1973இல் அமெரிக்காவின் வடக்கு டகோடாவிலுள்ள ஒரு பள்ளியில், கர்ட் வொன்னெகட்டின் நாவல் “Slaughterhouse five” தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அப்பள்ளியின் நிர்வாகக்குழுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், புதினங்களில் வரும் பாத்திரங்கள் நடந்து கொள்வதையும், பேசும் விதத்தையும் விளக்குகின்றார் கர்ட் வொன்னெகட் (Kurt Vonnegut). அதிகாரத்தின் ஒடுக்குமுறையினையும், எழுத்தாளரின் சுதந்திரத்தையும் எடுத்துக்காட்டுவதற்கு இக்கடிதம் நல்லதொரு உதாரணமாகும்.

வொன்னெகட் மட்டுமல்லாமல், பெர்னார்ட் மலமூட், ஜேம்ஸ்டிக்கி, ஜோஸப் ஹெல்லர் போன்றோரின் நூல்களும் தொடர்ந்து பள்ளி நூலகங்களிலிருந்து தூக்கி எறியப்படுவதின் பின்புலத்தில், இக்கடிதத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.

They Shoot writers, Don’t They? Ed.by George Theiner Faber and Faber,
நூலிலிருந்து தமிழ் வடிவம்: சா.தேவதாஸ்


வடக்கு டகோடாவின் ட்ரேக்கிலுள்ள ஒரு பள்ளியில் அதன் வாயிற்காவலரால் என் நாவல் “Slaughterhouse five” நிஜமாகவே தீயிட்டுக் கொடுத்தப்பட்டது. அப்பள்ளி நிர்வாகக் குழுவின் அறிவுரைப்படி இது நிகழ்ந்தது. இந்நூலின் ஆரோக்கியமற்ற தன்மை குறித்து அக்குழு அறிக்கை வெளியிட்டிருந்தது. விக்டோரியா மகாராணியின் தரநிர்ணயப்படி கூட, ஒட்டுமொத்த நாவலில் இடம்பெறும் ஆட்சேபணைக்குரிய ஒரே வரி இதுதான் “Get out of the road, you domb mother fucker”. அமெரிக்காவின் மாபெரும் தோல்வியாக அமைந்த, 1944ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் நிகழ்ந்த Battle of the bulge-ன் போது, அமெரிக்கப் புரோகிதரின் நிராயுதபாணியிலான உதவியாளரை நோக்கி, அமெரிக்கப் படைவீரன் ஒருவனால் பேசப்படும் வாசகம் இது. இந்த உதவியாளன் எதிரியால் சுடப்பட இருக்கிறான்.

எனவே, 16.11.1973இல் வடக்கு டகோட்டாவின் ட்ரேக்கின் சார்ல°ஸ்மக்கார்த்திக்குப் பின்வருமாறு எழுதினேன்.

‘அன்பான மக்கார்த்தி,

“ட்ரேக் பள்ளி நிர்வாகக்குழுத் தலைவர் ஆக இருக்கும் உங்களுக்கு இக்கடிதத்தினை எழுதுகின்றேன். இப்போது புகழ்பெற்றுள்ள உங்கள் பள்ளிக் கொதிகலனில் அழித்தொழிக்கப்பட்டுள்ள புத்தகங்களின் ஆசிரியர்களுள் ஒருவன் நான்.

“உங்கள் நிர்வாகக்குழுவின் உறுப்பினர்களுள் சிலர், என் புத்தகம் தீங்கானது என்று குறிப்பிட்டுள்ளனர். இது என்னை அசாதாரணவகையில் அவமானப்படுத்துகிறது. உங்களைப் போன்றவர்களுக்கு புத்தகங்களும், எழுத்தாளர்களும் மிகவும் நிஜமற்றவர்களாக இருப்பதாக ட்ரேக்கின் செய்தி சுட்டிக்காட்டுகிறது. எந்த அளவுக்கு நான் நிஜமானவன் என்பதை நீங்கள் அறியும் பொருட்டு இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

“ட்ரேக்கிலிருந்து வரும் அருவருப்பூட்டும் செய்தியை ஈர்க்கும் விதத்தில் நானும் என் வெளியீட்டாளரும் எதனையும் செய்திருக்கவில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். இந்தச் செய்தியால் எங்கள் புத்தகங்களை எல்லாம் விற்றுவிடமுடியும் என்று மார்தட்டிய படி நாங்கள் ஒருவரையொருவர் தட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கவில்லை. தொலைக்காட்சியில் தோன்றுவதற்கு மறுதலித்திருக்கிறோம். தலையங்கப் பக்கங்களில் ஆவேசமான கடிதங்கள் எழுதியிருக்கவில்லை. நீண்ட பேட்டிகள் தந்திருக்கவில்லை. நாங்கள் கோபங் கொண்டிருக்கிறோம். பாதிக்கப்பட்டிருக்கிறோம் மற்றும் வருத்தப்படுகிறோம். இக்கடித நகல்கள் வேறுயாருக்கும் அனுப்பப்பட்டிருக்கவில்லை.

இப்போது உங்கள் கைகளில் இருப்பது ஒரே பிரதிதான். தம் பிள்ளைகளின் பார்வையிலும், உலகத்தவரின் பார்வையிலும், என் புகழினைப் பாழாக்கும் வகையில் நிறையவே செய்துள்ள, ட்ரேக்கின் மக்களுக்கான மிகவும் அந்தரங்கமான கடிதமாகும் இது. இக்கடிதத்தினை பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டாகும் தைரியமும் கண்ணியமும் உங்களுக்குண்டா அல்லது இதுவும் உங்கள் கொதிகலனின் பிழம்புகளால் தீக்கிரையாக்கப்படுமா?

“இளைஞர்களின் மனங்களுக்கு நஞ்சூட்டி, பணம் பண்ணி அனுபவிக்கின்ற எலிபோன்ற நபர்கள் நாங்கள் என்று எங்களைக் கற்பிதம் செய்து கொள்வதை, பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிச் செய்திகளிலிருந்து தெரிந்து கொள்கிறோம். சிறுவனாக இருந்தபோதே, கனமான கருவிகளைக் கையாண்டு பண்ணை வேலைகள் செய்த, திடசாலியான 51 வயது நபர் நான். என்னுடைய மூன்று பிள்ளைகளையும், மூன்று வளர்ப்புப் பிள்ளைகளையும் சேர்த்து வளர்த்துள்ளேன். அவர்கள் அனைவரும் நன்றாக உருவாகியுள்ளனர். அவர்களில் இருவர் விவசாயிகள். நான் இரண்டாம் உலகப்போரின்போது, தரைப் படையில் போரிட்டு, விருது பெற்றுள்ளவன். நான் பெற்றிருப்பவை கடும் உழைப்பால் ஈட்டியிருப்பவை. எதன்பொருட்டும் கைது செய்யப்பட்டிருக்கவோ, வழக்குத் தொடரப்பட்டிருக்கவோ கிடையாது.

“இளைஞர்கள் என்னைப் பெரிதும் நம்புகிறார்கள்; அயோவா, ஹார்வர்ட் பல்கலைகழகங்கள் மற்றும் நியூயார்க்கின் சிட்டி காலேஜ் ஆகியவற்றில் பணியாற்றிள்ளேன். ஒவ்வொரு வருடமும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் தொடக்க விழாவில் பங்கேற்க, குறைந்த பட்சம் ஒரு டஜன் அழைப்பிதழ்கள் வருகின்றன. வேறெந்த அமெரிக்கப் புதின எழுத்தாளருடையதை விடவும், எனது புத்தகங்கள் அதிகப்படியாகப் பள்ளிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

“என் புத்தகங்களை வாசிக்க நீங்கள் சிரமம் எடுத்துக் கொண்டால், கல்வி கற்றவர்கள் நடந்து கொள்வது போல் நடக்க முயன்றால், அவை ஆபாசமானவை அல்ல என்பதை அறிந்து கொள்வீர்கள்; எவ்விதமான காட்டுத்தனமும் இருக்கிறதென்று வாதித்திட மாட்டீர்கள். மக்கள் மிக அன்பாகவும், அதிகப் பொறுப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்றே அவை மன்றாடுகின்றன. சில பாத்திரங்கள் முரட்டுத்தனமாய் பேசுவது உண்மையே. ஏனெனில் நிஜ வாழ்வில் மக்கள் முரட்டுத்தனமாய் பேசுகின்றனர். குறிப்பாக சிப்பாய்களும் கடினவேலை பார்ப்போரும் முரட்டுத்தனமாய் பேசுகின்றனர். மிகவும் பாதுகாப்பாயுள்ள நம் குழந்தைகளுக்குக் கூட இது தெரியும். இவ்வார்த்தைகள் சிறுவர்களை அதிகம் பாதிப்பதில்லை என்பது நமக்கும் தெரியும். நாம் சிறுவர்களாய் இருந்தபோது அவை நம்மைப் பாதிக்கவில்லை. நம்மைப் பாதிப்பவை கெட்ட காரியங்களும் பொய் சொல்வதும்தான்.

“இவ்வளவு எடுத்துரைத்த பின்பும், நீங்கள் உங்கள் நிலைப்பாட்டில் முனைப்பாக இருப்பீர்கள் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்: “சரிதான், ஆனால் சிறுவர்கள் என்ன புத்தகங்களை படிக்க வேண்டும் என்று தீர்மானிப்பது எங்கள் உரிமையும் பொறுப்பும் ஆகும்.” ஆனால், கடுமையும், அறியாமையும் அமெரிக்கத் தன்மை அற்றதுமான வழியில் அந்த உரிமையைப் பிரயோகித்து, அந்தப் பொறுப்பினை நிறைவேற்றினால், மக்கள் உங்களை மோசமான பிரஜைகளும் முட்டாள்களும் என்றழைப்பர். உங்கள் குழந்தைகள் கூட அவ்விதம் அழைத்திடும் உரிமை பெற்றிருப்பர்.

“நீங்கள் செய்திருப்பது குறித்து நாடெங்கிலும் எழுந்துள்ள கூச்சல் - குழப்பத்தால், உங்கள் மாணவர் சமூகம் குழப்பமுற்றுள்ளதாகப் பத்திரிக்கைகளில் வாசிக்கிறேன். நல்லது, ட்ரேக் என்பது அமெரிக்க நாகரீகத்தின் ஓரங்கம் என்பதையும், இவ்வளவு அநாகரிகமாக நீங்கள் நடந்து கொண்டுள்ளதை சக அமெரிக்கர்களால் சகித்துக் கொள்ள இயலவில்லை என்பதையும் நீங்கள் கண்டறிந்துள்ளீர்கள். புத்தகங்கள் என்பவை நல்ல காரணங்களினால் சுதந்திரமானவர்களுக்கு எரியூட்டும் தேசங்களுக்கெதிராக யுத்தங்கள் நிகழ்த்தப் பட்டிருக்கின்றன என்பதை இதனின்றும் நீங்கள் அறியக்கூடும். நீங்கள் ஓர் அமெரிக்கர் எனில், உங்களுடைய கருத்துக்கள் மட்டுமல்லாது, அனைத்துக் கருத்துக்களும் சுதந்திரமாகப் பரவிட அனுமதித்தாக வேண்டும்.

“இளைஞர் தம் கல்வி குறித்து உங்கள் அதிகாரத்தைப் பிரயோகிக்கும்போது, நிஜமாகவே உங்களிடத்தே ஞானமும் முதிர்ச்சியும் இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டிட, நீங்களும் உங்கள் நிர்வாக்குழுவும் தீர்மானகரமாக இருப்பின், புத்தகங்களை நிந்திப்பது மற்றும் எரியூட்டுவது என்றும் மோசமான பாடத்தைச் சுதந்திரமான சமூகத்திலுள்ள இளைஞர்களுக்கு கற்பித்தீர்கள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

உங்கள் குழந்தைகள் சிறந்த முடிவுகளை எடுத்து உயிர்த்திருக்க வேண்டுமானால், எல்லாவிதமான அபிப்பிராயங்களும் தகவல்களும் அவர்களுக்குப் பரிச்சயமாயிருக்க வேண்டும் என்றும் நீங்கள் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். “திரும்பவும் கூறுகிறேன். என்னை அவமானப்படுத்தி இருக்கிறீர்கள், நானொரு நல்ல பிரஜை மற்றும் மிகவும் நிஜமானவன்.”

இது ஏழாண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. இது வரையிலும் எந்தப்பதிலும் இல்லை. நியூயார்க் நகரத்திலிருந்து இதனை நான் எழுதும் வேளையில் “Slaughterhouse fivef” பல பள்ளி நூலகங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய சட்ட ரீதியிலான யுத்தம் இன்னும் குமுறிக்கொண்டிருக்கிறது. முதலாவது சட்டத் திருத்தத்தை மூர்க்கமாக எதிர்க்கின்ற வழக்குரைஞர் களை இப்பள்ளி நிர்வாகம் அமர்த்தியுள்ளது. முதலாவது சட்டத்திருத்தத்தை எதிர்க்கின்ற வழக்கு ரைஞர்களுக்குப் பஞ்சமே கிடையாது - அது என்னவோ, குறுக்குப் புத்தியுள்ளவனின் குத்தகை ஒப்பந்தத்தில் இடம்பெறும் வாசகத்திற்கு மேல் ஒன்றுமில்லை என்பது போல.

Pin It