எந்த ஒரு மனிதனுக்கும் அவன் உயிரை அழித்துக் கொள்ள உரிமை இல்லை. அடுத்தவர் உயிரை அழிப்பதற் கும் உரிமை இல்லை. இரண்டிற்கும் பெயர், கொலை. சட்டத்தை வைத்துக்கொண்டு மரண தண்டனை என்ற பெயரால் மனித உயிரை அழிப்பதற்கு அரசாங்கத்திற்கும் உரிமை இல்லை. இதுவும் கொலைதான். திட்டமிடப்படும் இக்கொடூ ரமான கொலையை மரண தண்டனை என்ற பெயரால் நியாயப்படுத்தக் கூடாது என்கிறார் ரூசோ.

ஆனால் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. தி இந்து, தமிழ் நாளிதழ் கட்டுரை ஒன்றில் சமஸ் ஒரு செய்தியைத் தருகிறார்.

“மொத்தம் 23 வருஷ சிறைவாசம். முதலில், நீதிமன்ற விசாரணையின் போது ஏழு வருஷங்கள். அப்புறம் மரண தண்டனை அறிவிக்கப்பட்ட பின் 13 வருஷங்கள். ஒரு நாளைக்கு 86,400 நொடிகள். ஓர் ஆண்டுக்கு 3,15,36,000 நொடிகள். எப்போது வேண்டுமானாலும் தூக்கிலிடப்படலாம் என்ற உணர்வோடு ஒரு நொடியைக் கடப்பது எவ்வளவு கொடூரமானது?எனில், கருணை மனுவைப் பரிசீலிக்கிறேன் என்ற பெயரில், ஆண்டுக்கணக்காக இழுத்தடிப்பது எவ்வளவு கொடூரமான தண்டனை”.

முன்னாள் நீதியரசர் கிருஷ்ணய்யர் கருத்துப்படி இம்மூவரும் மரண தண்டனையை விட மூன்று மடங்கு தண்டனையை அனுபவித்துள்ளார்கள். இனியும் இவர்களுக்கு மரண தண்டனை என்றால், அது மனிதநேயத்தையே கேலிக்குரியதாக்கிக், கேள்விக்குரியதாகவும் ஆக்கிவிடும்.

அதனால்தான் 11 ஆண்டுகள் மரணதண்டனை குறித்து முடிவெடுக்கக் குடியரசுத் தலைவர் காலம் தாழ்த்தியதை முன்வைத்து, நீதியரசர் சதாசிவம் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு இம்மூவரையும் மரணதண்டனையில் இருந்து விடுவித்து, ஆயுள் தண்டனையாக மாற்றியது. அத்துடன் மாநில அரசு சட்ட அடிப்படையில் தன் அதிகாரத்தின் மூலம் அவர்களை விடுதலை செய்யவும் ஒரு வழிகாட்டலைத் தீர்ப்பில் முன்வைத்தது.

இற்றுப்போன காங்கிரஸ் மூளைக்கு இவை எல்லாம் ஏறுவதாகத் தெரிய வில்லை. காங்கிரஸ் கட்சியாளர்களின் பேச்சுகளில் இருந்து கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், உயிருக்கு உயிர் என்பதாகத்தான் தெரிய வருகிறதே ஒழிய மனிதநேய மாண்பைப் பார்க்க முடியவில்லை.

கடந்த 19ஆம் தேதி தில்லியில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக் குறித்துக் கருத்து கூறிய காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ப. சிதம்பரம், “தாமதம் காரணமாக தண்டனையை ஆயுளாகக் குறைக்கலாம் என்ற கருத்தானது, சட்டம் சார்ந்த கேள்விகளை எழுப்புகிறது. இந்தக் கருத்து சரியானதா என்பதை நாம் ஆராய வேண்டும். தாமதம் காரணமாகவே தண்டனைக் குறைப்பு என்ற கருத்து என்னை வேதனை அடையச் செய்கிறது” என்று சொன்ன அவர், “தாமதம் ஏற்படா திருந்தால் இந்தக் கேள்வி எழ வாய்ப்பே இல்லை” என்றும் கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் குரல் இங்கு தெளிவாகவே பதிவாகிவிட்டது. குடியரசுத் தலைவர் அலுவலகத் தாமதத்தால் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்திருப்பது வேதனை தருகிறதாம். அது மட்டு மல்லாமல், குடியரசுத் தலைவர் தாமதம் செய்யாமல் இருந்திருந்தால் இந்தக் கேள்வி எழ வாய்ப்பே இல்லையாம்.

இந்த இரு கருத்துகளில் இருந்து மரணதண்டனை நிறைவேறியிருக்க வேண்டும் என்ற தொனியே காங்கிரசின் நோக்கமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. உத்திரப்பிரதேசம் அமேதியில் பேசிய ராகுல் காந்தி “பிரதமரைக் கொன்றவர்கள் சுதந்திரமாக வெளியே உலவ முடிகிறதென்றால் நாட்டில் சாமானியனின் கதியென்ன?” என்று கேட்டிருக்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவரும், அடுத்த பிரதமர் கனவில் மிதப்பவருமான ராகுலுக்கு, இந்த நாட்டில் சாமானியனானாலும், பிரதமரானாலும் சட்டத்தின் முன் இருவரும் சமம் என்பதுகூட எப்படித் தெரியாமல் போனது. இன்னொரு முக்கிய செய்தி, தூக்குத் தண்டனை தீர்ப்புக்குப் பின்னர் 15 ஆண்டுகள் சிறையில் வாடி வதங்கிய போதும்கூட, முருகன், சாந்தன், பேரறிவாளன் யாருமே தங்களைக் குற்றவாளி என்று கூறவில்லை. இன்றுவரையும் அவர்கள் நிரபராதிகள் என்றே கூறிவருகிறார்கள்.

தமிழகக் காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், புல்லர் வழக்கில் தண்டனைக் குறைப்பும், தமிழக மூவர் தண்டனைக் குறைப்பும் வழக்கின் தன்மையை ஆராயாமல் வழங்கப்பட்ட தீர்ப்பாகக் கருதுகிறார். ஞானதேசி கனுக்கு இவ்வழக்குகள் குறித்து ஒன்றுமே தெரியவில்லை என்பது இப்போது புரிகிறது-.

ராஜீவ் கொலையின் போது, 17 காவலர்கள் பலியானார்கள். அவர்க ளைப் பற்றி யாரும் சிந்திக்கவில்லை என்கிறார் ஞானதேசிகன்.

நியாயம்தான். எந்த ஓர் உயிரும் எந்தச் சூழலிலும் கொல்லப்படக்கூடாது என்பது நமது நிலைப்பாடு. 17 காவலர்கள் குடும்பங்களுக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்புதான்.

நமது கேள்வி, கடந்த 23 ஆண்டுகளாக இந்த 17 குடும்பங் களுக்கு என்ன நிவாரணங் களைப் பெற்றுத் தந்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. அவர்களுக்குச் செய்த நிவாரண உதவிகள் என்னென்ன? குறைந்த பட்சம் எத்தனை தடவைகள் அந்தக் குடும்பங்களைப் பற்றி இதுவரை காங்கிரஸ் பேசியிருக்கும்?. இதுவரை யாராலும், குறிப்பாக, காங்கிரசாலும் கண்டுகொள்ளப்படாமல் இருந்த அந்த 17 குடும்பங்களைப் பற்றி, பேரறிவாளன், முருகன், சாந்தன் தண்டனைக் குறைப்பு குறித்த தீர்ப்பு வந்தவுடன் பேசியதன் நோக்கம் என்ன?

ராஜீவ் கொலை தொடர்பான தடா நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பில், “ இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் இந்திய அமைதிப்படை இலங்கையில் மேற் கொண்ட செயல்களுக்குப் பழிவாங்கும் விதமாகவே இதில் ஈடுபட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய அமைதிப்படை இலங்கை யில் (ஈழப்பகுதியில்) மேற்கொண்ட செயல் என்பதில் அதன் அத்துமீறல் வெளிப்படுகிறது. இந்த வரம்பு மீறிய செயலில் ஈழத்தில் வாழும் தமிழர்கள் - மனிதர்கள் பாதிக்கப்பட்டார்களே, அது ஞானதேசிகனுக்கோ அவர் சார்ந்த காங்கிரசுக்கோ கொஞ்சம்கூட இரக்கத்தை ஏன் ஏற்படுத்தவில்லை?.

ஈழத்தில் நச்சுக் குண்டுகள் வீசி தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக் சேவுக்குக் காங்கிரஸ் துணை நின்றதே, அப்பொழுது இந்தக் காங்கிரஸ் கூட்டத் திற்கு வராத இரக்கம், இப்பொழுது 17 குடும்பங்கள் மீது மட்டும் வந்திருப்பது ஏன்?

முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலை என்பது இந்திய இறையாண் மைக்கு எதிரானதாம் - சொல்கிறது காங்கிரஸ்.

இலங்கையில் வைத்து ராஜீவ் காந்தியை ஒரு சிங்களச் சிப்பாய் துப்பாக்கியைத் திருப்பி வைத்து அடித்தான். ராஜீவ் அடிபடாமல் விலகிக் கொண்டார். அப்பொழுது எங்கே போனது இவர்களின் இறையாண்மை?

தமிழக மீனவர்களைத் தமிழகக் கடல் எல்லையிலேயே சிங்களக் கடற்படை கைது செய்து இழுத்துச் செல்கிறதே. எங்கே இவர்களின் இறையாண்மை?.

இன்னமும் ராஜீவ்காந்தி மரணம் குறித்த வழக்கு, முழுமை பெறவில்லை. சந்திராசாமி, சுப்பிரமணியன் சாமி போன்றோர் இன்னமும் விசாரிக்கப் படவில்லை. ராஜீவ் கொலையாகும் போது மரகதம் சந்திரசேகர் எங்கே போயிருந்தார்? அங்கிருந்த காங்கிரஸ் தலைவர்கள் எல்லாரும் எங்கே போனார்கள் என்பதெல்லாம் விசாரிக்கப் பட்டால் ஒரு வேளை உண்மையான குற்றவாளிகள் பிடிபடலாம்.

இவைகளை எல்லாம் பேசாமல், மரணதண்டனைக்கு ஆதரவாக, அப்பாவி முருகன், சாந்தன், பேரறிவாளன் தண்டனைக் குறைப்பையும், விடுதலை குறித்தும், கொச்சைப்படுத்த காங்கிரஸ் நினைத்தால், கொச்சைப்படப் போவது அவர்கள் இல்லை - காங்கிரஸ்தான்!

Pin It