொத்திக் கொண்டிருந்தனர். இன்று வரை மருத்துவத் துறை வல்லுநர் எவரும் மோடியின் கருத்தை மறுக்க முன்வரவில்லை.

வரலாற்றுக்கும் அறிவியலுக்கும் முற்றிலும் எதிரான மோடியின் இக்கருத்து, குசராத் மாநிலத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கான துணைப்பாட நூலில் இடம் பெற்றிருக்கிறது. பள்ளிப் பருவத்திலேயே மாணவர் களின் இளம் பிஞ்சு மனங்களில் இந்துத்துவ நஞ்சை ஊட்டும் வகையில் ஒன்பது துணைப்பாட நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு நூலும் 50,000 படிகள் அச்சிடப்பட்டுள்ளன. தொடக்கப் பள்ளி - உயர்நிலைப் பள்ளி என்றுள்ள 40,000 பள்ளிகளுக்கு இந்நூல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஒன்பது நூல்களில் எட்டு நூல்களை எழுதியவர் ஆர்.எஸ்.எஸ்.சின் பச்சோ அண்டோலன் சமிதியின் தலைவர் தீனாநாத் பத்ரா என்பவராவார். இந்த ஒன்பது நூல்களுக்கும் முதல மைச்சராக இருந்த மோடி சிறிய அணிந்துரை எழுதி யிருக்கிறார்.

இந்த ஒன்பது நூல்களில் தீனாநாத் பத்ரா எழுதிய ‘தேஜாய் மே பாரத்’ (Tejoy may Bharat) என்ற நூலில் பக்கம் 92, 93களில், “காந்தாரியின் (திருதராஷ்டிர னின் மனைவி) கருக்கலைந்த போது, துவய்பயான் வியாசா என்ற முனிவர், காந்தாரியின் கருப்பை யிலிருந்து வெளியில் விழுந்த சதைப்பிண்டத்தைக் குறிப்பிட்ட மருந்துகளைக் கலந்தபின் குளிர்ச்சியான குளத்தில் பாதுகாப்பாக வைத்தார். பிறகு அதை எடுத்து 100 பகுதிகளாகப் பிரித்து, நெய்யால் நிரப்பப்பட்ட 100 குளங்களில் வைத்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து இவை 100 கவுரவர்களாகப் பிறந்தன. எனவே ஸ்டெம்செல் (stem cell) ஆராய்ச்சி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் வெற்றியாக நடத்தப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

ரிக் வேதத்தின் பிற்காலப் பகுதியில் புகுத்தப்பட்ட ‘புருஷசுக்தா’ பகுதியில், ‘பிரஜாபதி’ என்ற கடவுளைப் பார்ப்பனர்கள் வேள்வியில் பலியிட்டனர். அப்போது பிரஜாபதியின் தலையிலிருந்து பிராமணர்களும், தோளி லிருந்து சத்திரியர்களும், தொடையிலிருந்து வைசி யர்களும், பாதத்திலிருந்து சூத்திரர்களும் பிறந்தனர் என்று எழுதப்பட்டுள்ளது. எனவே தான் பெரியார் கேட்டார் - ‘ஏன்டா குழந்தை பிறக்க வேண்டிய இடத்தி லிருந்து எவனும் பிறக்கவில்லையா?’ என்று! ஆனால் வேதங்களை அறிவுக் களஞ்சியமாக மதித்துப் போற்ற வேண்டும் என்று சங்பரிவாரங்கள் கூச்சலிடுகின்றன.

குசராத் மாநிலத்தின் பள்ளிகளில் உள்ள துணைப் பாட நூல்களில் உள்ள இரண்டு செய்திகள் கீழே தரப்பட்டுள்ளன :

“திலீப் மன்னன் தனக்குக் குழந்தைப் பேறு வேண்டுமென்று வசிஷ்டரின் ஆசிரமத்துக்குச் சென்று அவருடைய ஆசியை வேண்டினான். அப்போது வசிஷ்டர், ‘நீ பசுக்களை வணங்கி அவற்றைப் பேணிப் பாதுகாத்து வந்தால் பிள்ளை பிறக்கும்’ என்றார். மன்ன னும் அவ்வாறே செய்து வந்தான். ஒருநாள் ஒரு சிங்கம் ஒரு பசுவைத் தாக்கிடப் பாய்ந்த போது, அம் மன்னன் குறுக்கிட்டு, அந்தச் சிங்கத்தைத் தடுத்து நிறுத்தி, ‘என்னை வேண்டுமானாலும் இரையாக்கிக் கொள்; பசுவைக் கொல்லாமல் விட்டுவிடு’ என்றான். மன்னனின் இந்தப் பசுப் பாதுகாப்புக்குப் பயன் கிடைத் தது. உடனே அடுத்தடுத்து அரசனுக்குப் பல குழந்தை கள் பிறந்தன” (பக்கம் 39, Prernadeep-3).

“இந்தியாவில் கல்வி என்பது இந்திய மரபுக்கு இயைந்ததாக இல்லை. உண்மையான கல்வியாகவும் இல்லை. இந்திய மண்ணின் நாகரிகத்துடன் எத்த கைய தொடர்பும் இல்லாததாக இருக்கிறது. ஏனெனில் மெக்காலே, காரல்மார்க்சு ஆகியோரின் கருத்துகளின் அடிப்படையில் பொறுப்பற்ற தன்மையில் இந்திய வரலாறு எழுதப்பட்டதன் விளைவேயாகும். அதனால் தான் இளந்தலைமுறையினர் குறிக்கோள் இல்லாத வர்களாக, முரடர்களாக இருக்கின்றனர்” (Shikshan Nu Bhartiyakaran நூல்).

பாரதப் பண்பாட்டையும் இந்துமத ஒழுக்க நெறி களையும் மாணவர்களுக்கு ஊட்டுவதற்குரிய வகை யில் நூல்களை எழுதக்கூடியவர் என்று நரேந்திர மோடியால் தெரிவு செய்யப்பட்ட தீனாநாத் பத்ரா என் பவர் யார்?

அமெரிக்காவில் வெண்டி டொனிகர் என்கிற பெண் வரலாற்றுப் பேராசிரியர் இந்திய வரலாற்று ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் எழுதிய ‘இந்துக்கள் : ஒரு மாற்று வரலாறு’ (The Hindus : An Alternative History) என்ற நூல் உலக அளவில் கிளை பரப்பி யுள்ள பெங்குவின் நிறுவனத்தால் வெளியிடப்பட்டு விற்பனையில் இருந்தது. இந்த நூல் இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது; வரலாறு திரித்து எழுதப்பட்டுள்ளது என்று கூறி இந்தியக் குற்றவியல் சட்டம் 153A, 295A ஆகியவற்றை மேற்கோள் காட்டி தீனாநாத் பத்ரா தில்லி உயர்நீதிமன்றத்தில் பெங்கு வின் நிறுவனத்தின் மீதும், அந்நூலின் ஆசிரியர் வெண்டி டொனிகர் மீதும் வழக்குத் தொடுத்தார். இந்துத்துவ சக்திகள் தீனாநாத் பத்ராவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன. இந்துத்துவப் பாசிசத்துக்கு அஞ்சி பெங்குவின் நிறுவனம் அந்நூலைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது.

வைணவ நெறிகளைப் போற்றுபவராகவும், வைணவ ஆய்வாளராகவும் இருந்த ஏ.கே. இராமானுசம் எழுதிய ‘பல இராமாயணங்கள்’ (300க்கு மேற்பட்ட இராமா யணங்கள் இருக்கின்றன) என்ற கட்டுரை, தில்லிப் பல்கலைக்கழகத்தில் வரலாற்று மாணவர்களுக்குப் பாடப் பகுதியாக இருந்தது. தீனாநாத் பத்ரா இந்துத் துவ வெறிக் கும்பலின் துணையுடன் இதை நீக்க வேண்டும் என எதிர்த்தார். இதைப் பாடப் பிரிவில் சேர்த்தவர்களில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகளும் ஒருவர். ஆயினும் மன்மோகன் சிங் தலைமை அமைச்சராக இருந்த போதுதான், அக்கட்டு ரை நீக்கப்பட்டது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்துத்துவ சக்திகள் அடாவடித்தனமாக எதையும் சாதித் துக் கொள்ள முடியும் என்ற கேடான பாசிசப் போக்கு கடந்த முப்பது ஆண்டுகளில் படிப்படியாக வளர்ந்து வரு கிறது என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன.

மும்பையில் நரேந்திர மோடி மருத்துவமனை யைத் திறந்து வைத்ததற்கு மறுநாள், 26.10.2014 அன்று தில்லியில், பண்டைய இந்திய வரலாறு பற்றிய ஆய்வில் தலைசிறந்த வல்லுநராக விளங்கும் ரொமிலா தாப்பர், “கேள்வி கேட்பதா? அல்லது கேள்வி கேட்காமல் இருப்பதா?-இதுதான் இப்போது கேள்வியாக நிற்கிறது! (To question or not to question - This is the question) என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

அப்போது மோடியின் பேச்சுக்கு எதிர்வினையும் புரியும் வகையில், “முன்னெப்போதையும் விட கல்வி யாளர்களும், அறிவியலாளர்களும் அதிக எண்ணிக் கையில் இருக்கின்றனர். ஆனால் இவர்களில் பெரும் பாலானோர் கருத்துச் சுதந்தரத்துக்கு ஆபத்து வந்த நிலையில் கூட அதிகார வர்க்கத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தயங்குகின்றனர்; தவிர்க்கின்றனர். அறிவை - ஆராய்ச்சியை முன்னெடுத்துச் செல்வது என்பது எத்தகைய பிரச்சனைக்கும் உள்ளாகாததாக இருக்க வேண்டும் என்று இந்த வல்லுநர்கள் நினைக்கின்றனர். அல்லது ஆளும்வர்க்கம் எதிர்பார்ப்பதற்கு ஏற்பத் தங்கள் சொந்த அறிவை ஒதுக்கி வைத்துவிட்டு, அதிகாரவர்க்கத்தின் கண்ணசைவுக்கு ஏற்பத் தாளம் போடத் தயாராக இருக்கிறார்கள்” என்று ரொமிலா தாப்பர் சாடினார்.

மேலும், “பார்ப்பனர் அல்லாத தத்துவவாதிகள் - சிந்தனையாளர்கள் பண்டைக் காலத்தில் நாத்திகர்கள் என்று பழிக்கப்பட்டனர். இக்காலத்திலோ இந்துத்துவா எதைக் கற்பிக்கிறதோ அதை ஏற்கவில்லையாயின் நீங்கள் மார்க்சியவாதிகள் என்று முத்திரை குத்தப்படு வீர்கள்” என்று இந்துத்துவத்தின் பாசிசப் போக்கைச் சுட்டிக்காட்டினார். எனவேதான், இந்துத்துவத்தின் தரங்கெட்ட அரசியல் தரகரான சுப்பிரமணியன் சாமி, ரொமிலா தாப்பர், டி.டி. கோசாம்பி, ஆர்.எஸ். சர்மா போன்றவர்களின் வரலாற்று நூல்களை எரிக்க வேண்டுமென்று கொக்கரிக்கிறார்.

 ஆங்கிலத் தொலைக்காட்சியில் உரையாடல் வாயிலாகச் சிறந்த திறனாய்வாளராக விளங்கும் கரண் தாப்பர் 1.11.2014 ஆங்கில ‘தி இந்து’ நாளேட் டில் மகாபாரதக் காலத்திலேயே மரபியல் அறிவியல் வளர்ந்திருந்தது என்கிற மோடியின் பேச்சைக் கண்டித் துக் கட்டுரை எழுதினார்.

பாகிஸ்தான் உள்ளிட்ட பல இசுலாமிய நாடுகளில் சட்டப்படி, இஸ்லாம் அரசு மதமாக இருக்கிறது. சிறீலங் காவில் பவுத்தம் அரசு மதம். ஆனால் இந்தியாவில் இந்துமதம் அரசு மதம் அன்று. ஆனால் நடப்பில் இந்துமதம் அரசு மதமாகவே ஆதிக்க நிலையில் இருந்து வருகிறது. பெயரளவில் மட்டுமே மதச்சார் பற்ற நாடு என்ற கூறப்படுகிறது. ஆயினும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்துமதக் சடங்குகளுடன் தான் தொடங்கப்படுகின்றன. விண்வெளி ஆய்வு நடுவத்தின் தலைவராக உள்ள இராதாகிருட்டிணன் செவ்வாய்க்கோளுக்கு மங்கள்யானை ஏவுவதற்கு முன் அதுபோன்ற பொம்மை உருவைத் திருப்பதியில் ஏழுமலையான் முன் வைத்து வழிபாடு நடத்தினார். விண்வெளியில் ஏவுகணை செலுத்தப்படுவதற்கு முன், ஒவ்வொரு தடவையும் இவ்வாறு திருப்பதியில் வழிபாடு செய்கிறார்.

hindutwaஇந்திய அரசமைப்புச் சட்டத்தில் விதி 15அ(எச்) இல் ஒவ்வொரு குடிமகனிடமும் அறிவியல் கண்ணோட்டத் தையும் ஆராய்ச்சி மனப்பான்மையையும் வளர்க்க வேண்டியது அரசின் கடமை என்று கூறப்பட்டுள்ளது. நவராத்திரி விழாவின் பத்தாவது நாளில் தில்லியில், இராவணனை இராமன் கொல்லும் ‘இராம் லீலா’ விழாவை அரசே நடத்துகிறது. அந்நிகழ்ச்சியில், தலைமை அமைச்சர், குடியரசுத் தலைவர், மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதுவா அரசின் மதச்சார்பற்ற தன்மை? என்று கேட்டால், “எல்லா மதங்களையும் சமமாகக் கருதுவதுதான் இந்தியாவின் மதச்சார்பின்மை” என்று வல்லபாய் பட்டேல், டாக்டர் இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் கூறியிருக்கிறார்கள் என்கின்றனர். அரசிலிருந்து - அரசியலிலிருந்து மதத்தை முற்றாக விலக்கி வைப்பதே உண்மையான மதச்சார்பின்மை என்பது திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.

இந்துமதப் பழமை மீட்டுருவாக்க நடவடிக்கை களில் ஒன்றாக மோடி, ஆட்சியில் அமர்ந்ததும், இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் (Indian Council of Historical Research - ICHR) தலைவராக ஒய். சுதர்சன் ராவ் என்கிற ஆந்திரப் பார்ப்பனரை நியமித்தார். “சுதர்சனராவைப் பற்றி நான் மட்டுமல்ல; பெரும் பாலான வரலாற்றுப் பேராசிரியர்கள் கேள்விப்பட்டதே யில்லை. ஆந்திரத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த மாநிலத்தைச் சேர்ந்த சில பேராசிரியர்களிடம் அவரைப் பற்றி விசாரித்தேன். அவர் ஏதும் பெரிய ஆராய்ச்சி யில் ஈடுபட்டதாகவோ, அற்புதமான நூல்களை எழுதிய தாகவோ தெரியவில்லை” என்று தலைசிறந்த வரலாற்றுப் பேராசிரியர் இராமச்சந்திர குகா ‘தி இந்து’ (தமிழ்) நாளேட்டில் 5.8.2014 அன்று எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஒய். சுதர்சனராவ் தான் யார் என்பதை ‘அவுட்லுக்’ ஆங்கிலக் கிழமை இதழுக்கு அளித்த செவ்வியில் தெளிவாக அவரே அடையாளங் காட்டியுள்ளார்.

“மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பொருளின் சான்றாதாரத்தை முதன்மையாகக் கருதுகின்றனர். நெடிய நாகரிகமும் கலாச்சாரமும் கொண்ட இந்திய வரலாற்றில் எல்லாவற்றுக்கும் அகழாய்வுப் பொருள் களை ஆதாரமாகக் காட்ட முடியாது. எனவே மக் களிடம் வழங்கப்படும் செவிவழிக் கதைகளையும், தகவல்களையும் சான்றுகளாகக் கொள்வது இந்தியச் சூழலில் தவிர்க்க முடியாததாகும்.”

“மதங்கள் தோன்றுவதற்கு முன்பே சனாதன தர்ம வாழ்க்கை முறை இருந்தது. அவரவர் கடமை யை அவரவர் செய்து வந்ததால் சமூகத்தில் முரண் பாடோ, மோதலோ இல்லாமலிருந்தது. எனவே வருணா சிரம தர்மம் சமூகத்தில் ஓர் ஒழுங்கையும் அமைதி யையும் நிலைநாட்டியது (காந்தியும் தான் சாகிற வரையில் இதே கருத்தைக் கொண்டிருந்தார்). மத்திய காலத்தில் முசுலீம்கள் இந்துக்களின் கோயில்களை இடித்துவிட்டு, அவ்விடத்தில் மசூதிகளைக் கட்டத் தொடங்கிய பிறகுதான் சமூகத்தில் மோதல் ஏற்பட்டது. பாபரின் தளபதி அயோத்தியில் இருந்த இராமர் கோயிலை இடித்துவிட்டு அதே இடத்தில் மசூதியைக் கட்டினான். இராமாயணத்தில் அயோத்தி பற்றிக் குறிப்பிட்டுள்ளது போலவே மக்கள் வாழ்ந்தனர் என்ப தற்குச் சான்றுகள் உள்ளன. இராமர் அயோத்தியில் பிறக்கவில்லை என்றால் வேறு எங்கு பிறந்தார்?” என்று சுதர்சனன்-பச்சையான ஆர்.எஸ்.எஸ். குரலில் வினவுகிறார். இந்தத் தகுதியின் அடிப்படையில்தான் மோடி சுதர்சனனை இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் பதவியில் அமர்த்தினார்.

ஆர்.எஸ்.எஸ். 1925 விஜயதசமி நாளில் நாகபுரி யில் தொடங்கப்பட்டது. அதனால் ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் நாகபுரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.-ன் தலைமையகத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் உரை நிகழ்த்துவது வழக்கம். ஆர்.எஸ்.எஸ்.-இன் தலைவர் ‘சர்சங் சாலக்’ என்று குறிப்பிடப்படுகிறார். இப்போது சர்சங்சாலக்காக உள்ள மோகன் பகவத் விஜயதசமி நாளில் (3.11.2014) நாகபுரியில் ஆற்றிய 45 நிமிட உரை முதன்முதலாக நடுவண் அரசின் ‘தூர்தஷனில்’ முழுமையாக ஒளிபரப்பப்பட்டது. அந்த உரையில் இந்துத்துவமே நமது தேசிய அடையாளம் என்பதை வலியுறுத்தினார். இதற்குமுன் ஆகத்து மாதம் மும்பை யில் நடைபெற்ற விசுவ இந்து பரிஷத் அமைப்பின் பொன்விழாவில் பேசியபோது மோகன் பகவத், “இந்துஸ்தானம் இந்துக்களின் தேசம். இந்துத்துவா என்பதே நம் தேசத்தின் அடையாளம்” என்று கூறி னார். அப்படியானால் 15 கோடி மக்களாக உள்ள முசுலீம் களுக்கும், 4 கோடிப் பேராக உள்ள கிறித்துவர்களுக் கும் இந்தியா சொந்தமில்லையா?

மோகன் பகவத் இவ்வாறு பேசுவதுடன் மட்டும் நிற்காமல், பல்வேறு துறைகளின் தலைவர்களை அழைத்துக் கூட்டம் நடத்துகிறார். இத்தன்மையில் 12.10.2014 அன்று மோகன் பகவத் கூட்டிய கூட்டத் தில் 60 பேர் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் (UGC) தலைவர் வேத பிரகாஷ், தில்லி எய்ம்ஸ் (AIMS) மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் எம்.சி. மிஸ்ரா, தில்லிப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தினேஷ் சிங், ஓய்வுபெற்ற காவல் துறை உயர் அதிகாரிகள், முதன்மை நிலையில் உள்ள வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், முதலாளிகள் முதலா னோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான சுரேஷ் ஜோஷி, தத்தரேய ஹோசாபோலே, கிருஷ்ணகோபால், மன்மோகன் வைத்தியா போன்ற தலைவர்கள் திசம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவின் பல இடங்களில் இத்தகைய கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், இதிகாசங் கள், ஸ்மிருதிகள், ஸ்ருதிகள், பிரமாணங்கள், சம்ஹிதை கள் முதலானவைகள் எப்போது எழுதப்பட்டன என்று இந்துத்துவ சக்திகள் சொல்வதையும் அவற்றின் கதை களையும் கருத்துகளையும் எத்தகைய கேள்விக்கும் ஆராய்ச்சிக்கும் உட்படுத்தாமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்; நம்ப வேண்டும் என்று சங்பரி வாரங்கள் கூறுகின்றன.

9.11.2014 தி இந்து (தமிழ்) நாளேட்டில், “வேதங் கள் சிந்து சமவெளியில் வாழ்ந்த ஆரியர்களால் உருவாக்கப்பட்டவை. ரிக் வேதமே காலத்தால் முற் பட்டது. இது கி.மு.1500-க்கும் முன்பே உருவானது. இதன் காலம் கி.மு.2200 முதல் கி.மு.1600 வரை” என்று சோதிட ரத்னா வி. அகிலாண்டேஸ்வரி என்பவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். 1911-12-இல் சிந்து சமவெளி அகழாய்வில் அரப்பா, மொகஞ்சதாரோ நகரங்கள் கண்டறியப்படுவதற்குமுன் வரை, ஆரியர் களே இந்நாட்டின் தொல்குடியினர்; வேதகாலமே பெரும் பழைமை வாய்ந்தது; சமஸ்கிருதமே இந்திய மொழிகளின் தாய் என்று ஆரியப் பார்ப்பனர்கள் தருக்கித் திரிந்தனர். சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகத்துக்கு முற்பட்டது மட்டுமின்றி, மேன்மை யான நகர நாகரிகத்தைக் கொண்டது என்கிற வரலாற் றின் புதிய கண்டுபிடிப்பு இந்தியப் பார்ப்பனர்களின் தலையில் பேரிடியாய் விழுந்தது. இந்த வரலாற்று உண்மையை மறைக்கவும், திருத்தி எழுதவும் பல தகிடுதத்தங்களைச் செய்து வருகின்றனர்.

சிந்து சமவெளி நாகரிகம் பெரும் பரப்பில் பரவி இருந்தது. இதன் காலம் கி.மு.3000-1500. இது கி.மு.2500-1750 காலத்தில் அதன் உச்சநிலையில் இருந்தது. இவர்கள் மேம்பட்ட - உயரிய நகர நாகரிக வாழ்க்கையைக் கொண்டிருந்தனர் என்பதற்கும், மெசபடோமிய மற்றும் பாபிலோனிய நாகரிக நகரங் களுடன் வணிகம் செய்தனர் என்பதற்கும் ஏராளமான அகழாய்வுச் சான்றுகள் உள்ளன. ஆரியர்களின் நாடோடி மேய்ச்சல் வாழ்க்கை முறையிலிருந்து முற்றி லும் மாறுபட்ட உயரிய நகர நாகரிகத்தையும் பண் பாட்டையும் சிந்து சமவெளி மக்கள் கொண்டிருந்தனர்.

ஆரியர்கள் கி.மு.1500 வாக்கில் தான் இந்தியா வின் வடபகுதிக்குள் நுழைந்தனர். அவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து ஈரான் வழியாக வந்தவர்கள். ரிக் வேதம் கி.மு.1500 முதல் கி.மு.1000 காலத்தில் இயற்றப் பட்டது. இராமாயணம், மகாபாரதம் கி.மு.1000-700 காலத்தில் நடந்த கதையாகக் கூறப்படுகிறது. ஆனால் இவை கி.மு.500- கி.பி.500 காலத்தில் தான் பலரால் எழுதப்பட்டன என்கிற உண்மைகள் பல சான்றுகளின் அடிப்படையில் டி.பி. கோசாம்பி, ரொமிலா தாப்பர் போன்ற வரலாற்று ஆசிரியர்களால் மெய்ப்பிக்கப் பட்டுள்ளன.

ஆனால் ‘இந்தியாவின் அவதார புருஷன்’ இராமன் திரேத யுகத்திலும், ‘பகவான்’ கிருஷ்ணன் துவாபர யுகத்திலும் வாழ்ந்தனர் என்று இந்துமதப் புராணிகர் கள் கூறுகின்றனர். இந்து மதத்தில் ஆண்டுகள் 60 ஆண்டுகள் சுழற்சியில் அமைந்துள்ளன என்பது நமக்குத் தெரியும். அதேபோல் 43,20,000 ஆண்டு கள் கொண்ட ஒரு மகா யுகம் நான்கு யுகங்களின் சுழற்சியாகக் கூறப்பட்டுள்ளது.

யுகங்கள்        (ஆண்டுகள்)

கிருத யுகம்  17,28,000

திரேத யுகம்                12,96,000

துவாபர யுகம்            8,64,000

கலியுகம்       4,32,000

                ------------

ஒரு மகாயுகம்         43,20,000

                ------------

இதில் கலியுகம் கி.மு.3012இல் தொடங்கியுள்ள தாம்.

திரேத யுகத்தில் இராமனும், துவாபர யுகத்தில் கிருஷ்ணனும் வாழ்ந்தனர் என்பதைக் கேள்விக்கு உட்படுத்தாமல், அறிவை ஆரியத்திடம் அடகு வைத்து விட்டு அப்படியே நம்ப வேண்டும் என்று இந்துத்துவ - சங்பரிவாரங்கள் கட்டளையிடுகின்றன.

டைனோசரஸ் போன்ற பெரிய விலங்குகள் உலகில் 14 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தன என்று வரையறுத்துள்ளனர் - அவற்றின் எலும்புகள், முட்டை, புதைப்படிவுகள் ஆகியவற்றின் ஆய்வின் அடிப்படையில்!

 அதேபோல், மனிதக் குரங்கிலிருந்து இருபது இலட்சம் ஆண்டுகளாகப் படி மலர்ச்சி பெற்றதன் விளை வாக நவீன மனிதன் (Homo Sapiens, Sapiens) தோற்றம் பெற்று ஒரு இலட்சம் ஆண்டுகளே ஆயின (Pre-History, Irfan Habib).

உண்மை இவ்வாறு இருக்க, பல இலட்சம் ஆண் களுக்கு முன் திரேத யுகத்தில் இராமன் காலத்தில் விமானம் இருந்தது; மகாபாரத காலத்தில் மரபியல் அறிவியலும், பிளாஸ்டிக் அறுவை மருத்துவமும் இருந்தன என்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும், சங் பரிவாரங்களும் கூறுகின்ற இந்துமதப் பழைமை மீட்டுருவாக்கத்தையும் இந்தியாவில் உள்ள பல தேசிய மொழிகளையும், மொழிவழிப்பட்ட தேசிய இனங்களையும், பன்முகப் பண்பாடுகளையும், பல மதங்களையும், வாழ்க்கை நெறிகளையும் ஒழித்து விட்டு, ஒரே (இந்து) மதம், ஒரே தேசம், ஒரே மொழி (சமஸ்கிருதம்-இந்தி) ஒரே (இந்துத்துவ) கலாச்சாரம் என்பதை நிறுவிட முயலும் இந்துத்துவ - சங்பரிவாரங் களின் பாசசிப் போக்கையும் நாம் ஒன்றுதிரண்டு எதிர்த்து முறியடிக்க வேண்டும். இல்லாவிடில் இந்திய வரலாறு இருளில் மாயும்.

Pin It